தோழர் சி.துரைக்கண்ணு அவர்களின் தன்வரலாற்று நூலான ‘நிற்க அதற்குத் தக’ எனும் நூற்றைம்பது பக்க நூலை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. என்னுள் பல்வேறு சிந்தனையோட்டங்களை அந்த நூல் உருவாக்கியது. அதனைப் பகிர்ந்துகொள்வது ஒரு சமூகப் போராளியைக் கொண்டாடுவதாக அமையும் என்பது என் எண்ணம். அந்த நூலில் பேசப்பட்டுள்ள காட்சி வடிவ நிகழ்வுகளை உரையாடலுக்குட்படுத்துவது சமூக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும் தோழர் துரைக்கண்ணு அவர்களின் பதிவுகளைப் புரிந்துகொள்ள பின்கண்டவாறு பகுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்படும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் இளமைக்காலம் என்பது. அவன் வாழும் சமூகப் பின்புலங்களில் எவ்வாறெல்லாம் தாக்கமுறுகிறது; அதனைக் குறிப்பிட்ட அந்தச் சிறுவன் எவ்வாறு எதிர்கொள்கிறான்? அந்தக் கடுமையான எதிர்நீச்சலில், எப்படி நீந்தி பொதுவெளி சமூகத்தில் தன்னையும் ஓர் அடையாளம் உடைய உயிரியாகக் கட்டமைத்துக் கொள்ள முடிகிறது; என்ற தமிழ்ச் சமூகத்தின் இயங்குமுறையை இந்நூல் எவ்வாறு பதிவு செய்துள்ளது என்பது குறித்துப் பேசமுடியும்.

duraikannu biographyதமிழ்ச் சமூகத்தின் அரசியல் கருத்துநிலை சார்ந்த இயங்குதளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு போக்குகள் உருப்பெற்று வளர்ந்து வருவதை நாம் அறிவோம். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க மரபு, அயோத்திதாசரின் பவுத்த மரபு சார்ந்த ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. இம்மரபுகளின் தொடர்ச்சியை அங்கீகரிக்கும் அதேவேளையில், பிரபஞ்சம் தழுவிய மனிதவிடுதலைக்கான கருத்துநிலையை முன்னெடுக்கும் மார்க்சிய தத்துவ மரபும் தமிழ்ச்சூழலில் 1920கள் முதல் நடைமுறையில் உள்ளது. இம்மரபு இந்தியச் சூழலில் 1960களின் இறுதியில் நக்சல்பாரி இயக்கமாக வடிவம் பெற்றது. இந்த இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு கல்லூரி மாணவனின் நேரடிப் பதிவாக தோழர் சி.துரைக்கண்ணு அவர்களின் பதிவு அமைகிறது. தமிழ்ச் சமூகத்தில் 1970களில் செயல்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாடுகள், அதில் தோழர் துரைக்கண்ணு போன்ற இளைஞர்களின் ஈடுபாடு என்பதை தமிழ்ச் சமூகத்தின் இடதுசாரி கருத்துமரபின் இயங்குதளத்தைப் புரிந்துகொள்வதற்கான அரிய ஆவணமாக, இந்த நூல் அமைகிறது. அத்தன்மை குறித்த உரையாடலையும் நாம் முன்னெடுக்க முடியும்.

தாம் வாழும் சமூகத்தில் பெரிய மாற்றத்தை/புரட்சியை விரும்பிய ஒரு இளைஞன், அது எந்த வகையில் சாத்தியமாகும்? சாத்தியப்படாமல் போகுமா? அது நிகழ வெகுகாலம் எடுக்குமா? என்ற கேள்விகளை முன்னிறுத்தும்போது, தாம் வாழும் சமூகத்தின் உடனடிச் சிக்கல்களுக்கு எப்படி முகம் கொடுப்பது? அதில் எவ்வகையில் செயல்படுவது; என்ற கேள்விகளுக்கான விடையளிப்பதாகவே தோழர் துரைக்கண்ணு அவர்களின் நெய்வேலி நிலக்கரித் திட்டப் பள்ளிக்கூடங்களுடன் இணைந்து செயல்பட்ட நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமூகப் புரட்சியைக் கனவுகண்ட இளைஞன், சமூகத்தின் அறிவுத்தளத்தை மற்றும் தனிமனித சுயமரியாதை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் சார்ந்து செயல்பட்ட வரலாறு, வியப்பும் ஆச்சரியமும் அளிக்கவல்லதாக உள்ளது. அதுகுறித்த உரையாடலை நிகழ்த்தும் தேவையுண்டு.

