ஆய்வுக்கட்டுரையின் வடிவம், ‘கருது கோளில்’ (hypothesis) தொடங்கி,  ‘ஆய்வுமுறையில்’ (research methodology) மூழ்கி முத்தெடுத்து, இறுதியில்ஆய்வாளரின் ‘கருத்தோடு’ (Conclusion) முடியும். வைரமுத்துவின் கட்டுரை மேற்சொன்ன வகையிலான ‘ஆய்வுக்கட்டுரை’ தான். ஆனால், கட்டுரை பேசும் அரசியலையும், அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும், முன் கூட்டியே கணித்த வைரமுத்து, ‘கட்டுரை முடிவைத்’ தன்கருத்தாகச் சொல்லாமல், மற்ற ஆய்வாளர்களின் கருத்தாகச் சொல்கிறார். மற்றபடி இதுஒரு தரமான ஆய்வுக்கட்டுரை, உண்மையில் இப்படிச் சொல்வதின் மூலம் கட்டுரையின் அழகுகூடுகிறதே தவிர குறையவில்லை. ‘தனிப்பட்ட சாய்வை’ சிறிதளவுகூட வெளிப்படுத்தக்கூடாது என்ற ஆய்வுக் கட்டுரையின் தார்மீக அடிப்படையை வைரமுத்து கிஞ்சித்தும் மீறவில்லை.

aandaal bakths

இனி, கட்டுரையின் உள்ளடக்கத்திற்குச் செல்வோம். மார்கழி மாதத்தை வைரமுத்து அறிமுகப்படுத்தும் விதமே, அவரின் பல்துறை அறிவுக்குச்சான்று. “அறிவியலாளன் வைரமுத்து, இயற்கை ரசிகன் வைரமுத்து, பகுத்தறிவாளன் வைரமுத்து” என தனது பலமுகங்களை வெளிப் படுத்தும்போதே, ‘ஆண்டாள் யார், கண்ணன் யார், நான் யார், தன் கருத்து’ என்ன என்பவற்றைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறார்.

இலக்கியம் என்பது சொற்களால் ஆனது என்றாலும், அது வெறும்சொற்களின் குவியல் அல்ல. சொற்கள் வெளிப்படுத்தும் பொருளே இலக்கியத் திற்குச் சுவையூட்டும். சொற்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது எழுத்தாளனின் திறமை. அது வைரமுத்திற்கு நிறையவே வாய்த்திருக்கிறது.

மார்கழி மாதம் என்பது உற்பத்திக்காலம், உற்பத்திக்கு அடிப்படை கலவி. இப்படித்தான் கட்டுரையைத் தொடங்குகிறார். “மார்கழிமாத அதிகாலை ஒழுக்கத்திற்கு (அதிகாலைக் குளியல், இறைவழிபாடு) ‘பாவைநோன்பு’ என்பது சடங்கு. கண்ணன் என்பதொருகாரணம்” என்கிறார் வைரமுத்து.  

அப்படியானால் மார்கழி மாதத்தின் பாவை நோன்பிருக்கும் எல்லாப் பெண்களும் கண்ணனை அடைய விரும்புகிறார்களா? இல்லை என்பதே வைரமுத்துவின் வாதம். அதுவே உண்மை. நோன்பிருக்கும் மற்றபெண்கள் கண்ணனிடம் வேண்டுகின்றனர். ஆண்டாளோ கண்ணனையே அடைய விரும்புகிறாள். இது சற்று வித்தியாசமாக உள்ளதல்லவா? இறைவனிடம் (கடவுளிடம்) பக்தர்கள் யாசிப்பது உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் பொதுப்பண்பு. ஆனால், இறைவனையே கணவனாக யாசிப்பது எங்கும் காணப்படாதது. இங்கே இந்துமதத்தில் (7 ஆம் நூற்றாண்டில் வைணவமதத்தில்) அப்படி ஒரு பழக்கம் காணப்படுவதின் காரணம் என்ன?

