21 வயதில், உடல் இயக்கங்களை மட்டுப் படுத்துகிற, குணப்படுத்த முடியாத அரிய வகை நோய் தாக்குகிறது. (Amyotrophic Lateral Sclerosis, சுருக்கமாக ALS). அடுத்த சில ஆண்டுகளில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். ஆனால், தனது 77-வது வயது வரை நவீன அறிவியலின் துணையோடு வாழ்ந்து மறைகிறார். உலகப் புகழ்பெற்ற பல்வேறு அறிவியல் புத்தகங்களை எளிய மக்களுக்கும் புரியும் படி எழுதுகிறார். அவரது கடைசி நூல், அவரது இறப்பிற்குப் பின் தற்போது வெளிவந்திருக்கிறது. அவர் இறந்தபோது பாதியில் நின்றுபோன புத்தகத்தை, அவரது எழுத்துக்களிலிருந்து தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் அவரது மகள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள். அந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகம் இந்தக் கட்டுரை.

stephen hawkingபெரிய கேள்விகளுக்கு சிறிய பதில்கள் Brief Answers to the Big Questions

ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை, திரையில் மிகச் சிறப்பாகப் பதிவுசெய்த The Theory of Everything என்கிற படத்தின் நாயகன் எட்டி ரெட்மெய்ன் (Eddie Redmayne) நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். ஐன்ஸ்டினின் கோட்பாடு களின்படி முன்னறிவிக்கப்பட்ட ஈர்ப்பலைகளை (Gravitational Waves) 2016 இல் LIGO என்கிற அமெரிக்காவில் இருக்கும் ஆய்வு மையம் கண்டறிந்து உறுதிப்படுத்தியது. ஈர்ப்பலைகளைக் கண்டறிய உதவும் கருவியை வடிவமைத்ததில் குறிப்படத்தகுந்த பங்காற்றியதால் நோபல் பரிசு பெற்றவர்களுள் ஒருவர் கிப் தோர்ன் (Kip Thorne) என்கிற விஞ்ஞானி. இவர், ஹாக்கிங்குடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் மற்றும் ஹாக்கிங்கின் அறிவியல் பங்களிப்புகள் குறித்து, சிறப்பான அறிமுகத்தை எழுதியிருக்கிறார். நூலினுள் பின்வரும் கேள்விகளுக்கு, ஹாக்கிங் தன்னுடைய பதில்களை ஒரு சில பக்கங்களில் எளிமையாகக் கொடுத்திருக்கிறார்.

  1. கடவுள் இருக்கிறாரா? (Is there a God?)
  2. எல்லாம் தொடங்கியது எப்படி?(How did it all begin?)
  3. எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியுமா? (Can we predict the future?)
  4. கருந்துளையின் உள்ளே என்ன உள்ளது? (What is inside a blank hole?)
  5. மனிதனைப் போல உயிரினம் இந்தப் பேரண்டத்தில் இருக்கிறதா? (Is there other intelligent life in the universe?)
  6. செயற்கை நுண்ணறிவு மனிதனைத் தோற்கடித்துவிடுமா? (Will artificial intelligence outsmart us?)
  7. மனித குலத்தின் எதிர்காலத்தைக் கட்டமைப்பது எப்படி? (How do we shape the future?)
  8. இந்தப் பூமியிலேயே நாம் உயிர் வாழ்ந்துவிட முடியுமா? (Will we survive on Earth?)
  9. விண்வெளியில் குடியேற வேண்டுமா? (Should we colonise space?)
  10. காலத்தில் பயணிப்பது சாத்தியமா? (Is time travel possible?)

‘இந்தப் பரந்துவிரிந்த பேரண்டம் தோன்றக் காரணம் பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory)’ என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட பொதுவான கொள்கையாகிவிட்டது. அந்தப் பெருவெடிப்பிற்கு முன்பு காலமும் இல்லை, நேரமும் இல்லை எனும்போது, பெருவெடிப்பிற்கு முன்பு கடவுள் இருந்தாரா என்கிற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் காலமே தோன்றியிருக்க வில்லை. அதற்கு முன்பு என்று ஒன்று கிடையாது.

தென்துருவத்திற்கு எது தெற்கு? என்பதே சுருக்கமாக முதல் இரண்டு பகுதிகளுக்கான அவரது பதில். இந்தப் பூமியிலே நாம் உயிர் வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விக்கு, ஏற்கெனவே அச்சுறுத்தும் புவி வெப்பமாதல் மேலும் அணு ஆயுதங்களால் நிகழும் அழிவுக்கான வாய்ப்புகள் பற்றி விளக்குகிறார்.

பூமியில் இருக்கும் இயற்கை வளங்கள் எப்படி வேகமாகச் சுரண்டப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார். அடுத்த ஆயிரமாண்டுகளில் மனிதன் விண்வெளிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி மற்ற சூரியக்குடும்பங்களுக்குச் செல்வதை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிறார். இதற்கான திறன் வாய்ந்த எந்திரங்களையும் Robo க்களையும் மனிதன் உருவாக்குவான் என்று முன்னறிவிக்கிறார். மனிதனே மரபணு மாற்றங்கள் மூலம் தன்னை இன்னும் அதிக அறிவும் வல்லமையும் படைத்தவனாக மாற்றிக்கொள்வான் என்றும் கணிக்கிறார்.

