வால்பாறையில் இருந்து நானும் பிரவீனும் காரில் கிளம்பினோம். ஒரு கட்டத்துக்கு மேல்.. அது ஒரு வழிச் சாலை போல தான். குறுகிய சாலையில் மேலே உயரம் ஏறுவதை உணர முடிந்தது. வரைந்திருக்கும் தேயிலைக் காட்டில் வழி செய்து கொண்டே போகும் சாகசம் போல பிரமிப்பு.
எதிரே வந்த ஒரு வண்டிக்கு மிகக் கடுமையான நகர்தலுடன் வழி விட்டு வழி பெற்றோம். பிறகு ஒரு வழியாக பார்க்கிங் செய்யும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு இருபக்கமும் தேயிலை சூழ... நடுவே சதுரத்துக்கு சற்று ஏறக்குறைய கற்களால் ஆன வாசல் படிகளைப் போலிருந்த மண் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.
பணக்கார வீட்டு வராண்டாவில் பதிந்த வண்ண கற்களைப் போல.. இயற்கையின் பிடியில் இன்னபிற இலகுவான கால் பதியலுக்கு வழுக்காமல்.. மழை காலமும் கடக்க வேண்டும் என்பது போல... கவனம் பதிந்திருந்த பாதை வழியே நடக்க... காற்றும் சுத்தம். கண்களும் சுத்தம். பேரமைதி. தேயிலைக்குள் இருந்து தெவிட்டாத தினம் எங்களைச் சூழ்ந்து கொண்டது போன்ற பிரமை.
எதிரே சில இளைஞர் இளைஞிகள் வந்தார்கள். திரும்புகிறார்கள் போல. ஒருவன் உயர் தர கேமரா ஒன்றில் தேயிலை காட்டுக்குள் நின்று ஒரு பிள்ளையை அழகழகாய் புகைப்படம் கிளிக்கினான். நின்று பார்த்து.. கண்களாலே மென்று தீர்த்தோம்.
பிறகு வழி குறுகி... நடைபாதையாகி.. ஒரு மாதிரி ஏறி இறங்கி அப்போதைக்கான சமதள பகுதிக்கு வந்தது போல இருக்க.. அந்த பரந்து விரிந்துச் சுருங்கும் காட்சியில் அப்போது தான் உணர்ந்தேன். நாங்கள் நிற்பது.. ஒரு மலை உச்சியில் என்று. சுற்றிலும்.. நிற்பதே தெரியாமல் எங்களுக்கு கீழே நின்ற மலை உச்சி பசுமைப் போர்த்திய காடுகளால் கண் சிமிட்டின.
மேக ஊர்வலம்... வானத்தில் இல்லை போல. கானகத்தில்தான் என்று தோன்றியது. வானம் கூட எட்டிக் குதித்தால் தலையில் முட்டி விடும் அளவுக்கு அதீத கற்பனை கூட வந்து போனது. ஒரு வழியாக மலை உச்சியில் நிற்கிறோம் என உறுதியாக உணர்கையில்... மவுனம் தானாக மனதில் ஏறி நின்றது.
எங்கள் நேரம் நல்ல நேரம். அங்கு யாருமே இல்லை. எட்டிக் குதித்தால் கூட யாருக்கும் தெரியாத தனிமை. பரவசம் மேலோங்க அங்கும் இங்கும் நடந்தேன். செய்வதறியாத போது சுவரில்லாமலும் சித்திரம் ஆகிறோம். பிரவீன் புகைப்படம் எடுத்தான்.
வீடியோ கூட எடுத்தான். நின்று தியானிப்பது போல ஒரு ஆயுள்கால பொறுமையைக் கண் முன்னால் நிரூபித்தது காடு. காடெல்லாம் காலம். அந்த வியூ பாய்ண்டின் முகப்பில் ஒரு கட்டடம் இருந்தது. அங்கே யாரும் இருந்தது போல இல்லை.
மலைச் சரிவுகளில் பச்சையம்.. மாலை போட்டிருந்தது. நகர்ந்து நகர்ந்து எட்டிப் பார்க்கக் கூட முயற்சித்தேன். பள்ளத்தாக்கில் பகல் இல்லை... என்று புரிந்தது. கீழே ஓடும் பால் போன்ற நீரும்.. பதுங்கிக் கிடக்கும் நிழலும்... தூரத்து கீழ் ஒளியில்... கண்டதெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது.
புற்களுக்கு மத்தியில் வயதானப் பாறைகளின் தலையில்.. வழுக்காத காலங்களைக் கண்டேன். அமர்ந்தேன். அயர்ந்தேன். அமிழ்ந்தேன். இன்னும் கொஞ்சம் அதே பாறையை ஒட்டி பக்கவாட்டில் ஒரு ஒற்றையடி கீழே இறங்கியது.
அங்கொரு மரத்தேடியே ஒரு சாமி இருந்ததாக நியாபகம். அதற்கு மேல் உள்ளே போக வேண்டாம் என்று உள்மனம் சொல்ல திரும்பினோம்.
மலை உச்சியில்... கடவுளைக் காணலாம் என்று தோன்றியது. பிறகு கடவுளும் நல்லமுடி பூஞ்சோலை போன்ற மலை உச்சிகளைக் காண வேண்டும் என்றும் தோன்றியது.
- கவிஜி