எனக்கு முன்பு பேசிய தோழர்கள் நம் அருமை நண்பர் இராஜாஜி அவர்கள் இங்கே வந்து பேசியிருப்பதால், அவர் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அவர் பேசியதற்குப் பதில் கூறவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை. என்றாலும் சில உண்மை விஷயங்களை வெளிப்படையாகவே இங்குப் பேச ஆசைப்படுகிறேன். அப்படி நான் கூறுவதில் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கலாம். இன்னும் சிலர் ஒழிக்கப்பட வேண்டிய காங்கிரசுக்கு உதவி செய்கிறாரே என்றும் சொல்லலாம்.

periyar 254மாறுவது என்பது மனிதன் சுபாவம், மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது எருமையாக இருக்க வேண்டும், அல்லது எதற்கும் அசையாது இருக்க வேண்டுமானால் அது கல்லாக இருக்க வேண்டும். நாட்டின் நடப்புகளைப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் காரியம் செய்ய வேண்டுமானால் மனித உள்ளம் கொண்டவன் மாற்றத்தை எதிர் நோக்கித்தான் நிற்பான். மனிதனுடைய உள்ளம் படிக்கப் படிக்க அவனுக்கு ஆசையும், அதன் மூலம் ஆசாபாச உணர்ச்சியும் தானாகவே ஏற்படுகின்றன. இதுதான் மனிதனது இயற்கைச் சுபாவம். அதற்கு ஏற்றாற் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நான் மாறுகிறேன் என்பது உண்மைதான். எதில் மாறுகிறேன்? இதுவரை நான் பேசி வந்ததில் மாறி இருக்கிறேனா? அல்லது நடத்தையில் ஏதாவது மாறி இருக்கிறேனா? என்பதை நீங்கள் உணரவேண்டும். என்னுடைய பேச்சில், நடத்தையில், கொள்கையில் மாற்றமில்லை. ஆனால், நடத்தும் வழியில் மாறி இருக்கிறேன். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நான் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமானால், நான் எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று, எதை இலட்சியமாகக் கொண்டு வேலை செய்து வருகின்றேனோ, அதிலிருந்து சிறிதுகூட மாறவில்லை. அது எப்படி எப்படி நடக்க வேண்டும் என்கின்ற கருத்தில்தான் மாறுதல் இருக்கலாம். இது தவிர என்னுடைய நாணயத்திலோ, மான உணர்ச்சியிலோ எவ்வித மாறுதலும் இருக்காது. இப்படி இருப்பதாக எவராலும் கூறவும் முடியாது.

ஜாதி ஒழியவேண்டும் என்பது என்னுடைய கருத்து. சிறு வயது முதல் ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான். நாற்பது ஆண்டுக் காலமாகச் ஜாதி ஒழிய வேண்டும் மதம் ஒழியவேண்டும் வேதம் ஒழிய வேண்டும் மனுதர்மம் - வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன் முப்பத்தைந்து ஆண்டுக் காலமாகப் பார்ப்பானும் ஒழியவேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்கு முன்னையவிட இன்னும் அதிக தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன். அதனால் தான் இன்று மக்களிடையே மனிதத் தன்மையைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் என்னுடைய நாணயமும் நியாய உணர்ச்சியும் ஒழுக்கமும்தான் என்பதைத் தைரியமாகச் சொல்லுவேன்.

அதிசய அறிவியல் அற்புதங்களைக் கண்டுபிடிக்கும் இந்த உலகத்தில் யாராலும் எதைக் கொண்டும் அசைக்க முடியாத சர்வ வல்லமையுள்ள ஒன்று இங்கு இருக்கிறதென்றால், அது இந்தப் பார்ப்பான்தான். மதத் துறையில் பார்த்தாலும் அரசியல் துறையில் பார்த்தாலும், எல்லாவற்றிலும் அரசியல் துறையில் பார்த்தாலும் எல்லாவற்றிலும் பொருந்தி இருப்பவர்கள் இந்தப் பார்ப்பனர்கள். நாடு முழுவதிலும் உள்ள பத்திரிகையை எடுத்துக் கொண்டால் இரண்டொன்றே நம்முடையவை. மற்றவை எல்லாம் அவர்களுடையவை. இந்த இரண்டொன்றும் நம்முடைய ஆள்களால் நடத்தப்பட்டாலும், பார்ப்பனின் தயவில்லாமல் நடத்த முடியாத நிலைமையில் அவனுக்கு அடிமையாக இருந்து அவன் சொல்படிக் கேட்டு, நம்முடைய இனத்தை அழிப்பதற்கே இருப்பவைகள். இவைகளக்கு எல்லாம் தயங்காமல் எதிர்த்து அவைகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் என்னுடைய ஒழுக்கமும், நாணமும்தான். இது எல்லோருக்கும் விளங்காது. ஆராய்ச்சித் தன்மை உள்ளவருக்கும் என்னை நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கும் தான் விளங்கும். நான் யாருக்காக இப்படிப் பாடுபடுகின்றேன் என்றால் அது என்னுடைய (திராவிட இனத் தமிழ்) மக்களுக்கு ஆகத்தான்.

