1990களில், விடிந்தும் விடியாத ஓர் அதிகாலை நேரத்தில், தெருவடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வெளியே, உடுத்தியிருந்த துணிமணியோடு பலகையில் கிழக்குப் பார்த்து உட்கார வைத்து, கடலையூர் செவிட்டு அய்யர், எவர்சில்வர் குடத்தில் இருந்த சில்லென்ற தண்ணீரை தலையில் கொட்டியபோது, அதிகாலைத் தூக்கம் கலைந்த எரிச்சலையும், பச்சைத் தண்ணீர் தந்த நடுக்கத்தையும் மட்டுமே அப்போது உணர்ந்தேன்... தந்தை பெரியாரை வாசிக்கத் தொடங்கிய 2000-இல், அந்தச் சடங்கு, என்னுடைய உடலை, அதன் மீதான என் உரிமையை, என்னுடைய தன்மானத்தை இழிவு படுத்தியிருப்பது புரிந்தது. விண்வெளியில் கால்பந்து விளையாடும் இன்றைய அறிவியல் உலகிலும், ‘பூப்புனித நீராட்டு விழா’ என்ற பெயரில் பெண் பிள்ளைகளைக் குளிப்பாட்டி அழுக்காக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில், பெண்கள் பருவமடைதலும், உதிரப்போக்கும் இயற்கையான உடலியல் மாற்றங்களே என்னும் உண்மை புரியாமல் போயிருக்கலாம். அந்த அறியாமை தந்த அச்சம் காரணமாகப் பெண்களை வழக்கமான பணிகளில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கக்கூடும். அடுத்த கட்டமாக அறிவியல் ஆய்வுகளும், பார்வையும் தொடங்கியபோதும், மதங்களின் ஆதிக்கமும், அதிகாரமுமே உச்சத்தில் இருந்ததால், திட்டமிட்டு மக்கள் அறியாமையில் வைக்கப்பட்டார்கள். விளைவு, பெண்களின் பூப்படைதல், மாதவிலக்கு மீதான இயல்பான அச்சம், மதங்களின் பெயரால், ‘புனிதம் - தீட்டு’ என்ற கற்பிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சடங்குகள், சாத்திரங்களின் பெயரால் பெண்கள் மீதான ஒதுக்குதலாக மாற்றப்பட்டது. மனித உடலின் உட்கூறுகளை, அவற்றின் செயல்பாட்டை படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கிய மருத்துவ அறிவியல், தொழில்நுட்பத்தோடு கைகோத்து, முப்பரிமாண நகர்வுப் படங்களாகவே உடலின் இயக்கத்தைச் சராசரிக் கல்வியறிவு கொண்டவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வகையில், நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலத்தின் வளர்ச்சிப் போக்கில், பெண்களே அறிவியல் அறிஞர்களாக உருவான பின்னும், பூப்புனித நீராட்டு விழாக்களும், மாதவிலக்குத் தீண்டாமைகளும் தொடர்கின்றன என்றால், சமூக அறியாமை எந்த அளவுக்குக் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் கூறியது போல, பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஓரிரு உடல் உறுப்புகளில் மட்டுமே மாற்றம் உண்டே தவிர, மற்றபடி இருவரும் சரிநிகர் சமானமே. விவசாயம் தொடங்கி விண்வெளி வரை, ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தில் பெண்கள், உற்பத்தித் துறைகளில் பெண்கள், அறிவியல் ஆராய்ச்சிகளில் பெண்கள், அவ்வளவு ஏன், பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள், பாவ யோனியில் பிறந்தவர்கள், பெண் உடல் தீட்டு என்று சொல்லும் மத நிறுவனங்களில் கூட, சாமியார்களாகவும், மதத் தலைவர்களாகவும் பெண்கள் வந்தாயிற்று. ஆனாலும், இந்தச் சடங்குகளும், சாத்திரங்களும் தொடர்கின்றனவே, என்ன காரணம்?

