அரசியல் என்பது அடிப்படையில் ஓர் அறிவியல் என்பதையே நம்மில் பலர் அடிக்கடி மறந்துவிடுவதுண்டு இத்தனைக்கும் அவர்கள் நமது சூழலின் முன்னேறிய பிரிவினரும் கூட. கருத்தியல் அர்த்தத்தில் அரசியல் ஒரு விஞ்ஞான வாதமாகும். அதனால்தான் அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்று அழைக்கிறோம். ஆனாலும் என்னதான் இதுபற்றி அறிவில் நாம் முதிர்ந்தவர்கள் என்று பேசிக் கொண்டாலும் உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, அவ்வப்போது அரசியலை ஒரு மதவாதப் பண்புடனேயே அணுக முற்படுகிறோம், அணுகியும் வருகிறோம்.

அரசியல் எப்போதெல்லாம் கடவுள்வாதப் பண்பைப் பெறுகிறது? அரசியலில் பல்வேறு புரிதல்களுக்கு இடமுண்டு என்பதை மறுக்கும்போது, ஒரு அரசியல் நிலைப்பாடு முற்றிலும் எதிர்பா ராதவாறு தோல்வியடையும்போது, பகை முரண்பாடுகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தும்போது மற்றும் அரசியலை சூழ்நிலைமைகளின் ஊடாக பார்க்காமல் நமது அதீத கற்பனைசார் விருப்பத்துடன் இணைத்து புரிந்து கொள்ள முயலும்போது - இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒரு அரசியல் நிலைப்பாடு அல்லது புரிதல், கடவுள்வாதப் பண்பேற்றம் பெறுகிறது.

அரசியல் எப்போது கடவுள்வாதப் பண்பைப் பெற்றுவிடுகிறதோ அப்போதே மக்களின் நலன் என்பது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு நம்பிக்கையைக் காப்பாற்றுவதே அரசியலின் உச்ச இலக்காகக் கொள்ளப்படுகிறது. இது ஒருவகையில் மன்னர்கால அரசியல் பண்பாடு. இந்த அரசியல் பண்புநிலை நவீன அரசியலிலும் அவ்வப்போது நமது விஞ்ஞானப் புரிதல்களையும் மீறி தலைகாட்டவே செய்கிறது. சிலவேளைகளில் நம்மையறியாமலேயே இந்த வகை அரசியலுக்கு நாம் பலியாவதுண்டு.

இன்று நமது சூழலிலும் இவ்வாறானதொரு நிலைமை மேலோங்கியிருக்கிறது. இதனை துரதிஷ்டவசம் என்பதா அல்லது நமது சிந்தனை முறையில் உள்ள குறைபாடு என்பதா? எதுவாயினும் இவ்வாறானதொரு நிலைமையிலிருந்து நாம் வெளிவந்தாக வேண்டியிருக்கிறது. இதற்கு முதலில் நாம் எங்கிருக்கிறோம், இந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம் நம்மால் சுயமாக பயணம் செய்ய முடியும், அவ்வாறே நாம் பயணம் செய்யத்தான் போகிறோம் என்றால் நம்மை வழிநடத்தப் போகும் தலைமை எது? நம்மால் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நகர்வுகள் குறித்த அவதானமில்லாமல் எழுந்தமானமாக இயங்க முடியுமா? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இதற்குரிய விடைகளை கண்டுபிடிக்காத வரை நம்மால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இதுதான் சமகால ஈழத் தமிழ் அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தம் நாம் இதுவரை காலம் கொடுத்த விலையில் நின்று பார்த்தால் நமது விருப்புக்குரிய ஒன்றல்லதான். ஆனாலும் அதன் யதார்த்த நிலையின் தளத்திற்கே நாம் இறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் விருப்ப அரசியல் வேறு; யதார்த்த அரசியல் வேறு.

2

யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு அல்லது அதன் தளத்திற்கு இறங்கிவருவதற்கு நாம் முதலில் நமது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். சமீபத்தில் புதினப்பலகை இணைய தளம் ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் மேலோங்கிய இரு வகை அரசியல் அணுகுமுறையும் தோல்வியடைந்தது பற்றி அறிக்கையிட்டிருந்தது. ஆனால் நமது தமிழ்த் தேசியர்கள் பலருக்கு இதனை ஏற்றுக் கொள்ள ஏனோ மனம் தடுமாறுகிறது. ஒரு தோல்வியை தோல்வி என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? நமது தேசிய அரசியல் வரலாற்றில் முதலாவது கட்டமான மிதவாத அல்லது மென்முறை தழுவிய அரசியலின் தோல்வி “இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்னும் திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் கூற்றுடன் பகிரங்கப்பட்டது.

