பாரம்பரிய மீட்பு, பண்பாட்டு மீட்பு என்ற சொற்களைக் கேட்டாலேயே நமக்கு அச்சம் வந்துவிடுகிறது. அந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் விதமாகவே அவை தொடர்பான செயல்பாடுகளும் அமைந்து வருகின்றன. இதுவரைபெரும்பாலும் தமிழ்ப்பண்பாட்டு மீட்பு, தமிழ்ப்பாரம்பரிய மீட்பு என்ற சொற்களைத் தான் கேட்டிருப்போம். தற்போது புதிதாக பெளத்தப் பாரம்பரிய மீட்பு, பெளத்தப் பண்பாட்டு மீட்பு என்ற முழக்கங்கள் எழுகின்றன.
நமது காலத்தில், தோழர் அம்பேத்கர் அடையாளங்காட்டிய ‘நவயான புத்தம்’ மட்டுமே பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிராக எழுந்த பெளத்தப் புரட்சி. அந்த நவயானப் புத்தத்தின் பண்பாடுகளை நாம் வரவேற்கலாம். பொத்தாம் பொதுவாக பெளத்த மதம் - பெளத்தப் பண்பாடு என்பதில் நமக்கு உடன்பாடில்லை.
தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர் ஆகியோரின் பண்பாட்டுப் பார்வைகளுக்கு எதிராக - தீபாவளி, விஜயதசமி போன்ற இந்துப் பண்டிகைகளை பெளத்த விழாக்களாக முன்னெடுக்கும் போக்கு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் விளக்கங்கள் என்னவெனில்,
தீபாவளி - புத்த ஒளிவிழா
“...எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்து, அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர புத்த மடப்பள்ளிகள் மேற்கொண்ட முயற்சியே ‘தீபவதி’ திருநாள் ஆகும். தீபம் ஏற்றி, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டாடும் நாளாக இப்பண்டிகை இருந்ததாக அயோத்திதாசப் பண்டிதரின் நூலில் படிக்க நேர்ந்தது.”
“திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கங்களும் செய்யத் தவறிய விசயங்கள் இத்தகைய வாழ்க்கையை கொண்டாடும் பண்டிகைகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தராதது. கொள்கைகள் கோட்பாடுகளுடன் வாழ்வியலுக்கான கொண்டாட்டத்தை இணைத்திருந்தால் நாம் இன்னும் வலுவாக பெரிய ஜனநாயக சக்தியாக வளர்ந்திருக்க முடியும். விரைப்பாக கருப்பு சட்டையோடோ, நீல சட்டையோடோ சிவப்பு சட்டையோடோ சிரிக்க மறந்த மனநிலை பண்டிகைகள் போன்ற மனித வாழ்க்கையின் கொண்டாட்டங்களை புறம்தள்ளிவிட்டு சமூகநீதியை விரும்பும் மக்களுக்கு இறுகிய சூழலை உருவாக்கினால் அது மனித சமூகத்திற்கானது அல்ல.” என்று கூறுகின்றனர். இவை பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
புத்தருக்கும் முன்பே எள் நெய்
இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் எள் பயிரிடுவது, எள் பயன்பாடு, எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது எல்லாமே கி.மு. 3500 முதல் 3050 ஆம் ஆண்டுகளிலேயே இருந்திருக்கிறது என்று தாவரவியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். Economic Botany என்ற சர்வதேச அளவிலான அறிவியல் ஏட்டில் April 1986, Volume 40, Issue 2 இதழில் “Evidence for cultivation of sesame in the ancient world” என்ற தலைப்பில் Dorothea Bedigian, Jack R. Harlan ஆகிய இரண்டு ஆய்வாளர்கள் எழுதியுள்ள விரிவான ஆய்வுக் கட்டுரையில், சிந்துச்சமவெளிக் காலத்திலேயே மொகன் ஜ தாரோ, ஹரப்பா நாகரிகங்களில் எள், எள் நெய் பயன்பாடு இருந்ததை உறுதிசெய்கின்றனர்.
அந்த ஆய்வு மட்டுமல்ல, இலண்டனில் உள்ள UCL Institute of Archaeology, Centre for Applied Archaeology ï‹ Dorian Q Fuller என்ற அறிவியலாளரின் ஆய்வுக் கட்டுரைகளும் அவற்றை உறுதி செய்கின்றன. இன்னும் ஏராளமான ஆய்வுகள்அகில உலக அறிவியல் ஏடுகளில் வெளியாகி உள்ளன.