பெண்கள் பருவமடைதல் என்பது, உடலின் வளர்சிதை மாற்ற (Metabolism) த்தின் ஒரு பகுதி. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடையத் தொடங்கிவிட்டதை, நமக்கு உணர்த்தும் உடலின் மொழியே, முதல் உதிரப்போக்கு. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், சினையுற்ற கருமுட்டையைத் தாங்கி வளர்ப்பதற்காக, கர்ப்பப் பை தன்னுடைய சுவர்களின் உட்பகுதியில் உருவாக்கி வைக்கும் மெத்தை போன்ற படலத்தை, கருமுட்டை உருவாகாத நிலையில், கலைத்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதால் வெளியேறும் உதிரப்போக்கே மாதவிடாய். சிறுநீர், மலம், வியர்வையைப்போல, இதுவும் உடலில் இருந்து வெளியேறும் கழிவு என்பதைத் தாண்டி எதுவுமில்லை. இதைப்பற்றி படிக்கக்கூடிய சிறப்பான மருத்துவப் படிப்புகள் கூட வந்துவிட்டன. பெண் நோயியல் (Gynecology), மகளிர் மற்றும் மகப்பேறியல் (Gynecology and Obstetrics) என்பன போன்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவத் துறைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளன. இந்த இடத்தில் ஒரு செய்தியைச் சுட்டிக்காட்ட வேண்டும். திருமணமாகி ஓராண்டுக்குள் கருத்தரிக்கவில்லை என்றால் அலறியடித்து, Gynecologist எனப்படும் சிறப்பு மருத்துவரைத் தேடிஓடும் எவரும், பெண் குழந்தை பருவமடைந்ததும், அவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவதில்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரின் நிலையும் இதுதான். பெரும்பாலான Gynecologistகளே, தங்களுடைய பெண் குழந்தைகளுக்குப் பூப்புனித நீராட்டு விழா நடத்தி, தீட்டுக் கழிக்கும் கொடுமையும் நடக்கத்தான் செய்கிறது. இதைத்தான் அறிவியல் அறிவு என்பது வேறு, அறிவியல் பார்வை என்பது வேறு என்று சொல்கிறோம். நம்முடைய கல்விமுறை, அறிவியலைக் கற்றுத் தருகிற கல்வியாக இருக்கிறதேயொழிய, அறிவியல் பார்வையை வளர்த்தெடுக்கிற கல்வியாக, அறிவியலை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிற கல்வியாக இல்லை.

ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி விளக்கும், Anatomy எனப்படும் உடற்கூறியல், அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. எத்தனை பள்ளிகளில், இந்தப் பாடத்தை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்? பெண்களும், ஆண்களும் தனித்தனியாகப் படிக்கும் பள்ளிகளிலேயே உடற்கூறியல் பாடம் நடத்தப்படுவதில்லை எனும் போது, இருபாலர் படிக்கும் பள்ளிகளில் சொல்லவே வேண்டாம். இந்தப் பகுதியில் இருந்து இந்தக் கேள்வி வரும் என்று மட்டும் குறித்துக் கொடுத்துவிட்டு, நீங்களே படித்துக் கொள்ளுங்கள் எனக் கடந்து போகும் நிலையே காணப்படுகிறது. வகுப்பறையில் இருக்கும்போது, முதல் உதிரப்போக்கு ஏற்பட்டுவிட்டால், அந்த மாணவியின் பதற்றத்தை, அச்சத்தைத் தணிக்கும் வகையில் அரவணைத்து, அச்சமடையத் தேவையில்லை, இது இயல்பான உடலியல் மாற்றம்தான் என்று கூறும் ஆசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மாறாக, என்னமோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போன்ற பரபரப்பை ஏற்படுத்தி, ஏற்கனவே அச்சத்திலும், வலியிலும் அழுது கொண்டிருக்கும் பிள்ளையை வகுப்பறையிலேயே தனிமைப்படுத்தி, தலைமை ஆசிரியருக்குத் தகவல் சொல்லி, உடனடியாக வீட்டிற்கு அனுப்புவதில் குறியாக இருக்கும் ஆசிரியர்களையே மிகுதியாகப் பார்க்கிறோம்.

