ஆயிரம் தடவை விளக்கம் அளித்தாலும் அவதூறு என்னும் சேற்றை அள்ளி வீசுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த நாட்டில்.

02.07.2022 நாளிட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் “பெரியார் மணியம்மை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் அவர்கள், தனது தீர்ப்பில் “ஒருவரது திருமணப்பதிவுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டு, அதைச் சார்பதிவாளர் திருமண அறிவிப்புப் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்ததால்தான் 72 வயதான பெரியார்

periyar and maniamma 653ஈ.வெ. ராமசாமிக்கும், 27 வயதான மணியம்மைக்கும் நடக்க இருந்த திருமணம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் குறிப்பிட்டதாகச்” செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது எவ்வளவு அவதூறான, பொய்கள் நிறைந்த செய்தி என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.

வெளிச்சத்திற்கு வந்தது என்று தீர்ப்புரையில் நீதிபதி குறிப்பிடுவதற்கு அத்திருமணம் என்ன இருட்டிலா நடந்தது ? அல்லது ரகசியத் திருமணமா? குறைந்த பட்சம் இருவரின் வயதையாவது சரியாகச் சொல்ல வேண்டாமா?

தான் நடத்திய ‘குடிஅரசு’, ‘விடுதலை’ இதழ்களில் வெளிப்படையாக அறிவித்து, விளக்கம் அளித்து நடைபெற்றதுதானே பெரியார் - மணியம்மை திருமணம்.

பெரியார் மணியம்மையார் அவர்களைத் திருமணம் செய்வது தொடர்பாக, அவரது நண்பரான இராஜாஜியை 14.05.1949 அன்று திருவண்ணாமலையில் சந்தித்துப் பேசுகிறார். அச்சந்திப்பு பற்றி 28.05.1949 அன்று கோவையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தமது உரையில் குறிப்பிடுகிறார். ”எனக்குப் பின் வாரிசு ஏற்படுத்துவது குறித்துத்தான் இராஜாஜியிடம் பேசினேன்” என்கிறார் அந்த மாநாட்டில்.

இயக்க நன்மைக்காக ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடே பெரியாரின் திருமணம். இது குறித்து, திராவிடர் கழகத் தொண்டர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க, தொடர்ந்து தனது ஏடுகளில் விளக்கமளிக்கிறார் தந்தை பெரியார். இது அவரது ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது.

“பொதுமக்களுக்காக என்று நான் எடுத்துக் கொண்ட காரியம், அவர்கள் என்னை நம்பி நடந்து கொண்ட தன்மை ஆகியவைகளும், என் ஆயுள்வரையும், கூடுமான அளவு ஆயுளுக்குப் பின்னும் ஒழுங்கானபடி நடக்கும்படியாகப் பார்த்து என் புத்திக்கு எட்டின வரை அறிவுடைமையோடு நடந்து கொள்ள வேண்டியது எனது கடமையாகும்” என்று சொல்லும் பெரியார் (குடிஅரசு, 02.07.1949),

”இயக்கம் எப்படி இருந்தாலும் இயக்கத்துக்கு யார் தலைவராய் இருந்தாலும், என்னுடைய கொள்கைகளும், கொள்கைக்கு ஏற்ற பிரசாரமும், எனக்குப் பின்னும் நடந்தேற வேண்டும் என்கின்ற பேராசை எனக்கு உண்டு” என்று திருமணத்திற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அன்னை மணியம்மையாரைத் தனக்குப் பின்னான இயக்கத்தின் வாரிசாக்குவதைப் பற்றி, 28.06.1949 நாளிட்ட ‘விடுதலை’ இதழிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறாரே பெரியார்.

“எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5, 6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார் 4, 5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்”.

வரலாறு இவ்வாறிருக்க, தள்ளாத வயதிலும் தளராது உழைத்த, தமிழரின் தனிப்பெருந்தலைவரின் புகழுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று பூணூல் கூட்டம் புளுகைப் பரப்பித் திரிகின்றது.

‘எனக்கு என் எதிரிகளே விளம்பரதாரர்கள்’ என்று ஒருமுறை குறிப்பிட்டார் பெரியார். அது போல, ஒவ்வொரு முறையும் பெரியாரின் மீது அவதூறு பரப்புவதாக நினைத்து, அவரைப் பற்றிய செய்திகள் இன்னும் அதிகமாகப் பரவுவதற்கே வழிசெய்து, பெரியாரின் பி.ஆர்.ஓ-க்களாகத் திகழ்கிறார்கள் அக்கிரகாரத்து அம்பிகள்.

Pin It