கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

marina students 337

‘மெரினா புரட்சி’ எனும் புதிய சொல்லாட்சி தமிழில் புழக்கத்திற்கு வந்துள்ளது. பெரும் சமூக எழுச்சியைப் புரட்சி என்ற சொல்லில் குறிக்கிறோம். தமிழ்ச்சூழலில் இன்னொரு பக்கம் இந்தச் சொல் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கொச்சைப்படுத்தப் பட்ட அந்த சொல்லின் உண்மையான பொருளில் ‘மெரினா புரட்சி’ என்ற சொல்லைப் பயன் படுத்தும் சூழல் தமிழகத்தில் உருப்பெற்றுள்ளது. மதுரை ‘தமுக்கம் புரட்சி’, கோவை ‘வ.உ.சி பூங்கா புரட்சி’ என்றும் கூற வேண்டும். தமிழகத்தின் முப்பெரும் நகரங்களின் பொதுவெளியில் வெகுசனத் திரள் போராடியதோடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய சிறுநகரங்களிலும் வெகுசனத் திரள் சார்ந்த கூடுகை ஏற்பட்டது.

தமிழர்கள் எனும் அடையாளத்தில், தமிழ் மொழியைப் பேசுவோர், தாய்மொழியாகக் கொண்டோர் ஆகிய அனைவரும், இந்த வெகுசனத் திரளில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழ்மொழி பேசுவோர், தமிழ்நாட்டில் பிறந்து பிற நாடுகளில் வாழுவோர் என அனைத்துத் தரப்பினரும் இந்நிகழ்வில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். பெரும் பாலான பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள், இந் நிகழ்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் ஊடகத் துறை சார்ந்தவர்களாகச் செயல்பட்ட பல பார்ப்பன நண்பர்கள் இந்நிகழ்வை எதிர்மறையாகப் பார்த்தனர். சாதியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் இந்நிகழ்வை விமர்சனம் செய்தனர். இந்நிகழ்வு ‘வெற்றுத் தமிழ்ப் பெருமை’ (Tamil pride), ‘தமிழர்களின் வெறித்தனம்’ (Tamil Chauvinism) எனும் தொடர்களால் விமரிசனம் செய்யப்படுவதையும் காணமுடிகிறது.

மேற்குறித்த அனைத்துத் தன்மைகள் எல்லாம் ஒரு புறமிருக்க, தமிழ்ச் சமூகத்தில் இவ்வளவு பெரும் சனத்திரள் கூடுகை என்பது முதன் முறை யாக நிகழ்ந்துள்ளது. சமூக மாற்றத்தில் நம்பிக்கை உள்ளவர்களை இந்நிகழ்வு உரையாடலுக்குட் படுத்தியுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? இவ்வாறெல்லாம் மக்கள் பொது வெளிக்கு வருவார்களா? முப்பது வயதுக்குட் பட்டவர்களே பெரும்பான்மையாகப் பங்கேற்றது ஏன்? எந்த அரசியல் கட்சி சார்பும் இன்றி இப்படித் திரள முடிகிறதே! நிகழ்த்தப்பட்ட முறையில் கடைப் பிடிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் வியப்பளிப்பதாக இருக்கிறதே! பாலின முரண்சார்ந்த சிக்கல்கள் எதுவும் இத்திரளில் உருவாகவில்லையே! குடும்பம் குடும்பமாக, திருவிழாவில் கலந்து கொள்ளும் மனநிலையில் மக்கள் பங்கேற்றார்களே!

