kuthoosi gurusamy 300"மரத்தை மறைத்தது யானை; மரத்தில் மறைந்தது யானை; ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கும்; பரமாத்மாவுடன் ஜிவாத்மா ஐக்கியமாகிவிடும். ஏ! மனக்குரங்கே, நீ கிளைக்குக் கிளை தாவாதே! நான் என்ற அகந்தை கொண்டு திரியாதே! என்னால்தான் இது நடக்கிறது? என் பெயரைச் சொல்லித்தானே இவர்கள் பிழைக்க முடியும்? என் திறமை என்ன? என் தகுதி என்ன? நட்டதெல்லாம் செடியாகி விடுமா? என்னை ஒழிக்க எந்த மனிதனாலாவது முடியுமா? என் சிறு விரல் ஆடினால் நூறு உடல்கள் ஆடுமே!" என்றெல்லாம் அகம்பாவப்படாதே! நீ போனால் உன்னைப் போல பலர் வருவார்கள்; உன்னை மிஞ்சக் கூடியவர்கள் கூட வரலாம். உலகம் உன்னை எதிர்பார்த்துத்தான் இருக்கிறது என்று மமதை கொள்ளாதே! ஏ! மனமே! உச்சி வாழ்வு நிச்சயமல்ல; உருண்டு வீழ்ந்தே தீர வேண்டும்! உஷார்!"

"குத்தூசி! இதென்ன மனோதத்துவ விசாரணையில் இறங்கி விட்டாய்? யாரை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் உளறிக் கொட்டுகிறாய்? மரம் என்கிறாய்! யானை என்கிறாய்! ஜீவாத்மா என்கிறாய்! மனக்குரங்கு என்கிறாய்! கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் காலி இடம் பார்க்கிறாயா?" என்று வாசகர்கள் கேட்கலாம்.

நான் யாரையும் கூறவில்லை. என்னையேதான் கூறிக் கொள்கிறேன். நான் குறையற்றவனாக இருந்த பிறகல்லவா பிறர் ஓட்டைகளை அடைக்க வேண்டும்? என்ன அநித்யமான உலகம் இது! நேற்றிருந்தார் இன்று வெந்து நீறானார்! நீர் மேல் குமிழி இந்த சரீரம்! மன்னர் வேடத்துடன் டில்லிக்குப் போன புதுக்கோட்டை அரசர், திரும்பி வரும்போது எப்படி வந்தார் தெரியாதா?

"ஏ! பார்ப்பனீயமே! உன் பேச்சைக் கேட்டேனே! கெட்டொழிந்தேனே! நன்றி கெட்ட நடத்தை என்ற ஏச்சுக்கிடமானேனே! நேற்று போலீஸ் இலாகா என் சுட்டு விரல் நுனியில்! இன்று நான் கான்ஸ்டேபிள் மிரட்டும் நிலையில்! நேற்று கருஞ்சட்டையைத் தடை செய்தேன்! நாளைக்கு அதையே போட்டாலும் போடுவேன்! இந்த மகாணத்தை என்ன ஆட்டம் ஆட்டினேன்? நான் கெட்டவனல்ல; ஆனால் தீயார் பேச்சைக் கேட்டேன்! கெட்டேன்! ஆரியக் கோடரி என்னை காம்பாக செப்பனிட்டு நுழைத்துக் கொண்டது. நானும் இணங்கினேன்! ஓமந்தூர் மரத்தை வெட்டினார்கள். கை முறிந்தது! கோடரி முனை மழுங்கியது! இன்று காம்பும் ஒடிந்து வீழ்ந்தது! ஆரியம் புன்னகை செய்கிறது. அதற்கு நஷ்டமென்ன? குரங்குகளும் அசுரர்களும்தான் செத்து மடிந்தார்களே தவிர, ஆரிய ரிஷிகளின் தாடி மயிர் ஒன்றேனும் கீழே வீழ்ந்ததாக கதை உண்டா?

கல் நெஞ்சு படைத்த ஏ! ஆரியமே ஏன்! மவுண்ட்ரோடு மூன்று அடுக்கு மாடி மீது நின்று கொண்டு என்னை நோக்கி ஏளனச் சிரிப்புச் சிரிக்கிறாய்? உன்னால் கால் வாரி விடப்பட்டவன் நான், என்று கருதித்தானே! பிரித்தாள்வதில் பெரும் வெற்றி பெற்றாய் என்ற எண்ணந்தானே! சிரி! சிரி! சிரி! அழுகை வரும் வரையில் சிரி!"

உள் நாட்டு மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் தமது பதவியை விட்டு விலகி விட்டார் என்றும், முதன்மந்திரியார் அதை ஏற்றுக் கொண்டு விட்டாரென்றும் தெரிகிறது.

நாடகமே இவ்வுலகம்! நடிகர்களே நாம் எல்லோரும்!

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலசா வல்லவன்

Pin It