john lewisஅமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக உரிமைக்காகப் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் போன்றோர்களின் வரிசையில், தான் வாழ்நாள் முழுவதும் கருப்பின மக்களுக்காக மட்டுமல்லாமல், சிறுபான்மையின மக்களாக இருக்கும் அமெரிக்கப் பூர்வக்குடிகள், இலத்தீன் அமெரிக்க மக்கள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் போன்றோர்களின் சம உரிமைக்காகப் போராடிய, சமூக உரிமை காவலர் தான் ஜான் லூயிஸ். 'Stage 4 pancreatic cancer' என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த வெள்ளி இரவு (ஜூலை 17) அலபாமா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 80.

1940ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அலபாமா மாகாணத்தில் உள்ள ட்ராய் எனும் சிறிய கிராமத்தில் அவர் பிறந்தார். தன்னுடைய சிறுவயதில் கருப்பின மக்களை பிரித்து தனியாக வைத்திருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். சிறுவனாக இருக்கும் போது அவருக்கு மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது.

தனது இளமைக் காலத்தில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வானொலி உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த அவர், மார்ட்டின் லூதர் கிங்கின் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. தன்னுள் எழுந்த போராட்டங்களுக்கு வித்திட்டவர்களாக டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கையும், ரோசா பார்க்ஸ் அவர்கள் இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.

அலபாமா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்த முதல் கருப்பின மாணவரும் இவர்தான். அந்த இடமும் சாதாரணமாக அவருக்குச் சேர்க்கையும் கிடைத்து விடவில்லை, அதற்காக டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் ஆதரவை திரட்டினார். அப்போது, கல்லூரியிலும் நிற வேறுபாடுகள் அதிகம் காணப்பட்டது.

john lewis4பின்னர் டென்னிசி மாகாணத்தில் உள்ள Fisk University in Nashville என்ற பல்கலைக் கழகத்தில் 'American Baptist Theological Seminary' என்ற இறையியல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கும் காணப்பட்ட நிறவெறி பாகுபாடு அவரைப் பெரிதும் மாற்றியது. பல்கலைக் கழகத்தில் உள்ள உணவகங்களில் வெள்ளை நிற மாணவர்களுக்கு மட்டுமே இருந்தச் சேவையை எதிர்த்து உள்ளிருக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.

நிறவெறிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக் கொண்ட அவரை போலீசார் பலமுறை அடித்துக் காயப்படுத்தி இருக்கிறார்கள்.

1963ஆம் ஆண்டு வெள்ளை நிற ஆதிக்கத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்த ஆறு கருப்பு இன ஆளுமைகளுடன் (Martin Luther King,Whitney Young, A. Philip Randolp,James L. Farmer Jr, Roy Wilkins) தொடங்கப்பட்ட Student Nonviolent Coordinating Committee என்ற அமைப்பிற்கு அவர் பெரும் உதவியாக இருந்தார். பின்னர் அவரே அந்த குழுவுக்குத் தலைமை பொறுப்பையும் ஏற்றார். இந்த குழுவில் ஜான் லூயிஸ் தான் இளமையான நபர் ஆவார். அவர்கள் ஆறு பேரும் நியூயார்க் நகரில் ஒரு விடுதியில் தங்கி, தலைநகர் வாசிங்டன் டிசியில் மக்களைத் திரட்டி ஒரு பேரணி நடத்த திட்டமிட்டார்கள்.

