வீரத்தாய் விருது

பத்துப் பிள்ளைகளுக்கு மேல் பெற்று ஹிந்து சமுதாயத்திற்குப் பெருமையும், பாதுகாப்பும் தந்த திருமதி....... அவர்களைக் கெளரவித்து காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்ட விருது.

1980 களில் இந்து முன்னணி அமைப்பு இப்படி ஒரு விருதை அறிவித்து, வழங்கி வந்தது. இந்தியா முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் அவ்வப்போது, “இந்துக்கள் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசி வருகிறார்கள். “இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி, இந்தியா ஒரு இஸ்லாம் நாடாகும் அபாயம்” இருப்பதாகவும் பேசுகிறார்கள். ஆரியப் பார்ப்பனர்களின் பண்பாட்டில் மிக முக்கிய இடம் வகிப்பது பிள்ளைப்பேறு.

human life cycleதிராவிடர்களின் விடுதலைக்காக உழைத்த தோழர் பெரியார், திராவிட இனப்பெண்கள் தங்களின் விடுதலைக்காகவோ, மற்ற இனங்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்க வேண்டுமென்பதற்காகவோ அதிகமாகப் பிள்ளைபெற்றுக் கொள்ளுங்கள் என்று எப்போதும் கூறவில்லை. மாறாக, “பெண்கள் பிள்ளை பெறுவதையே நிறுத்த வேண்டும். கருப்பையை அறுத்தெறிய வேண்டும்” என்றார். இந்த ஆரிய - திராவிடப் பண்பாட்டு முரண் குறைந்த அளவில்கூட விவாதிக்கப்படவில்லை.

ஒரு குழந்தை பிறந்தவுடன் நடக்கும் பெயர் சூட்டலில் தொடங்கி, மரணத்திற்குப் பிறகு நடத்தப்படும் படத்திறப்பு விழாக்கள் வரை இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிராக ஒரு அறிவியல்பூர்வமான, மாற்றத்தை ஏற்கும் திராவிடர் பண்பாட்டைத் தோழர் பெரியார் அறிமுகப்படுத்தி, தமது தோழர்கள் வழியே செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றும் தோழர்கள் ஏராளமானோர் இன்றும் பெரியாரின் பண்பாட்டைப் பின்பற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். அந்த எண்ணற்ற தோழர்கள் செயலில் செய்து காட்டத் தயங்கி நிற்கும் ஒரு இடம், குழந்தை பெறுவதைத் தவிர்ப்பது.

ஆரிய, இந்து தர்மம்

பார்ப்பனர்களின் மனுசாஸ்திரம், பெண்கள் பிள்ளை பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. பிள்ளை பெறாத பெண்ணையும், பெண் குழந்தையை மட்டும் பெற்ற பெண்ணையும், எவ்விதப் பொருளும் கொடுக்காமல் நீக்கிவிட வேண்டும் என்று கூறுகிறது.

“மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், பெண்ணை மட்டுமே பெறுபவளைப் பதினோரு வருஷத்துக்கு மேலும் நீக்கி, வேறு திருமணம் செய்து கொள்க. நீக்கப்பட்டவர் களுக்குப் பொருள் எதுவும் கொடுக்க வேண்டாம்”.                 - மனு: 9:81

பெண்ணானவள் மனதால்கூட மற்றொரு ஆணை நினைத்துப்பார்க்கக்கூடாது என்று கூறும் இந்துமத சாஸ்திரங்கள், பிள்ளை பெறுவதில் மட்டும் பெரும் விதிவிலக்கு களை வைத்துள்ளன. அண்ணனின் மனைவி குருவுக்குச் சமம் என்றும், தம்பியின் மனைவி மருமகளுக்குச் சமம் என்றும் கூறுகிறது மனுவின் 9 வது அத்தியாயம்.

அடுத்தடுத்த ஸ்லோகங்களிலோ, “ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு கணவன் இறந்து விட்டால், அந்தப் பெண் தனது கணவனின் உடன்பிறந்த சகோதரர் அல்லது பங்காளி ஆண்களுடன் கூடிப் பிள்ளை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றும் கூறுகிறது.

 பிள்ளை பெற வேண்டும் என்பதற்காக, குருவாக நினைக்கப்பட வேண்டிய வளையும், மருமகளாகக் கருதப்பட வேண்டியவளையும்கூட புணர்ந்து குழந்தையை உண்டாக்கலாம் என்கிறது இந்துமதம். அந்த அளவுக்குப் பிள்ளை பெறுவதைக் கட்டாயமான சட்டமாகவும், ஒரு பெண்ணின் மிக முக்கியக் கடமையாகவும் திணிக்கும் நோக்கம் என்ன?... வேறென்ன? பெண்ணை நிரந்தரமாக அடிமையாக்குவதுதான். அதனால்தான் பெரியார் கூறுகிறார்,

“பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களா யிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளைபெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்”. - (குடி அரசு - 12.08.1928)

பெரியாரின் கருத்து உண்மையா? பிள்ளை பெறுவதால் என்ன சிக்கல்? என்பவற்றைப் பார்ப்போம். கட்டாயம் நமக்குப் பிள்ளைகள் வேண்டும் என்பவர்கள், அதற்குக் கூறும் நியாயங்கள் என்ன?

