Karunanidhiஈழத்தமிழர்கள் பக்கம் யார் நிற்கின்றார்கள் என்று அவர்களுக்குத் தெரியுமென்கிறார் கருனாநிதி. எங்களுக்காகத் தமிழ் இனத்தலைவர் ஏழு இலட்சம் பேர்களைக் கூட்டிக் காட்டியவராம். மன்மோகன்சிங்கிடம் கவிதைமொழியில் பேச கனிமொழியை அனுப்பி வைத்தாராம். இந்திய உளவுத்துறை ஒவ்வொருநாள் காலையிலும் மன்மோகனின் காதில் ஓதாதையா கனிமொழி சொல்லிவிடப் போகிறார்? அல்லது இலங்கையில் என்ன நடக்கின்றதென்று தெரியாமலா இந்தியப் பிரதமர் இருக்கின்றார்? கவுனைக் கலைந்துவிட்டுச் சேலையணிந்த ராஜமாதா மன்மோகனின் காதில் ஓதி ஓதி அவர்காது செவிடாகத்தான் போய்விட்டதா? காங்கிரஸ் தலைமை அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைத் தமிழர் மீது பரிவுகாட்டித்தான் வருகின்றார்களென்று தங்கபாலு பினாத்தியிருக்கின்றார். புரட்சித்தலைவியின் தூக்கம் கலைந்து உளறல்கள் வேறு.

இந்திய அரசு எங்கள் பக்கம்தான் தமிழ்நாட்டின் சலசலப்பிற்கு அஞ்சப் போவதில்லை - இது பிரியதர்சன யாப்பா. மகிந்த ஐ.நாவில் தமிழர் துயர் குறித்து தமிழில் பேசியது, விட்டேனாப்பார் என சரத்பொன்சேக்கா கனடியப்பத்திரிகை ஒன்றில் ‘சிங்களவர்கள்தான் இலங்கையர்கள். சிறுபான்மை இனங்கள் அதீத உரிமைகள் எதுவும் கேட்காது இலங்கையில் இருப்பதென்றால் இருக்கலாம்’ என செவ்வியுள்ளார்.

நாட்டை விட்டோடி ஏதிலிகளாய் ஒரு பகுதியும், மரத்தினடியில் அடுப்பை மூட்டிச் சமைத்து மறுநாள் வேறொரு மரநிழல்தேடி அல்லாடி நேற்றைய மரணங்களை மறக்க இன்றைய குண்டுவீச்சென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இலங்கைத் தமிழன். தலைநகரத்தில் அய்ந்து வருடங்களினுள் வந்த எந்தத் தமிழனும் தன்னைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவன் வாடகைக்குடி என்றால் வீட்டுக்காரனும் பொலிஸ் நிலையத்திற்கு கூடப் போகவேண்டும். மூன்றாவது றைஹ் கிற்லர் ஆட்சியில் யூதர்களின் அடையாளம் டேவிற்றின் நட்சத்திரம். எங்கள் நிலங்களில் எண்ணெய் சுரக்கவில்லை, பூமியின் வயிற்றிலும் தங்கமோ வைரமோ கருக்கொள்ளவில்லை. எனவே சர்வதேசக் கரிசனம் எங்கள்மேல் படியவில்லை. நாங்கள் சர்வதேச அனாதைகள். உங்கள் அரசியலிற்காக அன்றிலிருந்து இன்றுவரை எங்களை உருட’டி உருட்டி உருக்குலைத்தாகிற்றல்லவா மீண்டும் எதற்கு விக்கிரமாதித்தனின் கதை.

ஐயா தமிழ் இனத்தலைவரே உங்கள் குடும்பத்தில் எல்லாமே சிரிப்புத்தானே. மாராட மயிராட மகிழ்ந்திருக்கின்றீர்கள் அல்லவா. பொழுதுபோகாவிட்டால் சினிமா விழாக்களுக்குப் போங்கள் இல்லையென்றால் கவிதை எழுதுங்கள் அறிக்கை அரசியல் நடாத்துங்கள். எங்களை ஈனப்படுத்தியது போதும் நாங்கள் எக்கேடு கெட்டாலும் உங்களுக்கென்ன.

தங்கபாலு ஐயா பெருங்காயடப்பா காங்கிரசிற்கு இலங்கைத் தமிழர்மீது என்ன அக்கறை? இளம் இந்தியஜோதி உங்கள் பொன்னானத் தலைவனைக் கொன்றவர்களல்லவா நாங்கள். இதை உங்கள் தமிழ்நாட்டுக் காங்கிரசின் எத்தனை கோஷ்டிகள் மாறிமாறி உச்சாடனம் செய்துகொண்டிருந்தன. இப்போதைய அரசியல் வெறுமையில் எங்களை விட்டால் உங்களுக்குப் பேச ஒன்றுமில்லை போலும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க உதவுகின்றேனென்று சொல்லி டெல்லி கொழும்பிற்கு கொடை கொடையாய் கொட்டிக் கொடுக்கின்றது. உங்கள் நாட்டிலும் தானே நீங்கள் சொல்லும் பயங்கரவாதம் குண்டு குண்டாய் வெடிக்கின்றதே ஒழித்துவிட்டீர்களா. பிறகெதற்கு இலங்கைக்குக் காவடி தூக்குகின்றீர்கள். வல்லரசுக் கனவின் பல் இளிப்புத்தானே வேறென்ன. இன்னும் கொட்டிக்கொடுங்கள் கொன்று குவிக்க, இலங்கை அரசின் கெகலியவும் சரத்தும் மனக்கணக்கில் பிணத்தொகை சொல்ல உதவியாயிருக்கும்.

Jayalalithaஓர் இலங்கைத் தமிழனின் வலியை, வேதனையை, விரக்தியை அவன் இன்றி யாரும் முழுமையாய் உணர்ந்திட முடியாது. அவன் எங்கிருந்தாலும் துல்லிய இலக்குப் பல்குழல் எறிகணைகள்போல் மீண்டும் மீண்டும் துன்பம் அவனை நிலை குலைக்காமல் விடாது. ஆனால் எங்கள் தன்மானம் சாகவில்லை எதிர்ப்பும் மழுங்கவுமில்லை. உங்கள் வாக்கரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் கரிசனை என்ற பெயரில் இழிவுபடுத்தியதுபோதும்.

முடிந்தால் இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழரை மகிந்த மீள்குடியமர்த்தப் போகின்றாராம். சேதுவை மீடுறுத்தியோ அகல ஆழ்ந்தோ அவர்களையும் அங்கு அனுப்பி வையுங்கள். அப்துல்கலாம் வந்தால்கூட இலங்கையர் முகாம்களை நீங்கள் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போதெல்லாம் செறிவான எறிகணைத்தாக்குதல்கள், சரமாரியான விமானக் குண்டுவீச்சுக்களில் பயங்கரவாதிகள் குறைவாகவே செத்துத் தொலைக்கின்றார்களாம்.

இந்திய மீனவர்கள் பலி, படுகாயம் என்றெல்லாம் செய்திகள் சொல்கின்றனவே அவர்கள் டெல்லிக்கும் கொழும்புக்கும் வேண்டுமானால் தமிழர்களாய் இருக்கலாம். உங்களுக்கு? வேறொன்றும் செய்ய இல்லாவிட்டால் வழமையான உங்கள் சென்டிமென்ட் அரசியலை அங்கிருந்து தொடங்கலாமே இவர்கள் உங்கள் தொப்புள்கொடி உறவல்ல இந்தியர்கள்தான்...

நிஜமாகவே இவர்கள் இந்தியர்கள்தானா???

- தேவா
Pin It