திட்டமிட்டபடி கருப்பின மக்களுக்குச் சம உரிமைக்காக பேரணி நடந்தது இறுதியில் கூட்டத்தில் உரையாற்றிய ஜான் லூயிஸ் "இன்றைய பேரணியில் அமெரிக்காவில் நமக்கு விடுதலையும், சம உரிமைகளும், வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நடத்தினோம். அதனால் நமக்கு எந்த பெருமையும் இல்லை. இன்று நம்மிடையே பல நண்பர்கள் இல்லை. ஆளும் வர்க்கம் நம்மைப் பார்த்துக் கூறுகிறது 'பொருத்திருங்கள் எல்லாம் கூடிய விரைவில் கிடைத்துவிடும்' என்று. நாம் பொருத்தது போதும். எங்களுக்கு படிப்படியாகச் சுதந்திரம் தேவையில்லை. எங்களுக்கு முழு சுதந்திரம் இப்போதே வேண்டும். நாங்கள் பல்வேறு நகரங்களில் நடத்திய பேரணி நடத்தியிருக்கோம், நாம் இப்போது கூற வேண்டியது ஒன்றே, விழித்திரு அமெரிக்கா விழித்திரு" என்றார். ஆனால், அரசாங்கம் அப்போது அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதே கூட்டத்தில் தான் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் 'I have a dream' என்ற சிறப்பு மிக்க உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 15 ஆவது சட்டத் திருத்தம் (15th amendment) 1870 ஆம் ஆண்டில் கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதாக திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், அதிலும் அவர்கள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழங்கப்படுவதாக இருந்தது. ஜான் லூயிஸின் தந்தை மற்றும் தாய் இருவரும் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தங்களின் பெயரை பதிவு செய்த போது, அவர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்கிறார்கள். இதன் தாக்கம் அவரின் மனதில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி கருப்பின மக்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லாமல் ஓட்டுரிமை வழங்க வேண்டும், அதோடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அலபாமா மாகாணத்தில் உள்ள செல்மா என்ற நகரில் உள்ள தேவாலையத்தில் ஆரம்பித்து மாண்ட்கோமெரி (Selma to Montgomery, Alabama’s capital) வரை பேரணி நடைபெறுவதாக இருந்தது.

கருப்பின மக்களுக்காக போராடும் ஆளுமைகள் தலைமையில் சுமார் 600 பேர் கலந்துக் கொண்ட அந்த பேரணி அமைதியாக வன்முறை இல்லாதாக நடைபெற்றது. அதில் ஜான் லூயிஸ் இருந்தார். எல்லோரும் அமைதியாக முழக்கங்களை எழுப்பி நடந்து கொண்டிருந்தார்கள், அலபாமா ஆற்றைக் கடந்து செல்லும் Edmund Pettus Bridge என்ற பாலத்தைக் கடக்கும் போது உள்ளூர் காவல்த்துறை அவர்களை பேரணியை நிறுத்தியது. பேரணியில் இருந்தவர்கள் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

ஜான் லூயிஸ் அருகில் வந்த காவலர் "நான் மேஜர் ஜான் குளவுட் அலபாமா காவல்த்துறையின் அதிகாரி, நீங்கள் நடத்தும் பேரணிக்கு அனுமதி இல்லை, நீங்கள் சட்டத்திற்கு புறம்பாகப் பேரணி நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு மூன்று நிமிடங்கள் தருகின்றேன் அதற்குள் எங்கே இருந்து நீங்கள் புறப்படீர்களோ அங்கு திரும்பி விட வேண்டும்" என்றார். ஆனால், உடனடியாக அந்த அலுவலர் பிற காவலர்களுக்குக் கண்ணீர் புகைக்கான முகக் கவசம் அணிந்து பேரணியில் உள்ளவர்களை அடிக்க உத்தரவு அளித்தார்.

john lewis1ஜான் லூயிஸ் தலையில் பலமான அடி விழுந்தது. (பின்னாளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர் "நான் அன்றைய தினம் இறந்து விட்டதாகவே நினைத்தேன்" என்றார்.) பேரணியை கலைக்க காவல்த்துறை ஒடுக்கியது. அவர்கள் அணைவரும் பேரணி ஆரம்பித்த இடத்திற்கு திரும்பினார்கள். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் தெரிய வந்தது.