பொதுச் சொத்துக்கு சேதம் உருவாக்காத இத்திரளின் மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது? இப்படியான பலப்பல கேள்விகள்... இன்னும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இதற்கான பதிலைத் தேடுவதைவிட, இத்திரள் கூடுகை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடும் மனநிலையே தற்போது மேலோங்கியுள்ளது. காலப் போக்கில், இந்நிகழ்வுக்கான பின்புலங்களை நம்மால் கண்டறிய முடியும். உடனடி நிகழ்வுக்கான காரணங்களை உடனடியாக மதிப்பீடு செய்ய இயலுமா? என்ற கேள்வியும் நம்முன் உள்ளது. முதலில் இந்நிகழ்வை மனம்பூரித்துக் கொண்டாடும் மனநிலை சார்ந்து சில பதிவுகளை முன்வைக்க விரும்புகிறேன். காலப் போக்கில் வரலாற்று விளைவுகளை எதிர்கொள் வோம்.

இந்நிகழ்வுக்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கியது சமூக ஊடகம் (Social Media). வளர்ச்சியடைந்த தொழில்நுட்பக் கூறுகளை உள்ளடக்கிய கைபேசிகளே (Smart Phones) இக் கூடுகையை சாத்தியமாக்கியது. கைபேசிகளைப் பயன்படுத்துவோர், மடிக் கணினிகளைப் (Lab-tap) பயன்படுத்துவோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பே இவ்வகையான மக்கள் திரளைச் சாத்தியப்படுத்தி யுள்ளது. இவ்வகையான நிகழ்வு தமிழ்ச் சமூகத்தில் புதிது. ‘வாட்ஸ்அப்’ (Whats app), முகநூல் ((Face

book) உள்ளிட்ட கைபேசித் தொடர்புகள் முகமறிந்து தான் உருவாக வேண்டும். முகமறியா உறவுகளை நாம் ‘கும்பல்’ என்று சமூகவியலில் படித்திருக் கிறோம். மக்கள் (People) வேறு; கும்பல் (Mass) வேறு என்றும் படித்திருக்கிறோம். ‘மக்கள்’ என்பது முகமறிந்த கூட்டம்; கும்பல் என்பது முகமறியாத திரள் என்று புரிந்து வைத்திருக் கிறோம். இந்நிகழ்வில் முகமறியாதோர் தொழில் நுட்ப வளர்ச்சியால் முகமறிந்தவர்களாக மாறி யுள்ளனர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ‘மொழி’, ‘இனம்’, ‘சாதி’, ‘சினிமா’ என்ற மதிப்பீடு களைக் கொண்டு மக்கள் திரள் இதுவரை சாத்தியப் பட்டுள்ளது. அண்மைக் காலங்களில், தேர்தல் சார்ந்த செயல்பாடுகளில் ‘சாதி’ எனும் முகம் கூர்மைப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இலை மறை காயாகச் செயல்பட்ட சாதி சார்ந்த

தேர்தல் நிகழ்வு என்பது ஓட்டு சேகரிப்பின் உத்தியாக, சாதியும் மதமும் பொதுவெளியில், அந்த அடையாளத்தை முன்னிறுத்தி ‘ஓட்டு அரசியல்’ செயல்படுவது அண்மைக்கால நிகழ்வு. ‘மெரினா புரட்சி’யில் இவ்வகையான சாதி அடையாள மனநிலை இத்திரளில் நிகழ்ந்ததாகக் கூற முடியாது. பால் உறவு சார்ந்து வெளியிடப் பட்ட படத்துணுக்குகள், முழக்கங்கள் ஆகியவை பச்சையான ஆணாதிக்க வெளிப்பாடுகளைக் கொண்டிருந்ததை நாம் பதிவு செய்யவேண்டும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் வயதினர் மற்றும் வெகுமக்கள் குறித்து இதுவரை எதிர்மறை விமரிசனங்களே முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையான விமரிசனங்களுக்கான தன்மைகள் அவற்றில் இல்லாமல் இல்லை; ஆனால் இவ்வூடகம், பிறிதொரு சமூக நிகழ்வைச் சாத்தியப்படுத்தும் என்ற புரிதல் இப்போது உருப்பெற்றுள்ளது. இதன் எதிர்மறைப் பண்புகளைப் புறந்தள்ளி, இவ்வூடகம் சாத்தியப்படுத்தும் சமூகப்புரட்சியை முன்னெடுக்கும் தேவை நம்முன் உள்ளது. இதற்கான நேரடிச் சான்றாக ‘மெரினா புரட்சி’யைக் கூற முடியும்.

