திருவாரூர் திருத் தியாகராஜரின் திருத்தேர் திருத் தீக்கிரையாயிற்று

தியாகராஜ பெருமானின் தேரானது 9.6.26 - தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக்கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப் பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும் 5000 த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்கள் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப்பாட்டம் எதற்கு? இதை நினைக்கும்போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது:-

ஒரு குருவுக்கு நான்கு சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக்கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளையிட்டார். அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளையிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப் போனால் கோபித்துக் கொள்ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்துச் சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத் தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள். குரு கோபித்துக் கொண்டு, உங்களுக்குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லையென்று சொல்லி, வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்துக் கயிறால் கட்டித் தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரேயல்லாமல் கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் “தோஷம், தோ ஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும்” என்று சொல்லி நினைத்ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டார்கள். அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை. தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் தேர் உற்சவத்திற்குச் சிலவிடும் பணத்தைக் கொண்டு தொழிலாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்க ளுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதாம் புரிந்துவர பிரயோஜனப்படுத்தலாகாதோ?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.06.1926)

Pin It