1.நமது பேர் சொல்லப் பிள்ளை வேண்டும்

2.நம் சந்ததி பெருகவேண்டும்

3.கடைசிக்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் பிள்ளை வேண்டும்

4.நமது சொத்துக்களுக்கு நாமே உண்டாக்கிய வாரிசு வேண்டும்

5.அது தான் இயற்கையின் தத்துவம்

பேர் சொல்லும் பிள்ளை - சந்ததிப் பெருக்கம்

எதற்காக நமது பெயரைச் சொல்ல வேண்டும்? நமது பெயரை யாராவது சொல்ல வேண்டும், பெருமையாகப் பேசவேண்டும் என சிந்திப்பது எவ்வளவு பெரிய அடிமைத்தனம்? நமது பெயரை நாம் இறந்த பிறகும் பேசவேண்டும் என்பதற்காக, ஒரு பிள்ளையைப் பெற்று அது இந்த உலகத்தில் 70 வருடமோ, 80 வருடமோ போராடிப் போராடியே சாகவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய குரூர எண்ணம்? அதனால், நமக்கோ, நமது பிள்ளைகளுக்கோ என்ன இலாபம்? அப்படி நமது பெயரைச் சொல்லா விட்டால், அல்லது நம்மை நினைக்கா விட்டால் நமக்கோ, இந்த சமுதாயத்துக்கோ என்ன நட்டம்?

நாம் நமது பெற்றோர், பாட்டி, பாட்டன்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோமா? நமது தந்தை, தாத்தா தவிர அதற்கு முன்பு இருந்தவர்களின் பெயராவது நமக்குத் தெரியுமா? அவர்களை நினைத்துக் கொண்டாவது இருக்கிறோமா? பிறகு நம்மை எப்படி வருங்காலத் தலைமுறை நினைத்துக் கொண்டோ, பேர் சொல்லிக் கொண்டோ இருக்கும்?

நமது வாரிசுகள் நம்மை நினைவு வைத்துப் போற்றுமளவுக்கு நாம் இந்த நாட்டுக்கோ, வீட்டுக்கோ என்ன சாதித்தோம்? அப்படியே நாம் பெரிய சாதனையாளர்களாக - மக்கள் தலைவர் களாக இருந்தாலும், எல்லாச் சாதனையாளர்களின் வாரிசுகளும் அந்தச் சாதனையாளர்களின் விரும்பிய படியே அவர்களது வழியிலேயே வாழ்ந்தார்களா? அப்படி நாம் விரும்பியபடியே, நம்மைப் பின்பற்றியே நமது பிள்ளைகள் வாழ்ந்தாலும், அது அவர்களது சுதந்திர, சுயேட்சை வாழ்வுக்கு எதிரானது அல்லவா?

நமது சந்ததி பெருக வேண்டும் என்கிறார்கள். எதற்காக அது பெருக வேண்டும்? இதுவரை பெருகிய சந்ததிகளால் பூமியின் எடை உயர்ந்துள்ளது, சுற்றுச்சூழலும், இயற்கை வளங்களும் கூடுதலாக அழிந்து வருகின்றன என்பதைத் தவிர, உலகத்திற்கு அதனால் என்ன நன்மை?

பிள்ளைகளைப் பெறாமல், சந்ததியைப் பெருக்காமல் பலர் வாழ்ந்துள்ளனர். மாபெரும் தலைவர்களான, பெரியார், காமராசர் போன்றவர் களின் பெயர்கள் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும் பேசப்படுகின்றன. பெரியார் காலத்திலேயே பத்துப் பிள்ளைகளும், பதினாறு பிள்ளைகளும் பெற்று, சந்ததிகளைப் பெருக்கிய கோடிக் கணக்கான மக்களில் எத்தனை பேர்களின் பெயர்கள் இன்று பேசப் படுகின்றன?

நேரு, இந்திராகாந்தி, கலைஞர் போன்ற அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் தங்களது உழைப்பால் உயர்ந்தாலும்கூட “வாரிசு அரசியல்” என்று விமர்சிக்கப்படுகிறார்கள். ஆகவே, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிள்ளை களைப் பெறுவது அவர்களின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கும். இல்லையில்லை இவை வாரிசு அரசியல்தான் என்று யாராவது கூறினாலும், இப்படிப்பட்ட வாரிசு அரசியல் உருவாக நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்? என்று தொடர்ச்சியாகக் கேள்விகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. நீங்களும் இப்படிக் கேட்டுப் பாருங்கள் விடை கிடைக்கலாம். நிம்மதியும் கிடைக்கலாம்.

கடைசிக்காலத்தில் காப்பாற்றவே பிள்ளை

இந்த எண்ணம் மிகவும் ஆபத்தான மூடநம்பிக்கை. இன்றும் பல குடும்பங்கள் பிரிவதற்குக் காரணமே இந்த எண்ணம்தான். நமது மகன் / மகள் நம்மைக் காப்பாற்றாமல் போய் விடுவார்களோ என்ற ‘எதிர்காலம் பற்றிய அச்சம்’, நாம் உருவாக்கிய வாரிசுகளையும் அவர்களது வாழ்க்கையையும் அழித்துவிடுகிறது. ஆணோ, பெண்ணோ, அவர்களுக்குத் திருமணம் ஆனபிறகு அவர்களது வாழ்க்கையில் தலையிடுவது, ஒவ்வொரு விசயத்திலும் கருத்துச் சொல்வது, நமக்கு ஏற்ற வகையில், நாம் விரும்பும் வகையில் மருமகனையோ, மருமகளையோ மாற்றப் போராடுவது. அந்தப் போராட்டத்தில் பிள்ளைகளுக்கும் நமக்கும் மன அழுத்தம் - பிள்ளைகளின் மணவாழ்வில் சிக்கல்கள், மணமுறிவு, அவர்களது குழந்தைகளின் தனிமைப் பயணம் என - எல்லாவற்றுக்கும் முக்கியக்காரணம் - முதுமைக்காலம் குறித்த நமது அச்சம்தான். நமக்காக, நமது சுயநலத்துக்காக, நமக்குப் பின்னால் வரும் வாரிசுகளை மிகப்பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகிறோம்.

