thoolikapium 400இரண்டு உலகப்போர்களின் விளைவாக உலகில் அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவம் என பல துறைகளில் மாறுதல்கள்  உண்டாயின. அதன் தொடர்ச்சியாகக் கலை, இலக்கிய, புலங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.  இந்திய/ தமிழ்ச் சிந்தனை மரபிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது.  மார்க்சியம், அமைப்பியல், நவீனத்துவம், இருத்தலியம், பின் நவீனத்துவம் முதலிய மேலைக் கோட்பாடுகளின் தாக்கம் தமிழாய்வில் ஏற்பட்டன.

சமூக, வரலாற்றியல் ஆய்வுகளும் இலக்கிய ஆய்வுகளும் புதிய உள்ளளிகளுடன் வரத்தொடங்கின.  அத்தகைய போக்கில் தெ.பொ.மீ, தனிநாயக அடிகள், மருதநாயகம் போன்றோரை ஒப்பிலக்கிய ஆய்வுகளிலும் கைலாசபதி, கா.சிவத்தம்பி, வானமாமலை, ஞானி, தமிழவன், மாதையன் போன்றோரைச் சமூகவியல் சார்ந்த இலக்கிய ஆய்வுகளிலும், கோட்பாட்டு ஆய்வுகளிலும் பார்க்க முடியும்.

அந்தவகையில், மார்க்சியத் திறனாய்வு அடிப்படையில் தமிழியல் ஆய்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் எனச் சிவத்தம்பியைக் குறிப்பிட முடியும். இவர் இலக்கியத்தைச்  சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்த தோடு அழகியல் கண்ணோட்டமும் அதனுடன் இணைய வேண்டும் என்று செயல்பட்டவர். இந்த நோக்கத்தினை மையமாகக் கொண்டு 2004  சென்னை பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் நடத்திய “தமிழின் கவிதையியல் தேடல்” என்ற சொற்பொழிவின் ஒரு பகுதியாகத் “தொல்காப்பியமும் கவிதையும்” என்ற இந்நூல் 2012இல் வெளிவந்தது.

இந்நூலில், தமிழர் சிந்தனை மரபில் தொல் காப்பியம், பாவும் கவிதையும், பத்துப்பாட்டின் கவிதையியல், தமிழ் கவிதை வரலாற்றிலே தொல் காப்பியக் கவிதையின் சில விளக்கங்களும் சிக்கல்களும் என்று நான்கு கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பாக, தொல்காப்பிய பொருளதிகாரம் பொருளடைவும் தமிழ் கவிதை பற்றிய இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்கு களும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் எனும் கட்டுரையும் இடம்பெறு கின்றன.

இந்நூலின் முன்னுரையில் தமிழியல் ஆய்வை உலக, இந்தியச் சிந்தனைப் பின்புலத்திலிருந்து ஆய்ந்து  தமிழுக்கான தனித்த அடையாளத்தினை இனம் காண வேண்டிய அவசியத்தினைக் கூறுகிறார். தமிழ்ப் பண் பாட்டை இனம் காண வேண்டுமாயின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, வார்ப்புத் திருமேனி, இசைக்கலை, நடனக்கலை, இலக்கியக்கலை இவைகளை ஒருங்கே வைத்து ஒட்டுமொத்தமான அழகியலைத் தேட வேண்டும் என்கிறார். இவ்வாறு தேட முற்படும் பொழுது உலகப் பொதுமையையும் இந்தியச் சிந்தனை மரபையும் நிராகரிக்காது இவற்றையும் கருத்தில் கொண்டு தேட வேண்டும் என்கிறார்.

தமிழ் அழகியல்  தேடல் சங்க இலக்கியத்தில் தொடங்கி, தற்கால  இலக்கியம் வரை உள்ள ஒட்டுமொத்தமான பொதுமைப் பண்பினை இனம் காண வேண்டும். அழகியல் தேடலில் சமூக, பொருளாதார அடிப்படைகளைப் புறந்தள்ளாது  இருக்க வேண்டும் என்கிறார். இதனை “அழகியல் தேடலென்பது சமூகப் பொருளாதார அடிப்படைகளை மறக்கும் முயற்சியன்று. உண்மையில் அது ஆரோகண, அவரோகண கட்டுக்கோப்புக்குள் நின்றுகொண்டு செய்யப்படும் மனோதர்ம ஆலாபனைத் திறனாகும்” என்கிறார். இதற்கான தொடக்கத்தினைத் தொல் காப்பியத்தில் இருந்து தொடங்க வேண்டும். “இலக்கிய விமர்சனம் கலை விமர்சனத்தின் பார்வைகளுடனும் பரிபாஷையுடனும் இணைய வேண்டும்”. இவ்வாறு காணும் பொழுதுதான் ஒட்டு மொத்தமான தமிழ் அழுத்தத்தினை இனம் காண முடியும் என்கிறார்.