இரண்டாவது திரு.பிரபாகரன் அவர்களது தலைமையிலான வன்முறை தழுவிய அல்லது ஆயுதப் போராட்ட அரசியல் முள்ளிவாய்க்காலுடன் முடிவானது. இதுதான் வரலாற்று உண்மையெனின் ஏன் இந்த உண்மையிலிருந்து நாம் தப்பி ஓட முயல வேண்டும்? திரு.பிரபாகரனிடமும் அவரது தலைமையில் இறுதிவரை போராடி உயிர் நீத்த போராளிகளுக்கும் தமது இலட்சிய கனவுக்காக இறுதிவரை உழைக்கும் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தது. ஆனால் இன்று ‘அதியசங்கள் நிகழும் நம்பி இருங்கள்’ என்று பெண்டிக்கோஸ் மதப்பிரச்சாரகர்கள் பாணியில் சுகமான கற்பனைகளில் சஞ்சரிக்கும் எவரிடமாவது அவ்வாறான உழைப்பில் ஒரு துளியாவது இருக்கின்றதா? பின்னர் எந்த உரிமையில் நாம் மக்களை எதிர் கொள்ள முடியும்?

இன்று தெளிவாக அடிக்கோடிடுவதானால், நாம் ஒரு பின்-தோல்விச் சமூகம். எனவே நமது அரசியலும் ஒரு பின்-தோல்வி அரசியலாகும். தமிழர்கள் பலநிலைப்பட்ட அரசியல் (Energetic Politics) என்னும் உச்சத்தலிருந்து பலமற்ற அரசியல் (Weaken Politics) என்னும் பாதாளத்தை நோக்கி இறங்கியிருக்கின்றனர். எனவே இந்தச் சூழலானது நாம் முன்னர் பேசியதை இப்போது பேசும் தகுதியை இழந்து போயிருக்கிறோம் என்பதையே குறித்துரைக்கிறது. சமகால யதார்த்தத்தை மறுத்து தமது விருப்பங்களை முன்வைப்போர் விடுதலைப்புலிகள் இராணுவ வலுச்சமநிலையை பேணிக் கொண்டே பேச்சுவார்தைக்குச் சென்றார்கள் என்பதையும் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

3

ஓப்பீட்டளவில் இதனை எழுதிக் கொண்டிருக்கும் நான் உட்பட அனைவருமே போரினால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னப்பட்டுப் போன வன்னிவாழ் மக்களிலும் பார்க்க சுகபோகமான வாழ்க்கையே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கிடையில் வேண்டுமானால் சுகபோகத்தில் யார் குறைவு அதிகம் என்று விவாதித்துக் கொள்ள முடியும். நமது விருப்பத் தெரிவுகளில் சுகமாக இருந்து கொண்டு மக்களை இரண்டாம் பொருளாக்குவதை ஒரு ஆரோக்கியமான அரசியல் நிலைப்பாடு என இந்தக் கட்டுரை ஏற்கவில்லை. ஒருவருக்கு அல்லது ஒரு குழுவினருக்கு கனவு கான்பதற்கு இருக்கும் உரிமையை நாம் மறுக்க முடியாது அது அவர்களது சனநாயக உரிமையும் கூட; ஆனால் அது மக்களின் சமகால இருப்பை நிராகரிப்பதாக இருக்கக் கூடாதென்றே இந்தக் கட்டுரை கருதுகிறது.

இன்று நமது அரசியல் மீண்டும் தமிழரசுக் கட்சி மகாநாட்டில் வந்து நிற்கிறது. படிமுறைசார் அரசியல் வளர்ச்சிப் போக்கில் அரசியலை முன்நோக்கி நகர்த்தும் ஆற்றலற்றது என கழித்துவிடப்பட்ட ஒன்றில் மீண்டும் தரித்து நிற்க வேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது. இனியாவது நாம் நமது கற்பனை குதிரைகளிலிருந்து இறங்க வேண்டாமா? இதுவரை தமிழர்கள் கொடுத்த விலையை எண்ணிப் பார்த்து செயலாற்ற வேண்டாமா? இருவகைத் தோல்வி அனுபவங்களிலிருந்தும் படிப்பினைகளைப் பெற வேண்டாமா? இல்லை மாட்டோம் என்ற கனவுலகவாதிகளை நிராகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே இந்தக் கட்டுரை கருதுகிறது, ஆம் முக்கியம் என்போர் தமக்குள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணமும் வந்துவிட்டது என்றும் இந்தக் கட்டுரை குறித்துரைக்க முயல்கிறது.

