அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பர் அதிபராக முதன்முறையாக நுழைந்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் 44வது அதிபர், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஊடகங்களின், அன்றாடச் செய்திகளாகிவிட்ட ஓபாமாவின் இந்த வெற்றியை உலகம் முழுதும் கருப்பின மக்கள் கொண்டாடுகிறார்கள். ஓபாமாவின் வெற்றி அமெரிக்காவின் அடிப்படையான ‘எசமானத்துவப் போக்கை’ மாற்றி விடும் என்ற நம்பிக்கையால் அல்ல. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொடூரமான யுத்தங்களை நடத்தி, அமெரிக்காவின் பொருளாதாரத்தை நெருக்கடிக் குள்ளாக்கிய புஷ் தோற்றார் என்ற மகிழ்ச்சி ஒரு காரணம். அமெரிக்காவில் ‘ஆப்பிரிக்க - அமெரிக்கர்’ ஒருவர் முதன்முறையாக அதிபராகியிருக்கிறார் என்பது மற்றொரு காரணம்.
47 வயதான ஓபாமா அமெரிக்காவின் இளம் தலைமையின் பிரதிநிதி, புதிய வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகள் இவருக்கு ஆதரவாகவே கிடைத்துள்ளன. அமெரிக்காவில் வாழும் அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கப் பெற்றதே 1965 ஆம் ஆண்டில் தான்.
“வெள்ளை நிற சிறுவர்களும், கறுப்பு நிற சிறுமிகளும் ஒன்றாக கைகோர்த்து நிற்கும் நாள் ஒன்று வரும் என்பதே என் கனவு” என்று 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி கறுப்பர் உரிமைக்குப் போராடிய மார்டின் லுதர்கிங் அறிவித்த போது ஓபாமாவும் கறுப்பினச் சிறுவன் தான். அப்போது அவனுக்கு 2 வயது. ஓபாமா பெயருக்குள்ளே மறைந்துள்ள ‘உசேன்’ என்ற பெயரைப் பயன்படுத்தி அவரை இஸ்லாமியராக்கிடும் ‘இந்துத்துவ’ பார்ப்பனப் பிரச்சாரங்களும் ஓபாமாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடத்தப்பட்டன. அந்த வெறுப்புப் பிரச்சாரம் எடுபடவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவை எதிர்த்து, இங்கே உள்ள பார்ப்பன வகுப்புவாத சக்திகள், அவர் இத்தாலி நாட்டுக்காரர், கிறித்துவர் என்றெல்லாம் பிரச்சாரத்தை முன் வைத்தனர். தன்னை இந்தியாவின் மருமகளாக சோனியா கூறினாலும், பார்ப்பன சக்திகள் அதை பார்ப்பனியப் பார்வையில் புறந்தள்ளிவிட்டன. ஆனால், கென்யா நாட்டின் கறுப்பு தந்தைக்கும், கான்சாஸ் மாநில வெள்ளைத் தாய்க்கும் பிறந்த ஒருவர் இப்போது உலகத்தின் உயர்ந்த அதிகாரமுள்ள பதவியில் அமர்ந்துள்ளதை இந்தியாவின் பார்ப்பன வகுப்பவுhத சக்திகள் கண்திறந்து பார்க்க வேண்டும்.
‘மரத்திலிருந்து மனிதன் பிறந்தான்’, ‘பூமியை ஒரு ஆமை சுமந்து நிற்கிறது’ என்ற இந்து புராண கதைகளடங்கிய ‘ஆரிஜின்ஸ்’ என்ற நூலை சிறு வயதில் ஓபாமாவுக்கு அவரது தாயார் வாங்கித் தந்தார். நூலைப் படித்த ஓபாமா, அந்த ஆமை எதன் மீது நின்றுக் கொண்டு உலகைத் தாங்கிப் பிடித்தது? என்ற கேள்விகளைக் கேட்டதாக அவரது வரலாறு கூறுகிறது. ஆனாலும் இப்போதும் தனது சட்டைப் பைக்குள் ‘விநாயகன்’ சிலை ஒன்றை வைத்திருப்பதாகவே செய்திகளை வெளியிட்டு பார்ப்பன ஏடுகள் மகிழ்கின்றன.
ஈராக்கிலே - அமெரிக்காவின் ராணுவம் நடத்தி வரும் யுத்தத்தை ஓபாமா தனது தேர்தல் பிரச்சாரத்திலே எதிர்த்ததோடு, பதவி ஏற்ற 16 மாதங்களுக்குள்ளே அமெரிக்க துருப்புகளைத் திரும்பப் பெறுவேன் என்றும் அறிவித்தார். புஷ் ஆட்சி கட்டவிழ்த்த அடக்கு முறைகள் ஏராளம்! பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை இஸ்ரேல் பறிப்பதற்கு துணை போனார் புஷ். நியாயமான பாலஸ்தின மக்களின் உரிமைக்கு புதிய ஆட்சி வழி வகுக்குமா? இலங்கையில் சுய நிர்ணய உரிமைக்குப் போராடும் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத ஆட்சிக்கு எதிரான நியாயமான குரலையும் ஓபாமா ஒலிப்பாரா? கியுபா மீது அமெரிக்கா விதித்துள்ள அநியாயமான பொருளாதாரத் தடை நீக்கப்படுமா? அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா, வெனிசுலா, ஈக்குவேடார் நாடுகளில் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியிருப்பதை அங்கீகரிகுமா? இப்படிப் பல பிரச்சினைகள் ஓபாமாவின் முன் நிற்கின்றன.
முதலாளித்துவம் கடுமையான வீழ்ச்சிகளை சந்திக்கத் தொடங்கியுள்ள காலகட்டத்தில் அதிகாரத்துக்கு வந்திருக்கும் ஓபாமா மாறிவரும் சூழல்களைக் கவனத்தில் கொள்வாரா? “கறுப்பர்” என்ற ஒடுக்கப்பட்ட அடையாளத்தை அரசியல் கொள்கையாக்குவாரா? அல்லது வழக்கமான அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆணவத்தில் பயணிப்பாரா? இதற்கு எதிர்காலம் விடை கூறும் என்றாலும், உலகம் முழுதும் வாழும் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கும் ஓபாமாவை - உலக ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்து நாமும் பாராட்டுவோம்!