குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கையின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய் விட்டது.
இதைப் பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச் செய்யாமல் விட்டு வைத்திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.
முதலாளி வர்க்க ஆக்ஷியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.“குடி அரசு” தோன்றி இந்த 8 1/2 வருஷ காலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்கின்ற கவலை கொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனீயம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்து வரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்து வந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.
இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளை கண்ணாடிபோல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடி அரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.
சிறிது காலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பது மேல் என்பதுபோல் “குடி அரசு” தன் கடமையை ஆற்ற முடியவில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்து போக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்குக் கவலையில்லை.
ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் “குடி அரசு” மறைவதில் அதிகக் கவலையிருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் துகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவு கட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டுவிட்டது. மயக்கமும், மார்வலியும் அதிகம், கால்களில் நீர் ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் “குடி அரசு” நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ள வேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின்றனவோ பார்ப்போம்.
நிற்க இதன் பயனாய் “குடி அரசி”ன் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்து வந்த வேலைகள் கெட்டுப் போகுமோ என்றாவது யாரும் பயப்பட வேண்டியதில்லை.
நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றி விட்டன. பிரசாரம் என்கின்ற கொடி எங்கும் பரவி விட்டது. “குடிஅரசோ” சுயமரியாதைக்காரரோதான் இக் கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருத வேண்டியதில்லை. “குடிஅரசு”ம் சு.ம. காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதே; என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக் கொள்கையைச் சொல்லவும் பிரசாரம் செய்யவும், வெகு “தொண்டர்களும்” “தலைவர்களும்” இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததுபோலவும் ஆகும்.
மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்த பிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு “குடி அரசு” அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ்செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக் கொள்கிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 12.11.1933)
***
குடி அரசுக்கு நோட்டீஸ்
(1931-ம் வருஷத்திய இந்திய பத்திரிக்கைகள் (அவசர அதிகார) சட்டத்தின் 3-வது பிரிவினுடைய (3-வது) உட்பிரிவின்படி)
கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும் 1931ம் வருடத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டப் பிரிவுகளின்படி செக்யூரிட்டி வாங்கப்படாததுமான, “குடி அரசு” என்ற பெயருள்ள பத்திரி கையின் 1933 ஜுலை 30ம்தேதி இதழிலே 1932ம் வருஷத்திய கிரிமினல் சட்ட திருத்தச் சட்டத்தினால் (XXFI of 1932) திருத்த பெற்ற சட்டத்தின் 4வது செக்ஷன், (1) சப்செக்ஷனின் (டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்லீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத்துடன் அனுப்பப் பட்டிருக்கிறது) பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரிய வருகிறபடியால் 1931ம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் (XXIII of 1931) 7-வது செக்ஷனில் (3) சப்செக்ஷனின்படி , பத்திரிகையின் பிரசுரதாரராகிய எஸ்.இராமசாமி நாயக்கர் மனைவி எஸ்.ஆர். கண்ணம்மாள், 1933 நவம்பர் 20-ந் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ.1,000 (ஆயிரம் ரூபாய்) ரொக்க பணமாக அல்லது இந்திய கவர்ன்மெண்டு செக்யூரிட்டி பாண்டுகளாக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் செக்கியூரிட்டி கட்ட வேண்டும் என்று லோக்கல் கவர்ன்மெண்டார் இதனால் அறிவிக்கின்றனர்.
(கவுன்சிலின் கவர்னர் உத்திரவுப்படி) ஆக்டிங் சீப் செக்ரட்டரி.
“குடி அரசு” பத்திரிகை அச்சடிக்கப்படுகிற “உண்மை விளக்கம்” அச்சுக்கூட சொந்தக்காரரான தோழர் கண்ணம்மாளுக்கு இவ்விதமாக ரூ.1,000 ஜாமீன் கேட்டு ஒரு நோட்டீசு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆக 2000 ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டிருக்கிறது.
(குடி அரசு - அறிக்கை - 12.11.1933)