அந்த உருட்டலும், மிரட்டலும் வீட்டிலும் தொடரும். இரண்டு மூன்று பெண் குழந்தைகள் உள்ள வீடாக இருந்தால், அம்மாவின், அழுகையும், பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொள்ளும். “ஏற்கனவே சமைஞ்சி நிற்கிறதுகளையே கரையேத்த கதியில்ல...அதுக்குள்ள உனக்கென்னடி அவசரம்...” என்பது போன்ற வசனங்கள், அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும். இத்தனை கலவரங்களுக்கு நடுவில், சடங்கு சாத்திரங்களும் ஒரு பக்கம் நடந்தேறும். பஞ்சாங்கத்தைப் புரட்டி, ‘நல்ல நேர’த்தில்தான் வயசுக்கு வந்திருக்கிறாளா என்று உறுதிப்படுத்தப்படும்... வீட்டின் தாழ்வாரத்தில் அல்லது தாழ்வாரம் இல்லாத வீடாக இருந்தால், வீட்டிற்குள்ளே ஏதேனும் ஒரு மூலையில் உட்கார வைத்து, ஒரு உலக்கை கொண்டு வந்து பக்கத்தில் போடப்படும். அத்தை, மாமன் போன்ற உறவுமுறைகளுக்குச் சொல்லிவிட்டு, முதல் நாளோ மூன்றாம் நாளோ தலைக்குத் தண்ணீர் ஊற்றி, மீண்டும் மூலையில் உட்கார வைத்து, நல்ல நாள் பார்த்து பூப்புனித நீராட்டு விழா நடத்தப்படும். இப்போது, மூன்று நாள்கள் கழித்துப் பள்ளிக்கு அனுப்பினாலும், இடையில் ஒரு நாள் குறித்து, தவறாமல் பூப்பு நீராட்டு விழா நடத்தும் போக்குக் காணப்படுகிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பத்திரிகை அடித்து, உற்றார் உறவினர்கள், தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்குக் கொடுத்து, வீட்டு முற்றத்தில் பந்தல் போட்டு நடத்தினார்கள். இப்போது அறிவியல் வளர்ந்துவிட்ட காரணத்தால், ஃபிளெக்ஸ் போர்டுகள் வைத்து, உலகிற்கே அறிவிக்கிறார்கள்..இன்றைக்கும், நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது.

திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளில், பார்ப்பனர்களை அழைத்து இந்தச் சடங்குகளைச் செய்யும் வழக்கம் காணப்படுகிறது. எவன் நம்மைச் சூத்திரர்களென்றும், வைப்பாட்டி மக்கள் என்றும் இழிவுபடுத்தினானோ, அவன் கையால் தலையில் தண்ணீர்விட்டு, சடங்கு நடத்தினால்தான் நம் வீட்டுப் பெண் குழந்தையின் தீட்டுக் கழியும் என்று நினைப்பது எவ்வளவு அவமானம், இழிவு என்பதை நாம் உணர வேண்டாமா? ‘முற்போக்காளர்கள்’ பலர், பூப்பு நீராட்டு விழா என்பதை மஞ்சள் நீராட்டு எனக் கூறிக்கொண்டு, மஞ்சள் கிருமி நாசினி, எனவேதான் மஞ்சள் கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுகிறோம் என்று விளக்கம் வேறு தருகிறார்கள். மஞ்சள் கிருமி நாசினி என்பது அறிவியல்...இதில் மூடத்தனமான சடங்கு எங்கிருந்து வந்தது? இதுபோன்ற போர்வையில்தான், பண்பாட்டைக் காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்ற பெயரில், தமிழ்ச் சமூகத்தை, சடங்குகள், மூடத்தனங்கள், பிற்போக்குச் சிந்தனைகள், ஆணாதிக்கம் கொண்ட சாதியச் சமூகமாகத் தொடர்ந்து வைத்திருக்க முயல்கிறார்கள். குறிப்பாக, இவற்றைக் காக்க வேண்டிய கடமையை பெண்களின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் அளவுகோலாக்கி, பெண்களின் சிந்தனைக்குள்ளும் அவற்றைத் திணித்து வைத்துக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு மட்டுமன்று, மதங்களின் ஆதிக்கத்தில் இருந்த, இருக்கின்ற நாடுகள் அனைத்திலும் இந்த பூப்பு நீராட்டு விழாக்கள் வேறு வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகின்றன என்று, ‘பூப்பு நீராட்டு விழா தேவையா?’ என்ற நூலில் பதிவு செய்கிறார் கவிஞர் புதியமாதவி.