பரந்து விரிந்த பிரபஞ்சத்தில், பூமியில் மட்டுமே வாழ்வது என்பது எந்த வாய்ப்புகளுமற்ற தன்னந்தனித் தீவிலிருந்து தப்பிக்க நினைக்காமலே இருப்பது போன்றது. அருகிலுள்ள கோள்களுக்கும், அதையும் தாண்டி நமக்கு அடுத்த சூரியக் குடும்பத்திற்குமே சென்றாக வேண்டியது மனித குலத்தின் கட்டாயத் தேவை. அடுத்த சில பத்தாண்டுகளில் செவ்வாயில் மனிதன் குடியேறுவது நிகழ்ந்துவிடலாம். சில நூற்றாண்டுகளில், நமது சூரியக்குடும்பத்தின் மற்ற கோள்களுக்கும் மனிதர்கள் பயணம் செய்வது சாத்தியப்படலாம். அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நமது சூரியனுக்கு அருகிலிருக்கும் அடுத்த சூரியக் குடும்பத்திற்கு செல்வது கூட நடந்துவிடும் என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எப்படி மனிதனின் வாழ்க்கை முறையை இன்னும் சில பத்தாண்டுகளில் புரட்டிப் போடவிருக்கிறது, அதற்கு மனிதன் தன்னைத்தானே எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார். நூறாண்டுகளுக்கு முன், ஐன்ஸ்டைன் என்கிற மாமேதை, தனது காலத்து அறிவியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சிந்தனை செய்ததன் விளைவே, ஈடு இணையற்ற அவரது சார்பியல் தத்துவங்கள். இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதற்கு முற்றிலும் புதிய பார்வையை அவை அளித்தன. அவர் அடுத்து வந்தவர்களுக்கு புதிய பாதையைக் காட்டிச் சென்றார்.

இன்று அதைவிட அதிகம் அறிந்தவர்களாக நாம் இருக்கிறோம். நம் முன்னே உள்ள புவி வெப்பமாதல், இயற்கை வளங்கள் அருகிவருதல், செயற்கை நுண்ணறிவு போன்றவை ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். இன்னும் சில காலத்தில் பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்போம்; இந்தப் பிரபஞ்சம் தோன்றும்போது என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட நாம் கண்டறிந்துவிடுவோம்; விண்வெளிகளுக்கு ‘ரோபோ’க்களை அனுப்பிக் கொண்டிருப்போம். “எனவே, இங்கு பூமியில் உங்கள் பார்வையை நிலைகொண்டு விடாமல், வானத்தை நோக்கிப் பாருங்கள்” என்று முடிக்கிறார்.

நூலைப் படித்து முடித்த பின்பு, தற்போதைய இந்தியப் பின்னணியில் விவாதப் பொருட்களாக இருக்கும் பின்வரும் கேள்விகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!

இந்திய மக்களின் பெரிய கேள்விகள்

  1. ஜாதகம் பொருந்திப் போகுதா?
  2. நல்ல நேரம் எப்ப ஆரம்பிக்குது?
  3. என்ன தோஷத்துக்கு என்ன பரிகாரம்?
  4. பில்லி சூனியம், ஏவல் உண்மையா?
  5. என்ன நாட்களில் என்னென்ன நோன்பு கடைபிடிக்க வேண்டும்?
  6. ஷீரடி சாய் பாபா, கிருஷ்ணரோட அவதாரமாமே?
  7. (காதலிக்கிற) பொண்ணு / பையன் எந்த சாதி?
  8. நீங்க நான் வெஜ் சாப்புடுவீங்களா?
  9. இந்த மாடு இறைச்சிக்குப் போகுதா?
  10. அந்த மதத்தைப் பற்றி ஏன் பேச மாட்டேங்குறீங்க?

உலகம் முன்னோக்கிப் போகும்போது, பெரும்பாலான நம் இந்திய மக்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்!

அறிவியலுக்கு ஹாக்கிங்கின் முக்கியமான பங்களிப்புகள்:

இடம் - காலம் (Space-Time) இவற்றிற்கு, தொடக்கம் உண்டு. பிரபஞ்சம் தோன்றக் காரணமாக இருந்த பெருவெடிப்புக்கு (Big Bang) முன்பு இடமும் இல்லை காலமும் இல்லை என்று கணிதச் சமன்பாடுகளையும் (equations) தேற்றங்களையும் (Theorems) கொண்டு நிறுவியது (ரோஜர் பென்ரோஸ் என்ற அறிஞருடன் இணைந்து அவர் வெளியிட்ட Penrose–Hawking singularity theorems).

கருந்துளை (Black Hole) வெளிச்சத்தைக் கூட தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் என்றிருந்த கருத்தை மாற்றி, கருந்துளைகளும் ஆற்றலை அணுக் கருத் துகள்கள் மூலம் (Sub-atomic particles) வெளியிடுகின்றன என்று நிறுவியது. இன்று இது ஹாக்கிங் கதிரியக்கம் (Hawking Radiation) என்று அழைக்கப்படுகிறது.

இவை தவிர, பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம், இதன் முடிவு மற்றும் கருந்துளைகள் குறித்து பல்வேறு கணிதவியல் விளக்கங்களை உருவாக்குவதில் பங்காற்றியிருக்கிறார். ஐன்ஸ்ட்டினின் சார்பியல் தத்துவங்களையும் குவான்டம் (Quantum) விசையியலையும் ஒருங்கிணைப்பதற்காக Theory of Everything என்பதனை உருவாக்க முயற்சித்திருக்கிறார். Brief History of Time என்கிற உலகப் புகழ்பெற்ற அறிவியல் நூலை 1988 இல் எழுதி வெளியிட்டார். மேலும் பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

Pin It