பிறந்த குடி மறக்காம
பறையடிக்கிறான் முனியாண்டி...
படிச்சு பட்டம் வாங்கி வந்தாலும்
குடிக்கிறது கடைல தனி டம்ப்ளர் டீ... 
 
மேலவளவு உத்தப்புரம்
பாப்பாபட்டி கீரிப்பட்டி
தாமிரபரணி கண்டதேவி
எல்லாமே சினிமா பேரு மாதிரி
இருந்தாலும் கீழ்சாதி சரித்திரம்
பேசும் உண்மை படங்கள்...
 
ஆயிரம் படத்துக்கு இசை அமைத்தாய்
அன்னசத்திரம் ஆயிரம் வைய்த்தாய்
குடமுழுக்கும் கும்பிடும்
தமிழ் பாயிரமும்
தேவாரத்தேன் தமிழும்
நீ இசைக்காத தேது....
 
சிம்பொனியில் சிலிர்த்து
உன் இசைப்பயணம் சிறகடித்துப்
பறந்தது...
 
நீ கட்டாத கோயிலா?
நீ எழுப்பாத மண்டபமா?
ஏழு ஸ்வரக்கணக்கில்
ஸ்ரீரங்கத்தின் ஏழாவது
கோபுரம் எழுப்பினாய்
 
நீ இசை அமைத்த
பாடல்களைக் கேட்ட
காதுகளல்லவா
கிழிக்கப்பட்டிருக்கவேண்டும்
ஆனால் கோபுரம்
கோமியத்தில் சாணி கறைத்து
ஏன் கழுவப்பட்டது...?
 
 நம்ம அக்கா சீலைக்காரி* போட்ட பிச்சை
நம்ம உடம்பும் இந்த இசையும்
இன்று நம்ம சகோதரிங்க
சீலை கிழிய நிக்கிறாங்க
பிரியங்காவும், சுரேகாவும்
கயர்லாஞ்சில....
நாம இசையை வச்சு
போர்வை பொத்த முடியுமா
( *சீலைக்காரி - உயிரைக் கொடுத்து தம்பிகளைக் காப்பாற்றிய சகோதரி - அவளின் வழித்தோன்றல்கள்தான் நானும் இளையராஜாவும்)
 
சேரி நாய் ரூபிகூட* 
உசந்த சாதி ஆளைப்பாத்தா
வாலை ஆட்டி நாக்கை மடக்கணும்...
இல்லையின்னா வீடுகள் சேரியில் எரியும்...
கட்டிடங்கள் தானாய் சரியும்...
(* மிர்சாபூர் நிகழ்ச்சி)
 
உன்னைப்போல சாதனை
எவனும் செஞ்சதில்லை
இருந்தாலும் போகுமா
உன் மேல படிஞ்ச கரை...
உன் நெத்தி சந்தனமோ, சாம்பலோ
உன்னை உசத்தி விட்டுருமா 
 
எத்தனயோ பேரு நம்ம சனம் 
தத்தமது தொழிலினில்
எட்டி உயரப் பறக்கிறாங்க 
ஆனா நம்ம பிணத்த மட்டும்
ஏன் தனிசுடுகாட்டுல எரிக்கிறாங்க....  
 
இதை எல்லாம் பாத்துட்டு
சும்மா ராகம் பாட என்னால் முடியல
நான் செத்த பின்பு  என்கட்டை வேகாது
உன்னோட இசையால எத்தனயோ சாதனை
செய்தாய்.
இந்த செத்த உடம்பு
தனிசுடுகாட்டுக்கு
போகும்போது
நல்லா எரிய ஒரு ராகம் பாடு...
 
என் ஆத்தா சின்னாத்தாயிக்கும்
என் சின்ன அண்ணன்
அமரனுக்கும்
உனக்கும்
என்தம்பி கார்த்திக்குக்கும்
யுவனுக்கும்
இந்த பாட்டு தான்
கடைசி வரை உறவு...
 
அப்படி பாடு  ஒரு ராகம்
அது ஆகட்டும்
நம் தேசிய கீதம்...  
 
- ஆரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It