valparai forestsஇம்முறை சுற்றுலாக்காரனாகத்தான் மலை ஏறினேன்.

வால்பாறையில் பிறந்தவனாக இருந்த போதும்... முதல் பத்தாண்டுகள் மட்டுமே அங்கிருக்கும் சூழல் வாய்த்தமையால்... எனக்கு வால்பாறையில் பல இடங்களைத் தெரியாது. ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒவ்வொரு இடமாக பார்த்து விடலாம் என்று தான் யோசனை. இம்முறை... சரி என்று கையில் இருந்த திட்டத்தைக் கண்களுக்குள் நீந்த விட்டு வண்டியை எடுத்திருந்தேன். உடன் நெருங்கிய நண்பர்கள்.

குரங்கருவி

வால்பாறை குரங்கருவியில் இருந்து தான் ஆரம்பிப்பதாக நான் கருதுகிறேன். மலை அடி வாரத்தில் இருக்கும் கலை வடிவம் அது. நீரின் இரைச்சல் என்று யாரும் கூறின் சந்தேகியுங்கள். அது நீரின் சிரிச்சல். நாங்கள் நீர் உணர... நீரும் தன் நிறம் அறிந்திருக்கும். சாலையில் நின்றே மரங்களின் இடையே இருந்த சிறு சிறு வெளிகளின் வழியே குரங்கருவியை தரிசித்தோம்.

"கவியருவி" என்று பெயர் மாற்றி இருப்பதை சத்தியமாக மனம் ஒப்புக் கொள்ளவில்லை. காலம் காலமாக இருக்கும் குரங்கருவியே அழகான கவிதை தான். கவியருவி பாவனை. குரங்கருவிதான் தோரணை.

கொண்டை ஊசி வளைவுகள்

பழக்கப்பட்ட சாலைதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் பழக வேண்டும் சாலை. எங்கு குறுகுமோ அங்கு நிரம்பும் வாகனம். எங்கு விலகுமோ அங்கு சிறகு வாகனம். மலை சாலைகளில் கார் ஓட்டுவது தியானிப்பது போல.

தியானத்தின் வழியே மலை தன்னை கீழே இறக்கும். மனம் தன்னை மேலே தூக்கும். மேலிருந்து பறந்து விரிந்த பள்ளத்தாக்குகளை... மரங்கள் சூழ்ந்த மயக்கங்களை... வரிகளில் சொல்ல இயலாது.

வார்த்தைகளால் வனத்தைத் செரிக்க முடியாது. சரிந்து நிறைந்து கிடந்த கழுகுப் பார்வையில் சோலைகள் - சித்திரங்கள். அதுவும் இலையுதிர் கால ஆரம்பத்தை இடையிடையே நிற்கும் பழுத்த இலைகளைக் கொண்ட மரங்கள் காட்டி கொடுத்தன.

வான்கோவின் பெயின்டிங் திரும்பும் பக்கமெல்லாம். திரும்பாத பக்கத்துக்கு அங்கென்ன வேலை. வான்கோவின் புன்னகை தான் எனக்கும். எதிரும் பின்னும் அவ்வப்போது வாகனங்கள் வந்தும் போயும் இருந்தது... நகரும் ஓவியத்துள் நாமும் நகர்கிறோம் என்பது போல இருந்தது.

ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் ஒவ்வொரு வண்ணம் பூசி பார்த்தோம். பார்க்கப் பார்க்க சலிக்கவே செய்யாத அதிரூப அபூர்வம் என்று தான் நம்புகிறேன். வண்டி சாலையில் போக நானோ வானத்தில் நகர்ந்தேன்.

வாட்டர் பால்ஸ் - புலி பள்ளத்தாக்கு

புலி பள்ளத்தாக்கு எப்போதுமே பிரமிப்பு தான். அத்தனை உயரத்தில் இருந்து கீழே பார்த்தால்... பள்ளத்தாக்கு பிரம்மாண்டமாய் சோலைக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு பார்க்கும். முதுவாங்குடி பழங்குடியினர் வாழும் இடம் என்று நினைக்கிறேன்.