பார்ப்பானுடைய ஆதிக்கத்தின் காரணமாக நாம் இன்னும் காட்டுமிராண்டித் தன்மையில் தான் மானம் இல்லாத மக்களாக இருக்கிறோம். அதற்குச் ஜாதி ஒழிந்தால், பார்ப்பான் ஒழிவான் என்பதை உணர்ந்து சாதிக்கு ஆதாரமான, கடவுள் - வேதம், மதம், சாஸ்திரம் அவையோடு இவைகளைக் காப்பாற்றும் இந்திய அரசாங்கமும் ஒழியவேண்டும் என்றும், நடக்கிற மத்திய ஆட்சி "காலிப் பசங்கள்" ஆட்சி என்றும் சொன்னேன். எந்தக் கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு ஒழியவேண்டும் என்று சொன்னேனோ அதனுடைய அடிப்படையில் இப்பொழுது கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. அதைத்தான் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கருதினேன்.

என்னுடைய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் இப்பொழுது சூடு பிடித்திருக்கிறது என்றால், அது வெற்றியின் அடிப்படையில் திருப்பு முனைக்கு அது திரும்பி விட்டது என்றுதான் எண்ண வேண்டும். இப்போதுள்ள நிலையில் மக்கள் உள்ளத்தில் ஜாதி ஒழியத்தான் வேண்டும் என்கின்ற தன்மை தானாக ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் திரு. காமராசர்தான். அவரால்தான் இந்தச் சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் எதற்கும் கவலைப்படாமல் காரியம் ஆற்றுபவர்கள். பல கஷ்ட - நஷ்டங்களை அனுபவித்தவர்கள். ஆதலால் எதற்கும் கவலைப்படாமல் எங்களுடைய இலட்சியம் எதுவோ அதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போது நடக்கிற போராட்டம் தேவ - அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர். அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம் வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ - அசுரப் போராட்டம்தான்.

தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள். கடவுள்கள் - தேவர்கள் என்றால் பார்ப்பான் என்று பொருள். பார்ப்பானும் கடவுளும் ஒன்று. அசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்து வந்துள்ளார். மகாவிஷ்ணு என்னும் கடவுள் எதற்காக வந்தார் என்றால், அசுரர்களாகிய தமிழர்கள் தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக்கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்துள்ளார். மகாவிஷ்ணு என்னும் கடவுள். எதற்காக வந்தார் என்றால் அசுரர்களாகிய தமிழர்கள் தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டை விட்டு விரட்டியதற்குத் தமிழர்களை ஒழித்துக்கட்ட மகா விஷ்ணுவே அவதாரம் எடுத்து வந்து, தமிழனுடைய தலையைச் சீவி அழித்தார். அந்த மகாவிஷ்ணு அவதாரம் தான் இராமன், கிருஷ்ணன் எல்லாம்!

"அந்த இராமனும், கிருஷ்ணனும் நான்தான்" என்கிறார் இராஜாஜி! மிகத் துணிவோடு மனுதருமம் நிலைக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அவருக்கு ஆதரவாக மதச் சம்பந்தமான சங்கங்கள், சாதிச் சம்பந்தமான கட்சிகள் இருக்கின்றன. மேலும், நம்முடைய மக்களுக்கு உழைக்கும்படியான கட்சிகள் என்று சொல்லப்படுவது எல்லாம் பார்ப்பானுடைய நன்மைக்கே உழைக்கின்றன. இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தைரியமாகச் சொல்லுகிறார், "நான்தான் வேதகால இராமன். மனு தர்மத்தை இந்த நாட்டில் நிலைக்கச் செய்வதே தன் கடமை" என்று! அவருடைய முயற்சிக்குக் கட்டுப்பாட்டுடன் ஒன்றுமையாக இருக்கிறார்கள் பார்ப்பனர்கள். அங்குப் போனால் ஏதாவது கிடைக்காதா என்று பொறுக்கித் தின்பதே புத்தியாகக் கொண்டு நம்மவனும் ஓடுகிறான் என்றால் நம் மக்களுக்கு என்று உழைக்க யார் இருக்கிறார்கள்?

இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும். அந்தப் பக்கம் ராஜாஜி. இந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமி. அவர் எங்குப் போனாலும் போகிற பக்கமெல்லாம் என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார். நானும் அதைப் பற்றித்தான் பேசுகிறேன். என்னுடைய கருத்து நம்முடைய மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக வேண்டும் என்பது. ராஜாஜி அவர்களுடைய கருத்த மனுதரும முறைப்படி ஆட்சியை ஆக்கவேண்டும் என்பது. இதைப் பார்த்தால் புரியாதா, ராஜாஜி அவர்கள் யாருக்காக இருக்கிறார், யாருக்காகப் பாடுபடுகிறார் யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்பது?

நம்முடைய மக்கள் சமுதாயத் துறையிலும், அறிவுத் துறையிலும் மட்டுமல்லாது, மதத் துறையிலும், கடவுள் துறையிலும் மனிதத் தன்மை பெற வேண்டும். இந்தச் சி.ஆர் (ராஜாஜி) மட்டுமல்ல, பெரிய பெரிய மனிதர்கள், அறிவாளிகள், மகான்கள், மகாத்துமாக்கள்; இன்னும் அவர்களைவிடப் பெரிய தெய்வீக சக்தி படைத்தவர்கள் என்று கூறப்படுவார்கள் ஆக யாராய் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இந்தப் பார்ப்பானுக்குப் பாடுபட்டவர்கள். அல்லது பாடுபடுபவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் - இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடைய காலத்திற்கு முன்னால் யாரும் "முட்டாள்தனம் ஒழியவேண்டும், அடிமைத்தனம் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும்" என்று சொல்லவில்லை. இன்னும் அரசியல் மூலம் பார்ப்பானுக்கு பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிர, மான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்? எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும், பார்ப்பானுக்குப் பயந்துக் கொண்டு இருக்கிறானே தவிர, துணிந்து காரியம் செய்யவில்லையே? மேலும் நம் நாட்டில் படித்தவன், மேல் படிப்புக்காரன், புலவன் என்று இருக்கின்றனர் என்றால், அவர்களால் நமக்கு - நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மை? அவனவன் பிழைப்புக்காகப் படித்திருக்கிறானே தவிர, ஊருக்கு உழைக்க வேண்டும் என்று எவன் படித்திக்கிறான்?

நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்! வருணாச்சிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தித் தன்னுடைய இனம் வாழவேண்டும் என்பதாகவே பாடுபட்டுக் கொண்டு வருகிறார். அதன் காரணமாகத்தான் எங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை! அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப்போல், நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறது. ஆனால், எடுத்த காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு "மானத்தை பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று ஓர் ஆயுதம் அவர்களிடம் இருக்கிறது. நமக்கு மானத்தைப் பற்றிக் கவலை இருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான். மானம், ஈனம் என்பதைப் பற்றிக் கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும், தருமமும் ஆகும்.

பார்ப்பானுடைய தருமம் உடல் வியர்க்கப் பாடுபடக் கூடாது. பிச்சை எடுத்தும் புசிக்க வேண்டும்.

பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரன்) தருமம்.

பார்ப்பான் யாரிடம் பிச்சைக் கேட்டாலும் தன் பொருளையே - சொத்தையே வாங்கிக் கொள்ளுகிறான். பூமி பணம் எல்லாம் பார்ப்பானுடையவை. அவற்றைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தருமம்.

ஏர் - கலப்பை, வட கயிற்றைப் பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம். நாம்தான் உழ வேண்டும். அதன் உணவை எல்லாம் பார்ப்பான் உண்டு களிக்க வேண்டும். சூத்திரன் படிக்கக் கூடாது என்பது அவன் தருமம். இதனால்தான் அவன் படித்து மேலே போகவும் நாம் கீழே இறங்கவுமான நிலைமை ஏற்பட்டது. இவற்றை எல்லாம் நான் சும்மா சொல்லவில்லை. பி.ஏ., எம்.ஏ., படிப்பதைவிட அதிகம் படித்தே சொல்லுகிறேன்.

