இந்தியாவின் சாதி அமைப்பானது, வாய்ப்புச் சமத்துவத்தை மறுக்கிற படிநிலைச் சமூகத்தைக் கட்டியெழுப்பியதோடு, அதனுடன் பின்னிப் பிணைந்த பல சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் வாயிலாக, அச்சமூகத்தைப் பல நூற்றாண்டுக் காலம் நிலைத்திருக்கச் செய்தது. சமத்துவமான வாய்ப்புகளை மறுக்கிற ஒரு பழம்பெரும் சமூக அமைப்பில், அனைத்து மக்களுக்குமான சமத்துவ வாய்ப்பை முன்னெடுக்கும் நவீன ஜனநாயகத்திற்கான கருவை உருவாக்குவது எண்ணிப்பார்க்க இயலாததாகும். ஆயினும், அந்தக் கடினமான பணியைச் செய்து முடித்தவர்கள் யார்? ஜனநாயக விதையை இந்திய மண்ணில் விதைத்தவர்கள் யார்?

Rettaimalai Seenivasan
உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட இனங்களின் பேரெழுச்சிதான், அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசமைப்பை அல்லது ஜனநாயக அமைப்பை உருவாக்கித் தந்தது. சாதி ஆதிக்க வகுப்புகளின் தீவிர எதிர்ப்பையும், அவர்களின் ஏகபோக பேரமைப்பாகச் செயல்பட்டுவந்த காங்கிரசின் தந்திரமான அரசியல் யுக்திகளையும் முறியடித்து, இந்திய மண்ணில் நவீன ஜனநாயகத்திற்கான அடிப்படையை உருவாக்கியவர்கள், தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களேயாவர். ஆனால், ஆதிக்க வகுப்பாரும் காங்கிரசும்தான் இந்திய ஜனநாயகத்தின் கர்த்தாக்கள் என்று தவறினும் தவறாக, தலைகீழ் பாடமாக இந்திய மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உறுதி செய்யப்பட்ட விகிதாச்சார வாய்ப்புதான் பல்வேறு சாதிகளின், பல்வேறு இனங்களின் குழுமத்திற்குரிய சமத்துவமான ஜனநாயக முறையாக இருக்க முடியும். இடஒதுக்கீடுகள் என்று அழைக்கப்படுபவை, உண்மையில் விகிதாச்சார வாய்ப்புகள்தான். அதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. இது, இந்திய ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத கூறாக மாறிவிட்டது. இடஒதுக்கீடு நடைமுறைதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான முகம். அரசமைப்புச் சட்டம் அதற்கு முடிவற்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு நடைமுறை - இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது, தற்செயல் நிகழ்வல்ல. மாறாக, இந்தியாவில் சுயராச்சிய முழக்கங்கள் எழுப்பப்படும் முன்பே, ஆங்கிலேயர்களிடம் ‘விகிதாச்சார வாய்ப்பு' கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தியர்களுக்குச் சுதந்திரம் அளிப்பதற்கு முன்பே, ‘விகிதாச்சார வாய்ப்பு' முறையை அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்தது ஆங்கில அரசு.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான இடஒதுக்கீட்டு வழிமுறையை விட்டு விலகிச் செல்லாதபடி, முக்கியமான முன்னேற்பாடாக அது இருந்தது. அதுவே உண்மையான ஜனநாயக அமைப்பை இந்திய அரசியலில் உருவாக்கியது. அப்படிப்பட்ட ‘விகிதாச்சார வாய்ப்பை' ஆங்கில அரசு உறுதி செய்ய முனைந்தபோது, அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்க வகுப்பினரும் காங்கிரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய மண்ணில் உண்மையான ஜனநாயகம் தழைப்பதைத் தடுத்து நிறுத்த எண்ணியவர்கள் அவர்களே! ஆங்கில ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட இனங்களின் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்தித்ததன் விளைவாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள், தங்களின் விகிதாச்சார வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடியதன் பலனாகவும், இந்திய மண்ணில் இந்துப் படிநிலைச் சாதி அமைப்பிற்கு எதிரான ஜனநாயக விதை ஊன்றப்பட்டது.