பேரணி பாதியில் நிறுத்திவிட்டு தேவாலையத்தில் அவர்கள் கூடினார்கள். அப்போது தேவாலையத்தின் முன்னர் சுமார் 2000 பேர் சூழ்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் ஜான் லூயிஸை பேசுவதற்கு அழைத்தார். கூட்டத்தில் பேசிய ஜான் லூயிஸ் "எனக்கு ஒன்னு புரியவில்லை, அமெரிக்க அதிபர் ஜான்சன் தனது சொந்த நாட்டில் ஓட்டுரிமைக்காக போராடும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், அவர் எப்படி வியட்நாம் நாட்டுக்கு நமது இராணுவத்தை அனுப்புவார்" என்றார்.

அந்த பேரணிக்கு பிறகு தான் பெரும்பாலான அமெரிக்க மக்கள் அனைவருக்கும் சம உரிமைகள் என்பதைப் பற்றி புரிந்துக் கொண்டார்கள். அன்றைய தினத்தை "இரத்த ஞாயிறு" (Bloody Sunday) என்று பத்திரிகைகள் எழுதின. இந்தப் போராட்டத்திற்கு பிறகு எட்டு நாட்கள் கழித்து "Voting rights act 1965" என்ற சட்டத் திருத்தத்தை அதிபர் ஜான்சன் கொண்டுவந்தார்.

அப்போது டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களும் அதிபருடன் மேலவையில் அமர்ந்திருந்தார். அமெரிக்க மேலவையில் 77 பேர் இதற்கு ஆதரவாகவும் 19 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அப்போது இந்த சம்பவம் சமூக உரிமைக்காக போராடிய மக்களின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் திட்டமிட்ட படி அதே சாலையில் பேரணி நடத்திக் காட்டினார் அப்போது கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்து கொண்டார்கள்.

ஜான் லூயிஸின் அரசியல் வாழ்க்கை 1961ல் இருந்து ஆரம்பிக்கிறது. எந்த மாகாணத்தில் தனக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதாக போராட்டத்தில் இறங்கினாரோ அதே மாகாணத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிட்டி கவுன்சில் ஆஃப் அட்லான்டா (நமது பஞ்சாயத்து அமைப்பு போன்றது) பொறுப்புள்ள பதவியில் மக்கள் சேவைகள் ஆற்றினார்.

1986ல் அமெரிக்க காங்கிரஸ் ‌பதவிக்காக ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிலும் வெற்றி கண்டார். தொடர்ந்து 17 முறை காங்கிரஸில் உறுப்பினராக வெற்றிப் பெற்று பதவி வகித்தார். 2006ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாகக் காங்கிரஸில் இந்த சமயத்தில் அக் கட்சியின்  துணை கொரடா (Whip) ஆக செயல்பட்டார். 1960 கானகத்தின் தொடங்கிக் கிட்டத்தட்ட 40 முறைக்கும் மேல் கைதாகியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பின்னரும் அவர் நடத்தியப் போராட்டங்களில் போது ஐந்து முறை, கைது செய்யப்பட்டுள்ளார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று கொண்டிருந்த பாராக் ஓபாமா, ஒருமுறை ஜான் லூயிஸை சந்தித்துள்ளார். அப்போது, "நீங்கள் தான் என் ஹீரோ" என்று ஜான் லூயிஸிடம் ஓபாமா தெரிவித்திருந்தார். பின்னாளில் ஓபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஓபாமாவை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார் ஜான் லூயிஸ், அப்போது ஓபாமா அவருக்கு அளித்த பதில், "உங்களின் பங்களிப்பால் தான் நான் இன்று அதிபராக பதவியேற்றுள்ளேன்" என்றார் ஓபாமா.