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துப் பராமரிக்க முடியாது. சமுதாயம் அதை ஏற்காது. தனது கணவனின் பெற்றோரைத் தன்னுடன் வைத்துப் பராமரிக்காத பெண்ணையும் சமுதாயம் ஏற்காது. அதனால்தான் ஆண்பிள்ளைகளுக்கு இங்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஆண் பிள்ளைகளைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப் படுகிறது.

தங்களது எதிர்கால அச்சத்தால், தங்களது பிள்ளைகளைச் சுதந்திரமாக வாழவிடாத பெற்றோர்கள் மிக மிகக் குறைவு. அதிலும் தாய்ப்பாசம் கொண்ட ஒருவனைத் திருமணம் செய்துவிட்டால், ஒரு பெண்ணுக்கு அதைவிடக் கொடுமையான தண்டனை வேறு எதுவுமே கிடையாது. அந்தத்தாய் சாகும்வரை அவளால் வாழ முடியாது. அவளுக்குப் பிடித்த உணவைக்கூட உண்ண முடியாது. பிடித்த உடையைக்கூட அணிய முடியாது. இந்த நிலையில் அந்தப் பெண் தனது பெற்றோரை இறுதிக் காலங்களில் கவனிப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்றாகும். எனவே பெண்களைப் பெற்றவர்கள், இயல்பாகத் தனக்கு ஆண் பிள்ளை இருந்தால் அவர்களிடமோ, ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டால் முதியோர் இல்லங்களிலோ இணைய வேண்டியுள்ளது.

பல குடும்பங்களில் நமது பிள்ளைகள், அவர்கள் பெற்ற பிள்ளைகளை வளர்க்கவும், பராமரிக்கவும் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதும் நடக்கிறது. அது நமக்கு விதிக்கப்படும் தண்டனையும், அடிமைத்தனமும் ஆகும். நமது பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்த பிறகாவது நமக்கான வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கலாம். அதற்கும் சமுதாயம் இடம் தராமல் பேரன், பேத்திகளைக் கவனிக்க அனுப்பிவைக்கிறது. அப்படி, பேரன் பேத்திகளைக் கவனிக்கச் செல்லும் வீடு, நமது மகள் வீடாக இருந்தாலும், மகன் வீடாக இருந்தாலும், அது நமது தனிப்பட்ட உணர்வுகளுக் கான சிறைதான்.

ஒருவேளை நமது மகன் வீட்டில் நாம் வாழும்போது, நமது மகன் நமது கருத்துக்களுக்கு மதிப்பளித்தால் அந்த மதிப்பு என்பது, மருமகளுக்கு பாதுகாப்பற்ற மனநிலையைத் தான் உருவாக்கும். மகள் வீட்டில் வாழ்ந்தால், அந்த மகள் நமது பேச்சுக்கு மதிப்புக் கொடுத்தால், அது அவளது மனவாழ்வைப் பாதிக்கும். எப்படி இருந்தாலும் கடைசிக்காலத்தில் நம் பிள்ளைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என எண்ணுவது, அந்தப் பிள்ளைகளுக்கோ அல்லது நமக்கோ தீராத வடுக்களையே உண்டாக்கும்.

நமக்கும், நமது பிள்ளைகளுக்கும் - அவரவரது சுதந்திரச் சிந்தனைகளுக்கும், சுதந்திர வாழ்க்கைக்கும் மிகப்பெரும் தொல்லையாக இருப்பது, “கடைசிக் காலத்தில் நம்மைக் காப்பாற்றப் பிள்ளை வேண்டும்” என்ற சிந்தனையாகும். யாருடைய வாழ்விலும் தேவையின்றித் தலையிடாமல், நம்முடைய வாழ்விலும் வேறு எவரும் தேவையின்றி மூக்கை நுழைக்காமல் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாமே விரும்பி, நமக்கேற்ற ஒரு முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்து கொள்வது நல்லது. இந்த முடிவை நாம் திணிக்க வில்லை. சமுதாயம் இயல்பாக நம்மை அந்த இடத்திற்குத் தள்ளுகிறது. அப்படியானால், எதற்காக பிள்ளைகள்?

ஒருகாலத்தில், கிராமங்களில் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. அவை கம்பியில்லாச் சிறைக் கூடங்கள். மாட்டுத் தொழுவங்களுக்கும் அந்தக் கூட்டுக்குடும்பங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. நான் அப்படிப்பட்ட கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவன்தான். அதில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ சுதந்திரச் சிந்தனைக்குக்கூட வழி இருக்காது. சிந்தனைக்கே வழி இல்லாவிட்டால், செயலுக்கு ஏது வழி? அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துபோய்விட்டன. இது வரவேற்க வேண்டிய சமுதாய மாற்றம்.

