பல்கலைக்கழக நிலையில் முதல் தமிழ்ப் பேராசிரியர் பதவி வகித்தவர். தமிழ் இசை மரபை மீட்டெடுத்த யாழ் நூலின் ஆசிரியர். ஈழத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர். தமிழின் புகழை உலகுக்கும், உலகின் சிறப்புக்களைத் தமிழுக்கும் எடுத்துரைத்தவர். ஈழத்தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டைச் சுட்டுகின்ற சின்னமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற அறிஞராக விளங்கியவர். தமிழ் பேசும் மக்கள் அனைவரதுபண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராக விளங்கியவர் விபுலாநந்த அடிகள்.

ஈழத்தில் மட்டக்களப்புக் காரைத்தீவில் சாமித்தம்பி - கண்ணம்மை வாழ்விணையருக்கு மகனாக 27-03-1892 அன்று பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன்.

vebulandha adhikala 350

நல்லாசிரியர் குஞ்சித்தம்பியிடம் ஆங்கிலம், தமிழ், கணிதம் முதலியவற்றைக் கற்றார். காரைத்தீவில் அமைந்திருந்த சைவப் பாடசாலைத் தலைமையாசிரியராக விளங்கிய புலோலியூர்

நா.பொ. வைத்தியலிங்க தேசிகரிடம் தமிழும், சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் கல்முனை மெதடிஸ் உயர்தர ஆங்கிலப் பள்ளி, மட்டக்களப்பு ஆர்ச்-மிக்கேல் கல்லூரி முதலிய கல்வி நிலையங்களில் பயின்றார்;

கொழும்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்றார். 1915ஆம் ஆண்டு தொழிற் கல்லூரியில் சேர்ந்து பயின்று பட்டயப் பட்டம் (Diploma) பெற்றார். இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட தேர்வில்  தேர்ச்சி பெற்று பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். மேலும் பண்டிதர் எஸ். கந்தையாப்பிள்ளை, எஸ். கைலாசப்பிள்ளை, வித்துவான்  சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றவர்களிடம்; தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் (தமிழ்ப் பண்டிதர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதலாவது இலங்கை மாணவர் விபுலாநந்த அடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிப்பாய் இந்துக் கல்லூரி முதல்வராக 1920 ஆம் ஆண்டு பதவியேற்று பணிபுரிந்தார். மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், திருக்கோணமலை இந்துக் கல்லூரி முதலியவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயத்தை 1929 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். மேலும், யாழ்வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்தியாலயம் முதலிய கல்வி நிறுவனங்களை விபுலாநந்த அடிகள் உருவாக்கினார். ஏழை மாணவர்கள் தங்கிக் கல்வி பயில இலவச விடுதிகளை அமைத்தார்.

மாணிப்பாய் இந்துக் கல்லூரியில் விபுலாநந்த அடிகள் முழுமைபெற்ற அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார். அக்கல்லூரியில் அறிவியல் பாடங்கள், இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிப்பாடங்கள் போன்றவற்றை தாமே கற்பித்தார்.

விபுலாநந்த அடிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், யவனம், வங்கம், சிங்களம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தர் 1917 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை புரிந்தார். அவருடன்  விபுலாநந்த அடிகள் கலந்துரையாடினார். தேச சேவை, சமூக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி முதலியவற்றில் அக்கறை காட்டிய சுவாமி சர்வானந்தரின் கருத்துகள் அடிகளாரை ஈர்த்தன.

அடிகளார் துறவியாகும் நோக்குடன் சென்னை ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றார். மடத்தில் துறவிக்குரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தார். அவருக்கு மடத்தினரால் பிரபோத சைதன்யர் என்னும் பிரமச்சரியப் பெயர் வழங்கப்பட்டது.

அடிகளாரின் கல்வியறிவையும், மொழித்திறனையும் அறிந்து, மடத்தின் திங்கள் இதழ்களான ஸ்ரீஇராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), வேதாந்தகேசரி (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

சுவாமி சிவானந்தா, பிரபோத சைதன்யருக்கு 1924 ஆம் ஆண்டு ஞானோபதேசம் செய்து சுவாமி விபுலாநந்தா என்ற துறவறப் பெயரைச் சூட்டினார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தினர் கிழக்கு இலங்கையில் உள்ள தமது கல்வி நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பினை அடிகளாருக்கு வழங்கினார்கள்.