அப்படியே பார்வையை இடது பக்கம் கீழே குவித்தால்... காடம்பாறை டேம் தெரியும். பார்வையை PAN ஷாட்டில் நகர்த்தினால் சிறு சிறு நீர் தேக்கம் தெரியும். சிதிலமற்ற சித்திரம் ஒன்று கீழே முழந்தாளிட்டு அமர்ந்திருப்பது தெரியும்.

பச்சையம் பூசிய ஒரு பதுங்கு குழி... பளபளக்கும். பாதுகாப்பு சுவர் ஒட்டி நிற்கையில்... பாதாளமும் அழகென்று தான் மனம் நம்பும். எல்லாமே சரிவு தான். சரிவில் தான் பூமியின் நிறைவு இருக்கிறது எனலாம். அள்ளி இரைத்த மரங்களில் எல்லாம் சொல்ல இனிக்கும் காடுகள்.

தலனார் வியூ பாய்ண்ட்

சரி அடுத்து "நம்ம வால்பாறை - ஆரா சார்" கடந்த வாரம் கொடுத்த டிப்ஸின் படி.. தலனார் வியூ பாய்ண்ட் போலாம் என்று முடிவெடுத்திருந்தேன். "கவர்கல்" பனி படரும் பகுதி தாண்டி மேலே இடது பக்கம் திரும்பி மீண்டும் வலது பக்க திரும்ப... பேருந்து நிறுத்தத்தில் இருந்து கீழே படு பாதாளத்துக்கு செல்வது போல குறுகிய பாதை நெளிந்து கிடந்தது. நுழைந்து விட்டோம்.

ஒரு வண்டி மட்டும் தான் போக முடியும். அந்த அளவுக்கு தான் சாலை. வண்டி கீழே இறங்க இறங்க... வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி அல்ல. ஒரு கொலாஜ் சிறகடிப்பு. பார்த்துப் பார்த்து கவனமாக நகர நகர கூடவே இளையராஜா கும்மாளமிட்டுக் கொண்டு வந்தார்.

இயல்புக்கு மாறாக கொஞ்சம் கூடுதல் வெயில். ஆனாலும் காரின் போக்குக்கு காற்றில் இருந்த ஈரத்தை வடிகட்டி வாங்கிக் கொள்ள முடிந்தது.

சாலையில் தடுப்பு சுவரில் நின்று பார்க்கும் பனி படரும் பகுதியில் கீழே இருக்கும் லைன் வீடுகளின் அருகே ஒரு செக் போஸ்ட் இருந்தது. சில பொடியர்கள் கேரம்போர்ட் விளையாடிக் கொண்டிருக்க.. ஒரு பெரிய பொடியர் வந்து... 'இந்தா... இப்ப உங்கள கொல்ல போறேன்' என்பது போலவே பார்த்தார்.

விஷயத்தை சொல்லவும்... எங்கெல்லாம் வியூ கிடைக்கும் என்ற தகவல்களை சொல்லி விட்டு ஒரு ஆளுக்கு 100 ரூபாய் வசூலித்துக் கொண்டார். கார்பன் வைத்து எழுதாத ரசீதை தந்தார். சுற்றுலா மயக்கத்தில் ஆளுக்கு நூறு ரூபாய் என்பதை மறந்திருந்தோம்.

சரி என்று அதே வேகத்தில் வண்டியை மேலே விட்டோம். நிறைய இடங்களில் முதல் கியரில் தான் போக முடிந்தது. சிறு சாலை. குறு வழி. பாதுகாப்பு தடுப்புச் சுவர் அற்ற பாதை ஒரு மலை பாம்பைப் போல நீண்டு நெளிந்து மினுமினுத்துக் கிடந்தது.

அங்கிருந்து இடது பக்கம் திமு திமுவென வளர்ந்து நிற்கும் மலை முகடுகள்... பச்சையம் பூசி தெரிந்தாலும்.. மெயின் சாலையில் போகும் வண்டிகளின் ஒலிப்பான் சத்தங்கள்... எஸ்டேட்டுகள்... வீடுகள்... என்று எல்லாமே தெரிந்தாலும்... நாங்கள் ஏறிக் கொண்டிருக்கும் இடமும் அதற்குச் சமமான மலை உச்சம் தான்.

