“முன்னேற்றம்” என்னும் பத்திரிகை திரு.வெ.சி. நாராயணசாமியவர்களை ஆசிரியராகவும் திரு.ஜி.எஸ். சாரங்கபாணியவர்களை வெளியிடுவோராகவும் கொண்டு மலாய் நாட்டில் சிங்கப்பூரிலிருந்து வெளிவருவதாகும். இப்பத்திரிகையின் ஐந்து மலர்களைப் பார்த்ததில் இதன் கொள்கைகள் முற்றிலும், மக்களைத் தொன்று தொட்டுள்ள மூடப்பழக்க வழக்கங்களாகிய படுகுழியினின்றும் ஜாதி மதங்கள் என்கின்ற கொடிய விலங்குகளினின்றும், பார்ப்பனீயக் கொள்ளைக்காரர்களின் பெருந்துன்பங்களினின்றும் மீட்டு வாழ்விக்கும்படியானதும் ஒப்பற்ற சுயமரியாதைத் தத்துவங்களையும் கொண்டதாகவே இருக்கின்றன. இப்பத்திரிகையானது தன் பெயருக்கேற்ப மக்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களையே கொண்டு விளங்குவதால் இப்பத்திரிகையானது நம்மக்களுக்கு இன்றியமையாதவோர் நற்றுணை யாகும் என்பது எமதபிப்பிராயம்.

periyar anna 350ஆனால், தற்காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்களெல்லாம் பத்திரிகை பத்திரிகை என்பதாக ஏற்படுத்திக் கொண்டு மக்களை உபத்ரவிக்கிறார்கள் என்று சிலர் எண்ணவோ சொல்லவோ செய்யலாம். ஆனால் நாம் அதை புத்திசாலித்தனமானவைகளென்று மதிக்க மாட்டோம். ஏனெனில், ஒரு நாடோ ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அதன் பரப்பெங்கும் பத்திரிகைகளும் பாடசாலைகளுமாகவே மிளிர வேண்டும். இதை யுத்தேசித்தே தான் சில அறிவிற் சிறந்த பெரியார்கள் எந்தச் சமூகத்தை யேனும் எந்த நாட்டையேனும் முன்னேற்றமடைந்திருக்கிறதா? இல்லையா? என தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்கள் அந்த நாட்டினரையோ சமூகத்தினரையோ கண்டால், உங்களுக்கென எத்தனை பத்திரிகைகள்? எத்தனை பாட சாலைகள்? எத்தனை கலாசாலைகள் இருக்கின்றனவென்னும் கேள்வி கிளத்துகின்றனர். ஆகவே, பத்திரிகைகளின் எண்கள் மிகுவதைத் தாழ்வாக நினைக்கவோ சொல்லவோ சற்றும் இடமில்லை. ஏனெனில் :-

பத்திரிகைதான் முன்னேற்றமடையக் கருதும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஆசான். பத்திரிகைதான் மக்களுக்கு அறிவையூட்டி வளர்க்கும் தாயினுமினியது. பத்திரிகைதான் புத்தி புகட்டும் ஓர் நற்றந்தை. பத்திரிகைதான் ஆபத்துக்குதவும் நற்புதல்வன். பத்திரிகைதான் உண்மைத் தோழன். அதுவே ஐம்புலன்களையுமொருமித்து இன்பம் நுகரச் செய்யும் உத்தம மனைவி. அதுவே பெருஞ்செல்வம். அதுவே நெருங்கிய சுற்றம். அதுவே இன்பந்தரு பெருவீடு. அதுவே நோயகற்றும் சஞ்சீவி, அதுவே இன்னமுது, அதுவே உண்மைச் சேவகன். அது மக்கள் வசிக்கும் ஒவ்வொரு இல்லந்தோறும் வந்து, சுயேச்சையும் சுவாதீனமற்று அஞ்ஞானத்திலும் சோம்பலிலும் பசியிலும் தரித்திரத்திலும் உறங்கிக் கிடக்கும் மக்களை யெழுப்பி உய்விக்கும் நற்றுணைவன்.

வெறும் நாட்டுச் செய்திகளையே தமக்கணியாகத் தாங்கியும் ஒரு சில தொகையினரான கூட்டத்திற்கு மட்டில் நலத்தைத் தருவதாகவும், ஆசிரியர்களின் கியாதி, லாபப் பூஜைகளுக்காகவும், மக்களின் பொருள்களையும், அவர்களின் அருமையான பொழுதுகளையும் கொள்ளை கொண்டு தமது ஒரு சாணை நிரப்பிப் பெருமைச் சின்னங்களை பரிமாறி காலத்தைக் கழித்து வரும் சில போலிப் பத்திரிகைகள் போன்றல்லாமல், ராயல் 1க்கு 16ல் 20 பக்கங்கள் கொண்டு மலர்கள் தோறும் கண்கவரும் தலைவர்களின் சித்திரப் படங்களாலும் நல்ல பதிப்புள்ள நல்ல தமிழில் பண்டித பாமர ரஞ்சனமான முறைகளில் உயர்ந்த அனுபவமும் பரோபகாரமுள்ள அறிவாளிகளால் எழுதப் பெற்றக் கட்டுரைகளைக் கொண்டதோடு ஒவ்வொரு மலர்களிலும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு வாக்கியங்களிலும் சுயமரியாதைத் தத்துவத்தின் தேன்றுளிகள் கசிந்தொழுகும் மாதிரியிலமைந்து ஒளிர்வதால் இக்காலத்துக்கேற்ற ஓர் நற்பயனை மக்கள் யாவருமிதை யாதரிப்பார்களென நம்புகிறோம்.

இதன் வருட சந்தா

உள் நாட்டிற்கு         2-25

இந்தியா சிலோனுக்கு          ரூ.5

கிடைக்குமிடம்

மானேஜர், “ முன்னேற்றம் ஆபீஸ்”

125, சிலிகி ரோடு, சிங்கப்பூர்

(குடி அரசு - மதிப்புரை - 03.03.1929)

Pin It