ஒரு மாலைப்பொழுது நண்பருடன் கோட்டூர் புரத்தில் இருந்து சென்னை எழும்பூர் தொடரி நிலையத்திற்குச் செல்லவேண்டும். நண்பர்தான் வாகனத்தைச் செலுத்தினார். அவர் வழக்கமாகச் செல்லும் சாலை வழித்தடத்தில் வண்டியைச் செலுத்தினார்.  நான் வலது இடது என மாற்று வழித்தடத்தினை பரிந்துரைத்தேன். நண்பர் நினைத்ததை விடவும் பத்து மணித்துளிகள் முன்னதாகவே சென்றுவிட்டோம்.  

நெருக்கடி இல்லாத சாலையினை நான் தேர்வு செய்து பயண நேரத்தை சுருக்கியது நண்பருக்கு வியப்பாக இருந்தது.  எல்லாம் ‘கூகுளாண்டவர் துணை” என்றேன். அந்த கூகுளாண்டவர் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மதுரைக்கு மட்டுமல்ல மாஸ்கோவிற்கும் வழி நம் கைகளிலேயே இருப்பதற்கான சாத்தியத்தினை தொழில் நுட்பம் நமக்கு அளித்திருக்கிறது.  

நம்மிடம் உள்ள திறன் பேசியில் Google Map எனும் செயலி இயல்பாகவே பதிந்தே இருக்கிறது.  இது பயணப்பொழுதில்  எண்ணற்ற வகையில் நமக்கு உதவுகிறது.

அப்படிக் கூகுள் மேப்பில் என்னதான் இருக்கிறது? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதாகட்டும், நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாகட்டும் மிக எளிதில் உங்களுக்கான வழித்தடத்தை இந்தச் செயலி சொல்லிவிடும்.

“வேலுருக்கு வழி என்ன என்று கேட்டால், வெள்ளைமாடு ஐம்பது ரூபாய் என்பான்” என்ற சொலவடை இன்றும் கிராமங்களில் உண்டு. ஆனால் வேலூரில் வெள்ளைமாடு மற்ற சந்தைகளைவிட ஐம்பது ரூ. குறைவாக கிடைக்கும் என்றால்,  அதுதானே சிறப்புத்தகவல்.

நாம் நடந்து செல்லவிருக்கிறோமா? அல்லது வாகனத்திலா என்பதை மட்டும் சொல்லிவிட்டால் போதும் எந்த வழியில் சென்றால் எவ்வளவு நேரத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம் என்பதை நொடிப்பொழுதில் தந்துவிடும்.  அது மட்டுமா நீங்கள் செல்ல நினைக்கும் தடத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்தால் அதையும் முன் கூட்டியே உங்களுக்குத் தந்து, மாற்றுப்பாதையினையும் அமைத்து தரும்.

நாம் செல்லும் வழியெங்கும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், எரிபொருள் நிலையங்கள், வணிக வளாகங்கள் என மிகத்துல்லியமாக நமக்கு அடையாளம் காட்டும்.

எந்த ஒரு இடத்தினையும் நாம் தேர்வு செய்து குறியிட மட்டுமே நமக்கு இணையத்தின் துணை வேண்டும். தேர்வு செய்த பின்பாக இணைய இணைப்பினை துண்டித்துவிட்டால் கூட நாம் பயணிக்கும் இடத்தினை திரையில் தொடர்ந்து தெரிவிக்கும்.

உங்கள் வீடு, அலுவலகம் என உங்கள் இருப்பிடத்தை எளிதில் குறியிட்டு வைத்துக் கொள்ளலாம். ஊர்களின்  பெயர்களைத் தமிழிலிலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வழித்துணையாக நீங்கள் இடப்புறம் வலப்புறம் என எத்திசையில் பயணிக்க வேண்டுமென்பதை முன் கூட்டியே ஒலி வடிவில் அறிவிப்பும் நமக்கு கிடைக்கும்.

செயலியினைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது  சென்ற வாரம், சென்ற மாதம், சென்ற ஆண்டு நாம் எங்கே எப்போது பயணித்தோம் என்ற வரலாற்றையும் உங்கள் கணக்கில் சேமித்து வைக்கும்.  நமக்கு அருகில் இருக்கும் ஒவ்வோர் தெருவையும் ஒவ்வோர் சந்து பொந்துகளையும் நமக்கு அடையாளப் படுத்துகிறது இந்த செயலி. முக்கியமான இடங்களைப் படத்துடனும், தொலைபேசித் தொடர்பு எண்ணுடனும் நமக்குத் தெரிவிக்கிறது. தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி நமது வேலையினை எளிதாக்குவோம்.

இச்செயலி உங்கள் திறன்பேசியில் இயல்பாகவே (ஞிமீயீணீuறீt) ஆகவே இருக்கும். இல்லை எனில் றிறீணீஹ் ஷிtஷீக்ஷீமீ சென்று நிஷீஷீரீறீமீ னீணீஜீ  என தட்டச்சு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இனிப் போவோமா ஊர்கோலம்,

பூலோகம் எங்கெங்கும்...  

Pin It