மனித குல வரலாற்றில் நீண்ட தேடலும் நவீன அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் இவ்வுலகை இன்று அறிவியல் யுகமாய் மாற்றியிருக்கிறது.

 ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்வதற்குக் கூட பெரும் சவாலான சூழலே இருந்தது. தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றிய ஆய்வில் இறங்கினர். இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வியலோடு இயற்கை, சமூகச் சூழலையும் ஆராயத் தொடங்கினர். புவியியல் மாற்றங்கள், வான்வெளிக் கோள்கள், விண்மீன்களின் இயக்க போக்குகள், இரவு பகல் ஏன் தோன்றுகின்றன? என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றனர்.

 இந்த இயற்கை விதியைப் புரிந்து கொண்டவர்களில் தமிழ்மக்கள் தனித்தகுதி உடையவர்களாக விளங்கியிருந்தனர் என்பதை பழங்காலத்தவரின் வாழ்வியல் வழிஅறிய முடிகிறது. குறிப்பாக நிலமும் அதற்கேற்ற பருவகாலமே உயிர்களும் பயிர்களும் வாழ்வதற்குரிய சூழலை வழங்குகிறது என்ற இயற்கையியல் கருத்தைக் கொண்டிருந்தனர்.. அக்கருத்தாக்கமே தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள் என்ற பொருள்வகைப் பாகுபாடு ஆகும். ஆம்,

 முதல்எனப் படுவது, நிலம் பொழு திரண்டின்

 இயல்பென மொழிப இயல் புணர்ந்தோரே (பாடல்:950)

என்ற தொல்காப்பியரின் இக்கருத்தியலே இன்று இயற்கை, மானிட புவியியல் துறைகளாக (Nature and Human Geography) விளங்கி இது மனிதனுக்கும், இயல்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்கிறது. வடக்கே வேங்கட மலையையும் தெற்கே குமரி பகுதியையும் எல்லையாகக் கொண்டதை “வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்று தொல்காப்பிய சிறப்பு பாயிரத்தின் வழியே அறிகிறோம்

 இவ்வெல்லைப் பரப்பில் காடும் காட்டைச் சார்ந்த பகுதியை முல்லை நிலம் என்றும், மலையும் மலையைச் சார்ந்த பகுதியை குறிஞ்சி நிலம் என்றும், வயலும் வயலைச் சார்ந்த பகுதியை மருத நிலம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த பகுதியை நெய்தல் நிலம் என்றும், கடும் வெப்ப காலத்தில் தோன்றிய (குறிஞ்சி, முல்லை நில திரிபு) நிலப்பகுதியை பாலை என்றும் பகுத்து அறிந்தும் அந்நிலப்பகுதிக்கே உரித்தான பருவ காலச் சூழலை புரிந்துணர்ந்தும் மக்கள் வாழ்ந்துள்ளனர். புவியில் மனிதன் வாழ்வதற்குறிய பிரதானச் சூழல் உருவாவதற்கு நல்ல நிலமும் அதற்கேற்ற பருவ காலமுமே என்றனர். மனிதன் வாழ்வதற்குரிய முதற்பொருள். அவற்றாலேயே யாவும் நிகழ்கிறது என்ற பஞ்ச பூதக் கொள்கையே பழந்தமிழரிடம் வேறூன்றி இருந்துள்ளது.

 காலம் (Time) பற்றிய ஆய்வுகளில் ஐவகை நிலத்துள் வாழ்ந்த மக்கள் வாழ்வியல் ஓராண்டுப் பொழுதாக பருவகாலச் சூழலை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு வகையாக பகுத்துணர்ந்தும் ஒரு நாள் பொழுதினை வைகறை, விடியல், நண்பகல், மாலை, யாமம், எற்பாடு என்றும் வகைப்படுத்தி இருந்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆண்டு பருவமும், நாள் பொழுதின் உட்கூறும் எந்த நிலத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளது என்பதையும் அறிந்திருந்தனர். உதாரணமாக,

 கூதிர் யாமம் என்மனார் புலவர் “ (தொல்காப்பியம்:952) என்று முல்லை நிலத்திற்கு ஆண்டு பருவ காலமாக கார்காலமும், நாள்பொழுதாக மாலை பொழுதையும், குறிஞ்சி நிலத்திற்கு பெரும்பொழுதாக கூதிர்க் காலமும் நாள்பொழுதாக யாமமும் உரித்தானது என்கிறார் தொல்காப்பியர். மானுட வாழ்வை ஆய்ந்த முறையாவும் மக்கள் நிலத்தொடும் பொழுதோடுமே அமைந்திருந்தது. அது மட்டுமன்றி அந்நிலமும், பருவகாலத்திற்கு ஏற்பவே கருப்பொருள்கள் தோன்றியிருந்தன என்றும் தொல்காப்பியர்,

