கேள்வி : இப்போது தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படும் நானும்தான் ஆங்கிலத்தில் ME TOO. இதன் பின்னணியை எப்படிப் புரிந்து கொள்வது?

பெண்கள் உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு என்று பொதுவான பிரச்சனைகள் சில உள்ளன. அவர்களது சமூகம் சார்ந்து அனுபவிக்கும் மாறுபட்ட பிரச்சனைகளும் உள்ளன. மனித மனம் நற்குணங்களும் வக்கிரங்களும் கலந்து கிடக்கும் ஒரு செயலி. எதை எது அடக்கி வைக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவர் எத்தனை விழுக்காடு நல்லவர்கள் என்று சொல்ல முடியும்.

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணை வயது, உறவு, நம்பிக்கை என அனைத்தையும் தாண்டி பாலியல் உணர்வுடன் அல்லது வெறியுடன்அணுகுகிறார்கள்.

என்பதும் அவ்வாறு இளம் வயதில் ஆணுடைய சீண்டலுக்கும் வல்லுறவுக்கும் ஆளானவர்கள் தங்கள் உயிர் பிரியும் வரை அதை மறப்பதில்லை என்பதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் வெளிப்படையாகச் சொல்லும் செய்தியாகும். அப்படி ஒப்புக்கொள்ளும் பெண்கள் 48% வெளியே சொல்ல விரும்பாதவர்களையும் சேர்த்து இந்த சதவீதம் உயரலாம்.

ஆண்கள் எத்தனை சதவீதம் பேர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று இதுவரை சரியானக் கணக்கெடுப்பை யாரும் வெளியிடவில்லை. வெளியிட முடியுமா என்பதை ஆண்களின் மனச்சான்றுக்கு விட்டு விடவேண்டியது தான்.

தனது விருப்பமோ உடன்பாடோ இல்லாமலும் அதற்கு உடன்பட மறுத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சியும் வெளியில் சொன்னால் வரும் ஆபத்துகளை நினைத்தும் தனது உடல்மீது நடக்கும் அத்துமீறலை வெளியில் சொல்லாமல் மறைக்க வேண்டிய சமூக நிலை. ஆனால் அந்த நினைவுகள் பாதிக்கப் பட்டவர்களை விட்டு விலகுவதில்லை. ஏதேதோ நேரத்தில் அந்த நினைவு வந்து அவர்களைத் துன்புறுத்தும். மனதிற்குள் தன்னைப்பற்றி ஒரு தாழ்வுணர்ச்சி தோன்றும். சில நேரங்களில் அது குற்ற உணர்வாக மாறி அந்தப் பெண்ணே தனக்குள் குமைந்து கொண்டிருப்பார். அல்லது மற்றவர்கள் மீது நியாயமற்ற முறையில் அந்த வெறுப்பை வெளிப்படுத்துவார். என்றேனும் யாரிடமேனும் அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தால் அவருக்கு ஒரு மனச்சுமை குறையும். அப்படித் தொடங்கப்பட்டதே இந்த "நானும்தான்" என்ற இயக்கம்.

கேள்வி: இவ்வளவு முக்கியமான பிரச்சனையை ஏன் பெண்கள் இயக்கங்களோ திராவிடர் கழகம் போன்ற சமுதாய இயக்கங்களோ பெரிதாகக் கையில் எடுத்து செயல்படவில்லை?

இந்த இடத்தில் பெண்கள் இயக்கம் என்று யாரைச் சொல்கிறோம் சமுதாய இயக்கம் என்று எதை அடையாளப்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம் .

பெண்களுக்காக, பெண்களின் சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காக, பொருளாதார உரிமைகளுக்காக, பெண்களை ஒடுக்கும் காரணிகளான மதம் சாதி இனம் நிறம் மொழி கலை இலக்கியம் பண்பாடு பொருளாதார அமைப்பு அனைத்தையும் எதிர்ப்பதுதான் பெண்களுக்கான இயக்கம். இவற்றில் சிலவற்றையாவது முதன்மைப் படுத்தி செயல்படும் இயக்கங்கள் பெண்ணுரிமை அமைப்புகள் ஆகியவை இத்தகைய பாலியல் சீண்டல்களை வன்முறை என்றே கூறுகின்றன. அவை ஆணாதிக்க சமூகத்தின் அடையாளங்கள் என்று கண்டிக்கின்றன.

அவற்றுக்கு எதிராக உடனுக்குடன் போராட்டங்களை நடத்திக் கொண்டே இருக்கின்றன.

கேள்வி: இதுவும் பெண்கள் பிரச்சனை தானே. இதற்கு முன்னுரிமை கொடுக்கலாமே?

பெண்களுக்குப் பல சமூகப் பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் இத்தகைய அத்துமீறல் வன்முறையும் ஒன்று. இதுமட்டுமே பெண்கள் பிரச்சனை என்று பேசுகிறவர்கள் சமூகத்தில் வேறெந்தப் பிரச்சனை பற்றியும் பேசாதவர்கள். பேச மறுப்பவர்கள். ஏன் முடிந்தால் அதற்கு நியாயம் கற்பிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் தான் இந்தக்குற்றச்சாட்டை உலகப் பெண்களின் ஒரே பிரச்சனை என்ற முறையில் பேசுவார்கள். அவர்களிடம் கேளுங்கள் இதுவரையில் தன்னைத்தவிர எந்தப் பெண்ணின் பாதிப்பிற்காவது அவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்களா என்று.

மேலும் ஒரு பிரச்சனை நடந்தவுடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியில் சொல்லப்பட்டால்தான் அதில் இயக்கங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துப் பேசவும் போராடவும் முடியும். அப்படி இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான அல்லது வசதியானச் சூழலில் இப்படிக் குற்றம் சுமத்தும் போது அதன் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதன் உண்மைத் தன்மையையும் அறிந்து கொள்ள முடியாது.

மேலும் அரசியல் பின்னணியிலும் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் புனைய முடியும் என்பதை மறந்து விட்டு ஒருபக்கக் குற்றச்சாட்டை மட்டுமே நம்பி இயக்கங்கள் செயல்பட முடியாது.

- நேர்காணல் தொடரும்

Pin It