கூட்டுக்குடும்பங்களில் முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு போலிப் பாதுகாப்பு அல்லது தவிர்க்க இயலாத பாதுகாப்பு இருந்தது. தனிக் குடித்தனங்கள் பெருகத் தொடங்கிய நிலையில் வயதானவர்களைப் பராமரிக்கும் சிக்கல்கள் தோன்றின. அதற்கு விடையாக முதியோர் இல்லங்களும் தோன்றின. தமிழ்நாட்டில் இப்போதுள்ள முதியோர் இல்லங்கள் பார்ப்பனர்களும், பணம் படைத்தவர்களும் வாழும் இடங்களாகவே உள்ளன. அவற்றைக் கொஞ்சம் சீர்திருத்தி அனைவருக்கு மான இல்லங்களாக மாற்றினால் கடைசிக் காலத்தில் பிள்ளைகளை நம்ப வேண்டிய அவசியம் ஏற்படாது.

பேரன் பேத்திகளை வளர்ப்பது எப்படி? குழந்தைகளுக்குப் பாசம் கிடைக்குமா?

முதுமைக்காலத்தில் நாம் முதியோர் இல்லங்களுக்குப் போய்விடுகிறோம். சரி. அப்படியானால், நமது பேரன், பேத்திகளை யார் வளர்ப்பது? அவர்களுக்கு நமது பண்பாடு, பாரம்பரியம் தெரியாமல் போய்விடுமே? என்றெல்லாம் கேள்வி வரலாம். பிள்ளைகளே பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால், பிறகு அந்தப் பிள்ளைகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றிக் கற்பனையாகக் கவலை கொள்ள வேண்டியதில்லை. இருந்தாலும் 40 வயதிற்குள் இருப்பவர்களில், ஏற்கனவே பிள்ளை பெற்றுவிட்டவர்களுக்கு இக்கேள்வி இருக்கும்.

இத்தனை நூற்றாண்டுகளாக, பேரன், பேத்திகளுக்கு இராமாயணம், மகாபாரதம், ஜாதிச் சொந்தங்கள், கடவுளர் கதைகள், பேய்க்கதைகள், ஜாதி ஆதிக்கப் பழக்க வழக்கங்கள், ஜாதி அடிமைப்பழக்கங்கள், ஆணா திக்கத்தனங்கள், பெண்ணடிமைத் தனங்கள் என, சமுதாயத்தின் அனைத்து நோய்களையும் கற்றுக் கொடுத்தது யார்? தாத்தா, பாட்டிகளுக்கு அதில் மிக முக்கிய இடம் இருப்பதை மறுக்க முடியுமா?

தாத்தா, பாட்டிகளைப் பேரன், பேத்திகளிடம் இருந்து தள்ளி வையுங்கள். ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கைகளில் இதுவும் முக்கிய மானதாகும். நமக்கு என்ன பண்பாடு? என்ன பாரம்பரியம்? பிற்படுத்தப்பட்டவருக்கு ஆதிக்கப் பண்பாடு, தாழ்த்தப்பட்ட வருக்கு அடிமைப் பண்பாடு. இதுதானே நமது பாரம்பரியம்? இந்த இரண்டுமே நமது வருங்காலத் தலைமுறைக்குத் திணிக்கப்படக்கூடாது என்றால், பாட்டன், பாட்டிகளை முதலில் அண்டவிடக்கூடாது.

தரமான முதியோர் இல்லங்களும், தரமான குழந்தைவளர்ப்பு மய்யங்களும் (உசநஉாந) தோன்றி விட்டால், பிள்ளைபெற வேண்டிய அவசியமோ - பாட்டன், பாட்டிகளின் தேவையோ இருக்காது. Creache-களில் வளரும் குழந்தைகளுக்குப் பாசம் இருக்காது என்று கூறலாம். பாட்டன், பாட்டிகள் வளர்ந்த குழந்தைகளின் பாசங்கள் தானே இப்போது முதியோர் இல்லங்களை உருவாக்கியுள்ளன?

முதலில், இந்தப் பாசம் என்பது என்ன? அதுவும் மிகப்பெரும் சுயநலம் தான். எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே தவிர - அதைத்தாண்டிய பொருள் எதுவும் இல்லை. ‘காதல்’ என்பதற்குத் தோழர் பெரியார் வழங்கிய விளக்கத்தை இந்தப் பாசத்திற்கும் பொருத்திப் பாருங்கள். உண்மை விளங்கும்.

பெற்றவர்கள், மற்றவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது நாம் செலுத்தும் பாசங்களை விருப்பு வெறுப்பு இன்றிச் சுயவிமர்சனம் செய்து பாருங்கள். எந்தச் சுயநலமும் அற்ற ‘பாசம்’ என்று எதுவும் இருப்பதாகத் தோன்றாது. இந்த மறைமுகக் கொடுக்கல் வாங்கல்களை முறையாக, வெளிப்படையாகவே முதியோர் இல்லங்கள், Creache -கள் என மாற்றிக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

நமது சொத்துக்களுக்கு வாரிசு வேண்டும்

இதில் இரண்டு வகையினர் உள்ளனர். 1.நமது சொத்துக்களுக்கு நமது இரத்தத்தில் உருவான வாரிசு வேண்டும். 2. நமது இரத்தத்தில் உருவான வாரிசுக்குச் சொத்து வேண்டும்.