இந்திய ஒன்றியத்தில், வடக்கைக் காட்டிலும் தெற்கில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அறிவியல் விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் முழுநேரப் பணியாக ஆக்கப்பட்டிருந்த பிள்ளைப் பெறுதலில் இருந்து சிறிதளவு விடுதலை கொடுத்துள்ள, குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் தமிழ்நாட்டில்தான் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் முன்னெடுத்த பகுத்தறிவு பிரச்சாரங்கள்தான் என்பதை அறிவு நாணயம் கொண்ட எவரும் மறுக்க முடியாது. திராவிட இயக்கம் நாடகங்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களின் மூலம் இந்த மண்ணில் பகுத்தறிவை, அறிவியலை புகட்டியது. திராவிடக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.மதுரம், நடிகவேள் எம்.ஆர்.இராதா, கலைஞர், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட திராவிட இயக்கக் கவிஞர்களும், திரைப்படக் கலைஞர்களும், எழுத்தாளர்களும், மூட நம்பிக்கைகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் சாடும் படைப்புகளின் மூலம் பாமர மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களின் உழைப்பை எல்லாம், இன்றைய திரைப்படங்கள் பின்னுக்குத் தள்ளி, விழலுக்கிறைத்த நீராக்கி வருகின்றன. குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்தும் பூப்பு நீராட்டு சடங்கை திணறத் திணறக் கொண்டாடித் தீர்க்கும் திருவிழாவாகச் சித்தரிக்கின்றனர். முறைமாமன் குச்சுக்கட்டுவது, தாய்மாமன் முரட்டுக் கெடாயுடன், மீசையை முறுக்கிக் கொண்டு சீர் கொண்டு வருவது, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கூட மாறாத மகனிடம், ‘டேய் பாத்துக்கோடா ஒம் பொண்டாட்டிய’ என்று அறிவுகெட்டத்தனமாக வசனம் பேசுவது என, திரைப்படங்கள் அரங்கேற்றும் அசிங்கங்கள் ஏராளம். இதுபோன்று பெண்களை இழிவுபடுத்தும் சித்தரிப்புகளோடு படமெடுப்பவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை தரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சொல்வார் தோழர் ஓவியா. காரணம், பெண் குழந்தைகளைக் கூனி குறுகச் செய்யும் இந்த நீராட்டு விழாக்கள், பாரம்பரிய விழாக்களைப்போன்று நடத்தப்படுவதில், திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.

மாறிவரும் உணவுமுறைகள், அதிவிரைவான, போட்டிகள் நிறைந்த வாழ்க்கைமுறை தரும் மனஅழுத்தம், உளவியல் சிக்கல்கள் ஆகியவை, அகமும் புறமும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றம், உடலின் வளர்சிதை மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விளைவு, 10 வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு முதல் உதிரப்போக்கு (பூப்படைதல்) ஏற்பட்டுவிடுகிறது. பள்ளிச் சீருடையையே அம்மாதான் அணிவிக்க வேண்டும் என்ற வயதில் உள்ள குழந்தைக்கு முதல் உதிரப்போக்கு எத்தகைய அச்ச உணர்வை, மனப்போராட்டத்தைத் தரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நெஞ்சோடு சேர்த்தணைத்து, படபடப்பைத் தணித்து, ‘அச்சப்பட வேண்டாம் மகளே! பெண்களின் உடலில் இயல்பாக நிகழும் மாற்றம்தான் இது.. எல்லா பெண்களுக்கும் இப்படித்தான் நடக்கும். இதே போன்று மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட சுழற்சி இடைவெளியில் கழிவு ரத்தம் வெளியேறும்..அதை மாதவிடாய் என்று சொல்வார்கள்... சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு வலியுடனும் அந்த நாட்கள் இருக்கும்...கவலைப்படாதே, உதிரப்போக்கின்போது, சுகாதாரமான முறையில் உடலை எப்படிப் பேணுவது என்பதை நான் உனக்குக் கற்றுத்தருகிறேன்’ என்று சொன்னால் அல்லவா, நாம் நாகரிகமடைந்த, அறிவியல் கற்ற சமூகமாவோம்! ஆனால் உண்மையில் என்ன சொல்லித் தருகிறோம் தெரியுமா?

‘மாதவிடாய்’ என்றொரு ஆவணப்படம்... கீதா இளங்கோவன் அதை இயக்கியிருக்கிறார்... அதில், ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம் இருந்து, வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போகக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு சொல்லுவாங்க’ என்று சொல்லிவிட்டு, ‘அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா தொடப்பக் கட்டைய மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. அப்படியானால், இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது? ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கம் கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படுகின்றன.

அதே ஆவணப்படத்தில் பேசும், அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். நம்முடைய கல்விமுறை இந்த அளவில்தான் நிற்கிறது.