எள், எள் நெய் இவற்றின் பயன்பாடு தொடங்கிய காலம் கி.மு. 3000 ங்களில் என்கின்றன ஆய்வுகள். புத்தரின் வாழ்க்கையானது கி.மு 543 - கி.மு 483 வரை உள்ள காலம். அதாவது, கி.மு. 3000 த்திற்குப் பிறகு ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர் தான் புத்தர். அந்தத் தலைவரின் கொள்கைவழித் தோன்றல்கள் தான் பெளத்தர்கள். அந்த பெளத்தர்கள் தான் எள் நெய்யைக் கண்டுபிடித்தனர் என்று கூறுவது அறிவியல் அடிப்படையில் தவறு. முகநூலில் வந்த புத்தஒளி விழா பற்றிய அறிவிப்பிலேயே, எ.பி.நாகராசன் என்பவர் எள் பயிரிடுவது தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து மேற்கண்ட தகவலை மறுத்துள்ளார்.
பெளத்த விழா அல்ல; சமணர்களின் விழா
அடுத்து, தீபாவளி என்பது புத்தர்களின் விழா என்பதும் தவறான தகவல். அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய, ‘சமணமும் தமிழும்’ நூலில் இருந்து...
“தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை... அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது...இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.”
அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய, ‘தமிழர் நாகரிகமும், பண்பாடும்’ நூலில் இருந்து...
“சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.”
ஆக, தீபாவளி என்பது பெளத்தர்களின் விழா அல்ல; சமணர்களின் விழா. இரண்டு மதத்திற்கும் இடையே அவை உருவான காலத்திலேயே பெரும் வேறுபாடுகளும், மோதல்களும் ஏராளமாக நடந்துள்ளன. இரண்டு மதங்களும் ஒன்றல்ல. இப்படி சமணத்தின் விழாவை - இந்து மத விழாவாக மாறிய விழாவை வலிந்து பெளத்தர்களின் விழா என்று கொண்டாட முனைவது எதற்காக எனப் புரியவில்லை.
மகிசாசுரன் - நரகாசுரன் விழாக்கள்
பெளத்தம் உருவாகிய வட மாநிலங்களிலேயே - அசோகர் ஆண்ட நாடுகளிலேயே விஜய தசமிக்கும், துர்காபூஜைகளுக்கும் மாற்றாக இராவணன் விழா, மகிசாசுரன் விழா என்ற பெயரில் மாற்று விழாக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்து வேத மதம் நம் மீது திணித்துள்ள அனைத்துப் பண்பாடுகளையும் - பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் வழிபாட்டு முறைகளையும், விழாக்களையும் எதிர்த்து, மாற்று விழாக்களை முன்வைக்கின்றனர்.
இராவணன், மகிசாசுரன், நரகாசுரன் என்பவர்களும் கற்பனைகள் என்று தான் நாமும் பார்க்கிறோம். ஆனால், துர்காவுக்கு பூஜை என்றால் அதற்கு எதிராக மகிசாசுரனுக்கு வழிபாடு. நரகாசுரனைக் கொன்றதற்கு பார்ப்பனர்கள் விழா எடுக்கலாம் என்றால், கொல்லப்பட்ட நரகாசுரனுக்கு நாம் விழா எடுக்கலாம். இராவணனைக் கொல்வது பார்ப்பனப் பண்பாடு என்றால், இராமனைக் கொல்வது திராவிடர் பண்பாடு என்பவை போன்ற எதிர்வினைகள் தான் சரியான மாற்று விழாக்களாக இருக்க முடியும்.
அதே சமயம் இராவணன் விழா, மகிசாசுரன் விழா, நரகாசுரன் வீரவணக்க விழா, திராவிடர் விழா என்பவை போன்ற பெயர்களில் அதே தீபாவளி நாளில், நாமும் புத்தாடை உடுத்துவது, விருந்து நடத்துவது போன்ற விழா நடவடிக்கைகளைச் செய்தால் அவையும் சரியான மாற்றுப் பண்பாடாக இருக்கமுடியாது. அது பற்றி விளக்கமாக அறிய, தோழர் பெரியார் அறிமுகப்படுத்திய விழாக்களையும், நடத்திய விழாக்களையும் கவனிக்க வேண்டும்.