செயலற்ற கனவுலகில் சஞ்சரிப்பது மிகவும் சுலபமானது; அது ஒரு பரவஷ இன்பமும் கூட. ஆனால் நாம் நம்பும் ஒன்றிற்காக செலாற்றுவது கடினமானது. அது வலிகள் நிறைந்தது, உயிரை எடுக்கக் கூடியது. இதனை நன்கு அறிந்தே அதிகமான தமிழ் மத்தியதர வர்க்கப் பிரிவினர் கனவுலகில் சஞ்சரிப்பதை ஒரு இலகுவான தேசிய உபாயமாகக் கருதிக் கொள்கின்றனர். நாங்களும் இந்த அரசிலுக்குள் அங்கமாகவே இருக்கிறோம் என்பதைப் பறைசாற்றுவதற்கு அவர்களது கனவு வழிசமைத்துக் கொடுக்கிறது. ஆனால் தேசியத்திற்கான அனைத்தையும் சுமப்பதோ அடித்தள மக்கள்தான். ஒரு போராட்டம் அல்லது அரசியல் இலக்கு தோல்வியடையும் போது ஆதரவற்று வீதியில் நிற்பவர்களும் அந்த மக்கள்தான்.

எனது நண்பர் ஒருவர் உரையாடலின்போது தனது அவதானமொன்றை அடிக்கடி சுட்டிக் காட்டுவார், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியில் தமிழ்த் தேசியம், அவர்கள் நம்மட பொடியங்கள், என்றெல்லாம் மார்தட்டிக் கொண்ட பலர் ஏதாவது பிரச்சனையென்றால் கொழும்பிற்கு ஒடுவதை ஒரு மார்க்கமாகக் கொண்டிருந்தனரே தவிர வன்னிக்குச் செல்வதில்லையே ஏன்? என்று அந்த நண்பர் என்னைக் கேட்பார். விமர்சனங்களைப் பின்னர் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த என்னிடமோ பதிலிருக்காது. இது எதனைச் சுட்டுகிறது என்றால் நகர்ப்புற மத்தியதர வர்க்கக் குழுக்களுக்கு போலிப் பெருமை பேசுவதற்கு ஒரு சங்கதி தேவைப்பட்டது. அதற்கு அவர்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளை பயன்படுத்திக் கொண்டனர். இன்றும் அவர்களுக்கு போலிப் பெருமையில் திளைப்பதற்கு ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. அன்றும் யாரோ முகமறியாத போராளிகளின் தியாகத்தை பயன்படுத்திக் கொண்ட அவர்களுக்கு, இன்றும் அவ்வாறானவர்களது தியாகம் தேவைப்படுகிறது, தங்களது போலிப் பெருமைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக.

19 ஆம் நூற்றாண்டின் பகுத்தறிவுவாதிகள் கடவுளை ஒரு ஆறுதலான கற்பனை என்றனர். யதார்த்தத்தை புறக்கணித்து நாம் உயர்த்தும் சுலோகமும் அவ்வாறானதொரு ஆறுதலான அரசியல் கற்பனையாகவே இருக்க முடியும். எனவே நண்பர்களே! நாம் உயர்த்தப்போகும் அரசியல் சுலோகமும் ஒரு ஆறுதலான கற்பனையாக இருக்கக் கூடாது; இருக்கவும் முடியாது. அரசியல் ரீதியாக இது ஒரு நிலைமறுப்பிற்கான காலகட்டம். கடந்தகாலத்தை நிலைமறுத்தல் என்பது எவரதும் அர்ப்பணிப்புக்களை நிலைமறுப்பது என்ற பொருள் கொண்டதல்ல; யதார்தத்திற்கு பொருந்தக் கூடிய ஒன்றில் நிலை கொண்டு மீளுதல் என்பதே அதன் பொருள். அது என்ன என்பதை கண்டடைய வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்ததாகும். கடந்த கால நிறமுதன்மை அரசியலை விடுத்து ஓரணி அரசியலை முன்னெடுப்பதே இன்றைய தேவை. இதற்காக எவரும் அவரவர்களின் தனித்துவத்தை இழக்க வேண்டியதில்லை. அவரவரின் தனித்துவங்களை பேணிக் கொண்டவாறு மக்களுக்கான ஓர் அரசியலை முன்னெடுக்க முடியும். இவ்வாறானதொரு பாதையில் பயணிக்க நாம் தயராகிவிட்டோமா இல்லையா என்பதே இன்றைய கேள்வி?

- யதீந்திரா

Pin It