தொழில்நுட்ப மாற்றம், அதன் சமூகப் பயன்பாடு, சமூக மாற்றத்திற்கான கருவி என்ற கண்ணோட்டத்தில் சமூக ஊடகங்கள் குறித்தப் புதிய விழிப்பை ‘மெரினா புரட்சி’ உருவாக்கி யுள்ளது. வணிக நிறுவனங்கள் இவ்வூடகங்களைப் பயன்படுத்தும் அளவிற்குச் சமூகச் செயற் பாட்டாளர்கள் பயன்படுத்துவதாகக் கூறமுடியாது. வெகுவேகமான தொடர்புமுறையைக் கட்டமைக்கும் இவ்வூடக முறைமை, செயல்படும் தேவை, சமூக மாற்றங்களில் அக்கறை கொண்டோர் கவனத்தில் கொள்ள வேண்டியதாக அமைகிறது.

இலட்சக்கணக்கில் திரண்ட மாணவ, மாணவிகள், தொழில்நுட்ப பூங்காக்களில் (I.T. Park) பணிபுரிவோர், சிறுசிறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர், குடும்பத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள், சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திரைப் படத்துறையில் பணிபுரிவோர் எனப் பல பரிமாணங் களில் திரண்ட இம்மக்கள், திரளுவதற்கான ஒருங் கிணைப்பைச் சமூக ஊடகங்கள் வழங்கினாலும், திரளுவதற்கான காரணங்கள் குறித்தப் புரிதல் நமக்குத் தேவை.

இவ்வகையில் திரண்ட மக்கள் வெறும் விழா மனநிலையில் திரண்டார்களா? அல்லது விழா போன்ற கூடுதலில், தங்களது அமுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கவனத்திற்கு வராத கோரிக்கைகளுக்காகத் திரண்டார்களா? என்ற உரையாடல் அவசியம். முகமறியாதவர்களுக்கு ஒரு முகம் இருந்தது; அது தமிழர்கள் என்ற தேசிய இனம், இந்திய ஒன்றியத்தில் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது? என்பது குறித்த மனநிலை. போராட்டத்தில் முதன்மையாகப் பலரும் கையில் ஏந்திய பதாகை கருப்புக்கொடி; ‘தமிழன்டா...’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டை மற்றும் துணி பேனர்கள்.

இனத்தின் பெயரை முதன்மைப் படுத்தும் முழக்கங்கள் ஏன் முன்வைக்கப்பட்டன? முப்பது வயதிற்குட்பட்டோர் இவ்வகை முழக்கங் களை முன்வைப்பது ஏன்? வெறும் தமிழ் வெறியா? தமிழன் என்ற அதிகார மமதையா? இதுவரை தமிழகம் குறித்து ஆய்வுசெய்வோர், மேட்டிமை மனநிலை சார்ந்த பதிவுகளையே முன்வைத்துள்ளனர்.

மொழி, இனம் சார்ந்த முழக்கங்களை, இந்தியா போன்ற நாடுகளில் முன்வைப்பது தேசத் துரோகம் எனும் மனநிலையே என்பது அவர்கள் வாதம். உலக மயமாக்கப்பட்டச் சூழலில், இனம், மொழி சார்ந்த அடையாளங்கள் குறித்துப் பேசுவது, வரலாற்றைப் பின்னெடுக்கும் செயலாகாதா? என்ற உரையாடல்கள் விரிவாக முன்னெடுக்கப் படுகின்றன. இன்றைய முதன்மையான சிக்கல்கள் என்பவை பொருளாதார ஒடுக்குமுறை, பாலின ஆதிக்கம், சாதிய ஆதிக்கம், மதஆதிக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளே ஆகும். இதனைப் புறந்தள்ளுவதாக மேற்குறித்த முழக்கங்கள் அமையாதா? என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுவதைக் காண் கிறோம். மொழி, இனம் சார்ந்த முழக்கங்களும் பொருளாதாரம், பாலினம், சாதியம் சார்ந்த முழக்கங்களும் தம்முள் முரண்படுபவைகளாகவே உரையாடல்கள் முன்வைக்கப்படுகின்றன. இத் தன்மை குறித்த விரிவான உரையாடல்களை நிகழ்த்த வேண்டும்.

