நாம் எதிர்பார்த்த வண்ணமே திருவாளர் திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்களும் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்த தன் தொடர்பை விலக்கிக் கொண்டார். “இது முடிந்த மொழியன்றி மீண்டு முன்னு மொழி யன்று” என்னும் சொற்களால் இனி மீண்டும் புனராலோசனை செய்வதில்லை எனவும் கூறிவிட்டார்.

இவரது இராஜினாமாவைப் பிரிதொரு பக்கம் பிரசுரித்துள்ளோம். டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரவர்களும் திரு. முதலியாரவர்கட்கு முன்னரே விலகி விட்டார். அவரும் இனி புனராலோசனை செய்ய முடியாது என்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டமும் பொதுக்கூட்டமும் நிகழ்ந்த 29-ந் தேதியில் தலைவருக்குக் கிடைக்கும்படியும் அதைக் கூட்டத்தில் படித்துக் காட்டுமாறு கடிதம் அனுப்பியிருந்தும், நமது பார்ப்பனத் “தலைவர்” அதைப் படித்துக் காட்டாமலும் விஷயத்தையே வெளியிடாமலும் மூடிவைத்துவிட்டு புனராலோசனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக திருட்டுத் தீர்மானம் செய்து ஏமாற்றினார்.

திரு. முதலியார், திரு. நாயுடுகார் ஆகிய இருவரும் காங்கிரஸ் காரியக் கமிட்டியினின்று விலகியே விட்டார்கள். இதன் தத்துவம் என்ன? இது போழ்து இவர்களுக்கு தேசபக்தி இல்லாது போயிற்றா? சுயநலம் முளைத்து விட்டதா? அல்லது சர்க்கார் தயவை நாடியா? அன்றி ஜஸ்டிஸ் கட்சியில் சேரவா? இவை ஒன்றிற்கும் அல்லவே அல்ல. மற்று எதன் பொருட்டு விலகிக் கொண்டார்கள்? காங்கிரஸ் மகாசபையில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சியை அறிந்து, தாங்கள் தற்கால காங்கிரசில் அங்கம் வகித்திருப்பதால் நாட்டிற்கு எவ்வித நன்மையும் செய்ய இயலாதென்பதை உணர்ந்து, தங்களை யே கருவியாகப் பிரயோகித்து நமது சமூகத்திற்கு - (பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு) பார்ப்பனர்கள் ஆபத்து விளைவிக்கிறார் கள் என்பதைக் கண்ணாரக் கண்டுகொண்டதாலுமேயல்லாது வேறல்ல. ஆனது பற்றியே தைரியமாய் விலகி விட்டார்கள். நமது பார்ப்பனர் இனி இவர்கள் மீது வசை புராணம் பாடி இவர்களுக்குப் புன்மொழி மகுடஞ் சூட்ட பார்ப்பனரல்லாதாரிலேயே சில பாவலர், நாவலர் முதலியோரைத் தலைவராக்குவார்கள். நிற்க,

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இனியும் நான்கு பார்ப்பனரல்லாத கனவான்கள் அங்கம் வகித்து வருகிறார்கள். அவர்கள் திருவாளர்களான ஈ.வெ.இராமசாமி நாயக்கர், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், மருதவனம் பிள்ளை, ஹமீத்கான் ஆகியோரேயாகும்.