நாம் பாடுபடுகிறோம் - கல் உடைக்கிறோம். மரம் வெட்டுகிறோம். வண்டி இழுக்கிறோம். இவ்வளவு கடின வேலைகள் செய்யும் நாம் கூரை வீட்டில் தான் குடியிருக்போம். நம் வீட்டுக் கருமாதிக்கு வந்து, பிச்சை வாங்கிப் பிழைப்பவன் எல்லாம் மாளிகை வாசம்! கார்! பங்களா! மற்றும் பல வசதிகள் என்றால் நமக்கும் அந்த வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்காதா? எந்தப் பார்ப்பானாவது கம்பு, கேழ்வரகு சாப்பிடுகிறானா? கீழ்த்தரத்திலுள்ள பார்ப்பான் வீட்டில்கூட நெய் இல்லாமல் சாப்பிட மாட்டானே? நாம் சுடுதாசியில் எழுதித்தான் நாக்கில் ஒட்டிக் கொள்ள வேண்டும். பார்ப்பான் நெய் இல்லாமல் சாப்பிடுவதே பாவமாம்! அவனுடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி தான் மதம் - கடவுள், சாஸ்திரம் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மானத்தைப் பற்றி அந்த இனத்திற்குக் கவலையே இல்லை. சூதும் - பொய்யும் - புரட்டும் அவர்களுக்குப் பஞ்சாமிர்தம். நமக்கு அவை வேப்பெண்ணெய். அதற்குப் பொறுப்புள்ளவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறி அதன் வழியில் மக்களைப் பக்குவப்படுத்த வேண்டுமே என்கின்ற கவலையில்லாமல் இந்த ஊருக்கு வந்தால் எதைச் சொல்லித் தப்பிக்கலாம் என்று எண்ணி உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு பேசுவது மட்டத்திலும் மட்டம் என்றுதான் சொல்லுவேன்.

இப்பொழுது தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ஆட்சி காங்கிரஸ் ஆட்சியோ அல்லது வேறு எந்த ஆட்சியோ எப்படி வைத்துக் கொண்டாலும், ஜஸ்டிஸ் கட்சிக் (நீதிக்கட்சி) காலத்திலேகூட இப்படித் துணிந்து காரியம் செய்கிற ஓர் ஆட்சி இல்லை. இதைக் காதால் கேட்ட மாத்திரத்திலே நம்முடைய மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். நம்முடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாகப் புகழ்ந்து போற்ற வேண்டும். இப்படிச் சொல்ல வேண்டியதற்குக் காரணம் பல உண்டு. அவற்றை எல்லாம் நான்தான் பேசுகிறேனே தவிர காங்கிரஸ்காரனால் பேசக்கூட முடியவில்லையே? செய்த காரியத்தை எடுத்துச் சொல்ல முடியவில்லையே? செய்த காரியத்தை எடுத்தச் சொல்ல முடியாத இக்கட்டான நிலையில் இன்றையத் தினம் காங்கிரஸ்காரன் இருக்கிறான். பொதுவாக ஜனங்களுக்கு நன்மை செய்கின்றோம் என்று சொல்லுகிறார்களே தவிர நம்முடைய இன மக்களுக்குச் செய்கிறோம் என்று சொல்லமாட்டான். இந்த ஆச்சாரியாரைப் பற்றிப் பேசுவதற்குக் கூடப் பயம்!

இப்போது நடக்கிற சண்டை எல்லாம் பெரியாருக்கும் - சி.ஆருக்கும் தானே தவிர காங்கிரசுக்கும், எனக்கும் அல்ல என்று தானே சொல்லுகிறார்கள்? ராஜாஜி அவர்களுடைய கணக்கு எல்லாம் இங்கே இருந்து பவானிக்குப் போனால் எத்தனை முட்டாள் பசங்களை ஏமாற்றலாம்? அங்கேயிருந்து குமாரபாளையத்திற்குப் போனால் அங்கே எத்தனை பேரை ஏமாற்றலாம் என்பதுதானே தவிர, வேறு எவ்வித கவலையும் அவருக்கு இல்லை.

"க.து பசங்கள் எல்லாரும் ஒழுக்கம் கெட்டவர்கள், நாணயம் இல்லாதவர்கள். அவர்களோடு போய்க் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு இருக்கின்றீர்களே" என்று கேட்டால் அதற்குச் சொல்கிறார்: "அது எல்லாம் சுத்தப் பொய்! சாட்சாத் ஸ்ரீ இராமபிரான் தன் காரியம் சாதிக்கச் சுக்கிரீவனோடு கூட்டுச் சேரவில்லையா? அப்படிப்பட்ட அவரே கூட்டுச் சேர்ந்து இராவணனை ஒழித்திருக்க நான் ஏன் க.து.வோடு கூட்டுச் சேரக் கூடாது?" என்று கேட்கிறார். அதாவது இராமாயணத்தில் இராமனுடைய பெண்டாட்டியை இராவணன் தூக்கிக்கொண்டு போன பிறகு, சீதையை மீட்க இராமன் வரும் வழியில் வாலி, சுக்கிரீவன் பெண்டாட்டிச் சண்டையில் ஈடுபட்டிருக்கும் பேர்து குரங்குக் காலில் போய் விழவில்லையா? என்பதையே எடுத்துக் காட்டுகிறார். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