மொழி, இனம் சார்ந்த பண்பாட்டு அடை யாளங்கள் வெற்று முழக்கங்களா? ஆதிக்கம், மொழி வழி நிகழ்த்தப்படுவதில்லையா? சமஸ்கிருத ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் ஆகியவை இந்திய ஒன்றியத்தில் எவ்வாறு நடைமுறையில் உள்ளது? தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? வடகிழக்கு மாநிலங்களில் கொடுமையான இராணுவ ஆட்சியை, குடியரசு ஆட்சி நடத்துகிறோம் என்று சொல் பவர்கள் நடைமுறைப்படுத்துவது ஏன்? காஷ்மீர் வாழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை, இராணு வத்தின் மூலம் டெல்லியில் இருக்கும் எந்த அரசாங்கமும் எதிர்கொள்வது ஏன்? ஆந்திரா, மகாராட்டிரம், சத்திஸ்கர், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆதிப்பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் என்னும் பெயரில் நாள்தோறும் இராணுவம் சுட்டுத் தள்ளுவது ஏன்? இவைகள் குறித்த உரையாடலில் மொழி, இனம் சார்ந்த அடையாளங்கள் இல்லையா? 2009 இல் முள்ளி வாய்க்காலில் முப்பதாயிரம் தமிழ் பேசும் மக்களை இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் கொலை செய்தது ஏன்? ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இன்றும் வாழ்விழந்து அனாதைகளாக ஆக்கப் பட்டிருப்பது ஏன்? தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் மீனவர்கள் தமக்குள் மோதிக் கொள்வது ஏன்? இதற்கெல்லாம் பிரபாகரனே முழுக் காரண மாகி விடுவாரா? காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த ஆணையம் அமைக்க மறுப்பது ஏன்? அண்மையில் 240க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த கொடு மைக்குப் பதில் சொல்வது யார்? இந்த கேள்விகள் அனைத்தும் ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தைப் புறந்தள்ளியவையா? இப்படியான பல கேள்விகளை மெரினா புரட்சியில் காணப்பட்ட ‘தமிழன்டா...’ என்ற பதாகையின் மூலம் எழுப்பப்பட்டது.