முதல் வகையினர் மிக மிகக் குறைவு. அப்படியே சொத்துக்களை இரத்த வாரிசுக்கு எழுதி வைத்தாலும், அந்தப் பரம்பரைச் சொத்துக்காரர்கள் எத்தனைபேர் அந்தச் சொத்துக்களை அதே அளவில் வைத்துள்ளனர் என்றால், அது 10 விழுக்காடு அளவு கூட இருக்காது. சொத்துக்களைச் சேர்த்து வைப்பதால் மட்டும் எந்த வாரிசும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது.

இரண்டாம் வகையினர், அதாவது தனது “வாரிசுக்குச் சொத்து வேண்டும்” என்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்கள்தான் இன்று நம்முடன் கோடிக்கணக்காக வாழ்ந்து வருகிறார்கள். ஆணோ, பெண்ணோ, எந்தப் பாலினமாக இருந்தாலும் திருமணவயது வரை பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு - தங்களது கனவுகளை, இலக்குகளை, சின்னச்சின்ன ஆசைகளைக்கூட நனவாக்க முடியாமல் வாழ்கிறோம்.

திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்தாலும் சமுதாயம் விடாது. கேள்வி கேட்டுக் கேள்வி கேட்டு நமக்கு ஒரு குற்ற உணர்ச்சியை உண்டாக்கி, ஏதோ ஒரு திருமணத்தைச் செய்ய வைத்து விடும். திருமணத்தோடு சமுதாயத்தின் கேள்விகள் நின்று விடாது. அடுத்த கட்டம்தான் ஆபத்தானது. ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அழிக்கக்கூடியது. அந்த அழிவிற்குச் சமுதாயம் வைத்துள்ள பெயர் “விஷேசம்”.

மூன்றாம் மாதத்திலிருந்து “என்னப்பா விஷேசம் ஒன்னும் இல்லையா?” ஐஸ்வர்யா ஆஸ்பிட்டலுக்குப் போய்ப் பாருங்கப்பா...நல்லது நடக்கும்”, “கேரளாவுல ஒரு வைத்தியர் இருக்காரு போய்ப்பாருங்க”, “குருஜியைப் போய்ப் பாருங்க”, “அம்மனுக்கு நெய்விளக்குப் போடுமா...நல்லது நடக்கும்”, “மார்கழிப் பஜனைக்கு வாம்மா”, “என்னடி உன்ன சந்தோஷமா வச்சுக்கிறாரா?”, “அசந்த காலத்துல பாத்துக்கிற ஒரு ஆளு வேணாமாப்பா”, “ஊரையே ஆண்ட வம்சம்டா... இதோட அழிஞ்சு போயிரக்கூடாது” இப்படி ஏராளமான கேள்விகளும், ஆலோசனைகளும், அக்கறைகளும் நம்மைச் சுற்றிச்சுழலும். ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வுக்கு நம்மைத் தள்ளிவிடுவார்கள்.

நாமும் சமுதாயத்தில் அய்க்கியமாவதற்குத் தயாராகி, திருமணம் முடிந்து 15 மாதங்களுக்குள் குழந்தையைப் பெற்றுவிடுவோம். அதோடாவது சமுதாயம் தனது வேலையைப் பார்க்கப் போய்விடுமா என்றால், விடாது. “ஏப்பா..ஆசைக்கு ஒன்னப் பெத்துக்கிட்ட...ஆஸ்திக்கு ஒன்னு வேணாமா?” என ஆரம்பிக்கும். சில உளவியல் நிபுணர்கள் வருவார்கள். “ஒத்தப் பிள்ளைக எல்லாம் சைக்கோவாத்தான் வளருதுக.... ஊட, மாட வெளையாட இன்னொரு பிள்ள இருக்கணுமப்பா...” என்று அடுத்த குழந்தைக்கும் தூண்டிவிட்டுப் போவார்கள்.

திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை பெற்றுக்கொள்ளாத ஆண்களும், பெண்களும் பல புறக்கணிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். குழந்தை அற்ற பெண் மலடி என்றும், ஆண் பொட்டை என்றும் கேலி செய்யப் படுவார்கள். திருமணம், குழந்தை பிறப்பு, பெயர் சூட்டல், காதுகுத்து, வீடு திறப்பு, வளைகாப்பு என எந்த விழாக்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் அழைக்கப்படுவ தில்லை. (பகுத்தறிவாளர்கள் அந்த விழாக்களையே புறக்கணிப்போம் என்பது வேறு)

சமுதாயக் கேள்விகளும், கேலிப்பேச்சுக்களும், புறக்கணிப்புகளும் நம்மை குழந்தை பெற்றுக் கொள்வதை மிகப்பெரும் கடமையாக மாற்றிவிடும். இவற்றைப் புறம் தள்ளி, அலட்சியப்படுத்தி, கடந்து வந்து விட்டால், நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். நாம் சுதந்திர மனிதர்களாக வாழலாம். இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாரிசுகளை உருவாக்கினால், உருவாவது வாரிசுகள் அல்ல. நம்மைப் போன்ற அடுத்த அடிமைகள்.

பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே நாட்டில் நடைபெறும் பெரும் பாலான ஊழல், இலஞ்சம், முறை கேடுகள் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளன. நேர்மையாக வாழ்பவர்களும் கூட, நமது பிள்ளை களுக்கு “ஒரு வீடு வேண்டும்” என நினைக்கிறோம். கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். இ.எம்.ஐ யிலேயே நமது வாழ்க்கை முடிந்துவிடும். வீடு வாங்க வசதி இல்லாத வர்கள் கூட, ஒரு மனையடியையாவது வாங்கிவிட முயற்சி செய்து, அதற்கு ஆயுள் முடியும்வரை பாடுபட்டு வருகிறோம். அப்படிக் கட்டப்பட்ட 100% வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள், அதோடு விட்டு விடுவார்களா?