இந்நால்வருள் திரு. நாயக்கரைப் பற்றி கவலையுற வேண்டியதேயில்லை. கூடிய விரைவில் பார்ப்பனர்களே அவரை விலக்கிவிடப் போகிறார்கள். திரு. நாயக்கர் காங்கிரசில் அங்கம் வகித்திருப்பது பார்ப்பனர்களுக்கு பேரிடராய் இருப்பதாகக் கருதுகிறார்களேயன்றி அவர் இருக்க வேண்டுமென்கிற ஆசை பார்ப்பனர்களுக்கு ஒரு சிறிதும் இல்லை. திரு. ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைப் பற்றி சிறிது கவனிக்க வேண்டியதிருக்கிறது. “இப்பொல்லாப் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார் சமூகத்தையும் அவர்களது இயக்கத்தையும், ஆதிக்கத்தையும் அழிப்பதற்காகவே திரு. ஷண்முகம் செட்டியாரை உபயோகித்து வருகிறார்கள். திரு.செட்டியாரும் தனக்கு இந்தியா சட்டசபையில் ஸ்தானம் பெறவேண்டி தமது சமூகத்தைப் பார்ப்பனருக்கு விற்று பார்ப்பனர் பின் திரிகிறார்” என்று உலகினர் சொல் வதற்கு முன்பே விலகிக் கொள்ளுவார் என்று நம்புகிறோம். ஆனால் திரு. முதலியாரும் டாக்டர் நாயுடுகாரும் விலகிக் கொண்டதால் இனி நமது பார்ப்பன வர்க்கத்திற்கு திரு. ஷண்முகம் செட்டியார் “லோக குருவாக” விளங்கப் போகிறார். அவருக்கு இனி சின்னாட்கள் வரை ‘ஸ்ரீஜத்’ ‘ஸ்ரீலஸ்ரீ’ ‘பிரம்மஸ்ரீ’ முதலிய பட்டங்கள் வழங்கப் பெறும்; அநேக பார்ப்பனக் குழந்தைகட்கு செட்டியாரது திருப்பெயர் சூட்டப்பெறும்; பார்ப்பனர் போகும் கூட்டங்களிலும் நிறுவும் கூட்டங்களிலும் செட்டியாரவர்கள் பெயர் பெரிய பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பெறும்; பிரசங்க மேடைகளி லெல்லாம் செட்டியாரது பெயரின் நாதம் தொனிக்கப் பெறும். பார்ப்பனப் பத்திரிகைகளெல்லாம் செட்டியார்மயமாகவே இருக்கும். இனி ஆறு மாத காலத்திற்கு - அவ்வளவேது? - நான்கு மாத காலத்திற்கு, தெளிவாகக் கூறுமிடத்து சட்டசபைத் தேர்தல் முடிவுறும் வரை நமது செட்டியாருக்கு எங்கும் வரவேற்பும் வண்டியிழுப்பும் பூமாலைகளும் மாப்பிள்ளைக் கோல மும் பற பறக்கும். நமது செட்டியார் கட்புலனுக்கு, நம்மை நோக்குங்கால் கண்ணகி போன்றும், பார்ப்பனரை நோக்குங்கால் மாதவி போன்றும் புலனாகும். சுலபத்தில் ‘மாதவியை’ விட்டு விலக மனங் கொள்ளார். இனி அவரது யோகமே யோகம்! போனது போகட்டும். திரு. முதலியாரும், டாக்டர் நாயுடுகாரும் விலகினதினாலாவது நமது செட்டியாருக்கு இத்த கைய ராஜானு ராஜபோகம் வருகிறதே; நாம் ஆசை தீரப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கலாம்! எவ்வா றிருப்பினும் இறுதியில் முதலியார் நாயுடு போன்றே செட்டியாரும் பார்ப்பனரை விட்டு விலகியே தீருவார். ஏனெனில் திருவாளர்கள் முதலியார், நாயுடு, நாயக்கர், சக்கரை, ஆரியா, தண்டபாணி, இராமநாதன் ஆகியோர் கட்கு பார்ப்பனர்கள் அளந்த வள்ளம் அட்டத்தில் வைத்திருக்கிறார் களேயன்றி உடைத்தொழித்து விட்டாரில்லை. ஆகவே அவரது மருள் மயக்கம் தெளியும் வரை காத்திருக்க வேண்டியதே.