கிட்டத்தட்ட மலை உச்சியில் தான் பயணமே. மேலே போக...போக வெயிலின் தாக்கம் இன்னமும் தகித்தது. ஆனாலும்.. உள்ளே ஒரு வித மலர்ச்சி. உடல் மேல் சுள்ளெனப் படும் சூரியனைத் தாண்டியும் ஒரு வித குளிர்ச்சி.

எதிரே எந்தவொரு வண்டியும் வந்து விடவே கூடாது என்ற திக் திக் திக். வந்தால்... சைடு கொடுக்க வாய்ப்பே இல்லை. மலை ஏறும் போது வண்டியை நிறுத்தி விட்டால் வண்டி பின்னால் வந்து விட வாய்ப்பு.

அதைத் தாண்டி மீண்டும் முதல் கியரில் மேல் எழுப்ப தடுமாற வேண்டி இருக்கும். அப்படி இப்படி என்று போய்க் கொண்டே இருக்க... இருக்க.. அது காட்டு வழி பயணம் என்பதை விட எப்பக்கமும் சரிந்துக் கிடந்த சோலைகளற்ற தேயிலை காடுகளின் மேல் மினுங்கும் சூரிய துகள்களின்... எதிரொலிப்பு... ஜொலி ஜொலிப்பு எல்லாம் ஆசுவாசம் தான்.

தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறோம். வளைந்து நெளிந்து புகுந்து... நகர்ந்து... உள்ளூறும் திக் திக்கை... நிறுத்தி விட்டு... ஒரு கட்டத்துக்கு மேல் திருப்பி விடலாம் எனும் போது... அடுத்த ஒரு வளைவில்... ஒரு ரிசார்ட் கண்ணில் பட்டது.

திருப்புவதற்கு கொஞ்சம் இடமும் இருக்க... குதி போட்டு வண்டியைத் திருப்பினேன். இனி பிரச்னை இல்லை என்பது போன்ற அமைதி மண்டைக்குள். அங்கிருந்து சுற்றிலும் பார்க்க... பூமி கொஞ்சம் நின்று சுற்றினாலும்.. வாய்ப்பிருக்கிறது.

அப்படி ஒரு இனம் புரியாத ஒரு பறவை மனநிலை. மனிதர்களே அற்ற ஒரு பெருவெளி. சோலைக் காடுகளின் நடுவே கம்பீரமாய் நிற்கும் மலையின் முகட்டில் திடும்மென முளைத்த செடிகளாய் நாங்கள்.

புகைப்படங்கள் சிலிர்க்க சிலிர்க்க... மன படங்கள் கிளிக்கிக் கொண்டே வந்தன. எதிர் பார்த்தபடியே... திரும்புகையில் இரண்டு கார்கள் எதிரே வந்து விட உயிர் போய் உயிர் வந்தது காருக்கு. உள்ளே கியர் மாறி கிர்ரானது எனக்கு. நகர்த்தி நகர்த்தி.. பின்னால் முன்னால் என்று அசைத்துக் கொஞ்சம் சைடு கிடைக்க ஒரு பொம்மலாட்டம் நிகழ்த்தி ஒன்றையொன்று கடந்தோம்.

நாங்கள் மலையை விட்டு வந்தாலும் மலை எம்மை விடாமல் பற்றிக் கொண்டிருந்ததை உணர உணர மீண்டும் உயரே... மனது.

கீழே அதே செக் போஸ்ட். பார்த்துக் கொண்டே... யோசித்துக் கொண்டே வந்து கேட்டை திறந்தபடியே "அந்த ரசீதை குடுங்க... பாரஸ்ட்காரங்க கேப்பாங்க" என்றார் அந்த பொடியர்.

பொடியர் என்னவோ தில்லுமுல்லு செய்கிறார் என்று புரிந்து விட்டது. எதுக்கு ஏன் என்று சில கேள்விகள் கேட்கவும்.. "சரி சரி.. கொண்டு போங்க... உங்ககிட்ட... கேட்டா காட்டுங்க" என்று சொன்னார். சரி என்று சொல்லி சிரித்துக் கொண்டே கேட்டை தாண்டி மெயின் சாலைக்கு வந்து மீண்டும் வால்பாறை நோக்கி பயணம்.