“நமக்குத் தான் வசிக்க வீடு இருக்கிறதே” என மனநிறைவு அடைந்து விடுவார்களா என்றால் - உறுதியாக மனநிறைவு அடைய மாட்டார்கள். என் அப்பா எனக்கு ஒரு வீடு கட்டி வைத்தார். எனது மகன் / மகள் அதைவிட வசதியாக வாழ வேண்டும் என்று முடிவுசெய்து நமது பிள்ளைகளும் அதே சொத்து சேர்க்கும் கடமையில் - வாழ்க்கைச் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். “தனிச் சொத்து” என்பதையும், அதற்காகவே வாழவேண்டும் என்பதையும் நமக்குத் திணிப்பது இந்தப் பிள்ளைபேறு தான்.

எங்களது நேரடி அனுபவம்

எங்களது திருமணத்திற்கு முன்பு (20 வருடங்களுக்கு முன்பு) பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலைப் படித்து, பிள்ளை பெற வேண்டாம் என முடிவெடுத்தேன். எனது துணைவியாரும் அதேபோல முடிவு எடுத்திருந்தார். அதனால், நாங்கள் யாருக்கும் சொத்து சேர்த்து வைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. இருவரது உணவு, உடை, வசிப்பிடம், சுற்றுலா, மருத்துவம் இவற்றுக்கு மட்டுமே பணம் தேவை. எனது துணைவியார் பொருளீட்டுகிறார். அதுவே எங்கள் இருவருக்கும் போதுமானது. ‘இருவருமே வேலைக்குப் போய்த்தான் தீரவேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை.

மேலும், பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய வேலையோ, அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலையோ முற்றிலும் இல்லை. அதனால், திருமணம் முடிந்த பிறகும் 15 ஆண்டுகள் கழகங்களில் முழுநேரப் பணியாளனாகப் பணியாற்ற முடிந்தது. இன்றும் தொடர்ந்து நூல்களைப் படிக்கவும், எழுதவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனது துணைவியாருக்கும் அவரது ஆய்வுகளுக்காகத் தொடர்ந்து நேரம் ஒதுக்க முடிகிறது. அவரது மருந்தியல்துறை சார்ந்த பல ஆய்வாளர்களை உருவாக்கவும் முடிகிறது.

எங்கள் வீட்டைச்சுற்றி மனையடிகள் பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன. 1999 இல் 5 இலட்சத்துக்குக் கிடைத்த ஃப்ளாட்டுகள் இன்று 1 கோடிக்குச் சென்று விட்டன. வீடு வாங்க நினைத்தாலும் வாங்க இயலாத விலை உயர்வு. ஒருவேளை எங்களுக்குக் குழந்தை இருந்திருந்தால், உறுதியாக ஒரு வீட்டை வாங்கி இருப்போம். அந்தக் கடனை அடைக்கக் காலம் முழுவதும் இருவரும் உழைத்துக் கொண்டிருப்போம்.

எங்கள் இருவரது பெற்றோருக்கும் சிறிதளவு சொத்துக்களும், வீடுகளும் உள்ளன. எனது துணைவியார் அவருக்கு வரவேண்டிய சொத்துக்களை அவரது உடன் பிறந்தவர்களுக்கே விட்டுவிட்டார். நான் எனது பூர்வீகச் சொத்துக்களை விற்று, எனது ஜாதிச் சொந்தங்கள் இல்லாத கிராமங்களில் நிலம் வாங்கினேன். அதுகூட வாய்ப்பிருந்தால் நாமே அங்கு ஒரு முதியோர் இல்லத்தை உருவாக்கி விடலாம் என்ற எண்ணம்தானே ஒழிய, வேறு யாருக்காகவும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. எனது பெற்றோர் சேர்த்த மற்ற சொத்துக்களைப் பற்றி நான் அக்கறை கொள்வது கிடையாது.

ஒருவேளை எங்களுக்குப் பிள்ளைகள் இருந்திருந்தால், இருவரது பெற்றோரின் சொத்துக் களையும், எங்கள் பெயருக்கு எப்போது மாற்றுவது? எப்படிக் கைப்பற்றுவது? எங்களது உடன்பிறந்தவர்களிடமிருந்து அவர்களது பங்குகளையும் எப்படிப் பறிப்பது? இப்படியெல்லாம் கைப்பற்றிய சொத்துக்களை நம் பிள்ளை முறையாகப் பாது காக்குமா? ஊதாரித்தனமாக அழித்துவிடுமா? என்றெல்லாம் சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்போம்.

திருமணம் ஆன புதிதில், எங்களுக்கும் எதிர்காலம் பற்றிய அச்சத்தைப் பலரும் அறிவுறுத்தினர். முதியோர் இல்லங்கள் பெருகி விட்ட இந்தக் காலம் அந்த அச்சத்தையும் போக்கி விட்டது. இப்போதே சிறந்த முதியோர் இல்லங்களைத் தேடி வைத்துக் கொண்டோம்.

