“புள்ளய வளத்திருக்கா பாரு..”

“வளர்ப்பு சரியில்ல..அதான்...”

“முருங்கைய ஒடிச்சி வளக்கணும்... புள்ளய அடிச்சி வளக்கணும்” - என்பவை போன்ற ஒற்றை வரித் தீர்ப்புகள் இங்கு ஏராளம் உண்டு. ‘புள்ளய பெத்துட்டா மட்டும் போதாது... ஒழுங்கா வளக்கத் தெரியணும்’, ‘புள்ள வளக்குறதுன்னா சும்மாவா...?’ என்னும் அறிவுரைகளும் இங்கு தாராளமாகக் கிடைக்கும். ஒரு குடும்பத்தின் - பெற்றோரின் - பெருமையும், சிறுமையும் குழந்தைகளாலேயே தீர்மானிக்கப்படுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நம்முடையச் சமூகத்தில், குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய கடமையாக, ஏன், சுமையாகவே ஆக்கப்பட்டு விட்டது. விளைவு? குருவி தலையில் பனங்காயை வைப்பது போல, குழந்தைகளின் மீது ‘கடமைகள்’ ஏற்றி வைக்கப்படுகின்றன. பெற்றோர்களும் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

என்னுடைய பிள்ளைகள் இந்த பிரபலமான பள்ளியில் - கல்லூரியில் படிக்கிறார்கள், நான் முறைத்தால் போதும் அப்படியே விறைத்து நின்று விடுவார்கள், தனி அறை கொடுத்திருக்கிறோம் - அதில் எப்பொழுது பார்த்தாலும் படித்துக் கொண்டேதான் இருப்பார்கள், வெளியில் போய் விளையாட மாட்டார்கள், ஊர்சுற்ற மாட்டார்கள், பன்னாட்டுக் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள், வெளிநாட்டில் இருக்கிறார்கள், நான் கிழித்தக் கோட்டை தாண்ட மாட்டார்கள், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள் - இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளக்கூடிய பெற்றோர்கள்தான், குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தவர்கள், இப்படித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற ‘குழந்தை வளர்ப்பு மதிப்பீடுகள்’ உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடத்தில் பிள்ளையைக் கொண்டு போய் விட்டுவிட்டு, ‘கண்ணு முழிய மட்டும் விட்டுட்டு, உரிச்சி எடுத்துருங்க சார்’ என்று வாத்தியாரிடம் சொல்லிவிட்டுப் போகும் படிக்காத கிராமத்துப் பெற்றோர்களும் சரி, மாநகரங்களில் வாழும் படித்த பெற்றோர்களும் சரி, குழந்தைகளை அடித்தும், அடக்கியும் வளர்ப்பதே சரியானது என்ற முடிவோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. விதிவிலக்காக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விசயத்தை மறந்துவிடுகிறார்கள்.

தெருவில் குரங்கை வைத்து வித்தை காட்டுவதை பார்த்திருப்போம். வித்தைக்காரன், ஏதோ சொல்லிக்கொண்டே, குச்சியைத் தரையில் தட்டுவான், உடனே குரங்கு ஓடிவந்து அதைத் தாண்டும். இதேபோல் ஒவ்வொரு செய்கைக்கும் குச்சியைத் தட்டிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். குச்சி கண்ணில் படும்வரை மட்டுமே, குரங்கு ஒடியாடி வித்தைகாட்டும். பெரும்பான்மையான பெற்றோர்கள் குரங்காட்டிகளைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். கேட்டால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, குழந்தையிலேயே கண்டிப்புடன் வளர்த்தால்தான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பார்கள் என்ற பதில்களைத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

ஒரு படத்தில் வைகைப்புயல் வடிவேலு சொல்வாரே, ‘பில்டிங்கு ஸ்ட்ராங்கு...பேஸ் மட்டம் வீக்கு’ என்று, அப்படித்தான் இருக்கிறது, குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு என்று சொல்லி, பெற்றோர்கள் போடும் ‘பேஸ்மட்டம்’. குழந்தைகள் என்ன புடலங்காய்களா? கல்லைக் கட்டித் தொங்கவிட்டு, நேராக வளர்ப்பதற்கு! சரி, அப்படியென்றால், வேறு எப்படித்தான் குழந்தைகளை வளர்ப்பது?

குழந்தைகளை வளர்க்காதீர்கள்...வளர விடுங்கள்!

அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ள என்னுடைய தோழி சுடரொளியிடம், ‘நீங்கள் என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘பள்ளியில் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லுவார். குழந்தைகளுக்குத் தேவை, நல்ல வழிகாட்டலும், சிறந்த புறச் சூழலும். இவை இரண்டும் இருந்தால் அவர்கள் நன்கு வளர்ந்து வருவார்கள். அந்த வழிகாட்டலையும், புறச்சூழலையும் உருவாக்கித் தரும் வேலையை அல்லது உதவியை நாம் செய்ய வேண்டும். இது பள்ளிக்கூடத்திற்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், மொத்தத்தில் இந்தச் சமுதாயத்திற்கும் பொருந்தும்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்கு உருவாக்கித் தரவேண்டும்? தன் மகனின் ஆசிரியருக்கு, அமெரிக்க அதிபராக இருந்த புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதத்தையே பதிலாகத் தர விரும்புகிறேன். நீண்ட கடிதம்தான் என்றாலும், அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வரிகளின் முக்கியத்துவம் கருதி அப்படியே கீழே தருகிறேன்.

“அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல, அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் அயோக்கியர்களுக்கு இடையில் உண்மையான கதாநாயகர்களும் இருக்கிறார்கள் என்பதையும், சுயநல அரசியல்வாதிகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது கோழைத்தனம் என்பதைப் புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதேவேளையில் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல், எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி, நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லையென்றும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல்திறனுக்கும் அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.

ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்ட, விடாமல் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள். அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம்காட்டி சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காட்டப்படும் இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக மாறுகிறது. தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான். இதில் உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். எனது அன்பு மகன்.”

வெறும் ஏட்டுப்பாடத்தை மட்டுமன்று, இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள, சிறந்த மனிதனாக, மனித குலத்தின் மீது நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் என்பதுதான் இந்தக் கடிதத்தின் சாரம். வகுப்பறைகளின் சூழல் இப்படி அமைந்துவிட்டால், பள்ளிக்கூடங்களில் இருந்து இந்தச் சமூகத்திற்கு ‘மனிதர்களும்’ கிடைப்பார்கள்!

சரி, இதில் பெற்றோர்களின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக அமைய வேண்டும்? இந்தக் கேள்விக்கும் புகழ்பெற்ற ஒரு தலைவர் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களையே பதிலாகத் தரப் போகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், உலக சரித்திரத்தை மட்டும் பேசவில்லை. இந்த உலகை எப்படிப் பார்க்க வேண்டும், வாழ்க்கையையும், அது கொண்டு வந்து சேர்க்கும் சிக்கல்களையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் நேருவின் கடிதங்கள் விதைக்கின்றன. நைனி சிறையில் இருந்து இந்திராவுக்கு எழுதிய கடிதங்களுள் ஒன்றில், நேரு இப்படிக்கேட்கிறார்,

“ஜோன் ஆப் ஆர்க் என்னும் பெண்ணின் கதையை நீ முதன்முதலில் வாசித்த போது, அதிலே மிகவும் ஈடுபட்டு அவளைப்போல நீயும் ஆகவேண்டும் என்று நினைத்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”

மற்றொரு கடிதத்தில், “நீ ஆனந்த பவனத்தில் இருக்கிறாய். அம்மா மலாக்கா சிறையில் இருக்கிறாள். நான் நைனி சிறையில் இருக்கிறேன். சில சமயங்களில் இந்தப் பிரிவு துன்பமாயிருக்கிறதல்லவா? ஆனால், நாம் மூவரும் சேரப்போகும் நாளை நினைத்துப்பார்! நான் அந்த நாளை நினைத்துக்கொண்டே, கவலையை மறந்து உள்ளத்தில் களிதளும்ப வாழ்கிறேன்”.

இன்னொன்றில் இப்படிச் சொல்கிறார், “பழங்காலத்தோடு நமக்குள்ள பல தொடர்புகளை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஆனால் பழைய வழக்கம் என்கிற தளை நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் போதெல்லாம், அதை முன்பின் பாராது அறுத்தெறிய வேண்டும்”.

குழந்தைகள் விழுந்துவிடவே கூடாது என்று, கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளாமல், விழுந்தாலும் மீண்டும் எழுவதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டும். அதைத்தான் நேரு செய்தார். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக இந்திரா சரித்திரத்தில் இடம்பிடித்துக் காட்டினார். மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறேன்,

“குழந்தைகளை வளர்க்காதீர்கள்...வளரவிடுங்கள்!!”