2008ல் ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளர் ஓபாமா போட்டியிட்ட சமயம் ஜான் லூயிஸ் முதலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எனினும் தொடர்ந்து ஒபாமாவை கண்காணித்து வந்த ஜான் லூயிஸ், இவர் கருப்பின மக்களுக்குப் போராடுவார் என்று எண்ணிக்கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதிபர் ஒபாமா கையால் 'Medal of freedom 2011'என்ற விருதினை ஜான் லூயிஸ் பெற்றுக்கொண்டார். இது அவருக்கு கிடைத்தக் கௌரவமாக கருதப்பட்டது.

john lewis 3எங்கெல்லாம் அநீதி மறுக்கப்படுகிறது எங்கெல்லாம் சமூக நீதி ஒதுக்கப்படுகிறது அங்கு முதல் ஆளாகக் கருத்து தெரிவித்தவர் ஜான் லூயிஸ் ஆவார். இதற்குச் சான்றாக நாம் பார்க்க வேண்டுமென்றால் 2016ல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற போது அந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தார். "நான் அவரை ஒரு மதிப்புமிக்க முறையான அதிபராக கருதவில்லை. அவர் ஒரு நிறவெறி பிடித்த மனிதர்" என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி மின்னியபோலிஸ் நகரத்தில் வெள்ளை நிற காவலர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டின் காணொளியை பார்த்து இவ்வாறு கூறினார், "நான் என்னைப் பார்த்து கேட்டுக் கொள்கிறேன், இன்னும் எத்தனைக் கருப்பின இளைஞர்களை இப்படிக் கொலை செய்ய போகிறார்கள்?" என்றார். பெருவாரியான மக்கள் 'black lives matter' இந்தப் பதாகைகளுடன் வீதிகளில் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த சமயம். தன்னையும் அதில் இணைத்துக்கொண்டார். அவரது வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் முகக் கவசம் அணிந்தபடி போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்.

ஜான் லூயிஸ் கருப்பின மக்களுக்கு மட்டுமே போராடினார் என்று நாம் அவரை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. அவர் ஒரு பெண்ணியவாதி, அவர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதரவானவர். சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவிற்குள் குடியேறிய மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில் 'DACA' (Deferred action for childhood arrivals) ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறும் குழந்தைகளுக்குக் குடியுரிமை, வேலைவாய்ப்பு, வழங்குவது என்ற திட்டத்தை தற்போதைய அதிபர் மாற்ற முயன்ற போது. அதற்கு எதிராக கொதித்தெழுந்தார்.

john lewis2"ஆவணங்கள் இல்லாத குழந்தைகளையும் அவர்கள் பெற்றோர்களையும் ஒன்றினையும் வரையில் அமெரிக்காவில் அமைதி நிலவப் போவது இல்லை. நாம் இதை செய்யத் தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது. அதற்காக நான் எல்லையில் சென்று போராடவும் தயாராக உள்ளேன் அதற்காக என்னை சிறையில் அடைத்தால் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன்" என்று தனது குரலை ஆதரவற்ற குடியேறிகளின் குழந்தைகளுக்காக உயர்த்தினார்.

1963 ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரத்தில் பேரணியை நடத்திய ஐம்பதாவது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் படியாக அங்குச் சென்றிருந்தார் ஜான் லூயிஸ். அப்போது அவர் குறிப்பிட்டது, "இதே இடத்தில் நாங்கள் போராட்டம் நடத்தி 50 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அப்போது யார் எங்கு வேண்டுமென்றாலும் பயணம் மேற்கொள்ளலாம், எங்கு வேண்டுமென்றாலும் வீடு நிலம் வாங்கலாம். அப்போது இருந்த வெள்ளை நிற இனவெறி இப்போது இல்லை. அதெல்லாம் தற்போது புத்தகங்களிலும் கண்காட்சி எழுத்திலும் காணொளி காட்சிகளிலும் மட்டும்தான் இருக்கிறது" என்றார்.

அவர் இந்த உரையை நிகழ்த்தியது ஆகஸ்ட் மாதம் 2013ல். ஆனால், தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது இனவெறி செயல்கள் இன்னும் அமெரிக்க நிலத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் போராட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவரது போராட்டங்களின் கொள்கைகளின் தேவைகள் இன்றளவும் அனைவருக்கும் தேவைப்படுவதாக இருக்கிறது.

(Courtesy: Associated press and NPR news)

- பாண்டி

Pin It