periyar lunchஈப்போவில் பிரசுரிக்கப்படும் “தமிழன்” என்னும் தமிழ் தினசரி பத்திரிகையின் வெளியீடுகள் வரப் பெற்றோம். இப்பத்திரிகையானது தேசத்திற்கும், மக்கள் சுயமரியாதைக்கும் வெகு காலமாக உழைத்து வரும் பெரியார் உயர்திரு.சுவாமி அற்புதானந்தா அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ளது.

சமூக ஊழியமும், சமூக சீர்திருத்தமும் புரிவதே இப்பத்திரிக்கையின் பொது நோக்கமாயிருந்த போதிலும், தீண்டாதார், ஏழை, எளியவர்களின் குறைகளை முக்கியமாக தீர்ப்பதற்காக வெளிவந்துலாவும் ஓர் சிறந்த தமிழ் தினசரி இதுவேயாகும். தமிழ் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஜாதி மத வித்தியாசங்களையும், பிறவியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் கண்டித்து, தீண்டாமை, நெருங்காமை, பாராமை முதலிய அட்டூழியங்களை அறவேயழித்து, கலப்பு மணம், விதவை மணம், புரோகிதமற்ற மணம், புரோகிதமற்ற ஈமக்கடன் முதலியவைகளை ஆதரித்து, மக்களின் பகுத்தறிவை வளர்த்து, அவர்கள் முன்னேற்றமடையும்படியான துறைகளில் ஈடுபட்டுழைத்தலுமாகிய அரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பாடுபட முன்வந்ததற்காக நாம் அதை முழுமனதுடன் வரவேற்பதுடன், நமது வாசகர்களையும், இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

நாடெங்கும் பண நெருக்கடியால் அல்லலுற்று, பரிதவித்துக் கொண்டிருக்குமிக்காலத்தில், இத்தருணத்தில் நாடெங்கும் சமதர்ம கொள்கைகளைப் பரப்பி, பாமர மக்களைத் தட்டி எழுப்பி, உற்சாகப்படுத்துவதற்காக முன் வந்த “தமிழனின்” நிர்வாகஸ்தர்களுக்கு நமது வந்தனத்தை அளித்துக் கொள்ளுகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்து, மலாய் தேசத்தில் முதன் முதலாக வெளிவந்த தமிழ் தினசரி இதுவொன்றேயாகும்.

(குடி அரசு - மதிப்புரை - 01.11.1931)

Pin It