மறுக்கப்பட்ட கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டம்; கருத்துநிலை சார்ந்து சமூக மாற்றத்திற்காகச் செயல்பட்ட பல்வேறு தளங்கள் ஆகியவற்றைக் குறித்து ‘நிற்க அதற்குத் தக' எனும் ஆவணம் பேசுவதை மேலே பதிவு செய்தோம். இத்தன்மைகள் குறித்த விரிவான உரையாடலை மேற்கொள்ளும் தேவையுண்டு.. . .

“சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஊரில் பள்ளிகள் வரவில்லை. பிள்ளைமார் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கிராமத்தில் ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று தம் சொந்த நிலத்தைக் கொடுத்து உதவினார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தராவ் என்பவர் ‘சிவாஜி’ நடுநிலைப்பள்ளி தொடங்கினார். அய்யருடைய (அய்யர் - கிராமப் பண்ணையார்) எதிர்ப்பை எல்லாம் மீறித்தான் நடுநிலைப்பள்ளி ஊருக்கு வந்தது. அனைத்து சமூகங்களையும் சேர்த்துப் பார்த்தாலும், அங்குக் கல்வியறிவு மிகக் குறைவாகவே இருந்தது. பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காதவர்கள் எல்லாச் சாதியிலும் இருந்தார்கள். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இப்படியான சூழல்தான் நான் சிறுவனாக வளர்ந்த காலத்தில் நிலவியது.” (நூல்:ப:21)

இந்தக் குறிப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி பெறுவது என்பது இயல்பானது இல்லை. பெரிய பண்ணையாருக்குச் சொந்தமான ஊரில் பிறந்து வளர்ந்த தோழர் துரைக்கண்ணு எவ்வாறு பள்ளிக்கல்வியைப் பெற முடிந்தது. அதில் பண்ணையார்களுடைய ‘தர்மகர்த்தா' மனநிலையின் செயல்பாடுகள் எத்தகையது? பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே திறமையான ஆசிரியர்களாக இருந்த சூழலும் அவர்கள், ஒருவகையில் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்னும் ‘தர்மகர்த்தா' மனநிலையில் செயல்பட்டதும் பற்றியான பின்புலங்களை இந்நூலில் காண்கிறோம். கிறித்தவப் பள்ளிக்கூடங்களே தரமான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கும் சூழல் நிலவியதையும் தோழர் துரைக்கண்ணு பதிவுசெய்கிறார். கிறித்தவப் பள்ளிக்கூடங்களில் கிடைத்த பயிற்சி, தான் வளருவதற்கு எந்த அளவுக்கு அடிப்படையாக அமைந்தது என்பதையும் கூறுகிறார். நல்வாய்ப்பாக ஒரு பட்டியலின மாணவருக்குக் கிடைத்த வாய்ப்புகள், எவ்வகையான வளர்ச்சிக்கு உதவியது என்பதை அறிய முடிகிறது. இவ்வகையான வாய்ப்பு அனைத்துப் பட்டியல் சமூக மாணவர்களுக்கும் கிடைக்க வாயப்பற்ற நிலை இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி வளர்ந்த தோழர் துரைக்கண்ணு எவ்வகையான அரசியல் கருத்துநிலைகளுக்குத் தன்னை உருவாக்கிக் கொள்ள முடிந்தது என்பதற்குப் பல்வேறு நிகழ்வுகளைச் சொல்கிறார். இதில் பெரியார் குறித்த அறிமுகம் அவருக்குக் கிடைத்த சூழலைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், எங்கள் பகுதியில் டி.எம்.மணி என்ற தலைவர் இருந்தார். அவரை திருப்பனந்தாள் மணி என்பார்கள். இரவுப் பள்ளிகள், பெரியார் படிப்பகம் என 70களில் கிராமந்தோறும் தொடங்கினார். அடிப்படையில் அவர் ஒரு டைலர். பகல் முழுவதும் தையல் கடையில் வேலைகளைச் செய்வார். மாலை நேரங்களில் வேலையில்லாத பட்டதாரி மாணவர்களுடன் கிராமங்களுக்குச் சென்று பெரியார் பற்றிய பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் பரப்புவார். அந்தப் பேச்சை இளமையில் கேட்பதற்கு உற்சகாகமாக இருக்கும். மணியின் பிரச்சாரப் பணிகள் பெரிய அளவில் கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. முதலில் அவர் பெரியாரைத்தான் அறிமுகப்படுத்தினார். அப்போது அம்பேத்கர் பற்றிய செய்திகள் அவ்வளவாக அறிமுகமாகவில்லை. கடவுளைப் பற்றிய கேள்வியெல்லாம் அப்போதுதான் எனக்குள் வருகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது இந்து மதம்தான் மோசமானது, கிறித்துவ மதம் நல்லது என்பது மாதிரியான எண்ணம் இருந்தது.