 “தெய்வம் உணாவே மாமரம் புல்பறை

 செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

 அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல்காப்பியம்: பாடல் 964)

என்று குறிப்பிடுகிறார். அதாவது நிலமும் அதனையொத்த பருவகாலத்து சூழலுக்கேற்ப தோன்றும் பொருட்களும் சமூக பண்பாட்டு விழுமியங்களும் கருப்பொருளே என்கிறார். நிலத்துள் பண்பாட்டு அடிப்படையில் தோன்றிய வழிபாட்டு முறையும் நிலத்திற்கேற்பவே தோன்றியிருந்ததை,

 மாயோன் மேய காடுறை உலகமும்

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்காப்பியம்: பாடல் 951)

என்கிறார். மாயோன்-காடும் காட்டைச் சார்ந்த பகுதி, சேயோன்-மலையும் மலையைச் சார்ந்த பகுதி: வேந்தன்- வயலும் வயலைச் சார்ந்த நிலப்பகுதி, வருணன்- கடலும் கடலை சார்ந்த பகுதி என ஐவகை தெய்வங்களை முதற்பொருள் என கொள்ளாமல் நிலத்திற்கு ஏற்ப தோன்றிய தெய்வங்கள் எனச் சுட்டி செல்வதை காண முடிகிறது. அதே போல ஒவ்வொரு நிலத்துள் மக்கள் உண்ணும் உணவு, நிலத்துள் வாழும் விலங்குகள், தாவரங்கள், பறவைகள், அடிப்படையாக நிலத்திற்கே உரித்தான தொழில்கள், கலையியலில் யாழ் வாசிக்கும் முறை முதற்கொண்டு ஆராய்ந்து யாவையும் கருப்பொருட்கள் என்கிறார். இது அடிப்படையில் தோன்றி மறைவது என்ற கருத்தையும் கொண்டுள்ளதை நன்கு நோக்க முடியும்.

 வேட்டையாடுதல் - மலை, மாடு வளர்த்தல் - காடு, உழவு - சமவெளி, மீன்பிடித்தல், உப்பு விளைத்தல் - கடல் ஆகிய தொழில்களில் மக்கள் ஈடுபட்டதை காண்கிறோம். ஆக நிலமும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பவே புவியில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இருந்ததை நன்கறிந்து இலக்கிய படைப்பையும் அவ்வாறு புரிந்துணர்ந்ததையும் இயற்கை கொள்கையாகக் கொண்டிருந்ததையும் அறிகின்றோம்.

பழந்தமிழரின் உயிரினங்களின் தோற்றம் பற்றிய பரிணாமக் கொள்கையை பற்றிய ஆய்வும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

 சார்லஸ் டார்வினின் (charles darwin இயற்கைத் தேர்வு, உயிரினத் தோற்றம், தக்கவைப் பிழைத்தல் பற்றிய கொள்கை பழங்காலத்தினரின் ஆய்வாகவும் அமைந்திருந்தது. அவர்கள் இன்றைய புராண கருத்தியலுக்கு இடம் தரவில்லை மாறாக,

 ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

 இரண்டறிவதுவே அவற்றொடு நாவே

 மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் கண்டவாறே (தொல்காப்பியம்)

என்று புலன் அடிப்படையில் பகுத்தறிவு போக்கில் விளக்கியதை காண முடிகிறது. முறையே தொடு உணர்வு அறியும் திறன் கொண்ட உயிர்கள் ஓர் அறிவை உடையனவாம்உணர்வுடன் வாயினையுடைய உயிர்கள் இரண்டு அறிவை உடையனவாம். உணர்வுடன் வாய் மற்றும் மூக்கினைப் பெற்ற உயிரினம் மூன்றறிவை உடைய உயிரினங்களாம். உணர்வுடன் வாய், மூகு, கண், காதினை உடைய உயிரினங்களாம். இதில் சிறப்பாக உணர்வுடன் வாய், மூக்கு, கண், காது ஆகிய உறுப்புகளை பெற்றிருந்தாலும் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் உடைய உயிரினமே மானுட உயிரினம் என்கிறார். பிற உயிர்கள் சிந்தித்தாலும் சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வாழும் தகுதிப்பெற்ற தலைசிறந்த மானுட இனமே யாவற்றிலும் தனித்த தன்மையுடையது என்றும், இதனை நேரிதின் உணர்ந்தார் கண்டனர் என்றும் கூறும் கூற்று பழங்கால சுமேரிய, கிரேக்க, ரோம, எகிப்திய, மெசபடோமிய, சீன, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உணர்த்தும் உயிர்களைப் பற்றிய கருத்தியலே என்பது வெற்றுச் சொல்லும் அல்ல, வெற்று கற்பனைப்போக்கும் அல்ல, மாறாக இயற்கை அறிவியலே (Natural Sciences) ஆகும். இதன் மூலம் சுமார் 2500- ஆண்டுக்கு முற்பட்ட பழந்தமிழர் ஆய்வுச்சிறப்பு தெளிவாக அமைந்திருந்தது என்பதை துணிந்து விளங்கிக் கொள்ள முடியும்.

 இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் மனிதன் ஒவ்வொரு நொடியும் உய்த்துணர்ந்து ஆராய்ந்து கொண்டே வந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதற்கான விடையைத் தேடி திரிந்த வரலாற்றுப் போக்கையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த உலகம் எப்படிப்பட்டது அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கை புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும் இரவிலும் பருப்பொருட்கள் தோன்றுவதும் மறைவதுமாக மாறி மாறி நடக்கக்கூடிய நிகழ்ச்சிக்கான காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைக் கொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்..

 உலக வரலாற்றில் குறிப்பாக தாலஸ் (Tholes) என்பவர் உலகம் நீரினால் ஆக்கப்பட்டது என்றார். ஆக நீரே உலகில் யாவற்றுக்கும் முதன்மை பொருள் என்றார். அனாக்சிமினிஸ் என்ற அறிஞர் காற்றால் உலகம் ஆனது என்றார் அனாக்சிமண்டர் உருவமற்ற யாரும் பார்க்க முடியாத பொருளாக உலகம் ஆக்கப்பட்டது என்றார் தாலமி பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்தினை முன்வைத்தார்.

 இப்படிப் பல கருத்துக்கள் தோன்றிய அக்காலகட்டத்தில் உலகம் எப்பொருள் ஆளாக்கப்பட்டது என்பதற்கு தொல்காப்பியர்,

 “நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்கிறார். ஆக நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் கலந்து மயங்கி நிற்றலே உலகம் என்று உரைக்கிறார். சுற்றுகின்ற இப்புவியில் ஒன்று மற்றொன்றாய் மற்றொன்று வேறொன்றாய் மாற்றம் என்பதைத் தவிர அனைத்து மாறும் என்ற இன்றைய இயங்கியல் விதி பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் புரியாத சூழலில் பொது ஆண்டுக்கு முன்னர் சுமார் 2500- ஆண்டுகளுக்கு முன்னரே மானுடனின் அறிவியல் தேடல் இவ்வாறு இருந்ததன் விளைவே இயற்கைப் பார்வையொடு மக்கள் இருந்ததை உணர்த்தும்.

 மேற்கண்ட பாடலில் ஐந்தும் கலந்த மயக்கமாய் உலகம் இருக்கிறது என்ற சொல்லாட்சியில் கலந்த என்ற சொல் ஒன்று மற்றொன்றோடு கலந்து நிற்றல், அதாவது கலந்த மயக்கம் என்ற சொல் ஒன்று மற்றொன்று கலைந்து மயங்கி நிற்பதாக வேதியியல் துறை சொல்லாடலாய் நாம் அணுக முடியும்.

 மாற்றம் நிகழ்ந்த பொருளே அடங்கி இருப்பது நோக்கத்தக்கது உதாரணமாக ஆக்சிசன் ஒரு மடங்கும் ஹைட்ரசன் இரண்டு மடங்கும் இரண்டறக் கலந்தவையே நீர் என்கிறோம். அதை போலவே அனைத்தும் கலந்து மயங்கி நிற்பதே உலகம் என்கிறார் தொல்காப்பியர். ஒன்று மற்றொன்றோடு கலந்து மயங்கிய இவ்வுலகம் இப்பிரபஞ்சம் இருக்கிறது என கூற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பூதங்களையும் தனித்தனியே பார்த்து விளக்கிய காலத்தில் பொதுத்தன்மையை இயற்கைப் பொருட்களை விளக்கிய பழந்தமிழரின் சிறப்பிற்குரியது.

 சங்க இலக்கிய பாடலொன்றில் “மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வழி தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பூதத்து இயற்கை போல" என்ற சங்கப்பாடலும் (புறநானூறு பாடல்-2) பஞ்சபூதங்களின் தன்மையையும் ஒன்று மற்றொன்றை இணைத்துக் கூறும் நிலையில் வியப்பிற்குரியதாக இருக்கிறது. ஆக பழந்தமிழர் இயற்கை அறிவியல் சிந்தனையில் தனித்த தன்மையில் புரிந்துணர்ந்தும், அவை வழ்வியலோடு பொருந்த வாழ்ந்தமையையும் தெளிவாக அறிய முடிகிறது.

-  மன்னை முனைவர் பா.பிரபு, பெரி கலை அறிவியல் கல்லூரி, மண்ணிவாக்கம், சென்னை

Pin It