இவ்வகையான சமூகப் பொருளா தாரம் சார்ந்த அரசியல் விழிப்பை, இனம், மொழி சார்ந்த அடையாளங்களாக இவ்விளைஞர்கள் வெளிப்படுத்தினார்கள். இப்படியான முழக்கங்கள் உருவாக்கம் பெறுவதற்கான புறச்சூழல்கள் எவை? சமூக ஊடகங்கள் வழி ஒருங்கிணைக்கப்பட்ட வெகுமக்கள், அவர்கள் நேரடியாக உணர்ந்த வரலாற்றை முழக்கங்களாக முன்வைத்தார்கள். இதில் பொருளாதாரக் கண்ணோட்டங்கள் முன் னெடுக்கப்பட்டதைவிட, பண்பாடு சார்ந்த கண் ணோட்டங்களே முன்னெடுக்கப்பட்டன. பண் பாட்டு ஒடுக்குமுறைக்கும் தேசிய இன ஒடுக்கு முறைக்கும் உள்ள உறவுகள் பொதுவெளிக்கு வந்தது. இதில் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான வர்கள், இவ்வெழுச்சி கண்டு, உள்ளார்ந்த நிலையில் கொண்ட கோபத்தையும் நாம் புறக் கணிப்பதற்கில்லை. இவ்வாறு பல்வேறு நுண் தன்மை சார்ந்த சமூகச் சிக்கல்களை பொது வெளிக்குக் கொண்டு வந்தது மெரினா புரட்சி. இவற்றிற்கெல்லாம் விடைதேடும் மனநிலைகளை உருவாக்கியுள்ளது இப்புரட்சி. அரசியல் புரிதல் சார்ந்த அணிதிரளல் குறித்து மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தோர்க்கு, இவ்வகையான அணி திரளல் முற்றிலும் புதிதாக அமைகிறது. வெற்று அணிதிரளல் இல்லை என்பதைச் சமூக அக்கறை யுடைய அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெற்று அணிதிரளல் இல்லை எனில், இதில் உள்ள சமூக எழுச்சி மற்றும் சமூக மாற்றம் குறித்த பொருண்மைகளை எவ்வாறு உள்வாங்குவது? இதற்கான மொழி எது? இதற்கான புரிதல் எது? ஆகிய பல கேள்விகள் நம்முன் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன. இதனை எதிர்கொள்ளும் தேவை நம்முன் இருக்கின்றது. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், மாவோயிச இயக்கம் செயல்படும் பகுதிகள் ஆகியவற்றை கலவரப்பகுதியாக இந்திய அரசு கருதுகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடும் விரைவில் உள்ளடக்கப்படுமோ? என்ற அய்யம் எழாமலில்லை.

அண்மையில் நண்பர் யமுனா ராஜேந்திரன் தமது முகநூலில் பின் காணும் குறிப்புகளைப் பதிவு செய்திருந்தார். அதனை எனது மொழியில் பதிவு செய்கிறேன். இந்தியா போன்ற நாடுகளில் முதன்மையாக மூன்று நிலைபாடுகள் செயல் படுகின்றன. குடிமைச் சமூகச் செயல்பாடுகள், பாராளுமன்ற அரசியல்சார்ந்த நிகழ்வுகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சார்ந்த புரிதல்கள். இவை மூன்றும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கான அரிய நிகழ்வாக ‘மெரினா புரட்சி’யைக் கூறமுடியும். குடிமைச் சமூக நிகழ்வு களே மக்களின் அணிதிரளல். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை எதிர்கொள்ள அவர் களுக்குப் புரிந்த அரசியல்தான் இத்தகைய ஒன்று கூடல். இந்திய அரசியலில் செயல்படும் பாராளு மன்றவாதிகள், குடிமைச் சமூகத்தை வெறும் ‘வாக்குச்சீட்டு’ சமூகமாகவே புரிந்து கொள் கின்றனர். மதம், சாதி, கடவுள் ஆகிய சமூகக் கொடுமைகளுக்கு ஆட்பட்ட மக்களை, அதில் ஆழ்த்தி, சுயசிந்தனை மரபை அழித்து, வாக்குச் சீட்டுகளைக் காசு கொடுத்து வாங்கி விடலாம் என்று கருதுகின்றனர். இத்தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பல பரிமாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதும் வரலாறு. இந்து மதவெறி, இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ வெறுப்பு போன்ற அடிப்படைகளைக் கொண்டு ஒரு கட்சி இந்தியாவில் செயல்பட முடிகிறது. சனநாயகம் என்ற பெயரில் மிகக் குறைந்த வாக்கு சீட்டுகளைக் கூடுதலாகப் பெற்று அதிகார மையங் களைக் கட்டமைத்துக் கொள்கின்றனர். இது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இத் தன்மையை இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கான மாற்று குறித்தும் அவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகுகிறார்கள். குடிமைச் சமூகத்தின் நேர்மையும் பாராளுமன்ற கட்சி அதிகார மையமும் தம்முள் குழம்பிப் போய் உள்ளன. இந்தக் குழப்பத்திற்கான விடிவு நோக்கி யதாக இவ்விளைஞர்களின் ஒன்று கூடலை கணிக்கமுடியுமா? அல்லது அதற்கான தூசுப் படை நிகழ்வாக இதனைக் கருதலாமா? என்ற உரையாடல்கள் அவசியம்.