புத்தர் பிறந்தநாள் விழா
புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர்கள் விஜயதசமியையும், தீபாவளியையும் மீட்க வேண்டும் என்று இன்று பேசி வருகிறார்கள். தோழர்களே, புத்த மதத்தில் இணையாத தோழர் பெரியார், புத்தர் விழாவை எப்படிக் கொண்டாடுகிறார் என்று பாருங்கள்.
“புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள் - சூத்திரர்களே! பஞ்சமர்களே! - (தோழர் பெரியார், 09.05.1953, விடுதலை)
என்று புத்தர் விழாவை விநாயக் சிலை உடைப்புப் போராட்டமாகக் கொண்டாட அழைப்பு விடுக்கிறார். அதை விளக்கி ஏராளமான பொதுக்கூட்டங்களையும் நடத்துகிறார். அறிவித்தபடி 1953 ஆம் ஆண்டு புத்தர் பிறந்தநாளை விநாயகர் சிலை உடைப்புப் போராட்டமாக எழுச்சியுடன் நடத்தியும் காட்டினார்.
“மே மாதம் 27 –ம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். ‘புத்தர் நாள்’ தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகி கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27 –ம் தேதியன்று உடைத்தோம்.
இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500 க்கு மேற்பட்ட ஊர்களில் 1000 –க் கணக்கிலே, ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக்கப்பட்டது! தமிழ்நாட்டின் எல்லா பாகங்களிலும், மூலைமுடுக்குகளிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.
(05.07.1953 அன்று திருச்சியில் நடந்த ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ கூட்டத்தில் பெரியார் உரை 11.07.1953 விடுதலை)
புத்த மதத்தில் இணையாதவரே, புத்தரின் பிறந்தநாள் விழாவை புரட்சிகரமாகக் கொண்டாடி இருக்கிறார் என்றால், புத்தத்தை ஏற்றவர்கள் அதைவிட ஒரு அடியாவது முன்னோக்கி நகர வேண்டுமே அல்லாமல், இந்துப் பண்டிகைகளுக்கு, புத்தச்சாயம் பூசிக்கொண்டிருப்பது புத்தருக்கே எதிரானது அல்லவா?
பெரியார் பார்வையில் விழாக்கள்
திராவிடர் இயக்கங்கள் விழாக்களுக்கு எதிரானவை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவை. செய்யத் தவறியவை என்றெல்லாம் கூறப்படும் கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். திராவிடர் இயக்கங்களின் தலைவர் தோழர் பெரியார் விழாக்களைப் பற்றிக் கூறுவதைப் படியுங்கள்.
“மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.” - பெரியார் - விடுதலை - 30.01.1959
பொங்கல்விழாவை தமிழர் விழா எனக் கொண்டாடுகிறோம். இந்தப் பொங்கல் விழாவை தமிழ்நாட்டில் வெகுஜன மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றது திராவிடர் இயக்கம். இந்து மதப் பண்பாட்டிற்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியாக இந்த விழாவை பரப்பியது திராவிடர் இயக்கம். அதே சமயம் இந்த விழாவை பண்பாட்டு ஆயுதமாகக் கையிலெடுத்த பெரியாரே பொங்கல்தான் மிகச்சரியான தமிழர் விழா என்ற நோக்கில் இதைக் கையிலெடுக்கவில்லை. அவரே பொங்கல் குறித்து கூறிய விமர்சனம் என்னவென்றால்,
“அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப் படியாக இன்னும் பல உள. இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு - ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
...இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். - பெரியார் - விடுதலை - 30.01.1959
மே நாள் விழா
பொங்கல் விழா மீது பெரியாருக்கு விமர்சனம் இருந்தாலும், விழா என்று ஒன்று வேண்டுமே என்று பொங்கல் கொண்டாடச் சொல்கிறார். ஆனால், எந்த விமர்சனமும் இல்லாமல் மற்றொரு முக்கிய விழாவைக் கொண்டாட அறைகூவல் விடுத்தார். அது மே நாள் விழா.
“மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில் நமது பண்டிகைகளில் அனேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, $ராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.
பெண்களையும் வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம் பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப் படுவதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்மந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.”
- 01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரை. குடி அரசு -சொற்பொழிவு -12.05.1935
அறிவித்தது மட்டுமல்ல; மே தின விழாவைத் தானே தலைமை ஏற்றும் நடத்தியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் தஞ்சை மாவட்ட சுயமரியாதை 5 வது மாநாடு 21.03.1936 இல் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தோழர் பெரியார், அரசின் அடக்குமுறைகள் காரணமாகப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பைக் கொடுத்த 30 நாட்களுக்குள் 19.04.1936 குடி அரசு ஏட்டில், “மே தினத்தைக் கொண்டாடுங்கள்” என்று அறிக்கை வெளியிட்டார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளையும் மீறி மே தினக் கொண்டாட்டங்களை நடத்தினார்.