காரணமின்றி காரியங்கள் நடக்குமா? அந்தக்  காரணங்கள் யாவும் தேவதாசி எனும் காரியத்திற் காகவே என்று தமிழ்இலக்கியத்தில் இருந்தே ஆழமான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் வைரமுத்து தமிழகத்தில் 6 ஆம்நூற்றாண்டில்இருந்தே முனைவர் கே. சதாசிவன் “தமிழகத்தில் தேவதாசிகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ஆண்டாள் எழுதிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் எழுதப்பட்டகாலம் கிபி 6 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை எனக் கருதப் படுகிறது. தேவர்க்குத் தொண்டுசெய்யும் பெண்கள், ‘தேவர் அடியாள்கள்’ என முதலில் அழைக்கப் பட்டுப் பின்னர், தேவதாசிகள், தேவடியா எனத் திரிந்து விட்டது என்று கருதினால், அந்தத் தொண்டை வைணவமதத்தின் அனைத்துப் பிரிவுப் பெண்களும் செய்திருக்கவேண்டும். ஆனால் செய்ய வில்லை என்பதே வரலாறு தரும் சான்று. ஆண்டாள் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த பெண்ணில்லை என்று கூறுவதின் மூலம், பார்ப்பனரல்லாத பெண்கள் மட்டுமே தேவதாசிகளாக மாற்றப் பட்டுள்ளனர் என்பதைத் தெளிவு படுத்துகிறார்.

ஆறாம் நூற்றாண்டு தமிழக, இந்தியச் சமூகத்தில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய காலம். சமண, பெளத்த மதங்களின் வீழ்ச்சியால் வேதமதங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலம் அது. அதற்காகப் பல்வேறு பக்திஇலக்கியங்கள் படைக்கப்பட்டன. பக்தி என்பது கடவுளை வழி படுவதோடு நின்றுவிடுகிறதா? நின்றிருந்தால் இந்து மதத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் ஏற்பட்டிருக் காதே!  மற்ற மதங்களில் கடவுள்தான் வழிபாட்டுக்கு உரியவர். ஆனால் இந்துமதத்தில் கடவுளின் செயலாளர்களும் வழிபடப்படுவர்களாக உள்ளனர்.

மனிதநேயத்தோடு இறைநம்பிக்கையை பின்னிப்பிணைக்க ‘மக்கள்சேவையே மகேசன் சேவை’ என்ற வாதம் உருவானதைப்போல, ‘கடவுள் களின் செயலாளர்களுக்குச் செய்யும்சேவையே கடவுளுக்குச் செய்யும்சேவை’ எனக் கருத்துரு வாக்கம் செய்யப்பட்டது. அதன்பெயரே தேவதாசி. தேவதாசிகளின் தொடக்கமே ஆண்டாள். ஆண்டாள் பார்ப்பனரல்லாத பெண். இப்படியாகப் பல குறியீடுகள்.

கடவுளர்களின் செயலாளர்கள் யார்? பார்ப்பனர்கள், ஆண்கள். அவர்களுக்குப் பெண்கள் என்ன சேவை செய்ய இயலும்? “தன்னை ஒப்படைப்பது, தன் உடலைத்தருவது”. ஏன் பார்ப்பனப் பெண்கள்அந்தச் சேவையைச் செய்ய வில்லை? என்ற கேள்வியைத் தந்தை பெரியாரின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கேட்டதே அதற்கு விடையாக அமைந்துள்ளது. பார்ப்பனரல்லாத பெண்கள் தேவதாசிகளாக மாற்றப்பட்டனர் என்பதற்கு இந்தச்சான்றுகள் போதுமா?  தொடர்வோம்.

கடவுள்கள் பார்ப்பனர்களின் கைகளில் மாட்டிக்கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் என்றுகூறியஅண்ணல் அம்பேத்கர், “கடவுள்களைப் பொம்மைகளாகப் பயன்படுத்தப்பட்டதின் காரணம் சந்தையில் புதிய பொருளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காகப் பார்ப்பனர்கள் செய்த சந்தைப் படுத்தல் உத்தியே ஆகும்” என்கிறார்.

தேவதாசி முறையைச் சந்தைப்படுத்தப் பார்ப் பனர்கள் கடைப்பிடித்த வழிமுறை பற்றி கீழ்வரு மாறு விவரிக்கிறார் வைரமுத்து.