தினத்தந்தியில் வெளியான அறிவிப்பில் இலவச பைபிள் வேண்டுவோர் முகவரி அனுப்புங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் போஸ்ட்கார்டு எழுதி பைபிள் பெற்று வாசித்திருக்கிறேன். கிறித்துவப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே பைபிள் பற்றிய அறிமுகம் எனக்கிருந்தது” (நூல்:ப:29-30).

பின்காலனிய சமூக அமைப்பில் மதங்கள் சார்ந்த செயல்பாடுகள் மக்களைத் தெரிந்தோ தெரியாமலோ ஆதிக்கம் செலுத்திய காலங்களில், கிறித்தவம் பற்றிய இவருக்கான அறிமுகம் என்பது மிகப் பின்தங்கிய சாதிய சமய ஆசாரங்களைக் கொண்டிருந்த ‘இந்து மதம்' எனும் பிடியிலிருந்து விடுபட்டிருப்பதைக் காண்கிறோம். இளம் வயதிலேயே மனரீதியாக, சாதிய நிலவுடைமைப் பண்புகள் நிலவிய சூழலிலிருந்து மாற்றிச் சிந்திக்கும் வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார். அதில் பெரியார் குறித்த அறிமுகம் பள்ளிக் கல்வி­யிலேயே ஏற்பட்டதும் அதனால் கிறித்தவப் பள்ளியில் அவருக்கு நேர்ந்த செயல்களையும் சுவையாகப் பதிவு செய்துள்ளார்.

தோழர் துரைக்கண்ணு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்த பின்னணி என்பது தனித்த நிலையில் இருப்பதாகவே உணரமுடிகிறது. பரவலாக, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இப்படியான வாய்ப்புகள், அந்தக் காலச் சூழலில் கிடைத்திருக்குமா? என்ற உரையாடல் அவசியம். இதில் கிறித்துவ சபைகளின் செயல்கள் குறித்து அறிய முடிகிறது. இச்சூழல் தமிழகம் முழுவதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில், இளம்வயதிலேயே பெரியார் குறித்த அறிமுகத்துடன் வளர்ந்த இவரது மனநிலை சுயமரியாதை உணர்வையும் உழைக்கும் மனநிலையையும் பெற்றிருப்பதாகவே கருத முடிகிறது. பொறியியல் கல்லூரி மாணவராகச் சேரும் காலத்திலேயே இவருக்குள் உருவான கருத்துநிலைதான், சூழலையும் மீறிச் செயல்படும் உத்வேகத்தைக் கொடுத்திருப்பதாக அறிய முடிகிறது. நிலவுடைமை சார்ந்த பண்ணையார் சூழல், கிறித்தவப் பள்ளிக்கூடச் சூழல், பெரியாரின் கருத்து மரபுகளை உள்வாங்கிய மனநிலை ஆகிய அனைத்தும் ஒரு இளைஞனை எங்கே கொண்டு செல்கிறது என்பதான புரிதலாகவே தோழர் துரைக்கண்ணு அவர்களின் இளமைக்கால வாழ்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே பொதுவான சூழலாக அமையாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தனிநபரின் இந்தப் பின்புலம், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு சுயமரியாதை உடைய மனிதராக வாழும் பயிற்சி பெற்ற வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே இவரை அடுத்தகட்ட அரசியல் சிந்தனை மரபுக்கு வளர்த்தெடுத்திருக்கிறது.. . .

