kuthoosi guruஅதாவது, காய்ச்சல் “டிகிரி” யல்ல! படித்துப் பட்டம் பெற்ற ‘டிகிரி’! எம். ஏ.! -பீ. ஏ! எம்.ஓ. எல்.! - பீ. காம்! - போன்ற பல்கலைக் கழகப் பட்டங்களைப் பற்றியது இது.

இசைக்காக வென்றே சென்னையில் ஒரு கல்லூரி இருக்கிறது! இதற்குப் பெயர், கர்னாடிக் செண்ட்ரல் சங்கீதக் கல்லூரி! இதில் படித்துத் தேர்ந்து பட்டம் பெற்றவர்களுக்கு இனிமேல் தனி மதிப்பு இருக்குமாம்!

இந்தக் கல்லூரி, பெரம்பூரிலோ - வண்ணாரப் பேட்டையிலோ - ராயபுரத்திலோ - சூளையிலோ-இருப்பதாகக் கருதி விடாதீர்கள்! இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறது! (அதாவது மயிலாப்பூருக்கு அருகிலுள்ள அடையாற்றில்!) இதை ஒரு யூனிவர்சிட்டியாக ஆக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறதாம்! இதற்கு மத்திய சர்க்கார் ஆண்டு ஒன்றுக்கு 40,000 ரூபாய் நன்கொடை தருவார்களாம்!

சென்னை, மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத் - முதலிய இராஜ்யங்களும் நன்கொடை தரப் போகின்றனவாம். 

சங்கீதத்தில் ‘டிப்ளமா’ போன்ற சிறு பட்டங்கள் வாங்கியிருப்பவர்களுக்கு இந்தக் கல்லூரியில் (இனிமேல் பல்கலைக் கழகம் ஆகப் போகிறது!) உயர்ந்த படிப்பு அதாவது பாட்டுக் கற்றுக் கொடுப்பார்களாம்!

இந்தக் கல்லூரி கிளம்புவதை எதிர்பார்க்காமலே இசை நிபுணர்களாக வந்திருக்கின்ற 10-பேருக்கு “டிகிரி” வழங்குவார்களாம்!

சங்கீதம் என்றால், அவனவன் தனி ருசி, திறமையைப் பொறுத்து, ஏதோ, பொழுது போக்குக்காகப் பற்றுக் கொள்ள வேண்டிய ஒரு கலை-என்றல்லவா இது வரையில் நினைத்திருந்தீர்கள்? இனி அப்படியல்ல! அதிலும் ‘மார்க்’ வாங்கிப் பட்டம் பெற்றால் தான் முடியும்?

“அய்யா? நீங்கள் யார்? பெயரென்ன? தியாகராஜ பாகவதரா? சங்கீதம் காலேஜில் படித்தீர்களா? ‘மார்க்’ என்ன? ‘டிகிரி’ வாங்கினீர் களா?” என்று கேட்க வேண்டும். அவர் உதட்டைப் பிதக்குவார்! உடனே நாம் காதைப் பொத்திக் கொண்டு அவரை வெளியேற்றி விட வேண்டும்!

சங்கீதத்தில் மாத்திரமல்ல! இனி, எல்லாத் தொழில்களுக்குமே காலேஜ்கள் வந்து விடுமென்று நினைக்கிறேன்!

வீட்டில் சமையல் செய்ய வேண்டியவர்கள் கூட சமையல் காலேஜில் படித்து, மார்க் வாங்கி, பட்டமும் பெற்றால் தான் நம் அடுப்பங்கரைக்குள்ளே நுழைய முடியும்! சொந்த மனைவியானாலும் சரி! சம்பளம் பெறுகின்ற சமையல்காரனாயிருப்பினுஞ் சரி!

“தம்பீ!” எனக்குக் கொஞ்சம் “கிராப்” வெட்டி விடுகிறாயா?” என்று இனிக் கண்ட பேர்வழிகளைப் பார்த்துக் கேட்கக் கூடாது!

“தம்பீ!” நீ க்ஷவரக் காலேஜில் படித்தாயா? மார்க் என்ன? வெறும் க்ஷ. ழ. ஊ. தானா? அல்லது ஆ. ழ. ஊ. பட்டம் பெற்றவனா?” - என்று கேட்ட பிறகுதான் நம் லையை அவரிடம் நீட்ட வேண்டும்!

தச்சுவேலை! காலேஜ்! கும்மி - கோலாட்ட காலேஜ் சலவைத் தொழில் காலேஜ்! ப்யூன்கள் காலேஜ் போர்ட்டார் யூனிவர்சிட்டி!

முதலியவைகள் இனித் தொடர்ந்து கிளம்பலாம்! யூனியன் சர்க்கார் இவைகளுக்கும் கிராண்ட் கொடுக்கலாம்!

இவைகள் மட்டுமா? யாரோ தலைவர்கள் பேசுகிறார்கள் என்றால் இனி யாரும் கேட்கமாட்டார்கள்!

இவர் பேச்சுக் காலேஜில் டிகிரி வாங்கியிருக்கிறாரா?-என்று தெரிந்து கொண்டுதான் அவர் பேச்சைக் கேட்பதைப் பற்றி முடிவு செய்வார்கள்!

ஒரு சங்கீத வித்வான் பாடுவது சகிக்கமுடியாத காது வலியாயிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்!

“ஏனய்யா! நீர் இப்படி நாட்டு நாய்மாதிரிக் குரைக்கிறீர்?” -- என்று கேட்டுவிட முடியாது!

“உஷார்! சங்கீத ரசிகர்களே! நான் டைகர் வரதாச்சாரியின் முதல் சீடன்! கர்னாடிக் செண்ட்ரல் காலேஜில் உயர்ந்த டிகிரி வாங்கி முதல் தரமாகத் தேர்ச்சி பெற்றவன்! என்குரல் பல இடங்களில் செக்குச் சுற்றுவது போலிருக்கலாம்! ஆனால் அத்தனையும் உயர்தர சங்கீதமாக்கும்!

இதோ! என் “டிகிரி!,” என்று கூறி, ரசிகர்கள் முகத்தில் டிகிரியை வீசி எறிவார்! உடனே ரசிகர்கள், பணம் போனாலும் போகட்டும்!

காதாவது மிஞ்சட்டும், என்று கருதி ஓட்டம் பிடிப்பார்கள்!

ஆதலால் சங்கீத காலேஜ் மட்டுமல்ல! கக்கூஸ் எடுக்கும் காலேஜ் கூட ஏற்பட்டாலும், ஆச்சரியமில்லை!

- குத்தூசி குருசாமி (15-1-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It