தமிழர் சிந்தனை மரபில் தொல்காப்பியம் எனும் முதற்கட்டுரையில், வரலாற்றுச்சூழலில் இருந்து தொல்காப்பியத் தோற்றம் குறித்து ஆய்கிறார். இந்நூல்  தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கா? வடமொழி தெரிந்த தமிழருக்கா? தமிழ் தெரிந்த வடமொழி மரபினருக்கா?  என்ற வினாக்களை எழுப்பி அதன் தோற்றத்தை விளக்குகிறார். 11,12 ஆம் நூற்றாண்டு களில் பிறமொழி நெருக்கடிச்சூழலில் அதன் பின் புலத்தில் இருந்து வீரசோழியம், யாப்பருங்கலம், பாட்டியல் போன்றனவும்  இதிலிருந்து மாறுபட்டு தமிழ் மரபுப் பின்னணியில் நன்னூலும் தோன்றின. இது மாதிரியான நெருக்கடியால் தொல்காப்பியமும் தோன்றி யிருக்க வேண்டும் என்கிறார். தொல்காப்பியத்தின் அமைப்பு முறைகள், நெளிவு சுழிவுகள், முக்கிய புறநடைகள், சொல்மரபுகள்  இவற்றை நோக்கும் பொழுது  ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஒருவருக்காக  எழுந்த நூல் என்கிறார்.

பாவும் கவிதையும் ஓர் அறிமுக நோக்கு எனும் இரண்டாம் கட்டுரையில் செய்யுள், பா, கவிஞர், புலவர் முதலிய சொற்களை வரலாற்றுச்சூழலில் ஆய்கிறார். தொல்காப்பியக் காலத்தில் செய்யுள் என்ற சொல்  இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் குறித்தது. பின்பு படிப்படியாக அது பாடல் வடிவத்தை மட்டும் குறிக்கும் சொல்லாயிற்று. கவிதை என்ற சொல் முதலில் பரிபாடலிலும், கவி என்ற சொல் சிலப்பதிகாரத்திலும், கவிஞர் என்ற சொல் சீவகசிந்தாமணியிலும் வருவதால் இச்சொற்பிரயோகம் சங்க காலத்திற்குப் பிந்தையது எனக் கூறுகிறார்.

புலவு - பரந்த இடம் வயலைக் குறிக்கும் எனவே அறிவுப்பரப்பினை உடையோர் புலவராவர். சங்க இலக்கிய  நிலையில் பாணர்கள், பாடுநர்கள் முதன்மை பெறுகின்றனர். இவர்கள் வீரயுகத்துக்குரிய தொழில் முறை பாடுநர்களாக விளங்கியவர்கள். பாணர்களினின்று  அறிவுடையவர்கள் - புலமையுடையவர்கள் புலவர்கள் என்ற கருத்து நிலையே இருந்தது என்கிறார்.

‘பா’ எனும் சொல்லினை விளக்கும்போது, பாணர்கள், புலவர்களின் ஆக்கங்கள் ‘பாக்கள்’ எனப்பட்டன. ‘பா’ என்பது பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. ‘பா’ என்று கூறுவதன் மூலம் பாடப்பெறும் ஓசையமைப்பே முக்கியமானது. ‘பா’ என்பது வாய்மொழி நிலையினைக் குறிக்க, எழுத்து முறைமை வளர வளர பாடலின் உள்ளுருவாக்கம் வளரத் தொடங்குகிறது  என்று கூறுகிறார்.

வாய்மொழி மரபிலிருந்து அதனோடு இணைந்த பாணர் மரபிலிருந்து புலமை மரபிற்கு- புலவர் மரபிற்கு இலக்கிய வடிவம் மாற்றமடைந்ததையே பா, பாட்டு, செய்யுள் முதலிய சொற்பயன்பாடுகள் குறிக்கின்றன எனக் கூறுகிறார்.  

பத்துப்பாட்டின் கவிதையியல் எனும் மூன்றாம் கட்டுரை, பத்துப்பாட்டின் செல்நெறிகளை விளக்குகிறது.

முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை இம்மூன்றிலும் அகம்/புறம் இணக்கப்பட்டுள்ள முறையில் நெகிழ்ச்சி உள்ளது எனக் குறிப்பிடுகிறார். முல்லைப்பாட்டில் அகம் /புறம் எதிர்நிலைப்பட்ட முயற்சி நடக்கிறது. நெடுநல்வாடையில்  திணைப் பிறழ்வுக்கவிதை சுவை மிக்கதாகவும் எதிர்முரணாகவும் உள்ளது. பட்டினப்பாலையில் அகமாக்கும் முயற்சி மூன்று வரிகளில் நடைபெறுகிறது எனக்கூறுகிறார்.

தனி இலக்கிய வகையான ஆற்றுப்படையுள் திருமுருகாற்றுப்படையைத் தவிர மற்றைய நான்கும்  காலத்தால் முந்தையது. தொல்காப்பியப் பாடாண் திணை புலவர்களைப் புகழ்வதற்குரிய உத்தி முறையாக இதனைக் கூறுகிறது. மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப் படை இரண்டிலும் வருணனை முக்கிய கூறாக உள்ளது. மேலும் திணை, துறை முக்கியத்துவத்தை உடைத்து நீட்சியை உருவாக்கும் பண்பினைக் காணமுடிகிறது. பொருநராற்றுப்படையில் வருணனையை விட கரிகால் வளவனது சிறப்பே மேலோங்கி நிற்கிறது.