“எனக்குக் கிடைத்த தகவல்படி 15 ஆண்டுகளுக்கு மேலாக அதாவது இயக்கச் செயல்பாடுகளுக்கு வந்த பிறகு தோழர் தமிழரசன் சட்டையே போடவில்லை என்று சொல்வார்கள். ஆண்டிமடம் பகுதியில் உள்ள முந்திரிக்காட்டு விவசாயி போலவே தோலெல்லாம் கருத்துப்போயிருப்பார். அவரது தோற்றத்தைப் பார்க்கும்போது கல்லூரியில் படித்தவர் என்று நம்பமுடியாது. அறிவுஜீவி என்கிற எந்த அடையாளத்தையும் அவரிடம் காண முடியாது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் தேடப்படும் முக்கியத் தலைவராக அவர் இருந்தார். அவரைத் தேடுவதற்காகப் பல நாட்கள் போலிஸ்காரர்கள் தூங்காமல் தவிப்பதாகச் சொல்வார்கள்.” (நூல்:ப:55)

மேலே உள்ள மேற்கோள் மூலம் அன்றைய தென்ஆற்காடு மாவட்டம் சார்ந்த அரசியல் செயல்பாடுகளைப் புரிந்துகொள்கிறோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சூழலில் மார்க்சிய லெனினியச் செயல்பாடுகளும் அன்றைய தலைமறைவு இயக்கங்களில் செயல்பட்ட புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் சார்ந்த செயல்பாடுகளும் குறித்து அறிகிறோம். இதில் நேரடியாகப் பங்கு கொண்ட இளைஞனாகத் தோழர் துரைக்கண்ணு செயல்பட்ட வரலாறு என்பது சுயமரியாதை இயக்க மரபின் தொடர்ச்சியாகப் புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தோடு ஐக்கியப்படும் இயல்பான வளர்ச்சியைக் காண்கிறோம். இதுகுறித்த தோழர் துரைக்கண்ணு பதிவு வருமாறு:

“எம்எல் இயக்கத்தில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிலத்தை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிடுவோம் என்றார்கள். நல்ல மாற்றம் நிகழப்போகிறது என்று மகிழ்ச்சியடைந்தோம். மாணவர் இயக்கத்தில் ஈடுபடுவதில் எந்தத் தயக்கமும் பயமும் ஏற்படவில்லை. அமைப்பின் மீதிருந்த அதீத நம்பிக்கையால் பலருக்குப் படிப்பில் ஆர்வம் குறைந்தது. சிதம்பரத்தில் மாநில மாநாடு சிறப்பாக நடந்தது. என்னைக் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கிவைக்கச் சொன்னார்கள். நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் நாடார் மகாஜன திருமண மண்டபம். சதாசிவத்துக்குத் தொடர்பு இருந்ததால், அவர்தான் மண்டப நிர்வாகத்துடன் பேசி அனுமதி வாங்கினார். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் மண்டபம் இருக்கிறது. அதன் வாயிலில் சிவப்புக் கொடியேற்றி “நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்... நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்...” என்று முழக்கமிட்டோம். மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது.” (நூல்:ப:45)