சீரான வேகம். கார்வர் சிலையில் ஏதோ வேலை நடக்க... பார்த்துக் கொண்டே நகர்ந்தோம். கிட்ட நெருங்க முடியவில்லை.

பனி படரும் பகுதி இம்முறை வெயில் சுடரும் பகுதி.

பாலாஜி கோயில்

அடுத்து... நாப்பதாவது கொண்டை ஊசி வளைவில் வலது பக்கம் திரும்பாமல்... நேராக பாலாஜி கோயில் சாலையில்... அதாவது கருமலை சாலையில் வண்டியை விட்டேன்.

கருமலை வரை சாலை அட்டகாசமாக இருக்க... அதற்கு மேல் அக்காமாலை சாலையில் மேலேற மேலேற அதே குறுகிய வளைவு நெளிவுகள் தான். கருமலை இரண்டாவது டிவிஷனில்... எங்கள் ஆனந்தண்ணன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு மேலே நடக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து பாலாஜி கோயில் கொஞ்ச தூரம். நாலைந்து வளைவுகள். சிறுவயதில் நடந்தது.

பழைய நினைவுகள்... பல்லக்கில் நகர... நானோ சொல்லற்று நடந்தேன். மேலே நடக்க நடக்க கீழே சரிந்து கிடக்கும் தேயிலைக் காடுகளின் வண்ணத்தில்... வெயில் தான் பிரதானம். ஒரு இயல்பான வெறுமை அங்கே நிலவிக் கிடந்ததை உலவ மறந்த மரங்களின் தனிமையில் உணர்ந்தேன்.

ஒரு வளைவில் நாங்கள் எதிர்பார்க்காத செக்போஸ்ட் இருந்தது. "உள்ளே விட முடியாது. மூன்று மணிக்கு தான் கோயில் திறப்பு" என்றார்கள். ஐயோ என்று ஆனது. மணி 1 தான். 3 வரை எப்படி இருக்க. சரி என்று அங்கேயே அமர்ந்து... கொண்டு வந்திருந்த பிரியாணியை நிறுத்தி நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு கீழே இறங்கி விட்டோம்.

பாலாஜி கோயில்... குருக்கள்.. விஜயராகவன் சாருக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம். எதற்கு தொந்தரவு என்று விட்டு விட்டேன். விஜயராகவன் சாருக்கு ஒரு வேண்டுகோள். கீழேயிருந்து மேலே கோயில் வரை சாலை நன்றாக இல்லை. கல்லும் குழியுமாக மிரட்டுகிறது. நிர்வாகத்திடம் பேசி... அதை சீர் அமைத்தால்... வரும் பக்தர்களுக்கும் சுற்றுலாக் காரர்களுக்கும் வசதியாக இருக்கும் என்பது... தாழ்மையான கருத்து.

வெள்ளைமலை டன்னல்

அடுத்து அங்கிருந்து வெள்ளைமலை டன்னல் வழியாக நீரார் டேம்- க்கு பயணம். இந்த மலையில் நான் இப்போது தான் முதல் முறையாக சுற்றுகிறேன். நெடுஞ்சாலைப் பலகையின் வாயிலாக நீரார் டேம் - ன் வழியும்... கிலோமீட்டரும்... போகும் தூரத்தை இலகுபடுத்த... வண்டியை வண்டென விட்டேன். பூக்கள் தேடும் புதிர்தனம் எமக்குள். சாலை பல இடங்களில் சாலையாக இல்லை.

கட்ட வண்டியில் போகிற பீல் பல இடங்களில். அதே குறுகிய சாலை. அந்த மலையில் இருந்து மீண்டும் மலையேற நான் வால்பாறையில் இருப்பதாகவே நம்பவில்லை. வேறு ஏதோ ஒரு மலை மேல் சென்று கொண்டிருக்கிறோம் என்று தான் தோன்றியது.

