ஸ்ரீமான் எஸ்.சீனிவாச ஐயங்கார் ராஜீனாமா செய்வாரா?

இல்லாதவரை அவரை ராஜீனாமா செய்யும்படி வற்புறுத்த வேண்டும் -சித்திரபுத்திரன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தமிழ் மக்களின் மதிப்பை இழந்து விட்டார்.

பார்ப்பனரல்லாதாரை எப்படியாவது ஒடுக்கி, பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டு மகாத்மா காந்தியின் கருத்துக்கு விரோதமாகவும், காங்கிரஸின் அடிப்படையான கொள்கைகளுக்கு விரோதமாகவும், வேண்டுமென்றே சர்க்கார் பட்டதாரிகளையும். சர்க்கார் நியமன கௌரவ உத்தியோகம் பெற்றவர்களையும் காங்கிரசுக்குள் புகுத்திக் கொண்டு, அவர்களை சட்டசபைக்கு அபேக்ஷகர்களாக நிறுத்தியும், அவர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க காங்கிரஸையும், காங்கிரஸ் பணத் தையும் உபயோகித்துக் கொண்டு வருவதின் நிமித்தம் காங்கிரஸின் மதிப்பும் யோக்கியதையும் குறைந்து வருவதோடு காங்கிரஸை திருத்த முடியாத நிலைமையில் கொண்டு போய் விட்டுக் கொண்டிருப்பதாலும், காங்கிரஸ் என்பதே பொது நலத்திற்கல்லாமல் ஒரு வகுப்பாரை அழித்து, மற்றொரு வகுப்பாரை ஆதிக்கம் பெறச்செய்ய நிரந்தரமான ஆயுதமாக ஆக்கப்படுகிறபடியாலும், தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையோர்க்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் நம்பிக்கைக் குறைவு அதிகரித்துவிட்டது. ஆதலால் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களைக் கண்ணியமாய் விலகிக் கொள்ள வேண்டுகிறேன். அப்படிக்கில்லாத வரை ஆங்காங்குள்ள பார்ப்பன ரல்லாத காங்கிரஸ் வாதிகள் மகாநாடு கூட்டி ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் தங்களுக்கு நம்பிக்கை இன்மையைத் தெரிவிப்பதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையை இராஜீனாமா செய்துவிடவேண்டும் என்று தீர்மானம் செய்தனுப்ப வேண்டியது. அப்படி அவர் செய்யாதவரை தமிழ்நாடு மாகாண கமிட்டி கூட்டுவித்து, ஸ்ரீமான் ஐயங்காரைத் தள்ளிவிட்டு, வேறு தலைவரை நியமிக்க வேண்டியது. அப்படிச் செய்யாதவரை காங்கிரஸினால் பார்ப்பனரல்லாதார்கள் மிகுதியும் துன்பமடைய நேரிடும். டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் நிர்வாகக் கமிட்டியில் இராஜீனாமா செய்து விட்டார்; ஸ்ரீமான் திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும், தான் இராஜீனாமா செய்து தீரவேண்டிய நிலைமையை ஏற்படுத்திக் கொண்டார்; ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரும் காங்கிரஸை விட்டு விட்டதாகத்தான் முடிவு கட்ட வேண்டியிருக்கிறது. இனி யார் காங்கிரஸில் இருக்கிறார்கள்? மற்றபடி காங்கிரசுக்கு உழைத்த பார்ப்பனரல்லாதார்கள் கமிட்டிக்கு வேண்டுமானால் கூலிக்கு ஆள் பிடித்தால் தான் உண்டு. ஆகையால் பார்ப்பனரல்லாதார் இது சமயம் உறங்கக் கூடாது.

(குடி அரசு - கட்டுரை - 20.06.1926)

Pin It