கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

i cant breathe protestஇன்று அமெரிக்காவே போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. “என்னால் மூச்சுவிட முடியவில்லை, விட்டுவிடுங்கள்” என்று மரண ஓலமிட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் இறுதி நிமிடங்கள் மனசாட்சி உள்ள அமெரிக்க மக்களின் இதயங்களை உலுக்கி உள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளை இனவெறி அரசின் மீது இருந்த பெருங்கோபத்தை ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணம் தூண்டி விட்டிருக்கின்றது. உலக நாடுகளுக்கு எல்லாம் எச்சரிக்கை விடுக்கும் கோமாளி டிரம்ப்பை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிய வைத்திருக்கின்றது.

கடந்த மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தின் மின்னியாபொலிஸ் நகரத்தில் உள்ள Cup Foods எனும் கடைக்கு ஜார்ஜ் ஃப்ளாய்டு சிகரெட் வாங்கச் சென்றுள்ளார். அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு போலியானது என அந்தக் கடையின் ஊழியர் சந்தேகித்துள்ளார். இதையடுத்து காவல் துறைக்குப் போன் செய்து, ஜார்ஜ் கொடுத்த 20 டாலர் நோட்டு போலியானது என்றும், அவர் குடித்திருப்பது போலத் தெரிவதாகவும், அவர் கட்டுப்பாட்டிலேயே இல்லை எனவும் புகார் கொடுத்திருக்கிறார்.

அடுத்த ஏழு நிமிடங்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்திருக்கின்றார்கள். காரை பார்க் செய்துவிட்டு அதனுள் இருவருடன் உட்கார்ந்திருந்த ஜார்ஜிடம் சென்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான தாமஸ் லென், தனது துப்பாக்கியை எடுத்து நீட்டி, ஜார்ஜ் ஃப்ளாய்டை கையை நீட்டுமாறு சொல்லியிருக்கின்றார். ஆனால் காரை விட்டு இறங்க மறுத்த அவரை வலுக்கட்டாயமாக கை விலங்கிட்டு அழைத்துச் செல்லும் போது அவர் கீழே விழுந்திருக்கின்றார். தனக்கு claustrophobic பாதிப்பு இருப்பதாக அவர் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதைக் காதில் வாங்காத டெரெக் சாவின் எனும் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ஃபிளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்தியிருக்கின்றார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை, தன்னை விட்டுவிடுமாறு ஜார்ஜ் ஃபிளாய்ட் கெஞ்சியும் விடாமல் 8 நிமிடங்கள் 11 நொடிகள் அவரது கழுத்தை அழுத்தி கொலை செய்திருக்கின்றான் அந்தக் காவல்துறை அதிகாரி.

இதை அடுத்த நடந்த போராட்டத்தில் செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே நேரடியான மோதல் வெடித்துள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் குண்டுகள் போன்றவற்றை போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட், பிலடெல்பியா, பென்சில்வேனியா, வாஷிங்டன், மிக்சிகன், கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் பெருமளவில் நடந்து வருகின்றன.

ஜார்ஜ் ஃப்ளாய்டு ஒரு வெள்ளையினத்தைச் சேர்ந்த நபராக இருந்திருந்தால் இந்தப் படுகொலை நிச்சயம் நடந்திருக்காது என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. கருப்பினத்தின் மீது வெள்ளையர்களுக்கு இருக்கும் இனவெறிதான் ஜார்ஜ் ஃப்ளாய்டு கழுத்தை துடிதுடித்து உயிர்போகும் வரை அழுத்திக் கொல்ல வைத்தது.

இன வெறியர்களும், மத வெறியர்களும், சாதி வெறியர்களும் தங்களால் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படும் மக்களின் மீது வன்முறையைச் செலுத்துவதற்கும், அவர்களை விலங்குகளைப் போல சித்தரவதை செய்து கொல்வதற்கும் தங்களுக்கு உரிமை உண்டென அவர்களாகவே பிரகடனப்படுத்திக் கொள்கின்றார்கள். பல ஆண்டுகளாக தூபம் போட்டு வளர்க்கப்படும் இனவெறியும், மத வெறியும், சாதி வெறியும் சக மனிதனைக் கொல்வதற்குரிய சதைப் பிண்டமாக பார்க்க வைக்கின்றது. அமெரிக்காவில் கருப்பினத்தவன் என்றால், இந்தியாவில் முஸ்லிம்களும், தலித்துகளும்.

நேர்மையான அரசியலை வைத்து மக்கள் முன்னால் தன்னை அரசியல் மயப்படுத்த முடியாத கோழைகள்தான் வரலாறு முழுக்க இன வெறியையும், மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டிவிட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணத்தை அறிய விடாமல், அவர்களைப் பிளவுபடுத்தி ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். "வெள்ளையினத்துக்கு எதிராக கருப்பின மக்கள். இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள், தலித்துகள். தமிழர்களுக்கு எதிராக மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், வட இந்திய அத்துக்கூலி தொழிலாளர்கள்". இப்படியான எதிர் அரசியல் என்பது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஆளும் வர்க்கம் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் குறிப்பாக ‘கம்யூனிச அபாயம்’ தோன்றும் போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்த அல்லது ஒழித்துக் கட்ட ஆளும் வர்க்கத்தால் நிதி உதவி செய்யப்பட்டு ஊட்டி வளர்க்கப்படுகின்றன.