இந்தியாவின் முதன்மையான அதிகார மைய மாக உச்சநீதிமன்றம் செயல்படுகிறது. நீதிபதிகளாக இருப்பவர்கள், மதவெறி, சாதிவெறி, வட்டாரவெறி பிடித்த மேட்டிமைச் சாதியைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதற்கான நல்ல எடுத்துக்காட்டுதான் ‘ஜல்லிக்கட்டு’ தடை குறித்த சட்டம். ஒரு குறிப்பிட்ட தேசிய இனமக்களின் பண்பாடு சார்ந்த விழாக்களை இம்மதவாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ அடிப்படையில் வளச்சடங்கு (Fertility) மரபைச் சார்ந்தது. இயற்கை வழிபாட்டு முறை, வளமாக வாழ மாடுகளைக் கொண்டாடும் நாட்டார் மரபுகளை முன்னெடுப்பவை. மேய்ச்சல் சமூக வரலாறு அறிந்தவர்கள், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள முல்லை நிலத்திற்கும் கால் நடைகளுக்குமான உறவு குறித்து அறிவார்கள். இது மக்களுடைய வாழ்வோடு நேரடித் தொடர்பு கொண்டது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள் கூறுகிறார் திருவள்ளுவர்; ஆனால் வைதீக பெரும் சமய மரபுகளைச் சேர்ந்த வர்கள், கடவுளர்களின் வாகனங்களாகவே, கடவுள் வழிபாடாகவே கால்நடைகளைக் கருதுவர். பசு மாட்டை வழிபடுவது, அதன் சிறுநீரைக் குடிப்பது ஆகிய பிற முட்டாள்தனங்களில் ஊறிப் போன வர்கள். இவர்களே பெரும்பகுதி உச்சநீதிமன்ற நீதிபதிகள். அறமரபு அற்றவர்கள். ஊழல் பேர் வழிகள். இவர்களின் தீர்ப்புகளை இந்திய சமூகம் சட்டமாகக் கருதும் அவலம் நிகழ்கிறது. கிருஷ்ண அய்யர், சந்துரு போன்ற புறனடைகள் இந்த மதிப்பீட்டிற்குள் வரமாட்டார்கள். ஏறக்குறைய தொண்ணூற்று எட்டு சதம் நீதிபதிகள் மதப் பண்டாரங்களே.

ஆக, குடிமைச் சமூகம், பாராளுமன்ற அரசியல், உச்சநீதிமன்றம் என்ற முரண்பட்ட நிகழ்வுகளால், இந்தியாவில் நிகழும் அவலங்கள் மிக அதிகம். ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழகப் போராட்டத்தை இந்த முரண்களிலிருந்து நாம் புரிந்து கொள்வது அவசியம். மேலும், இந்தியாவில் உள்ள ஆதிக்க சாதி, மேட்டிமைச் சமூக நபர்கள் ஆகியோர், தமிழ் - சமசுகிருத உறவு நிலைகள் பற்றிய புரிதல் அற்றவர்கள். தமிழ் மற்றும் சமசுகிருதம் இணையான மொழிகள் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். பேச்சு வழக்கு இழந்த சமசுகிருதம், தொடர்ச்சியான பேச்சு வழக்கில் உள்ள தமிழ் ஆகியவற்றின் சமுகப் பரிமாணங்கள் தெரியாதவர்கள். தமிழ் x சமசுகிருதம், வடக்கு x தெற்கு, ஆரியம் x திராவிடம், திராவிடம் x தமிழர்கள் என்ற முரண்பாடுகள் தொடர்பான வரலாற்றுக்கும், தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதவேண்டும். இந்த வரலாறு நீண்ட நெடியது. வைதீகம் x அவைதீகம், இயற்கை வழிபாடு x புராண வழிபாடு என்ற முரண்களின் வரலாறும் முக்கியமானது. தமிழகம் பற்றிய அனைத்து உரையாடல்களிலும், இவ்வரலாற்றின் உள்ளீடு குறித்த தாக்கங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