விபுலாநந்த அடிகள் மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு முதலிய பணிகளை ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம் மூலம் மேற்கொண்டார்.

சுவாமி  விவேகானந்தரின் ஆங்கிலக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் யாவும் அடிகளாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

கொல்கத்தாவில் உள்ள பேலூரில் 1926ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீஇராமகிருஷ்ண மட மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். “விவேகானந்தர் ஏந்திய ஞானதீபத்தைத் தமிழரிடையே உயர்த்திச் செல்லும் ஒப்பற்றதுறவி விபுலாநந்தர்” என்று போற்றப்பட்டார்.

ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் அவரது ஆங்கிலக் கட்டுரைகளின் ஒரு தொகுதியை Ancient Thought for Modern Man என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

மேலும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர், ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா அவர்களின் பதிப்புப்பணி, தமிழிலக்கியப்பணி ஆகியவற்றைப் பாராட்டி ‘பொற்கிழி’ வழங்கிச் சிறப்பித்தனர். அந்த விழாவில் இலங்கைப் புலவர்களின் சார்பாக விபுலாநந்த அடிகள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.

விபுலாநந்த அடிகள் மட்டக்களப்பு பகுதிகளில் புலவர் மன்றங்கள், நூல்நிலையங்கள், தமிழ்க் கழகங்கள் நிறுவி செயற்பட்டார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 1924 ஆம் ஆண்டு ‘நாடகத் தமிழ்’ என்னும் பொருள் பற்றிச் சிறப்பாக உரை நிகழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கிழக்கு இலங்கைக் கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க இலங்கை அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. அக்குழுவின் தலைவராக விபுலாநந்த அடிகள் செயற்பட்டார். அப்பொழுது ஊர்தோறும் பள்ளிகள் அமைக்கப் பாடுபட்டார்.

இலங்கையின் தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் தொடக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசுக்கு’ விபுலாநந்த அடிகள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தியடிகள் இலங்கைக்கு வருகைபுரிந்த போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் விபுலாநந்த அடிகள் வரவேற்பு அளித்தார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பச்சையப்பன் கல்லூரியில் 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டிற்கு விபுலாநந்த அடிகள் தலைமை தாங்கி நடத்தினார். கலைச் சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராகப் பங்கு பெற்று பௌதிகம் பற்றிய பகுதிக்கு வேண்டிய மிகச் சிறந்த கலைச் சொற்களை உருவாக்கிக் கொடுத்தார். இது கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகக் குழுவொன்று, 1926 ஆம் ஆண்டில் இந்தியாவில் நியமிக்கப்பட்டது. இராமநாதபுரம் அரசர் ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கி, விபுலாநந்த அடிகள் மதுரைக்குச் சென்று சாட்சியம் கூறினார். அதன் பயனாகவே சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. செட்டி நாட்டரசர் ராஜா சர். அண்ணாலை செட்டியார் விரும்பிக் கேட்டுக்

கொண்டதற்காக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக 1931 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். யாழ் குறித்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி தமிழ்ப் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய போது. பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய யாழ் என்ற இசைக் கருவியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

பழந்தமிழரது பரம்பரைச் சொத்தான சகோடயாழ், செங்கோட்டி யாழ், பேரியாழ், சீரியாழ், வில்யாழ், மகரயாழ் என்னும் இசைக்கருவிகள் குறித்த ஆய்வில் மூழ்கினார்.

சிலப்பதிகாரம் என்னும் இலக்கியத்தை அறிவியல் கண்கொண்டு நோக்கினார். 1.பாயிரவியல், 2. யாழுறுப்பியல், 3. இசை நரம்பியல், 4. பாலைத்திரிபியல், 5. பண்ணியல், 6. தேவாரவியல், 7. ஒழிபியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டு பழந்தமிழிசைச் செல்வமும் ‘யாழ் நூல்’ என்னும் பெயரோடு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.

முத்தமிழின் நடுநாயகமான இசைத் தமிழ்ச் சிறப்பைக் காட்டும் யாழ் நூலானது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில், கும்பகோணம் அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயில் அரங்கில், நற்றமிழ் புலவர்கள் குழுமிய பேரவையில் 05.06.1947 அன்று வெளியிடப்பட்டது. அந்த விழாவில் ஒளவை. துரைசாமிப்பிள்ளை, அப்போதைய தமிழகக் கல்வி

அமைச்சர் க.அவினாசிலிங்கம் செட்டியார், அ.சிதம்பரம் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார்  முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ‘யாழ்நூல்’ இசைத் தமிழ், இயற்றமிழ், விஞ்ஞானம், கணிதம் ஆகிய அறிவுத் துறைகளெல்லாம் கலந்து குழைந்து எழுந்த தமிழமுதம் என அறிஞர்களால் போற்றப்படுகிறது.