இலட்சக்கணக்கான ஆப்பிரிக்கக் கருப்பின அடிமைகளின் உடல்களின் மீது தங்களின் சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்ட அமெரிக்க வெள்ளையினம்தான் தனக்கு வாழ்வளித்த கருப்பின மக்களை எதிரிகளாகப் பார்க்கும் நோய்க்கூறுக்கு இன வெறியர்களால் ஆட்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அமெரிக்கா அதில் இருந்து மீண்டிருக்கின்றது.

அமெரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து, வாழ்வா சாவா போராட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். கொரோனா நோய்த் தொற்றால் 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கின்றார்கள். இன்று இன வெறியைத் தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் நிச்சயம் அமெரிக்காவில் எடுபடாது. தங்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் பொதுவான காரணம் கோமாளி டிரம்ப் என்பதையும், அமெரிக்க ஆளும் வர்க்கம் என்பதையும் அந்த மக்கள் கண்டு கொண்டு விட்டார்கள். அதனால்தான் இன்று ஜார்ஜ் ஃபிளாய்டுக்காக கருப்பின மக்கள் மட்டுமில்லாமல், அவர்களுடன் வெள்ளையின மக்களும் கரம் கோர்த்திருக்கின்றார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு மன்னிப்பு கோரி போராட்டக்காரர்கள் முன் மியாமி போலீஸார் மண்டியிட்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்தியாவில்..? ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களுக்காக தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் சமூகம் என்றாவது மன்னிப்பு அல்ல, குற்ற உணர்வாவது அடைந்திருக்கின்றதா? தலித்துகள் மீது தினம் தினம் நடத்தப்படும் வன்கொடுமைகளைக் கண்டு பதைபதைத்திருக்கின்றதா? ஒரு நாளும் இல்லை. ஒரு கேடுகெட்ட மதவாத, சாதியவாத, இனவாத சமூகமாகவே இது இருக்கின்றது. ஆளும் வர்க்க கைக்கூலிகளால் கட்டமைக்கப்படும் இது போன்ற கருத்தியல்கள் இயல்பாகவே சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களை அறிந்து கொள்ள இயலாத அறிவிலிக் கூட்டத்திற்கு நல்வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வெந்த சோற்றைத் தின்றுவிட்டு, விதி வந்தால் சாவதற்கு சமூகத்தில் காத்திருக்கும் அற்ப மனிதர்களை தன்னை சாதியவாதியாகவும், மதவாதியாகவும், இனவாதியாகவும் காட்டிக் கொள்வதில் பெருமைப்பட வைக்கின்றது.

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் அமெரிக்காவின் முதலாளித்துவத்தை உலுக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை. முதலாளித்துவப் பத்திரிகைகள் மக்கள் தங்களின் தேவைகளுக்காக பெரிய பெரிய மால்களை எல்லாம் உடைத்து பொருளை எடுத்துச் செல்வதை 'கொள்ளை' என எழுதுகின்றன. அது எப்படி கொள்ளையாகும்? எந்த சமூகத்தால் அந்தச் செல்வம் உருவாக்கப்பட்டதோ, அந்த சமூகம் சோத்துகே வழியில்லாமல், அவர்கள் உருவாக்கிய செல்வத்தால் ஆடம்பர வாழ்க்கை வாழும் கும்பலால் வீதிகளில் குப்பையைப் போல வீசி எறியப்படும் போது, அந்தச் செல்வத்தை உருவாக்கிய சமூகம் அதை எடுத்துக் கொள்வது தானே முறையாகும். அதுதானே தார்மீக மனித அறம். அதுதான் இன்று அமெரிக்காவில் நடந்து கொண்டு இருக்கின்றது. ஜார்ஜ் பிளாய்டின் ஆவி இன்று அமெரிக்க முதலாளிகளின் தூக்கத்தை எல்லாம் களைத்துப் போட்டிருக்கின்றது. தாங்கள் கொள்ளையிட்ட பொருட்கள் எல்லாம் தங்களிடமிருந்தே கொள்ளையடிக்கப்படும் அதிசய நிகழ்வை அவை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் கோமாளி டிரம்ப், 'போராட்டங்களின்போது சூறையாடல் தொடங்கினால், சுடப்படுவதும் தொடங்கும்,' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்றார். மேலும் ராணுவத்தை அனுப்புவேன் என்றும் மிரட்டுகின்றார். எத்தனை பேரை சுட முடியும்? ஒரு ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலையே அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் நெருப்பை வைத்திருக்கின்றது என்றால், கோமாளி டிரம்ப் சொல்வது போல நடந்தால் ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் கூடிய விரைவில் சவக்குழி தயாராகி விடும். நீதிக்காக அமெரிக்க அரசை எதிர்த்து கறுப்பின மக்கள் நடத்தும் தீரமிக்க போராட்டத்தில் கைகோர்த்து இருக்கும் வெள்ளையின மக்களும் இணைந்து இதைச் செய்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இப்படியான ஒற்றுமைதான் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்று பொதுவுடைமைவாதிகள் விரும்புகின்றார்கள். அதற்காகத்தான் அவர்கள் சாதியவாதிகளுக்கு எதிராவும், மதவாதிகளுக்கு எதிராகவும், இனவாதிகளுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அமெரிக்க மக்களின் ஆன்மாவை உலுக்கிய ஜார்ஜ் ஃபிளாய்டிற்கு நாம் கரங்களை உயர்த்தி வீர வணக்கத்தை செலுத்துவோம்.

- செ.கார்கி