மேலே குறித்தவாறு மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயல்பட்ட தோழர்கள் அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக என்ன செய்திருக்க வேண்டும்; அது தமிழ்ச் சூழலில் சாத்தியமாயிற்றா? என்ற கேள்வி முதன்மைப்படுத்தப்படுகிறது. இயக்க வளர்ச்சிநிலை எவ்வாறு இருந்தது என்பதை தோழர் துரைக்கண்ணு பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“1986ஆம் ஆண்டு என்எல்சிக்கு வரும்போது இயக்கத்திற்குள் அதிக முரண்பாடுகளும் சிக்கல்களும் இருப்பதாகச் செய்திகள் பத்திரிகைகளில் கசிந்தன. வெகுஜன அமைப்புகள் தொய்வடைந்திருந்தன. அடுத்து என்ன செய்வது என்ற நிலையில், கல்விச் சீர்கேடுகளைக் களைவதற்காகப் பணியாற்றலாம் என்ற திட்டத்தைக் கல்யாணிதான் முன்வைத்தார். அப்போது அவர் திண்டிவனம் பகுதியில் செயலாற்றி வந்தார். எம்எல் இயக்கத்திலிருந்து வெளியே வந்தவுடன் வெகுஜனப் பிரச்சினைகள், மாணவர்களின் கல்விப் பணிகளில் கவனம் செலுத்தினார்.

அப்போதுதான் கல்யாணி, அ.மார்க்ஸ், கோச்சடை, ரவிக்குமார் போன்றோருடன் சேர்ந்து மாநில அளவில் மக்கள் கல்வி இயக்கத்தைத் தொடங்கினோம். திண்டிவனத்தை மையமாக வைத்து எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. நெய்வேலியில் என்எல்சி நிர்வகிக்கும் ஐவஹர் மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ என இரு பள்ளிகள் இருந்தன. அங்கு சுந்தரம் என்ற தமிழாசிரியர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பள்ளி மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தி வந்தார். அதையெல்லாம் கேள்விப்படும்போது கவலையாக இருந்தது.” (நூல்:ப:57)

மக்கள் கல்வி இயக்கத்தில் செயல்பட முனையும்போது அவருக்கு மார்க்சிய லெனினிய இயக்கங்களில் செயல்பட்ட அனுபவம் உள்ளது. முற்போக்கு மாணவர் சங்கம், முற்போக்கு இளைஞர்களணி, புரட்சிப் பண்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புகள் தொடங்கப்பட்ட காலங்களில் அதில் முன்னணி ஊழியராக இருந்த துரைக்கண்ணு அவர்கள், அவ்வகையான பணிகளில் தொடர்ந்து செயல்பட இயலாத சூழலில், களத்தில் உள்ள எதார்த்தங்களை நோக்கிய செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முற்பட்ட மனநிலையையே மேலே உள்ள பதிவு சொல்கிறது. இந்த மனநிலை சார்ந்து அவர் பணியாற்றிய பாங்கு எத்தகையது? புரட்சிகர மனநிலையில் செயல்பட்டவரின் மாற்றுச் செயல்பாடு எத்தகையதாக இருக்கிறது. அது நேரடியான கல்விப் பணிகளில் எவ்வாறு செயல்பட முடிகிறது? அதன் பரிமாணங்கள் எத்தகையது என்ற விவரணங்கள் மிகவும் உற்சாகமளிக்கும் நிகழ்வுகளாக இருப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறு இவர் செயல்படுவதற்கு கிடைத்த மற்றொரு முன் அனுபவம் என்பது, தமிழக அரசு சார்ந்த பொதுப்பணித் துறையில் சில ஆண்டு காலம் பொறியாளராகச் செயல்பட்டது. அந்தக்கால அவரது மனநிலையை கீழ்வரும் பகுதி சொல்கிறது.

“வெளியில் போனால் சுதந்திரமாக வேலை செய்யலாம் என்றுதான் பொதுப்பணித்துறை பணிக்குச் சென்றேன். ஆனால் உள்ளே போனதும் ஊழல் கறையான்களும் சூழ்ச்சிகளும், ஒருவருக்கொருவர் காலை வாருவதுமாக இருந்ததைப் பார்த்தபோது வெறுத்துப் போனேன். எனக்கும் 22வயது. நக்சல்பாரி இயக்கத்தில் வேறு செயல்பாட்டாளராக இருக்கிறோம். மேலும், உலகையே புரட்சியின் மூலம் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றுகிறோம். லஞ்ச லாவண்யங்களுக்கு மத்தியில் வேலை பார்ப்பதா என்று கேள்வியை மனம் எழுப்பியது.” (நூல்:ப:56)