விபுலாநந்த அடிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலத்தில் திருவேற்களத்திலே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். மேலும் அங்குப் பணியாற்றிய போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடாவடிகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்காக மண்டபங்களும் விடுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வளாகமே பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கக் கொடிகளைப் பறக்கவிட்ட போது, விபுலாநந்த அடிகள் மட்டும் தமது விடுதியில் தேசியக் கொடியை உயர்த்திப் பறக்கவிட்டார். விபுலாநந்த அடிகளாரின் சுதந்திர உணர்வைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ் நூலை விபுலாநந்த அடிகள் படைத்து அளித்துள்ளார். இந்நூல் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலெல்லாம் இருக்கும் நாடகங்களின் சிறப்பைக் காட்டுகிறது.  தமிழ் நாடக இலக்கண அமைதிகளை ஷேக்ஸ்பியரது ஆங்கில நாடகங்களைக் கொண்டு விளங்கும் பொருத்தத்தினை எடுத்து விளக்குவதாக உள்ளது. வடமொழி நாடக இலக்கண ஆசிரியரான தனஞ்சயனாரது தசரூபகத்தைத் தமிழருக்கு விளக்கிக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த நூலை மதுரைத் தமிழ்ச் சங்கம் 1926 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் தமிழில் நாடக இலக்கண நூல் இல்லை என்ற பெருங்குறை நீங்கியது.

விபுலாநந்த அடிகள் 1943 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறைப் பாடக்குழு, தேர்வுக் குழு, கல்விநிலை, ஆராய்ச்சிக் குழு ஆகியவற்றின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

விபுலாநந்த அடிகள், உமாமகேஸ்வரம், கலைச் சொல்லாக்கம், பண்டைத் தமிழர் இசைக் கருவிகள், விண்ணுலகம், தமிழ் மொழியின் தற்கால நிலைமையும் தமிழர்தம் கடமையும், ஆங்கிலவாணி, மேற்றிசைச் செல்வம், நாகரிக வரலாறு, எகிப்திய நாகரிகம், யவனபுரத்துக் கலைச் செல்வம், பூஞ்சோலைக் காவலன் முதலிய உரைநடை நூல்களைப் படைத்து அளித்துள்ளார்.

கணேச தோத்திர பஞ்சகம், குமாரவேணவ மணிமாலை, கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை, கங்கையில் விடுத்த ஓலை, ஈசன் உவக்கும் மலர்கள் முதலிய கவிதை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

விஞ்ஞான தீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவேகானந்தர் பிரசங்கங்கள், விவேகானந்த ஞானதீபம், கருமயோகம், இராசயோகம், ஞானயோகம், பதஞ்சலி சூத்திரம் முதலிய மொழிபெயர்ப்பு நூல்களையும் அளித்துள்ளார்.

திருக்குறள் குறித்து The Book of Books in Tamil Land என்னும் நூலையும், தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து The Origin and Grown of Tamil Literature என்னும் நூலையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

விபுலாநந்த அடிகளின் கட்டுரைகள், சொற் பொழிவுகள், கவிதைகள், நாடகங்கள் உள்ளடக்கிய தொகுப்பு நூல்களாக விபுலாநந்தத் தேன், விபுலாநந்த வெள்ளம், விபுலாநந்த செல்வம், விபுலாநந்த உள்ளம் முதலிய தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் பண்பாட்டு வாழ்வில் முக்கியமானவராகக் கடந்த நூற்றாண்டில் தமது பெயரை நிலைநாட்டிய தலை சிறந்த சமூக சேவையாளர். மக்களிடையே சமத்துவம் ஏற்படவும், சமுகம் சீர்திருத்தம் பெறவும் பாடுபட்டவர்.

கல்வி வளர்ச்சிக்காகவும், தமிழ் இசைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட விபுலாநந்த அடிகள் தமது அய்ம்பத்து அய்ந்தாவது வயதில் மட்டக்களப்பில் 19-07-1947 அன்று காலமானார்.

Pin It