எங்களைப் போல, குழந்தைகள் இல்லாத, பெற்றுக்கொள்ளாத இணையர் பலரை நான் கவனிக்கிறேன். அவர்களது வாழ்க்கையில் சமுதாயம் எதையும் திணிக்க முடிவதில்லை. சுதந்திர மனிதர்களாக வாழ்கிறார்கள். சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்கிறார்கள். பணத்தையும், சொத்துக்களையும் மதிப்பதில்லை. அப்படியே சொத்துக்கள் இருந்தாலும், அந்தச் சொத்துக்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். சொத்துக்களின் கட்டுப்பாட்டில் அவர்கள் இயங்குவதில்லை. சொத்துக் களுக்காக அவர்கள் எதையும் இழப்பதில்லை.

ஜாதியைக் காக்கும் பிள்ளைகள்

பிள்ளைகள் இருந்ததாலேயே அவர்களுக்குச் சொத்துசேர்க்க வேண்டும் என்பதைப் போலவே சொந்தம் வேண்டும் என்றும் நினைத்து, அதற்காகவும் பாடுபட வேண்டி யுள்ளது. எதிர்காலத்தில் நமது பிள்ளைகளுக்குச் சொந்தம் வேண்டும் என்பதற்காக, “வனத்துல மேஞ்சாலும் இனத்துல சேரணும்” “மலைக்குப் போனாலும் மாமன் மச்சான் துணை வேணும்” என்றுகூறி, ஜாதி உறவுகளை வலுப்படுத்திக் கொள்கிறோம். “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்றுகூறி, ஜாதிச்சொந்தங்களின் அனைத்துத் தவறுகளையும் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறோம்.

இந்து மத அடிப்படையிலான பண்பாடுகளான, முதல் மொட்டை எடுப்பது, காதணி விழா, பூப்புனித நீராட்டுவிழா, கிராமத்துத் திருவிழாக்கள், குலதெய்வ விழாக்கள், பண்டிகைகள், நோன்பிகள், திருமணம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம், கருமாதி, ஜாதிச்சுடுகாடு போன்ற எதையும் மீற முடியாது. எல்லாவற்றிலும் நாம் அவசியம் பங்கெடுக்க வேண்டும். பதிலுக்கு ஜாதிச் சொந்தங்களும் நமது வீட்டு விழாக்களுக்கு வரவேண்டும். “சொந்தம் வேண்டும்” என்ற எண்ணம் நம்மையும், நமது பிள்ளைகளையும் வலுக் கட்டாயமாக ஜாதி வட்டத்திற்குள் இறுக்கமாகப் பிணைத்துவிடும்.

பிள்ளை இல்லாத இணையர்கள், முதியோர் இல்லங்களைத் தேர்ந்தெடுக்கும் இணையர்கள் எந்த இரத்த சொந்தத்தையும், எதற்கும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாமே விரும்பிச் சென்றால் ஒழிய - சொந்தக்காரர்களின் சடங்கு, சம்பிரதாயங்களில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. சொந்தக்காரர்களின் விழாக்களுக்குத் தேடிச்சென்று மொய் முறைகள், சீர் வரிசைகள் செய்வது - பிறகு அவற்றைத் தமது பிள்ளைகளின் நல்லது கெட்டதுகளில் வசூல் செய்வது என்ற வியாபாரத்திற்கும் தேவையே இருக்காது.

ஜாதி இத்தனை நூற்றாண்டுகளாக அழியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இந்தச் “சொந்தம் வேண்டும்” என்ற எண்ணமும், அதைச் செயல் படுத்தும் சடங்கு, சம்பிரதாயங்கள், விழாக்களும் ஆகும். அந்த எண்ணம் தோன்றுவதற்கும், சடங்குகளைப் பின்பற்ற வைப்பதற்கும் காரணம் பிள்ளை பெறும் தொல்லையே ஆகும்.

ஜாதிமறுப்பு இணையரின் பிள்ளைகள்

ஜாதிமறுப்புத் திருமணம் செய்த இணையர்கள் கூட, தனது பிள்ளைகளுக்குச் சொந்தம் வேண்டும் என்று எண்ணி, மீண்டும் தனது ஜாதியிலோ, தனது துணையின் ஜாதியிலோ நெருக்கத்தை அதிகரிக்க வேண்டி வரும். இன்றுவரை ஜாதி மறுப்பு மணம் புரிந்த அனைவரும் மீண்டும் அவரவர் ஜாதிக்குள் கரைந்துவிடும் போக்கு மாறவில்லை.

முற்போக்கு இயக்கங்களில் பணியாற்றும் தோழர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்கிறார்கள். அவர்களும் கூட ஏதோ ஒரு ஜாதியில் கரைய வேண்டிய அவலமான நிலை இருக்கிறது. ‘ஜாதி’ தரும் பாதுகாப்பு உணர்வை, “நமக்கொரு பிரச்சனை என்றால், கேட்க ஆட்கள் இருக்கிறார்கள்” என்ற உணர்வை அமைப்புகள் உருவாக்கவில்லை. குடும்ப ரீதியான உறவுகளைப் பேணுவதில் அமைப்புகள் தவறியுள்ளன.

அமைப்புகளில் பணியாற்றும் தோழர்களும், நமக்கு “உறவினர்” என்றால் அது நமது தோழர்கள்தான் என்ற எண்ணத்தில் இருப்பதில்லை. முதல் இடத்தில் இரத்த சொந்தங்கள், அடுத்த இடத்தில் நண்பர்கள், அதற்கும் அடுத்த இடத்தில் ‘தோழர்கள்’ என்று பிரித்துக்கொண்டும்- வரிசைப்படுத்தியும் வாழ்கின்றனர்.