இவ்வாறு பள்ளி, கல்லூரி காலங்களிலேயே சுயமரியாதை இயக்கம். இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் தொடர்பால் உருவான மனநிலை, அரசு நிறுவனங்களில் செயல்பட முடியாத நிலையை உருவாக்குகிறது. ஆனால், அந்த அனுபவம் சார்ந்து, அரசு சார்ந்த பொது நிறுவனம் ஒன்றில் எவ்வாறு செயல்பட முடிந்தது? அதன்மூலம் நிகழ்த்திய சாதனைகள் எத்தகையது? என்ற கேள்விகளுக்கு விடையாகவே நெய்வேலி பள்ளிக்கூடங்களில் அவரது செயல்கள் அமைகின்றன. அவர் பொறுப்பேற்ற காலங்களில் பள்ளிகளின் நிலைமை எவ்வாறு இருந்தது? கீழ்வரும் பகுதி அதனைச் சொல்கிறது:

“18 பள்ளிகளின் கல்விச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அந்தத் தருணத்தில் என்எல்சி பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக அறிவியல் கணித ஆசிரியர்கள் ஜவஹர் பள்ளிக் குழந்தைகளுக்கு முழுமூச்சாக டியூசன் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதாவது அனுபவமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இவர்கள்தான் பொதுத்தேர்வுக்குக் கேள்வித்தாள் தயாரிக்கிறார்கள் என்ற கருத்துப் பெற்றோர்களிடம் பரவியிருந்தது. அவர்களிடம் பிள்ளைகள் படித்தால் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து விடலாம் என்று நினைத்தார்கள். கூட்டம் கூட்டமாகப் போய் அவர்களிடம் டியூசன் படித்தார்கள். ஜவஹர் பள்ளி மாணவர்களின் டியூசன் தேர்வுத் தாளை என்எல்சி பள்ளியில் உட்கார்ந்து அந்த ஆசான்கள் திருத்துவதும், அதை என்எல்சி பள்ளிப் பிள்ளைகளிடம் கொடுத்து மொத்த மதிப்பெண்கள் போடச் சொல்வதும் என மிக மோசமான சூழல், காலையில் இரண்டு பேட்ச், மாலையில் இரண்டு பேட்ச் டியூசன் நடத்திவிட்டுப் பள்ளியில் வந்து எப்படிப் பாடம் நடத்த முடியும், என்எல்சி மாணவர்களின் கல்வித்தரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருந்தது.” (நூல்:ப:74)

நடுவணரசு சார்ந்த பொதுத்துறையில் தனிப்பயிற்சி (Tuition) என்ற செயல்பாடு மூலம் பள்ளியின் கல்வித்தரத்தை ஒழித்த ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக, “தனிப்பயிற்சி ஒழிப்பு மாநாடு” (1992) ஒன்றை நெய்வேலியில் நடத்திக்காட்ட இவரால் முடிந்தது. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களில் ஒழுங்காக பாடம் எடுக்கும் சூழல் உருவானது. பள்ளி நிர்வாகச் சீர்கேடு, பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள ஊழல் இவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்ள தோழர் துரைக்கண்ணு மேற்கொண்ட நடவடிக்கைகள், அதில் அவர் எதிர்கொண்ட தனிமனிதன் சார்ந்த துன்பங்கள், பேராசிரியர் கல்யாணி (கல்விமணி) அவர்களின் ஒத்துழைப்பு ஆகிய பல செயல்பாடுகள். புரட்சியை உருவாக்க நினைத்த இளைஞனின் சமூக எதார்த்தமாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். சமூகப் புரட்சிமீது தீராக் காதல் கொண்ட மனிதருக்கு, அதற்கான சூழல் கனியாதபோது, குடிமைச் சமூகச் செயல்பாடுகளை முன்னெடுத்து அதில் பெரும் வெற்றிகள் என்பவை முக்கியமானது. இந்தச் செயலின்மூலம் சாதாரண ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள் எத்தகையன? என்ற கேள்விக்குப் பதிலாகவே தோழர் துரைக்கண்ணு அவர்களின் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் சார்ந்த பணிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. மிகப்பெரிய பொதுநிறுவனங்களில், சாதாரணமான ஒரு தனிமனிதரின் செயல்பாடு என்பது, அவர் உள்வாங்கிய அரசியல் கருத்துநிலை சார்ந்தே செயல்பட முடியும். அதனைக் காட்டுவதாகவே துரைக்கண்ணு அவர்களின் செயல்பாடுகள் நிகழ்ந்திருப்பதை இந்த நூல் பதிவுகள் சொல்கின்றன.