விகிதாச்சார வாய்ப்பு என்னும் முழக்கத்தை முன்வைத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வந்தார்கள். அரசியல் வாய்ப்புகளிலும் சமூகப் பொதுவாய்ப்புகளிலும் தங்களுக்குரிய உரிமையை விகிதாச்சாரப்படியான வாய்ப்பை உறுதி செய்து தரும்படி, 1891 இல் சென்னையிலும், மும்பையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். 1895 இல் கவர்னர் ஜெனரல் எப்ஜின் பிரபு சென்னைக்கு வருகை தந்தபோது, ரெட்டமலை சீனிவாசன் தலைமையில் ‘பறையர் மகா ஜன சபை' தலைவர்கள் கவர்னர் மாளிகையில் அவரைச் சந்தித்து, அரசு அலுவலகங்களிலும், ஆட்சிமுறைகளிலும் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய விகிதாச்சார வாய்ப்புக் கேட்டு கோரிக்கை வைத்தனர். 1898சூன் 11 ஆம் நாள், ஆங்கில அரசின் இந்தியச் செயலாளர் எழுதிய கடிதத்தில், பின்வரும் செய்தி இருந்ததாக ரெட்டமலை சீனிவாசன் தனது ‘ஜீவிய சரித்திரத்'தில் குறிப்பிடுகிறார்.

‘‘ஆதிதிராவிடர் என வழங்கும் சமூகத்தவர்களும் இதர சமூகத்தவர்கள் போல், அரசாங்கத்தின் அலுவலகங்களிலும் ஆட்சி முறைகளிலும் மாநில மந்திரி பதவியிலும் பங்குபெரும் உரிமை உண்டாகியிருக்கிறது. அதனால் சட்டசபைகள், முனிசிபாலிட்டிகள், லோக்கல் போர்டுகள், பஞ்சாயத்துகள் மற்றுள்ள நிர்வாகங்களுக்குத் தேவையான அலுவலர்களாகவும், சிவில் சர்வீஸ் உயர்தரப் பதவியாளர்களாகவும், இந்த இனத்தவர்கள் மந்திரிகளாகவும், மேயர்களாகவும் அமையப்படுவதுமின்றி கல்வியிலும் செல்வத்திலும் முன்னேற்றம் காண, மேற்கண்ட இனத்தவர்களை நான் ஒன்றிணைத்து ஒரு முக்கியக் குல சமூகமாக நிலை நாட்டியதே மூலகாரணமாகும்.''

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகையப் போராட்டங்களுக்கு ஆதிக்க வகுப்பினரும் காங்கிரசும் கடும் எதிர்ப்புக்காட்டி வந்தார்கள். இசுலாமியர், சீக்கியர், கிறித்துவர்களைப் போல, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓர் தனித்த இனம் என்பதை காங்கிரஸ் இறுதிவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

1930 இல் ஆங்கில ஆட்சியாளர்கள், தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு, விகிதாச்சார அடிப்படையிலான வாய்ப்புகளை வழங்கும் அரசியல் முடிவை உறுதி செய்தபோது, ஆதிக்க வகுப்பினரும், காங்கிரசும் போர்க்கோலம் பூண்டனர். சிறுபான்மை இன மக்களைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களையும் ஓர் தனித்த இனமாக ஆங்கில ஆட்சியாளர்கள் அங்கீகரித்ததே அதற்குக் காரணம். தனித்த வேறுபட்ட இனத்தினராக தாழ்த்தப்பட்ட மக்களை ஆங்கில அரசு ஏற்றுக் கொண்டதன் மூலம், அம்மக்களின் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏராளமான வழிகளைத் திறந்துவிட்டது.