பொள்ளாச்சியில் இருந்து வருகையில்... வாட்டர் பால்ஸ் அருகே வருகையிலேயே தெரியும் அக்காமலை புல்வெளி மலையைத் தொட்ட மாதிரி அடுத்து இருக்கும் மலைகள் என்று நினைக்கிறேன். சிறுகுன்றா தாண்டுகையில்... சில இடங்களில் சமதளத்தைக் காண முடிந்தது.

சுளீர் என பொத்தி வைத்திருந்த கொத்து காத்து வெளியேறி மேலே பட்டது போன்ற புரிதலை உணர்ந்தேன். அடுத்த வளைவில் வெள்ளமலை டன்னல்... ஊருக்குள் நுழைந்த வழியில்... சிறு உட்பிரிவில் அமைதியாய் ஒளிந்திருந்தது. அந்த இரும்பு தொங்கு பாலத்தில் நடக்கையில்... வலது பக்கம் வாய் திறந்து ஆவென பார்த்துக் கொண்டிருந்த நீரற்ற டன்னல்...ஓர் அரூப வளையத்துக்குள் தன்னையே சுருட்டிக் கொண்டிருந்தது போல இருந்தது.

வானத்தில்... வெளிச்சத்துக்கு பதில் வானவில் தான் கொட்டியது. மேலிருந்து கொட்டும் சிறு நீர்வீழ்ச்சி பார்த்து பக்குவமாய் பதறாமல் சிதறிக் கொண்டிருந்தது. தொடர்ந்து பாறை மேல் விழும் அந்த சிற்றோடை சத்தத்தில்... வனத்தின் வகை வகையான தத்துவங்கள். வெயிலுக்கு இதம் நீர். நீருக்கு ஏது நித்திரை. யுத்தம் மறந்த பொழுதும் சித்தம் நிறைந்த பொழுதும் அது.

நீரார் டேம்

அங்கிருந்து காஞ்சமலை வழியாக... செல்லச் செல்ல மலையின் பிற்பகுதியில் சுழன்று கொண்டிருப்பதை உணர முடிந்தது. குண்டும் குழியுமான சாலையில் வெயில் குட்டைகளாய் நிரம்பிய இருந்தன.

கேட்டுக் கேட்டு செல்ல ஒரு வழியாக நீரார் டேம் முகப்புக்கு அருகே சென்று விட்டோம். மூன்று பேர் கொண்ட அதிகாரர்கள் அமர்ந்திருக்க... கேட் திறந்திருந்தது.

பொதுவாக செக் போஸ்டில் கேட் திறந்திருந்தால் என்ன செய்வோம் மக்களே...!

கேட் திறந்திருந்தால் கடந்துச் செல்லலாம் என்பது தானே பொருள். நான் விசுக்கென்று நுழைந்து விட்டேன். லாரி நிறைய டேஷ் மரங்களைக் கடத்திக் கொண்டு செல்பவனை விரட்டி நிறுத்துவது போல காட்டுக் கத்து கத்தினார் ஒரு அதிகாரர்.

"நாங்க வேலை பொழப்பில்லாமலா இங்க உக்காந்துருக்கோம்..." கத்தலின் தொடர்ச்சியாக உலகை காக்கும் ரட்சகன் போலச் சத்தமாக கேட்டு விட்டு... விட்டால் வந்து எட்டி மூஞ்சியில் மிதித்து விடுவார் போன்ற பாவனையில் அடுத்து துப்பாக்கியை எடுத்து நீட்டி விடுவார் போலப் பார்த்தார்.

ஒரு நல்ல நாளை இந்த ஆத்திரர்களிடம் அடகு வைத்து விட கூடாது என்று எப்பவும் எகிறிக் கொண்டு வரும் யுத்தனைக் காருக்கடியில் போட்டு அடைத்து விட்டு... ஒரு குடும்ப தலைவனாக... இந்த ட்ரிப் - ன் லீடராக "சாரி" என்று முடித்துக் கொண்டேன்.

"நாட் அலோவ்ட்" என்பதற்கு தான் இத்தனை பில்ட் அப்.

எங்களுக்கு பின்னால் இரண்டு மோட்டார் பைக்.. இரண்டு கார். சோர்ந்த முகத்தில் திரும்பினோம்.