ராஜாஜியை இராமனாகவும், காமராஜரை இராவணனாகவும், க.து.க்களை குரங்காகவும் வைத்துப் பாருங்கள். இப்படி எல்லாம் சொல்கிறதைப் பார்த்தாலே புரியும். 'என் காரியம் செய்ய யாருடன் வேண்டுமானாலும் கூட்டுச் சேருவேன். நான் எதுவும் செய்வேன்' என்றால், மானம் என்ற சொல் பார்ப்பான் அகராதியில் இல்லை என்று தெளிவாய் விளங்குகிறது அல்லவா? பார்ப்பான் எதைச் செய்தாலும் வேதம் சொல்கிறது - சாஸ்திரம் சொல்கிறது - என்று சொல்லித் தப்பித்துக் கொள்வான். நான் சொல்கிறேன் எதைச் செய்தாலும் மனிதன் செய்தான் என்று - இது தவறா?

இராமன் வலியவே இராவணனிடம் சீதையை அனுப்பியதாகத் தான் அந்தக் கதை இருக்கிறது. பாரதத்திலும் கர்ணனைக் கொல்ல இப்படித்தான் கண்ணன் செய்துள்ளான். இந்தக் கதைகள் எல்லாம் எதற்கு என்றால் பார்ப்பனர்களுக்கு எதாவது இக்கட்டு வருமானால் அதிலிருந்து மீளுவதற்கு, இராமன் அப்படி நடந்து காட்டினான் - நீயும் அப்படி நட. இவன் இப்படி நடந்து காட்டினான். ஆகவே, நீயும் இப்படி நட என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கே ஆகும். சீதை இராவணனுக்குச் "சினைப்பட்டுள்ள" செய்தியை அறிந்தும் ஊரார் தூற்றுதலுக்கு ஆக உதைத்துத் தள்ளுவதுபோல் பாவனை செய்து காட்டுக்கு அனுப்பி அங்கே இரண்டு பிள்ளைகளைப் பெற்று அழைத்துக் கொண்டதை கடவுள் செயல் என்று காட்டி அதன்படி நட என்று சொல்கிறதைப் பார்ப்பன தருமமாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவை நமக்கு எப்படிப் பொருந்தும்? முட்டாள் மக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் தான் இவற்றைச் சொல்லி மக்களை ஏய்க்கிறார்கள். இல்லையானால் ராஜாஜி அவர்கள் "ஏன் ராம அவதாரம் - மனுஆட்சி நடைபெற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு இப்படித் திக்விஜயம் செய்ய முடியுமா? இந்த இராஜாஜி அவர்கள் முன்பு நடந்ததையும், இப்பொழுது நடக்கிறதையும் எடுத்துச் சொன்னால் இவர் வெளியே கிளம்ப முடியுமா?

"ஜாதி ஒழிய வேண்டும் என்று யாரோ சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது; என்னுடைய உயிர் உள்ளவரையில் அதற்கு இடங்கொடுக்க மாட்டேன்" என்று மதுரையில் இராஜாஜி அவர்கள் கூறியிருக்கிறார். இதை நான் சந்தேகமற உணர்ந்ததால் தான் அப்போதே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அதுவும் சீனுவாச அய்யங்கார் முதல் இந்த சி.ஆர். (இராஜாஜி) வரை என்னைத் தலைவர் என்று அவர்கள் அழைக்கிறபோது, நான் எதற்காக வெளியேற வேண்டும். அப்போதும் ஜாதி ஒழிய வேண்டும் என்பதை எதிர்த்து நின்றவர் இந்த ஆச்சாரி தான். அன்றும் அவர் தான் எதிர்த்தார்; இன்றும் அவர்தான் எதிர்க்கிறார்.

நம்முடைய ஒரே இலட்சியம் இந்த நாட்டில் ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்பது. இராஜாஜியினுடைய இலட்சியம் ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பது. இந்த இலட்சியத்தின் அடிப்படையில் தான் அவர் பாடுபடுகிறார்.

---------------------------------

08.02.1961 அன்று ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. “விடுதலை”, 16.02.1961
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It