அமைப்புகளில் பணியாற்றி ஜாதி மறுப்பு மணம் புரிபவர்கள், அமைப்புகள் எதுவும் இல்லாமல், காதல் அடிப்படையில் ஜாதி மறுப்பு மணம் புரிபவர்கள் ஆகிய இரு பிரிவினரும் ஒரு “இரத்தசொந்தங்கள்” போல மாறினால், அதற்காக ஒரு அமைப்பு இயங்கத் தொடங்கினால், ஜாதி ஒழிப்புக் களத்தில் அது மிகப் பெரும் சாதனையாகும்.

அப்படிஒரு “ஜாதி கடந்த சொந்தக்காரக் கூட்டம்” உருவாகாதவரை, மேற்கண்ட இரு பிரிவினரின் ஜாதி மறுப்புத் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் மீண்டும் ஜாதிகளை வலுப்படுத்தவே வழி வகுப்பார்கள். அரசாங்கம் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு “ஜாதி கடந்த இடஒதுக்கீடே Inter Caste Quota) வழங்கினாலும் அது ஜாதி ஒழிப்புக்குப் பயன்பட வில்லை என்ற நிலைதான் உருவாகும். ஜாதி கடந்த சொந்தங்கள் உருவாகும் வரை ஜாதி மறுப்பு இணையர்கள் பிள்ளை பெறுவதும்கூட, ஜாதி ஒழிப்புக்குப் பயன்படாது.

இயற்கைக்கு எதிரானதா?

எல்லோரும் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் இந்த உலகம் எப்படி இயங்கும்? இது இயற்கைக்கு எதிரானது இல்லையா? என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. தோழர் பெரியார் அதற்குப் பதில் கொடுக்கிறார்.

...சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோத மாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச்சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை. -(குடி அரசு - 12.08.1928)

இனப்பெருக்கத் தடைக்காலம்

1798 லேயே Thomas Robert Malthus என்ற இங்கிலாந்து அறிஞர், வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். அது பற்றிய விவாதத்தைத் தொடங்கினார். சீனாவில் 1979 லிருந்து “ஒருகுடும்பம். ஒருகுழந்தை” எனும் திட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டது. கோடிக் கணக்கான கருக்கலைப்புகளும், கருத்தடை அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இந்தியாவில் நெருக்கடிநிலை காலத்தில், சஞ்சய் காந்தியின் முயற்சியால், ஏராளமான ஆண்களுக்குக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. சீனாவிலும், இந்தியாவிலும் நடந்த இந்த மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அதிரடித் தன்மையானது, மக்களிடையே எதிர்மறை எண்ணங்களைத்தான் உருவாக்கின. அதனால் தோல்வி அடைந்தன.

மால்தூஸ், மாவோ, சஞ்சய்காந்தி ஆகியோர் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என முனைந்ததற்குக் காரணங்கள் வேறு. பெரியார் கருப்பையை அறுத்தெறியக் கூறியதற்குக் காரணம் வேறு. இந்தியாவில் பிள்ளைப் பேறு என்பது ஜாதியோடும், ஆணாதிக்கத்தோடும், இந்துமதக் கூட்டுக்குடும்பச் சிறைகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது. இதற்கு கடுமையான அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

முதற்கட்டமாக, முற்போக்கு இயக்கங்களில் பணியாற்றும் தோழர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டும். இயக்கத் தோழர்களை உறவினர்களாக மாற்றும் பண்பை வளர்க்க வேண்டும். அமைப்புகளைப் பற்றி அறியாத - காதல் அடிப்படையில் திருமணம் செய்யும் ஜாதி மறுப்பு இணையர்களோடு தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். நமது உறவினர் வட்டத்தில் அவர்களை இணைக்க வேண்டும். அவர்களுக்கு ஜாதி தரும் பாதுகாப்பு உணர்வை நாம் உருவாக்க வேண்டும்.

மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காகக் கடலில் ஆண்டுக்கு 2 மாதம் வரை ‘மீன்பிடித் தடைக்காலம்’ அறிவிக்கப்படுகிறது. அதுபோல, ஜாதி கடந்த சொந்தங்களாக ஒரு 10 இலட்சம் பேராவது இணையும் வரை “இனப்பெருக்கத் தடைக்காலம்” என உறுதி ஏற்றுக்கொண்டு, குழந்தை பெறுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அமைப்புகள் தமது தோழர்களிடம் அதற்கான மனநிலையை விதைக்க வேண்டும். ஒரு 30 அல்லது 40 ஆண்டுகள் கழித்து, இந்த இனப்பெருக்கத் தடைக்காலத்தின் விளைவுகளை ஆராய வேண்டும். ஆக்கப் பூர்வமான முன்னேற்றம் இருந்தால் அதைப் பொதுமக்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்.

பெரியாரின் 140 வது பிறந்தநாளில், அவரது கருத்துக்களில் அதிகம் விவாதிக்கப்படாத இந்தப் “பிள்ளை பெறும் தொல்லை” பற்றிய கருத்துக்கள் விவாதமாக வேண்டும். பல ஆக்கப்பூர்மான முடிவுகளுக்கு வழிவகுக்க வேண்டும்.

(The Common Sense 2018 செப்டம்பர் இதழில் (https://pascamerica.org/the-common-sense-spetember-2018) வெளியான கட்டுரை)