தோழர் துரைக்கண்ணு அவர்கள் இப்போது, பச்சையப்பன் அறக்கட்டளை எனும் கல்வி நிறுவனத்தின் செயலாளராக செயல்படுகிறார். அதுபற்றிய குறிப்புகள் இந்த நூல் பிரிவில் இல்லை. இரண்டாம் பகுதியாக வெளிவர வேண்டிய இவரது வாழ்க்கை வரலாறு, பச்சையப்பன் அறக்கட்டளையின் செயல்பாடுகளாகவே இருக்கும்.

1842இல் தொடங்கப்பெற்ற பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்கள் சீரழிவின் உச்சத்தில் இருக்கிற இந்தக் காலகட்டத்தில்தான் இவர் வந்திருக்கிறார். அறக்கட்டளை உறுப்பினர்களின் அரசியல் கட்சி சார்ந்து, பச்சையப்பன் அறக்கட்டளைச் சொத்துக்கள் களவாடப்பட்டன. ஆசிரியர்கள் நியமனம் என்பது எவ்விதமான அடிப்படை அறமும் இன்றி இலட்சக்கணக்கான பணங்களை, வெளிப்படையாகவே வாங்கிக்கொண்டு நடைபெற்றது. ஆசிரியர் மரபு சார்ந்த அறம் இல்லாது போனது. அந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களை ரவுடிகளாக தமிழ்த் திரைப்பட உலகம் சித்தரித்து வருகிறது. ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்குச் செல்லாது, லேவாதேவி தொழில்களான திரைப்பட பணமுதலீடு, ரியல் எஸ்டேட் தொழில்கள் செய்பவர்களாகவே கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தனர். அந்த சூழலுக்குள் தோழர் துரைக்கண்ணு வந்திருக்கிறார். தகுதி இல்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கும் நடைமுறைகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் நியமனத்திற்குப் பல இலட்சம் பேரம் பேசும் நிர்வாகம் இல்லை; நேரடியான ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதனை அரசாங்கம் கொண்டாட வேண்டும். ஆனால், அதனை எதிர்த்து அரசு அறிக்கை அனுப்புகிறது. அதனை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல் அவருக்கு உருவாகியுள்ளது.

இளம் வயதில் சுயமரியாதை மரபோடு வளர்ந்து, பின்னர் மார்க்சிய கருத்துநிலை சார்ந்து செயல்பட்டு, அரசுப்பணியைத் தூக்கியெறிந்துவிட்டு தனிப்பட்ட நிறுவனம் ஒன்றில் நேர்மையான கல்விச் செயல்பாடுகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்ட வரலாறுதான் தோழர் துரைக்கண்ணு அவர்களின் ‘நிற்க அதற்குத் தக' எனும் நூல். இதன் தொடர்ச்சியை பச்சையப்பன் அறக்கட்டளையின் அவருடைய செயல்பாடுகள் வழி அறியக் காத்திருக்கிறோம். தமிழ்ச் சமூகத்தில் ஒரு மனிதரின் செயல்பாடு என்பது கல்விப்புலம் சார்ந்து நிகழ்ந்த வரலாற்றின் ஆவணமாக இந்த நூல் இருக்கிறது. இதனைப் பதிவு செய்த சமூகப் போராளி சி.துரைக்கண்ணு நமது வணக்கத்திற்குரிய அரிய மனிதராகவே இருக்கிறார். இப்போராளியைக் கொண்டாடும் கடமை தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு.

‘நிற்க அதற்குத் தக' | சி. துரைக்கண்ணு

விலை - ரூ.150 | நீலம் பப்ளிகேஷன்ஸ்

தொடர்பு எண் : 9894525815

- வீ.அரசு