18.3.34ந் தேதி மாலை 6.30 மணிக்கு சங்க மெம்பர் கூட்டம் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் கூடியது. அது சமயம். சங்க ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் வரவு சிலவு கணக்குகளை வாசித்து ஒப்புக்கொள்ளப்பட்டது. பின் வருஷாந்திர அறிக்கை தயாரிக்கவும், கணக்குகளை ஆடிட் செய்யவும் கமிட்டியொன்று தேர்ந்தெடுக்கப்பட்டபின் சுயமரியாதை சங்க மத்திய சபையின் கூட்ட முடிவைப் பற்றி ஆலோசனைக்கு எடுத்து கொண்டபோது தஞ்சை சுயமரியாதைச் சங்கக் காரியதரிசி தோழர் ஆளவந்தார் அவர்கள் ஜில்லா தாலூகா சங்கங்கள் சரியான முறைப்படி எங்கும் அமைக்கப்படாமலிருப்பதால் எல்லோரும் மாகாண சங்கத்திற்கு வருஷ சந்தா நான்கணா செலுத்தி பதிவு செய்து கெள்ள முடியாதென்றும், மத்திய சங்கத்தில் மெம்பர்களாயில்லாதவர்களுக்கு மாகாண மகாநாட்டில் ஓட்டு கொடுக்க உரிமை கிடையாதென்பதில் ஏதோ சூழ்ச்சியிருப்பதாகவும் கூறினார். அதை ஆதரித்து தோழர்கள் கே.எஸ்.முஜிபுல்லா, வி.சாமிநாதன் ஆகியவர்கள் பேசினார்கள்.periyar and kolathoor maniமத்திய சங்கத்தார் இப்பொழுதாவது மாகாண மகாநாடு கூட்ட முன் வந்தது பற்றி பாராட்டுவதாகவும், கூடிய விரைவில் ஜில்லா சங்கத்தை ஏற்படுத்தி மத்திய சங்கத்தார் தீர்மானப்படி ஜில்லாவுக்கு 1000அங்கத்தினர்களையாவது சேர்க்க வேண்டுமென்ற தீர்மானத்தை தோழர் டீ.எஸ். மணி பிரரேபிக்க என்.எம். சாமி ஆமோதிக்க மார்ஷல் ஆதரிக்க, ஓட்டுக்கு விடப்பட்டதும் சமத்துவமாக ஓட்டு இருந்ததால் தலைவரின் காஸ்டிங் ஓட்டால் மத்திய சங்கத்தாரின் தீர்மானத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேறியது. முடிவுரையோடு இரவு 11 மணிக்குக் கூட்டம் இனிது கலைந்தது.

பத்திராதிபர் குறிப்பு: விருதுநகரில் நடந்த 3வது சுயமரியாதை மகாநாட்டில் அமைக்கப்பட்ட கமிட்டி சென்ற 11334 சென்னையில் கூடியது; இவ்வளவு காலம் கழித்தாவது வேலை செய்யும் நோக்கத்தோடு கூடியதையும், கூடி இயக்க வளர்ச்சிக்காக செய்துள்ள தீர்மானத்தையும் பாராட்டுகிறோம்.

நிற்க நாகை சங்கத்தில் நடந்த விவாதத்தை நோக்கும்போது, அவர்களிடையே உண்டாகியுள்ள ஒரு சில சந்தேகங்களை நீக்க வேண்டி அடியில் கண்டுள்ள விஷயங்களை அவர்களது நினைவிற்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம்.

1. செங்கற்பட்டில் கூடிய நமது முதலாவது மகாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள சங்க அமைப்பு விதிகளின்படி நமது இயக்கத்தில் ஒரு மத்திய சங்கமும் (மாகாண சங்கம் Central League) மற்ற எல்லா சங்கங்களும் கிளை சங்கங்களாகவும் தான் இருக்க முடியும். ஜில்லா தாலூக்கா கிராமம் முதலிய சங்கங்கள் கிடையாது.

2. அந்தந்த ஊரில் ஏற்படும் சங்கமும் சென்ட்ரல் லீக் என்னும் மாகாணச் சங்கத்திற்குத் தங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ள அங்கத்தினர் ஜாபிதாவையும் அவர்களின் சந்தாத் துகை அணா நாலையும் அனுப்பவேண்டியதும் ஏற்கனவே உள்ள திட்டமேயொழிய புதிய திட்டமல்ல.

3. நான்காவது மகாநாடு கூடும்வரை வசூலாகும் சந்தாப் பணத்தை மாகாணக் கமிட்டிக்குச் செலவழிக்கக்கூடாதென தீர்மானித்திருப்பது ஒன்றுதான் புதிது. இந்தத் தீர்மானம் நமது தோழர்களுக்கு கமிட்டியிடம் நம்பிக்கை ஏற்பட வேண்டியே செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே மாகாணக் கமிட்டியின் திட்டத்தை நிறைவேற்ற எல்லா கிளைச் சங்கங்களும் முன்வர ஆசைப்படுகிறோம்.

(புரட்சி பத்திராதிபர் குறிப்பு 25.03.1934)

Pin It