கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு முற்றிலும் பிரதேசவாரியாக அமைந்த வாக்காளர் தொகுதிகள் ஏற்புடையவை அல்ல என்பதை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்துக்கள் ஏற்றுக் கொண்ட னர். உண்மையிலேயே பிரதிநிதித்துவம் வாய்ந்த சட்டமன்றங்களை உருவாக்கக் கூடிய பிரதேசவாரியான வாக்காளர் தொகுதிகளா, வகுப்புவாரி வாக்காளர் தொகுதிகளா என்பது குறித்த சென்ற இயலில் நடைபெற்ற சர்ச்சை ஒருவிதத்தில் பார்த்தால் அவசியமற்றதே ஆகும்.

ambedkar 408எனினும் இந்த சர்ச்சைக்கு ஆதாரமாக உள்ள அடிப்படைக் கண்ணோட்டங்களை இந்திய அரசியல் நிலைமைகள் குறித்து அறியாத அயல்நாட்டவர் தெரிந்திருக்க வேண்டும் என்பதாலேயே இந்த சர்ச்சையில் இருதரப்பினரது வாதங்களையும் எடுத்துரைத்தேன். ஆனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவான அடிப்படைவாதத்தை இந்துக்கள் ஏற்றுக் கொண்டாலும், தீண்டப்படாதோர் முன்வைக்கும் எல்லாக் கோரிக்கைகளையும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் ஏற்கவில்லை. தனிவாக்காளர் தொகுதிகள் மூலம் சட்டமன்றங்களில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தீண்டப்படாதோர் கோருகின்றனர். தனித்தொகுதி என்பது என்ன? தனித்தொகுதி என்பது முற்றிலும் தீண்டப்படாதோர் வாக்காளர்கள் அடங்கிய தொகுதியாகும்; இந்த வாக்காளர்தான் ஒரு தீண்டப்படாதோரை சட்டமன்றத்திற்குத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், சட்ட மன்றங்களில் தீண்டப்படாதோருக்கு சில குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள இடங்களை ஒதுக்குவதற்கு இந்துக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் சட்டமன்றங்களில் தீண்டப்படாதோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தீண்டப்படாதோர் முற்றிலும் தீண்டப்படாதோரைக் கொண்ட தனிவாக்காளர் தொகுதியால் அல்லாமல், இந்துக்களையும், தீண்டப்படாதோரையும் கொண்ட கூட்டுத் தொகுதியால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். வேறுவிதமாகச் சொன்னால் கூட்டுத் தொகுதியா, தனித்தொகுதியா என்பது குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை எழுகிறது.

இங்கும் இந்த சர்ச்சையின் சாதக பாதங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன். தனித்தொகுதிகள் என்பவை நாட்டை சிறுசிறு கூறுகளாகத் துண்டாடிவிடும் என்று இந்துக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கன பதில் தெள்ளத்தெளிவானது. முதலாவதாக, தேசம் என்ற சொல்லின் உண்மையான பொருளில் இந்தியர்களின் தேசம் என்று ஏதுமில்லை; இனிமேல்தான் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். தனித்த வேறுபட்டதொரு சமூகத்தை ஒடுக்குவது ஒரு தேசத்தை உருவாக்கும் உபாயமாகாது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

இரண்டாவதாக, சட்டமன்றத்தில் தீண்டப்படாதோருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்துக்களும் ஏனையோரும் ஒப்புக் கொண்டிருக்கும்போது, அவ்வாறு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் தீண்டப்படாதோர், தீண்டப்படாதவர்களின் உண்மையான பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது ஒரு சரியான, பிழையற்ற நிலைப்பாடு என்றால், தீண்டப்படாதோருக்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை உத்தரவாதம் செய்யக்கூடிய ஒரே மார்க்கம் தனி வாக்காளர் தொகுதி முறையேயாகும் என்பதில் எள்ளள்வும் ஐயம் இருக்க முடியாது. தனித்தொகுதிக்கு எதிராக இந்துக்கள் முன்வைக்கும் வாதம் ஆழமற்றது, ஆதாரமற்றது, நிலைத்து நிற்க முடியாதது. தீண்டப்படாதோரின் அரசியல் கோரிக்கைகள் எந்த வாத ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளனவோ அந்த வாத ஆதாரங்களை இந்துக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

தனித்தொகுதி என்பது இந்த வாத ஆதாரங்களிலிருந்து கனிந்த கனியே தவிர வேறன்று. அப்படியிருக்கும்போது இந்த வாத ஆதாரங்களை ஏற்றுக் கொண்டுவிட்டு, அவ்ற்றின் விளைவை மட்டும் எப்படி மறுக்க முடியும்? சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கே விசேடத் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவ்விதம் இருக்கையில் தீண்டப்படாதோர் போன்ற ஒரு சிறுபான்மையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு எவ்வகையான வாக்காளர் தொகுதி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள அவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது? தனித் தொகுதிகள் வேண்டுமெனத் தீண்டப்படாதோர் தீர்மானித்தால் அதை ஏன் ஏற்கக் கூடாது? இந்தக் கேள்விகளுக்கு இந்துக்களால் பதிலளிக்க முடியாது. ஏன்? ஏனென்றால் தனித்தொகுதிகளை இந்துகள் எதிர்ப்பதற்கு உண்மையான காரணம் தேசம் என்ற பெயரால் அவர்கள் முன் வைக்கும் வெளிப்பகட்டான காரணத்திலிருந்து வேறுபட்டதாகும்.

தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை இந்துக்கள் கைப்பற்றிக் கொள்ள தனித்தொகுதி அனுமதிக்காததே அவர்களது எதிர்ப்புக்கு உண்மையான காரணம். ஆனால் கூட்டுத்தொகுதிகளோ இதை அனுமதிக்கின்றன. தேர்தலின்போது கூட்டு வாக்காளர் தொகுதியும், தனி வாக்காளர் தொகுதியும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு இங்கு சில உதாரணங்களைக் காட்ட விரும்புகிறேன். சென்னை மாகாணத்திலுள்ள பின்கண்ட தொகுதிகளை எடுத்துக் கொள்ளவோம்.

மாகாணத்தின் பெயர்

 

இந்துக்களுக்கான மொத்த இடங்கள்

தீண்டப்படாதவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள்

மொத்த இந்து வாக்காளர்கள்

மொத்த தீண்டப்படாத வாக்காளர்கள்

இந்துமற்றும் தீண்டப்படாதவாக்காளர்களிடையே உள்ள சதவீதம்

சென்னை தென்சென்னை

2

1

40,626

2,577

16-1

சிகாகோல் 2 1 83,456 5,125 16-1

விஜயனா கிராமம்

2

1

47,594

996

49-1

அமலாபுரம் 1 1 52,805 7,760 7-1
எல்லூர் 1 1 51,795 5,155 9-1
பந்தர் 1 1 84,191 8,723 10-1
தெனாலி 2 1 1,32,107 5,732 24-1

மேலே கண்ட அட்டவணையில் சென்னை மாகாணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை தரப்பட்டிருக்கிறது. மேற்கண்ட பட்டியலை கூர்ந்து நோக்கும் நியாயம் உள்ளம் படைத்த எவரும் இந்த ஏழு தொகுதிகளில் தீண்டப்படாதோருக்கு தனி வாக்காளர் தொகுதி இருக்குமானால், தீண்டப்படாதவர் தங்களது முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சட்டமன்றத்தில் இந்துக்களின் பிரதிநிதிகளை எதிர்த்து சுதந்திரமாகப் போராடக்கூடியவருமான ஒருவரைத் தமது பிரதிநிதி தேர்ந்தெடுத்து அனுப்புவது சாத்தியமாகும் என்பதை உணர்வர். ஆனால் அதேசமயம் இத்தொகுதிகள் கூட்டு வாக்காளர் தொகுதிகளாக இருக்குமானால் தீண்டப்படாதவரின் பிரதிநிதி பெயரளவான பிரதிநிதியாகவே சாத்தியமாகும் என்பதை உணர்வர்.

ஆனால் அதேசமயம் இத் தொகுதிகள் கூட்டு வாக்காளர் தொகுதிகளாக இருக்குமானால், தீண்டப்படாதவரின் பிரதிநிதி பெயரளவான பிரதிநிதியாக இருப்பார்; அவர்களுடைய உண்மையான பிரதிநிதியாக இருக்க மாட்டார்; ஏனென்றால் தீண்ப்படாதோர் இனத்தைச் சேந்த வாக்காளர்கள் இந்து வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது 24க்கு 1 என்ற விகிதாசாரத்தில் அல்லது சில சந்தர்ப்பங்களில் 48க்கு 1 என்ற விகிதாசாரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள கூட்டுத் தொகுதியில் இந்துக்களால் நியமனம் செய்யப்பட்டு அவர்களுடைய கைக்கருவியாக இருப்பதற்கு இணங்காத தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் வெற்றிபெற முடியாது.

கூட்டுத் தொகுதி என்பது இந்துக்களின் கண்ணோட்டத்தில் ‘அது அவர்களது பாக்கெட் தொகுதி'யாகும்; தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை பெயரளவுக்கு தீண்டப்படாதோரின் பிரதிநிதியாக நியமிப்பதற்கு இந்துக்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது; ஆனால் உண்மையில் அந்தப் பிரதிநிதி இந்துகளின் கைப்பொம்மையாகவே இருப்பார். தீண்டப்படாதோரின் வகுப்புவாரித் திட்டத்தை தங்களது தேசியத் திட்டம் எனப்படுவதைக் கொண்டு எதிர்ப்பதை அவர்கள் ஏதோ ஒரு கோட்பாட்டுக்காகப் போராடுவதாகவோ அல்லது தேசத்திற்க்காகப் போராடுவதாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவே போராடுகிறார்கள். அரசியல் அதிகாரம் முழுவதும் தங்கள் கைகளில் இருக்க வேண்டும் என்று அவர்கள் போராடுகிறார்கள். இந்துக் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் போன்று அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்துக்கள் விரும்பவில்லை.

இது அவர்களது முதல் பாதுகாப்பு அரண். அதனால்தான் அவரகள் முற்றிலும் பிரதேசவாரியான வாக்காளர் தொகுதிகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள். இந்த முயற்சி தோல்வியடையும்போது அவர்கள் இரண்டாவது பாதுகாப்பு அரணை நாடுகிறார்கள். அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின், அதிகாரத்தின் மீது தங்களுக்குள்ள பிடியை இழந்துவிடாமல் இருக்கப் பாடுபடுகிறார்கள். இதனை கூட்டுத் தொகுதிகள் மூலமே சாதிக்க முடியும். எனவேதான் இந்துக்கள் தனித் தொகுதிகளை எதிர்க்கிறார்கள்; கூட்டுத் தொகுதிகளை ஆதரித்து நிற்கிறார்கள்.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 5)