திரு. மருதவனம் பிள்ளை அவர்களும் மிகவும் நல்லவர். ஆனால் அவர் சுலபத்தில் விலகுவார் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும். ஏனெனில், அவர் தானும் ஞானஸ்நானம் பெற்று பார்ப்பனராக மாற்ற மடைந்து விட்டதாக உள்ளூற நினைத்துக் கொண்டிருக்கிறார். 1923-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போழ்து திரு. மருதவனம் பிள்ளையவர்களின் பொருட் செலவாலும் பிரசாரத்தாலும் திரு எ. ரெங்கசாமி ஐயங்கார், பந்துலு ஐயர் ஆகிய இரு பார்ப்பனர்கள் சட்டசபையில் அங்கம் பெற்றிருப்பினும் திரு.பிள்ளைக்கு சுமார் 50,000 ரூபாய் வரை செலவழிந்திருப்பினும், தான் சட்டசபை அங்கம் பெற்றது பார்ப்பனர்தம் கருணையாலும் தயவின் பெருக்காலும் என்றே திரு. பிள்ளை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இனி, அடுத்த தேர்தலில் தான் சட்டசபை அங்கம் அடைதலும் அக்கூட்டத்தார் தயவிருந்தால்தான் ஆகும் என்பதாகவே திரு.பிள்ளை நினைக்கிறார். இம்மட்டோ, பார்ப்பனர் விரோதம் நேர்ந்துவிடின் பெரும் சாப மாய் முடியுமென்றும் வாழவே ஏலாதென்றும் முடிவான கருத்துடையவர் நமது பிள்ளையவர்கள். மேலும் திரு. எஸ்.சீனிவாசய்யங்காரின் தயவால் வடபாதி மங்கலம் எஸ்டேட்டுக்கு திரு.பிள்ளை ரிசிவராகயிருக்கிறார் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர். திரு. எ. ரெங்கசாமி ஐயங்கார் தயவால் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் நாள்தோறும் திகழ்பவர், இன்னும் வேறு பல வழிகளிலும் பார்ப்பனர்களுடன் இரண்டறக் கலந்து கொண்டிருக்கிறார். ஆகவே ‘‘பிள்ளைவாள் பார்ப்பனரை விட்டு விலகுவார்’’ என்று எளிதில் எதிர்பார்க்க வல்லதாகா. திருவாளர்கள் முதலியார், நாயுடுகார், நாயக்கர், சக்கரை, ஆரியா முதலிய இவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும் கபட வேஷ நாடகத்தையும் அறிய இத்துணை காலமும் இத்துணை மரியாதை களும் வேண்டியிருந்ததெனில் அந்தோ! பாவம்!! சின்னாட்களுக்கு முன்பாக உலக வாழ்க்கையிலிறங்கிய நமது திரு. பிள்ளையவர்களுக்கு எத்துணை காலம் கடக்கவேண்டும்? எனவே நாம் இதை எளிதில் எதிர்பார்த்தல் எங்கனம் சாலும்.

ஜனாப் ஹமீத்கான் சாகிப் விஷயமோ........... அது பிறந்தகத்திலிருந்தாலும் ஒன்றுதான் புக்ககத்திலிருந்தாலும் ஒன்றுதான். எங்கிருந்தாலும் அப்பாத்திரம் தண்ணீர் மொள்ளுவதற்குப் பயன்படாது. அல்லது அப்பாத் திரம் விலகி வந்துவிட்டாலும் அதைப் போன்ற பாத்திரம் நமது பார்ப்பனர்களுக்கு ஆயிரக்கணக்காக அகப்படும். ஆகவே அதைப் பற்றி எவரும் கவலை கொள்ளார். எனவே இனி பார்ப்பனரல்லாதார் மேற்கொள்ள வேண் டிய கடமை யாது? தாங்கள் ராஜினாமா செய்துவிட்டதாலேயே இனி திரு. முதலியாரும் டாக்டர் நாயுடுகாரும் வாளாவிருக்கப் போவதில்லை என்றும் எழுதியிருக்கிறார்கள் . தங்களுடைய மனதிற்குச் சரியென்று தோன்றும் வண்ணம் வெளியில் பிரசாரம் செய்வதற்கு அவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டி யில் அங்கம் வகித்திருப்பது ஒவ்வாத காரியமென்கிற உணர்வினாலேயே விலகிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். இதனின்று அவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கப் போகிறார்கள் என்று தெளிவாகிறது. அத்தீவிர பிரசாரம் யாதென நோக்குழி 9.7.26 -ல் வெளிப் போந்த தமது ‘நவசக்தி’ பாலின் சிலம்பொலித் தலைப்பில் ‘இந்தியாவின் தலை எழுத்து’ என்னும் பொருள் பற்றிய கட்டுரையில் திரு. முதலியார் தமது உள்ளக்கிடக்கையை உணர்த்து கிறார். அஃதாவது,