கல்விக்கூடங்களிலேயே இதுதான் நிலைமை எனும்போது, ஆணாதிக்கமும், மூடத்தனங்களும் கொண்ட சமூகத்தில், அதிலும் கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை குறித்துச் சொல்லவே வேண்டாம். கூவிளபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து மாதவிடாய் ஆவணப்படம் பதிவு செய்துள்ளது. ஆணாதிக்கம், அறியாமை, மூடநம்பிக்கை, முட்டாள்தனம் ஆகியவை பெண்களின் மீது கூட்டாகச் செலுத்தும் தீண்டாமைக்  கொடுமையின் உச்சம் அது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். மாதவிடாய் உதிரம் மட்டுமன்று, பிள்ளை பெற்ற பெண்களின் உடலும் இங்கே தீட்டுதான். பிள்ளைபெற்ற பெண் உடல் தீட்டென்றால், அங்கிருந்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆகிவிட்ட ஆண் உடல் தீட்டில்லையா? இப்படியெல்லாம் வினா எழுப்பக் கூடாது என்பதற்காகத்தான், தங்கள் உடல் மீதான உரிமை குறித்துப் பெண்கள் விழிப்புணர்வு அடையாதபடி, சடங்குகளாலும், சாத்திரங்களாலும் திரையிட்டு வைத்திருக்கின்றனர். கூவிளபுரம் கிராமத்தில், பால்குடி மறக்காத கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

ஒரு பக்கம் மாதவிடாயின் போது தீட்டு என்று சொல்லி பெண்ணை ஒதுக்கி வைக்கும் இதே சமூகம், இன்னொரு புறம் அதை போற்றவும் செய்கிறது. பயிர் செய்யத் தயாராக இருக்கும் விவசாய நிலத்தில், மாதவிலக்கான பெண்ணை உதிரப்போக்குடன் சுற்றிவரச் செய்தால், மாதவிடாய் உதிரம் தோய்ந்த துணியை வயல்களில் கொண்டு போய்ப் போட்டால்,  விளைச்சல் கூடுதலாக இருக்கும் என்ற நம்பிக்கை இந்திய ஒன்றியத்தின் வட மாநிலங்கள் பலவற்றிலும், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் காணப்படுகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்கியா கோவிலில், பெண் கடவுளின் மாதவிடாய் உதிரம் பக்தர்களுக்குப் ‘பிரசாதமாக’ வழங்கப்படுகிறது. கழிவறையில் அமர்ந்திருப்பது போன்ற பெண்ணின் உருவம்தான் அக்கோவிலின் முதன்மைக் கடவுள். அந்தப் பெண் கடவுளின் கால்களுக்கு நடுவே குங்குமத்தைக் கொட்டி, அதனை மாவிடாய் உதிரமாகப் பாவித்து, பிரசாதமாக வழங்குகிறார்கள். ஒரு பக்கம் தீட்டு என்று ஒதுக்குவதும், இன்னொரு புறம் மாதவிடாய் உதிரம் விளைச்சலைத் தரும் என்று நம்புவதுமாகிய,  அறிவியலுக்குப் பொருந்தாத இந்த இரண்டு போக்குகளுமே மூடத்தனமானவை.

மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடைகளில் கிடைக்கின்றன. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, இலவச பஞ்சுப்பட்டைகள் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், பள்ளிகளிலும், பொதுவெளிகளிலும், தண்ணீர் வசதியுடன் கூடிய சரியான கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இந்நிலை Period poverty என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தெற்காசிய அளவில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான மாணவிகளும், இந்தியாவில் 60 விழுக்காடு மாணவிகளும் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி, 71 விழுக்காடு இந்திய மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து எதுவுமே தெரியவில்லை என்கிறது யூனிசெஃபின் அறிக்கை. இந்த Period poverty, பெண்களின் கல்வி கற்கும் உரிமையை நீர்த்துப் போகச் செய்கிறது. தண்ணீர் வசதியுடன் கூடிய, சுத்தமான கழிவறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் இருப்பது, ஏற்பிசைவிற்கான முதல் விதி என்ற சட்டம் செய்து, பெண் குழந்தைகளின் கல்வி தொய்வின்றி தொடர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படையில் மாதவிடாய் குறித்த அறிவியல் பார்வையை பரவலாக்க வேண்டும். மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று நவீன மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் கூட வந்துவிட்டன. ஆனாலும், தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் நிலையே காணப்படுகிறது. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் சுற்றி மறைக்காமல் எடுத்துக் கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார்.

அறிவியலின் துணையோடு அழுத்தமாகச் சொல்ல வேண்டியது இதுதான்...

பெண்கள் பருவமடைதல் புதிருமில்லை!

மாதவிடாய் தீட்டுமில்லை!!                            

Pin It