valparai bendsஎத்தனை முறை போனாலும்... அந்த 9 வது வளைவில்.. கண்கள் அலைமோதும்.

பேருந்தில் போனால் எட்டிப் பார்க்கும் மனது. காரில் போனால் கிட்டப் பார்க்கும் கண்கள். பைக்கில் போனால்... நின்று புகைப்படம் கூட எடுக்கும் ஆசை. ஒவ்வொரு முறையும் சலிக்காத உயரம் அது. இதை அநேகமாக ஒவ்வொருவருமே உணர்ந்திருப்போம். 9 வது கொண்டை ஊசி வளைவு என்பது ஒரு கழுகுப் பார்வையைக் கொண்ட கவசம்.

அங்கிருந்து தெரியும்.. பரந்து விரிந்த கீழ் பரப்பில்... மேகம் மறைக்காத மெய்ம் மறத்தல் நிகழும். அதுவும் அங்கு நிற்கையில்... அங்கும் இங்கும் நடந்து பரபரக்கையில்... மந்தகாச காற்று மருண்டு திரண்டால்... அது சுவர்க்கத்தின் வாசல்படி. கொஞ்சம் சொக்கித்தான்... மேலே படி.

பாதுகாப்பு வளையச் சுவர் எல்லாம் இப்போது தான்... கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு முன்... அது ஒரு வியூ பாயிண்ட் என்று கூட பெரும்பாலும் தெரியாத காலக் கட்டம் தான். அது கொஞ்சம் அபாயகரமான வளைவு. அந்த இடம் வரும்போது.. ஆச்சரியமும் இருக்கும். கொஞ்சம் உள்ளே திக் திக்கும் இருக்கும்.

அங்கிருந்து பார்த்தால் பொள்ளாச்சி வரை கடுகு கடுகாகத் தெரியும் என்பது கண் வழி செய்தி. ஒவ்வொரு முறை பேருந்து திரும்புகையிலும் எட்டி நாமும் வளைந்து பேருந்தோடு சாய்ந்து பார்த்து எத்தனையோ முறை பரவசம் கொண்டிருக்கிறோம்.

எப்போது நினைத்தாலும்.. ஆழ்மனதில் அழகாய் வளையும் வரைபடம் 9 வது கொண்டை ஊசி வளைவு. சிறுவயதில்... அதே வளைவில் பேருந்து கவிழ்ந்து விட கூடாது என்று பயந்துக் கொண்டே ட்ரைவரையே பார்த்துக் கொண்டு கம்பியைக் கெட்டியாக பிடித்தபடி அமர்ந்திருந்ததும் நடந்திருக்கிறது.

அப்படியே கொஞ்சம் மேலே நகர்ந்தால் 10 வது கொண்டை ஊசி வளைவு தாண்டி 11...12 என்று 13 வது கொண்டை ஊசி வளைவுத் தாண்டினால்... இன்னொரு மலைக்குள் நாம் செல்வோம்.

மலையொட்டி இருக்கும் அடுத்த அடுக்கில் அல்லது மலையின் மறுபுறத்தின் ஆரம்பத்தில்... நாம் இருப்பதை உணர முடியும். கொஞ்ச தூரத்தில் அட்டகட்டி வந்து விட அதன் பிறகு மலை இறங்குதல் நிகழும்.

ஆக 9 வது கொண்டை ஊசி வளைவு ஆச்சரியம் என்றால் 13 வது கொண்டை ஊசி வளைவு அவசியம்.

3 வது கொண்டை ஊசி வளைவில் மழைக் காலங்களில் கற்கள் விழும். அங்கே 'இது கற்கள் விழும் பகுதி' என்று கூட எச்சரிக்கை பலகை பார்த்த நினைவு.

இன்னமும் ஒவ்வொரு முறையும்.. என்னை இனம் புரியாத வசீகரத்துக்கு இழுத்துச் செல்லும் இந்த 3, 9, 13 வது கொண்டை ஊசி வளைவுகள்... புதிர் நிறைந்தவை. அதே நேரம்... புத்தியில் நிறைந்தவை.

- கவிஜி

Pin It