சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக்கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிரசின் பெயரால் ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேக்ஷகர்களைப் பற்றி அப்போதைக்கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண்டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பெயரைத் தெரியும்படியாகச் செய்து கடைசியில் ஒவ்வொரு ஜில்லாவிற்கும் ஒவ்வொரு பார்ப்பனர் பெயரைப் போட்டுவிட்டார்கள்” என்று எழுதியிருந்தோம். அது இப்போது நிஜமாகவே போய் விட்டது.

திருநெல்வேலி ஜில்லாவிற்கு ஒரு பார்ப்பனர் பெயரை நுழைத்தார்கள். அது ஸ்ரீமான் சாது கணபதி பந்துலுவின் பெயரேயாகும். மதுரை ஜில்லாவிற்கு இப்போது இரண்டு பார்ப்பனர்களை நிறுத்தத் தீர்மானித்து விட்டார்கள். அதாவது, ஸ்ரீமான் முத்துராமலிங்கய்யரை ஒரு ஸ்தானத்திற்கு. மற்றொரு ஸ்தானத்திற்கு இப்பொழுதுதான் மெள்ள வேறொரு பார்ப்பனர் தலையை நீட்டப்படுகிறது. அதாவது, ஸ்ரீ கே. ஆர். வெங்கட்டராமய்யரேயாகும். திருச்சி ஜில்லாவிற்கும் ஒரு பார்ப்பனர் பெயர் நுழைந்து விட்டது. இன்னும் மற்றொரு ஆசாமியின் பெயரும் நுழையும் போலிருக்கிறது. சேலம் ஜில்லாவிற்கு இன்னும் ஒரு ஸ்தானம் பாக்கி இருக்கிறது. கடைசி காலத்தில் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பெயர் நுழையப் போகிறது. கடிதப் போக்குவரவுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. தஞ்சை ஜில்லா விற்குக் காலியாக வைத்திருந்த ஸ்தானத்திற்கு நாம் முன் எழுதியபடியே, ஸ்ரீமான் ராவ்பகதூர் கே.எஸ்.வெங்கட்டராமய்யர் பெயர் போட்டாகி விட்டது. ஆனால் அங்கு இன்னும் இரண்டு பார்ப்பனர் சண்டையிட்டுக் கொண்டிருக் கிறார்கள். அதாவது, ஸ்ரீமான்கள் என்.கிருஷ்ணசாமி ஐயங்கார், பந்துலு வெங்கட்டராமய்யர் ஆகிய இருவருமேயாகும்.

ஸ்ரீமான் பந்துலு வெங்கட்டராமய்யர் காங்கிரசுக்கு எவ்வளவோ உழைத்தவராயிருந்தும் அவரை வேண்டுமென்றே தள்ளிவிட்டு, ஒரு பட்டதாரியாகவே பார்த்து நியமித்திருக்கிறார்களாம். ஏனெனில் பந்துலு ஐயர் மறுபடியும் ஒத்துழையாமையைக் கொண்டுவந்து விடுவாரோ என்கிற பயந்தானாம். ஸ்ரீ கே. எஸ். வெங்கட்டராமய்யர் பட்டம் விடப்போகிறார் என்று சமாதானமும் சொல்லுகிறார்கள். பட்டத்தை விட்டுவிடச் சொன்ன காலத்தில் விடவில்லை. அதற்கு மொத்தத்திலேயே யோக்கியதைக் குறைந்த பிறகும் ஸ்ரீமான் முதலியார் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொள்வேன் என்று மிரட்டிய பிறகும் பட்டம் விடுகிறார்களாம். சீக்கிரத்தில் ஸ்ரீமான் முத்தையா முதலியார் பெயரும் அடிக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்ரீமான் கிருஷ்ணசாமி ஐயங்கார் பெயர் எழுதப்படும் என்று ஒரு குருவி சொல்லுகிறது. எப்படியாவது ஸ்ரீமான் மருதவானம் பிள்ளை அவர்களின் பிரசாரச் செலவில் இரண்டு மூன்று பார்ப்பனர் சட்டசபைக்குப் போகப் போகிறார்கள். ஸ்ரீமான் மருதவானம் பிள்ளை அவர்களின் பெரியோர்கள் எப்படி சம்பாதித்தார்களோ தெரிய வில்லை, இவ்வித தர்ம கைங்கரியத்திற்குச் செலவாகிறது. இன்னமும் மற்ற ஜில்லாக்களிலும் இதுபோலவே ஒவ்வொரு பார்ப்பனர் பெயரை நுழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காஞ்சீபுரம் மகாநாடு நடந்த சமயத்தில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்குத் தலைவர் பட்டம் சூட்டுவதில் ஸ்ரீமான்கள் நாயுடுகாரும் முதலியார்வாளும் போட்டி போட்டபோது சிலர் பார்ப்பனரே கூடாது என்றும், அதிலும் நமது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கூடவே கூடாது என்றும் ஆக்ஷபித்த காலத்தில் “என்னை நம்புங்கள், நான் எல்லாவற்றையும் சரிப்படுத்தி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஜனத் தொகைக்குத் தக்கபடியே ஆள்களை நிறுத்துவதாக உறுதி கொடுக்கிறேன்” என்றும் சொல்லி உறுதி கொடுத்து, பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றி, ஐயங்காருக்குப் பட்டங்கட்டிய ‘வசிஷ்ட முனிவர்கள்’ இன்று, ஐயங்கார் ‘போடு குட்டிக் கரணம்’ என்றால் “சுவாமி எண்ணிக் கொள்ளுங்கள் இதோ போடுகிறேன்” என்கிறார்கள். நாள் செல்லச் செல்ல பார்ப்பனர்களின் பெயர்கள்தான் சட்டசபைகளுக்கு அடிபடுகிறதே தவிர ‘வசிஷ்டர்களின்’ வாக்கு நிறைவேறுவதாகக் காணவில்லை. ஆதலால் சுயராஜ்யக் கட்சி பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்டது யென்பதற்கு இனியும் ஏதாவது ஆதாரம் வேண்டுமா?

(குடி அரசு - கட்டுரை - 11.07.1926)

Pin It