pebble riverஉருளிக்கல்லில் (வால்பாறையில் ஒரு எஸ்டேட் ) இருந்த போதெல்லாம் இந்தக் கூழாங்கல் ஆற்றுக்கு நான் போனதே இல்லை. கோவை வந்த பிறகு அதுவும் கடந்த வருடம் ஒரு சுற்றுலாக்காரனாக அங்குச் செல்ல நேர்ந்தது. ரம்மியம்.. அந்தச் சாலையில் நுழைகையிலேயே உணர்ந்தேன்.

என்னால்.. மற்ற சுற்றுலாவாசிகள் போல இயல்பாக இருக்க முடியவில்லை. இனம் புரியாத சொந்தம் கொண்டாடும் மனநிலையோடு... 'அன்பான டூரிஸ்டுகளே... இது எங்க ஊர் ஆறு' என்று கத்திச் சொல்ல வேண்டும் போல தோன்றியது.

நண்பர்கள் ஆற்றுக்குள் கொஞ்சமாக இறங்கி கணுக்கால் அளவுக்கு நீர் பட நின்று... நீரள்ளி வீசி... கூழாங்கல் தேடி... எடுத்துப் பார்த்துச் சிலு சிலு சிலுவென அடிக்கும் சித்திரத்தின் வழி நிரவும் காற்றை நிம்மதிக்கு மாற்றாக்கி உணர்ந்தார்கள்.

நான் ஒரு ஆதி மனிதனின் ஆசையோடு கரையோரம் நடந்தபடியே அங்கும் இங்கும் மனதால் நனைந்தேன். மாலை நேரம்.. மதி மயங்க மேகம் சூழ்ந்து கிடந்தது. சாலையோரம் பிரெட் ஆம்லெட் வாங்கி சாப்பிட்டோம்.

எங்கிருந்தோ நகரும் ஆற்றின் சுவடுகளின் ஆரம்பம் எங்குமே இல்லை. எல்லாமே அதனுள் உருண்டு கொண்டே இருக்கும் கூழாங்கற்களின் முணுமுணுப்பில் இருப்பதாக நம்பினேன்.

திரும்புகையில்... திரும்புகிறேன் என்று நம்ப மறுத்தேன். நின்று ஒரு முறை என்னையே களைந்துப் பார்த்தேன். சாலைக்கு அந்த பக்கம்... அந்த பாலத்துக்கு அந்தப் பக்கமிருந்து வரும் ஆற்றின் முகத்தில்... அயற்சியே இல்லை. அதிரூபம் மட்டுமே.

- கவிஜி

Pin It