நாட் அலோவ்ட் என்று ஒரு போர்ட் வைத்து... கேட்டை இழுத்து கீழே மூடி வைத்திருந்தால்.. வரும் சுற்றுலாக்காரர்கள் புரிந்துக் கொண்டு வண்டியை நிறுத்தி... கேட்பார்கள். அதை விட்டு... சுற்றுலாக்காரர்களிடம் காட்டிலாக அதிகாரர்கள் நடந்து கொண்ட விதம்... அருவறுக்கத்தக்கது.

வீரப்பன் வேட்டையில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தான் உலகத்துக்கே தெரியுமே. அவர்கள் ஈகோவை தொட்டு... பிறகு அங்கேயே மரத்தில் கட்டி வைக்கப்பட நேரிட்டால் இந்தக் கட்டுரையை எவன் எழுதுவது. அதான் மூடிக் கொண்டு வந்து விட்டேன்.

அதிகார வர்க்கத்தின் வடிவம் எல்லா காலக் கட்டத்திலும் ஒரே விதமான திமிர் என்ற அடையாளம் பூசித்தான் இருக்கிறது. கேட் திறந்திருந்தால் கூட இறங்கி சென்று 'அய்யா சாமி கும்புடறேங்க' என்று கை கட்டி வாய் பொத்தி அனுமதி கேட்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை.

அத்தனை ஈர மரங்கள் நடுவே காய்ந்துப் போன மனதோடு அவர்கள் வேலை பொழப்பில்லாமல் தான் இருந்தார்களா என்றும் சத்தியமாக தெரியவில்லை.

சரி என்று அங்கிருந்து கிறுக்குப் பிடித்த கணவானுக்கு மண்டையில் மயிறு கொட்டியது போல கிளம்பினேன். கூழாங்கல் ஆறு... கொதிக்கும் வெயிலில் குறுகிக் கிடந்தது. ஆற்றில் நீர் இல்லை. விசாரித்ததில் நடுமலையில் எதன் பொருட்டோ நீரை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

வந்ததற்கு பிரெட் ஆம்லெட் சாப்பிட்டு விட்டு நீர் மூடாத கூழங்கற்களை கண்டு அதன் மீது நின்று.. வெயிலைத் தொற்றிக் கொண்டிருந்த வித்தைகளை எல்லாம் வெற்றிடத்தில் கண்டெடுத்தோம்.

அடுத்து.. இருக்கவே இருக்கு... யாரின் அனுமதியும் தேவை இல்லை. சோலையார் டேம். நீர் இல்லை. நிரம்ப வெறுமை தான். இருந்தும்... மெய்மறந்து வெயில் கரந்தோம். நீண்ட வருடங்களுக்கு பின் சாம்பல் பழம் சாப்பிட்டோம்.

பிறகு மெல்ல சோலையார் அணைக்கு ரகசியமாய் பாய் சொல்லி விட்டு உருளிக்கல் நோக்கி பயணப்பட்ட நாங்கள்... எங்கள் வீட்டில் தேநீர் அருந்தி விட்டு அதன் பிறகு.... பொள்ளாச்சி நோக்கி பயணித்தோம்.

பழைய வால்பாறைக்கும் வரட்டுப்பாறைக்கும் இடையே ஒரு யானை... தன் குட்டியோடு தேயிலை ஒந்தியில் நிற்பதைக் கண்டோம். அமைதியாய் மென்று கொண்டிருந்தது. நிறை கொண்ட பிரம்மாண்டம் அமைதியாகத்தான் இருக்கும். வெற்றுத் தோரணை தான் நாய் போல கத்தும்.

பழைய வால்பாறையில் இருந்து ரொட்டிக்கடை சாலையில்... பொள்ளாச்சி நோக்கி வண்டியை விட... அதன் பிறகு இரவு சூழ்ந்தச் சாலையில்.... ஒளி பாய்ச்சிக் கொண்டே வந்த போது எல்லாருக்குள்ளும் சோர்வு. எனக்குள்ளோ ஒரு மலை உச்சி தியானம்.

- கவிஜி