காதலர் நாள் விழா
இவ்வாறு அரசியல் தளங்களில் கடுமையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த சூழலிலும் கூட பண்பாட்டுத்தளத்தில் மாற்று விழாக்களை அறிமுகப்படுத்தி நடத்திக்காட்டினார். பொங்கலோ, மே தினமோ இரண்டும் பெரியார் காலத்தில் கொண்டாடப்பட்டிருக்கலாம். இன்றைய திராவிட இயக்கங்கள் அப்படி இல்லை என்றும் குற்றம் சுமத்தலாம். அதுவும் சரியான பார்வை அல்ல. பெரியார் காலத்தில் இல்லாத ‘காதலர் நாள் விழா’ இக்காலத் திராவிடர் இயக்கங்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மக்கள் கொண்டாடும் விழாக்களில் தமிழர்களுக்கு ஓரளவு ஒத்துப்போதும் என்ற அடிப்படையில் அன்று பொங்கல் முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பொங்கல் விழா கூட இன்று இந்துக்களின் பண்டிகையாக மாறிவிட்டது. இந்துப்பண்டிகைகளை மீட்பது என்று தொடங்கினால் அது மீண்டும் இந்து மதத்தால் செரிக்கப்பட்டு விடும் என்பதற்கு பொங்கல் ஒரு சான்றாக அமைந்து விட்டது.
இப்போது தீபாவளியையும், விஜயதசமியையும் பெளத்தத்தின் பெயரால் மீட்க முனைந்தால், மீண்டும் முட்டுச்சந்திற்கே வந்து நிற்போம். அப்படியனால் மாற்று விழா வேண்டாமா? என்றால், அதற்குத்தான் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் காதலர் நாளும், மே தினமும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில், இந்துத்துவம், தமிழ்த்தேசியம், பொதுவுடைமை, சிறுபான்மையினர் நலன் எனப் பல்வேறு தத்துவத் தளங்களில் இயங்கும் அனைத்து முற்போக்குப் போராளிகளுக்கும் ‘காதலர்நாள்’ என்றால் கசப்பாக இருக்கிறது. மேற்கண்ட அனைவரும் ஒரே குரலில் காதலர் நாளை எதிர்க்கின்றனர். காதலர் நாள் என்பது நுகர்வு வெறியை வளர்க்கிறது - நம்நாட்டின் சுதேசிப் பண்டிகை அல்ல; கிறித்தவப் பண்டிகை - இந்த விழா சாதி ஒழிப்புக்குப் பயன்படாது என்றெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போடுகிறார்கள் முற்போக்குவாதிகள்.
இன்று பெரும்பான்மை இளைஞர்களால் கொண்டாடப்படும் ‘காதலர் நாளை’ ஒரு மாபெரும் மக்கள் விழாவாக மாற்றுவதில் நமக்கென்ன தடை? அனைத்து இந்துமத வெறி அமைப்புகளும், சில இஸ்லாமிய அமைப்புகளும் காதலர் நாளில் இளைஞர்கள் மீது கடும் எதிர்ப்புகளை ஏவிவருகின்றனர். இந்தச்சூழலில், திராவிடர் இயக்கங்களும், தலித் அமைப்புகளும், பொதுவுடைமை இயக்கங்களும் - காதலர் நாள் விழாவையும், மே நாள் விழாவையும் மாபெரும் மக்கள் விழாக்களாக முன்னெடுக்க வேண்டியது அவசியம். ஜாதி மறுப்புப் பண்பாட்டுப் புரட்சிக்காக உழைத்த தலைவர்களின் பிறந்த நாட்களை கட்சி விழாக்கள் என்ற நிலையிலிருந்து, மக்கள் விழாக்களாக மாற்றிக் கொண்டாட வேண்டியது அவசியம்.
இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, புத்தர், அசோகர் பெயரால், இந்து மத விழாக்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது - புது வடிவம் கொடுப்பது - புத்தச்சாயம் பூசுவது போன்றவை அந்தத் தலைவர்களின் நோக்கங்களுக்கு எதிராகவே அமையும். பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கங்களை நிலை நிறுத்தவே பயன்படும்.