ஜல்லிக்கட்டைக் குறியீடாகக் கொண்டு, தமிழ்நாட்டில் 2017 சனவரி 8 தொடக்கம் 23 வரை நிகழ்ந்தேறிய புதிய புரட்சியை எப்படிப் புரிந்து கொள்வது என்பதே பெரும் கேள்வியாக நம் முன் இருக்கும்போது, இது குறித்த குழப்பமற்ற, தர்க்க பூர்வமான உரையாடலை முன்னெடுக்க முடிகிறதா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். இப்புரட்சியின் பௌதீகத் தன்மையை அறிந்து கொள்ள அரசு மேற்கொண்ட கொடுமையான வன்முறைகளே சான்று. இந்திய உளவுத்துறை, பெரும் அச்சத்திற்குட்பட்டது. இப்படி எல்லாம் நடக்குமா? என்பது உளவுத்துறையினருக்கே புதிதாக இருந்தது. இதன் விளைவு, இப்புரட்சிக்குப் பின்புலமாக இருந்து உதவிய மீனவ மக்களை கடுமையான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியது. ஒடுக்குமுறை தொடர்பான விவரங்கள் இன்னும் விரிவாகப் பதிவாகவில்லை. இந்த ஒடுக்குமுறை என்பது அரச நிர்வாகத்தின் பீதியைக் காட்டு கிறது. மக்கள் எழுச்சி கண்டு பீதி அடைந்த அரச நிர்வாகம் வெறிகொண்டு தாக்கியது. 23. 01. 2017 அன்று மாணவர்களைத் தாக்கிய அரச வன் முறைக்கு எதிராகச் சென்னை நகரமே போராடியது. அனைத்துப் பகுதியிலும் பேருந்துகள் நிறுத்தப் பட்டன. வெகுமக்கள் சாலைகளில் அமர்ந்து வன் முறைக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி னார்கள். எந்த ஊடகமும் இதனைப் பதிவு செய்ய வில்லை. இறுதிக்கட்டத்தில் ஊடக முதலாளிகள், தமது கார்ப்பரேட் தன்மைக்கு விசுவமாகி, அரச வன்முறையோடு கைகோத்தார்கள். வன்முறையைத் தி.மு.க. சார்பு ஊடகங்கள் மட்டுமே பதிவு செய்தன. கார்ப்பரேட் ஊடகங்கள் ஒரு பதிவையும் செய்ய வில்லை. அரச வன்முறை, கார்ப்பரேட் முதலாளிகள் இணைப்பை இதில் காண முடிந்தது.

2017ஆம் ஆண்டு சனவரி மாதம், தமிழ்ச் சமூக வரலாற்றில் முக்கியமான மாதமாகப் பதிவு பெற்று விட்டது. சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தைக் காணமுடிந்தது. பண்பாட்டு ஒடுக்குமுறையான ‘ஜல்லிக்கட்டு தடை’ எனும் குறியீடு, தமிழ் தேசிய இன ஒடுக்குமுறை, சுற்றுச் சூழல் சீர்கேடு, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்ப்பு, மத அரசியல் சார்ந்த மோடி எதிர்ப்பு, தமிழக அரசியல் மோடி அரசால் உள்வாங்கப் படும் அவலம் எனப் பல பரிமாணங்களில் முன்னெடுக்கப்பட்டது. சமூக ஊடகம், இளை ஞர்கள், தமிழ்ச்சமூக வரலாறு என்ற பல பொருண்மை குறித்த புதிய வரலாற்றை மெரினா புரட்சி உருவாக்கிவிட்டது. இதிலிருந்து என்ன பட்டறிவை நாம் பெறப் போகிறோம்?