“இயற்கைக்கு மாறுபட்ட பல கொடுமைகளை மக்கள் வாழ்வில் புகுத்தினமையால் மக்கள் அன்பு கட்டுக் குலையலாயிற்று - பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்ததும் - மக்கள் உடல் தாங்கியுள்ள சிலரைத் தீண்டாதாரென ஒதுக்கியதும் - பெண் மக்களைக் கல்வி பெறாத வழியில் அடங்கி வைத்திருப் பதும் - கோயில்களிலும் மக்கட்கு உரிமை படிப்படியாக அளந்து வழங்கியிருப்பதும் - இவைகள் குற்றமுடையன என்று சொன்ன அறவோர்களைக் கொன்றதும்-ஆகிய கருமங்கள் திரண்டு உருண்டு நாட்டை வருத்துகின்றன-இதுவே இந்தியாவின் தலை எழுத்து - இத்தலை எழுத்தைத் துடைக்க வேண்டுமானால் நாட்டார் என் செயல் வேண்டும்? முதலாவது நாட்டார் தம் பாலுள்ள குறைகளைக் களைய வேண்டும், நாட்டில் பலதிறக் குறைகளை வைத்துக் கொண்டு வெறும் அரசியல் கிளர்ச்சி செய்வதனால் நாட்டிற்கு இடுக்கண் பல நேருகின்றன- இப்போதைய அரசியல் கிளர்ச்சியில் மனிதனை விலங்காக்கும் பேச்சும் செயலும் மலிந்து காணக் கிடக்கின்றன - தற்காலக் கல்வியுடையார் என்று சொல்லப்படுவோர் சாதி வேற்றுமை களையும் கிளப்பி விடுவதில் கண்ணுங்கருத்துமாயிருக்கிறார். இந் நிலையில் அரசியல் கிளர்ச்சி வழி நண்ணியும், அரசியல் கட்சி வழி நின்றும் உழைப்பதால் நாட்டுக்கு உண்மை நலன் விளையுமென்று சொல்வதற் கிடமில்லை. நம் நாட்டில் பிராமணர் பிராமணரல்லாதார் பகைமை நிலை நண்ணியிருக்கிறது என்பதை மறுப்பதும் மறைப்பதும் அறியாமை யாகும். ஆகவே, இப்பொழுது நம் நாட்டுக்குரிய பணி யாது? வெறும் அரசியல் கிளர்ச்சி பணியன்று. நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளைப் போக்கவும் தற்போதுள்ள சில புதிய குறைபாடுக ளைத் தொலைக்கவும் வல்ல ஒரு பணியில் அறிஞர்கள் தலைப்படல் வேண்டும். உரிமையில்லா நாட்டில் அரசியல் கட்சிகள் வளர்வதும், அவைகளின் வழி உழல்வதும், நாட்டைக் குழியில் வீழ்த்துவதாக முடியும்.

என்று உரைக்கிறார். இவ்வுரைகளை நாம் பொன்னே போல் போற்றுகிறோம். நமது ‘குடி அரசு’ வின் கொள்கைகளையும் அது ஆரம்ப காலந் தொட்டு இற்றைவரைத் தாங்கி வந்த யாவையும் பொறுக்கித் தரித்துப் புடைத்துப் பார்த்தால் திரு. முதலியார் மேற்கூறியுள்ள கருத்துக்கள் புலனா குமேயன்றி பிறிதொன்றும் புலனாகா.

உண்மையில் நமது முதலியார் இக்கொள்கைகளோடு செய்யும் எவ் விதப் பணிக்கும் நாம் தொண்டனாயிருக்க உறுதி கூறுகிறோம். டாக்டர் நாயுடுகாருக்கு இக்கொள்கைகளின் முறையில் இரண்டோரிடத்தில் மாறுபா டாய்த் தோன்றினும் இவற்றுள்ளிருக்கும் சத்து நிரம்பிய தத்துவத்தில் எத்த கைய மாற்றமும் இருக்காதென்றே சொல்லுவோம். தமிழ்நாட்டு மக்களில் பார்ப்பனரல்லாதாரில் 1000-க்கு 999 மக்கள் இக் கொள்கை உடையவர்களாக வேயிருக்கின்றனர். ஜஸ்டிஸ் கட்சியாரது கொள்கையும் இதுவென்றே சொல்கி றார்கள். இவ்வாறாக, நம்முடைய அபிப்பிராய பேத மென்பது மாய்கை கெழு மிய மனக்கசப்பே அல்லாமல் வேறல்ல. ஆகலான் விரைவில் பார்ப்பன ரல்லாதார் அனைவரும் ஒன்றுபட்டு ஓர் மகாநாடு கூட்டி தங்களுக்குள்ளிருக் கும் மனக்கசப்பையும் மாய்கையையும் அகற்றி ஒன்றுகூடி மேற்கண்ட கொள்கையுடையதான ஆக்கல் திட்டத்தை கோலி அஃதினை நிறைவேற்ற உழைப்பது அறிவுடைய மக்களின் செயலாகும். ஆகவே இற்றைவரை நாம் முறையீடிட்டு வந்த வண்ணம் விரைவில் தமிழ்மக்கள் ஒருங்கு சேர்ந்து ஓர் முடிவு காண விழைகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 11.07.1926)

Pin It