வேதமதங்களின் வர்ணபேத இறுக்கத்தின் காரணமாகவும், அதை எதிர்த்த சமண - பெளத்த மதங்களின் எழுச்சி காரணமாகவும், வீழ்ந்த வேத மதங்கள் தம்மை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டி இருந்தது. பலதரப்பட்ட மக்களைத் தன்னுள்ளே இழுக்கவேண்டும். மதத்தை மேலும் பரப்ப வேண்டும். எனவே, வேதமதத்தின் பண்புகளான ‘யாகம், யக்ஞம், தவம், வேள்வி’ ஆகியவற்றை விட்டுவிட்டு, ‘வாத்சல்யம்’ (பேரன்பு கொள்ளுதல்), ‘காருண்யம்’ (கருணை கொள்ளுதல்), செளலப்பியம் (எளிதில் அணுக்கூடியதன்மை) ஆகிய பண்புகளை முன்னிறுத்தியது வேதமதம். பெண்களைக் கடவுளின் பெயரால் உள்ளிழுத்து (இது அனைத்துக் கீழ்வர்ண சாதிகளுக்கும் பொருந்தும்) பார்ப்பனர் களுக்குப் பணிவிடை செய்ய வைப்பதே இதன் நோக்கமாகும். பார்ப்பனப் பெண்கள் ஏற்கனவே மகளாக, மனைவியாக, தாயாகச் சேவை செய்து கொண்டிருப்பதால், அவர்களுக்குத் தேவதாசி முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

காமத்தை ஆண்டாள் பேசுவதேன்?

மனு வின்படி

பெண்கள் அழகைப்பற்றி கவலைப்படுவதில்லை. வயதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால் போதும். அழகாக இல்லா விடினும் உடலுறுவு கொள்ளத் தயங்குவதில்லை. -அ 9: சு14

இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும். உடலுறவு நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். - அ 9: சு2

சிறுமியாயினும், இளம்பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும், தம்வீட்டில்கூட சுதந்திரமாக எதையும் செய்திட  அனுமதித்தல் கூடாது. - அ 4: சு147

ஆக, எந்தச்சூழலிலும் பெண்கள் சுதந்திரமாக இருத்தல் கூடாது என்று கூறிய மனு,

கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப் படுவதின் பொருள், திருமணத்திற்குபின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது என்றும் கூறுகிறார். - அ 11: சு 45

ஒருஆணைப் பெண்ணுடன் கட்டிப் போடுவ தன்று, மாறாக பெண்ணை ஆணுடன் கட்டிப் போட்டுவிட்டு, ஆணைச் சுதந்திரமாக உலவ விடுவதே மனுவின் நோக்கமென்று அண்ணல் அம்பேத்கர் மனுவைக் கட்டுடைக்கிறார்.

ஆனால், இதற்கு மாறாக ஆண்டாள் மிகச் சுதந்திரமாக இருக்கிறாள். தனது காம வேட்கையைத் துணிச்சலாக வெளிப்படுத்துகிறார். வளர்ப்புத் தந்தை தேடிய மணாளனை மணக்க மறுக்கிறாள். கன்னிகழியும் முன்னே பாலுறவு கொள்ளத் துடிக்கிறாள். கண்ணன் தன்னை வாயோடு வாய் வைத்து (டுயீை வடி டுயீை மளைள) முத்தமிடும் சுவையை ரசிக்கிறாள். இவற்றை யெல்லாம் கவிப்பேரரசு வைரமுத்து தன் தமிழறிவு கொண்டு கட்டுடைக் கிறார்.

தம்வீட்டுப் பெண்கள் உடல் தெரியும் வகையில் உடை அணிவதையும், காமம் பற்றி வெளிப் படையாகப் பேசுவதையும் அனுமதியாத ஆண்கள், பிறபெண்களின் உடலுறுப்புகளைக் கண்டு காம வேட்கை அடைகிறான். பிறபெண்கள் காமம்பற்றிப் பேசுவது கேட்டுக் கிளர்ச்சி அடைகிறார்கள். இதற்கு இக்கால சினிமாவே சாட்சி. இது வர்ணசாதி முறைக்கும் பொருந்தும்.

பார்ப்பனரல்லாத பெண்களின் குரலாக ஆண்டாளின் ஊடாக காமம் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. தான்விரும்பும் கடவுளான கண்ணனுடன் உடலுறவு கொள்வதைப்பற்றி ஆண்டாள் கனவு காண்பது திட்டமிடப்பட்டதா எனக் கேள்வி எழுப்புபவர்களுக்கு ஆண்டாள் எழுத்துக்களின் மூலமே பதிலுரைக்கிறார் கவிப்பேரரசு.

ஆண்டாளின் காமவேட்கை அவளோடு நின்றுவிடவில்லை.

“நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம், மலரிட்டு நாம்முடியோம், செய்யாதன செய்யோம்”

என்று மற்றபெண்களையும் உறவுக்கு அழைக் கிறாள். இதை இன்னும் வலுவாக, ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்பட்ட ‘திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும்’,

“நாச்சியார் திருமொழி காதல் உணர்ச்சியினால் (தன்னுணர்ச்சி) எழுதப்பட்டது எனவும்,  திருப்பாவையோ கண்ணனுடன் தான்பெற்ற இன்பத்தை மற்றவரும் (பொதுஉணர்ச்சி) பெறட்டும் என்ற கருத்தை மையமிட்டுள்ளதாக உள்ளது”  என்ற ஒப்பீட்டின் மூலம் நிறுவுகிறார்.

அவர்தம் கட்டுரையை நேரடிச் சொற்களால் பின்வருமாறு விளக்கலாம்.

பார்ப்பனரல்லாத பெண்களைப் பார்ப்பனர்களுக்குத் தாசிகளாக மாற்றுவதே நோக்கம். அதற்குப் பயன்பட்டவள்தான் ஆண்டாள்.  இறைவழிபாடு, இறைவனோடு காதல் மட்டுமே என்றால் நாச்சியார் திருமொழியோடு நின்றிருக்கும். யாகம், யக்ஞம், தவம், ஆகிய கடுநெறிகளை வேள்வியைக் கைவிட்டுவிட்டு, ‘வாத்யல்சம், காருண்யம், செளலப்பியம்’ ஆகிய மென்நெறிகளை அறிமுகப் படுத்தி, கீழ்வர்ணசாதி மக்களை வேத மதத்திற்குள் மீண்டும் உள்ளிழுக்கச் செய்யப்பட்ட உத்தியின் ஓர் வடிவமே ஆண்டாள். மதத்திற்குள் கொணர்ந்து விட்டால் போதாது, மதத்தின் செயலாளர்களுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பணிவிடை செய்ய வைக்க வேண்டும். பார்ப்பனர்களுக்குச் சேவை செய்ய வீட்டில் பார்ப்பனப் பெண்கள் இருக்கின்றனர். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கோவிலில் செலவழிக்கும், பணியிடத்தில் பணிவிடை செய்ய உருவாக்கப்பட்டவர்கள் “தேவதாசிகள்” என்ப தாகும்.  

பெரியாழ்வார் தனது கிருஷ்ண காமத்தைக் கவியுக்தியாக வெளிப்படுத்தக் கற்பனை செய்து கொண்ட கற்பனை மகளே ஆண்டாள் என்பது இராஜாஜி  கருத்து.

இராஜாஜியின் கருத்தோடு வைரமுத்தை ஒப்பிட்டு, கீழ்க்கண்ட முடிவிற்கு நம்மால் வர இயலுகிறது. பார்ப்பனர்களுக்குத் தாசியாகப் பார்ப்பனரல்லாத பெண்களைப் பயன்படுத்த “கடவுளுக்குச் சேவை செய்பவர்கள்” என்ற கட்டமைப்பு தேவைப் பட்டது. தேவதாசிகளை விளம்பரப்படுத்த ஆண்டாள் பயன்படுத்தப் பட்டாள். ஆண்டாளை விளம்பரப்படுத்த “திருப்பாவையை” ஆண்டாளின் பெயரிலேயே பார்ப்பனர்கள் எழுதிக் கொண்டனர் என்ற ஐயமும் வருகிறது.

எனவேதான்,

பார்ப்பனர்களுக்கு வைரமுத்துவின் கட்டுரையின் மீது கோபம் வருகிறது. பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் சொல்வதுண்டு. அந்த வகையில் வைரமுத்துவின் எண்ணற்ற படைப்புகளுக்குக் கிடைக்காத விளம்பரத்தை, “தமிழை ஆண்டாள்” கட்டுரைக்கு ஏற்படுத்தித் தந்த பார்ப்பனர்களுக்கு நன்றி. நம்காலத்து திராவிட ஆய்வாளரான வைரமுத்துவைப் பாராட்டுவோம். அவர்தம் ஆண்டாள் கருத்துக்களைத் தொடர்ந்து விவாதிப்போம்.

பல உண்மைகள் வெளிவரட்டும். அதற்குத்  “தமிழை  ஆண்டாள்” பயன்படட்டும்.

Pin It