நீதிபதிகள் தேர்வுக்கு ஆணையம்

12.11.2006 அன்று திருச்சியில் ‘பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ‘சம்பூகன் சமூகநீதிப் பயண’ நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) அ) மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இல்லாமல் இருந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை, முழுமையாக, அடுத்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) 27 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றவும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படுகிற இடங்களுக்கு இணையான இடங்களை, அக்கல்வி நிறுவனங்களில் பெரும் செலவில் கூட்டிக் கொள்ளவுமான, சூழ்ச்சி நிறைந்த பிரிவுகளைக் கொண்ட 76/2006 எண்ணிட்ட நாடாளுமன்ற சட்ட முன்வரைவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இ) மேற்குறிப்பிட்டவாறான, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கும், சுயமரியாதைக்கும் எதிரான சட்டமுன் வரைவை கொண்டுவர பரிந்துரைத்துள்ள வீரப்ப மொய்லி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை முழுதாக புறக்கணிக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

ஈ) இதுவரை மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிக்கும், மத்திய அமைச்சரவையையும் முடிவு செய்து கொண்ட நிலையிலும், அமைச்சரவையிலும், வெளியிலும் இருக்கிற மிகச் சில ஆதிக்க சக்திகளை திருப்திபடுத்துவதற்காக நாட்டில் ஏறத்தாழ 60 சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புறந்தள்ளுவதாகவும், உரிமைகளை மறுப்பதாகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 76/2006 எண்ணிட்ட சட்டமுன்வரைவு, வீரப்ப மொய்லி குழு அறிக்கை ஆகியவற்றின் மீது, இந்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக பெரியார் திராவிடர் கழகம்/மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை கட்சி ஆகிய அமைப்புகள் எதிர்வரும் 22.11.2006 அன்று தமிழ்நாட்டில் நிகழ்த்தவுள்ள ‘வீரப்ப மொய்லி அறிக்கை எரிப்புக் கிளர்ச்சியில்’ அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களும், ஜனநாயக, மனித உரிமை சக்திகளும் கலந்து கொண்டும், ஆதரவு காட்டியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

பெண்களுக்கு...

2) அ) மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு அவர்களது விகிதாச்சாரத்துக்கும் குறைவாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்தை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ஆ) பல்வேறு சட்ட முன்வரைவுகளை கடும் எதிர்ப்புகளுக்கிடையே அறிமுகப்படுத்தி நிறைவேற்றும் மத்திய அரசு, இதில் மட்டும் கருத்தொற்றுமையைக் காரணம் காட்டி காலந்தாழ்த்துவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

இ) நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு மட்டுமே பேசப்படுகிற மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் அறிமுக நிலையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் விரிவாக்கி அறிமுகப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3) அ) மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது.

ஆ) இடஒதுக்கீட்டுக் கொள்கை சரியாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க தண்டிக்கும் அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை நிறுவுமாறும், முறையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளைத் தண்டிக்க வகை செய்யும் சட்டங்களை இயற்றுமாறும் மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இ) அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய பிரிவினருக்கு என செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் முன்பு பிற்படுத்தப்பட்டோருக்கும், தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கும், அரசியல் சட்ட வரையறைகளுக்கு முரணாக உச்சநீதிமன்றத்தால் திணிக்கப்பட்டுள்ள பொருளாதார வரம்பினை நீக்க உரிய சட்டத் திருத்தத்தை காலந்தாழ்த்தாமல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

4) அ) 1931-க்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதிவாரியான புள்ளி விவரங்கள் எடுக்கப்படாததால், அரசின் பல்வேறு துறைகள் மேற்கொள்ளும் அறிவியல்பூர்வமற்ற மாதிரி கணக்கெடுப்புகளில் மாறுபட்ட விவரங்கள் வெளியாகின்றன. இது தேவையற்ற குழப்பங்களையும், இடஒதுக்கீட்டு அமுலாக்கத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. சாதிவாரியான விவரக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முதலாவது பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு பரிந்துரைக் குழுவான காகாகலேல்கர் குழுவும் 1955லேயே பரிந்துரைத்திருந்தது. எனவே, 2011 ஆம் ஆண்டில் நடத்தவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி புள்ளி விவரங்களும் கணக்கெடுக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) தேவையற்ற சிக்கல்களையும், பல்வேறு சமூகங்களுக்கும் திருப்தியின்மையும், அதனால் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமில்லாமல் வேலை வாய்ப்புகள், கல்வி எல்லாவற்றிலும் அந்தந்த சமூகக் குழுக்களின் மக்கள் தொகைக்கேற்ப இடங்களை பகிர்ந்தளிப்பதுதான் சரியான தீர்வு என்பதை அக்கறையுடன் பரிசீலித்து அதற்கேற்ப சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென அரசுகளையும், அரசியல் கட்சிகளையும், சமூக, பொதுநல அமைப்புகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இ) பொது மக்களிடையே நிலவுகிற பிரச்சினைகளையும், உணர்வுகளையும் சரியாக உணர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவரும் முற்போக்கு சட்டங்களை, தங்கள் விருப்பத்திற்கேற்ப நீதிமன்றங்கள் விளக்கம் கொடுத்து முடக்கிப் போடும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதை மிகுந்த கவலையோடு இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

நாடாளுமன்றம், நீதித்துறை, ஆட்சித் துறை ஆகியவை தங்கள் வரம்புகளை மீறும்போதெல்லாம் நாட்டில் அமைதியின்மை ஏற்படுகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) என்பனவற்றைப் போலவே, அரசியல் சட்டத்தின் 312வது பிரிவு இந்திய நீதிப்பணியையும் அனுமதிக்கிறது. எனவே, இந்திய நீதிப்பணி தேர்வுக்கு என ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் வழியே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்துடன் நீதிபதிகளை நியமிப்பதே இச்சிக்கல்களுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, இந்திய நீதிப்பணி ஆணையத்தை உடனடியாக நிறுவ மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசுத் துறை, பொதுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்தும், தனியார் மயமாக்கம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில்  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் துறையிலும் வேலை உறுதி செய்து சட்டமியற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

Pin It