நாட்டின் நிர்வாகப் பணிகளிலும், சட்டமன்றங்களிலும், அரசுப் பணியிடங்களிலும் இந்துக்களைப் போல் தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுக்கான விகிதாச்சாரப் பங்கைப் பெற முடிந்தது. அப்படிப் பெறுவது, இதுகாறும் இந்துக்களுக்கென்றே இருந்தவைகளை - தாழ்த்தப்பட்ட மக்கள் பிரித்துப் பெறுவதாக அமைந்தது. தங்களின் வாய்ப்புகள் குறைந்ததைச் சகிக்க முடியாதவர்களாக, இந்துக்களும் காங்கிரசும் ஆத்திரமடைந்தனர். ஆனாலும் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. இந்தியாவின் சுயாட்சிக்காகவாவது அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனித்த தேசிய இனம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தருகிற பொதுவான அரசமைப்பு ஒன்றை உருவாக்கினால் மட்டுமே, இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமாகும் என்று ஆங்கில அரசு உறுதியான நிலை எடுத்திருந்தது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையின் முன் மிக முக்கியமான கேள்வி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது, ஆதிக்க வகுப்புகளின் ஆலோசனையின் பேரில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்வதா அல்லது ஆங்கில ஆட்சியின் விகிதாச்சார இடஒதுக்கீடுகளை, இந்தியக் குடியாட்சி அரசமைப்பில் ஏற்றுக் கொள்வதா என்பதே அந்தக் கேள்வி. விகிதாச்சார வாய்ப்பு முறையை சட்டத்தின்படி ஏற்றுக் கொண்டதாலும், இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் மீது ஆங்கில ஆட்சியாளர்களின் கண்காணிப்பு இருந்ததாலும், டாக்டர் அம்பேத்கரின் முடிவுகளுக்கு சட்ட வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் ஒப்புதல் தர வேண்டியிருந்தது.

எனவே, சுதந்திர இந்தியா திடுமென இடஒதுக்கீட்டு ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பின்னால் அரை நூற்றாண்டுக்கால தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியான போராட்டம் இருக்கிறது. வாய்ப்புச் சமத்துவமற்ற சமூகத்தை ஏற்க மறுத்த ஆங்கில ஆட்சியரின் உறுதியான முடிவும் இருக்கிறது. ஆனாலும் என்ன பலன்? தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவமான அல்லது விகிதாச்சாரப்படியான உரிமைகளைப் பெற்றார்களா? அரசமைப்புச் சட்டம் வழங்குகிற ஜனநாயக வாழ்க்கையை வாழ்ந்தார்களா? இந்தியாவின் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளை, தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே இந்திய ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை வெற்றிபெறச் செய்ய இயலும் என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் அறிந்திருந்த போதிலும், இடஒதுக்கீடுகளுக்கு நேர்ந்த கதி என்ன என்பதை அனவைரும் அறிவர்.

சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களை மேம்படுத்த அரசமைப்புச் சட்டத்திலேயே வழிவகை செய்து, பின்னர் அதைக் காலில்போட்டு மிதிக்கும் மனநிலை கொண்ட மக்களை உலகில் வேறு எங்கும் காண இயலாது! ஒடுக்கப்பட்ட இனங்களின் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் ஒரு தேசம் காட்டி வரும் அளவீடே, அது ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றுதலைப் புலப்படுத்தும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையும், அவர்களின் மேம்பாட்டில் அரசு காட்டிவரும் ஏளனப் போக்கும், நமக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. இந்திய ஜனநாயகம் ஒரு தேசியப் பொய் என்பதே அந்த உண்மை.

‘தேசிய வளர்ச்சி' என்ற மாயத் தோற்றம் காட்டி, ஏழை எளிய மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை, ஆதிக்க வகுப்பினருக்கும், சமீப காலமாக பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் தின்னக் கொடுத்து வருகிறது, இந்திய மக்களாட்சி. இந்நிலை பற்றி மேலும் பல ஆழமான ஆய்வுகளுக்குச் செல்ல முடியும். ஆனால், இடஒதுக்கீட்டு ஜனநாயகத்தை இந்த அளவிற்குத் தடுத்து நிறுத்த யாரால், எப்படி முடிகிறது என்பதைப் பற்றி நாம் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும். அதுவே இந்திய ஜனநாயகத்தின் விகிதாச்சார வாய்ப்பு என்ற உயர்ந்த செயல்முறையை, எத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்க வேண்டியிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும்.