இறையனார் களவியலின் “இது எந்நுதலிற்றோ வெனின் தமிழ் நுதலிற்று” எனும் கருத்தியல் பின்னணி போல, குறிஞ்சிப்பாட்டின் கொலு அமைப்பினைச் (ஆரிய அரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தியது) சமூகவியல் நோக்கில் பார்க்க வேண்டுமென்கிறார். குறிஞ்சிப் பாட்டின் திணையமைப்பிலும் மாற்றம் உள்ளது. அதாவது அவ்வத்திணையின் உள்ளாக இல்லாமல் தனியான நாடக அமைப்பில் வருகிறது. புறத்திணை மரபில் கூறப்பட்டனவற்றைக் கருத்து நிலையில்  எதிர்ப்பதாக மதுரைக்காஞ்சி அமைந்துள்ளது. 

பத்துப்பாட்டின் ‘பா’ அமைப்பைக் குறிப்பிடு கையில், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம் ஆகியன நேரிசை ஆசிரியத்திலும் பொருநராற்றுப்படை வஞ்சி மயங்கிய ஆசிரியத்திலும்   பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி வஞ்சி மேலோங்கிய ஆசிரியத்திலும் அமைந்துள்ளன என்கிறார்.

இந்த வகையில் பத்துப்பாட்டுப் பாடல்களின் நீட்சி முறைமையமைப்பில் வித்தியாசத்தை ஏற்படுத்தி, புதிய அழகியலுக்கு இட்டுச்சென்று சங்கக் கவிதையில் மேலும் ஒரு நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. இதன் போக்கை வடிவ, உள்ளடக்க முறையின் மாற்றங்களினடிப் படையில் விளக்கியுள்ளார்.

தமிழ்க்கவிதை வரலாற்றிலே தொல்காப்பியக் கவிதையியல் சில வினாக்களும் சிக்கல்களும் என்ற நான்காம் கட்டுரையில், தமிழ்க் கவிதைப் பண்பாடு என்னவென்பதை அறிவதற்குச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இரண்டையும் இணைத்துப் பார்ப்பது அவசியம் என்கிறார். தமிழிற் செய்யுள் உண்டாக்கப் படும் முறைமை பௌதீக, குணம் சார்ந்து இயங்கு கிறது. உலகப் பொதுவான இலக்கிய வகைகளான பாட்டு, உரை, நூல், பிசி, அங்கதம், முதுசொல் இவை தமிழ்நாட்டில் வழங்கும் முறைமையை நோக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சொல்வழக்கு மரபு களையும், சமூக மரபுகளையும் நோக்க வேண்டிய அவசியம், பா வகைகளின் வளர்ச்சி முறைமை, என்பவைகளை விளக்குகிறார்.

பின்னிணைப்பு இரண்டில், தொல்காப்பியம் முதல் பாட்டியல் நூல்கள் வரை தமிழ்க்கவிதை பற்றி  இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்குகள் ஒருநிலையில் இருப்பினும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப் பாற்றல் நெகிழ்வுமிக்கதாக இருக்கிறது என்பதை முக்கிய விடயமாகக் குறிப்பிடுகிறார். அதாவது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினுள் நெகிழ்வு செறிந்து கிடக்கிறது என்கிறார். சங்க இலக்கியத்தில் உள்ள அகம்/புற நெகிழ்வு, பக்தி இலக்கியங்களுக்கான இலக்கிய/கவிதைக் கொள்கை நமது செய்யுளிலக்கண நூல்களில் இல்லாமை, தண்டியலங்கார வழி நிற்கும் காப்பிய மரபை, கம்பராமாயணம், பெரியபுராணம் இவைகளில் காணமுடியாமை போன்றவைகளின் வழியாக இதனை நிறுவுகிறார்.

தமிழின் தனித்தன்மையை நிறுவும் நிலையில் தொல்காப்பியம் சங்க இலக்கிய ஆய்வுகளை உலக/ இந்தியப் பண்பாட்டுப் பின்புலத்தில் ஆராயவேண்டும் என்பதை இந்நூல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஏனெனில் அத்தகைய நோக்கே தமிழ் அடையாளத்தைத் தனித்தன்மையுடையதாக நிறுவ வழிசெய்யும். தொல் காப்பியம் தொடங்கி, தற்காலம் வரை இலக்கிய, இலக்கணங்களில் தொடரும் தமிழ் மரபின் பொதுமை, தனித்தன்மையைக் கண்டறிய வேண்டுமென்கிறார். அதற்குத்  தொல்காப்பியமே அடிநாதமானது அதாவது பிரதானமானது என்கிறார்.

தமிழியல் ஆய்வு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்துறை நோக்குடையதாக வளர்ந்தது. சங்க இலக்கிய ஆய்வுக்குச் சிவத்தம்பி புத்தொளியைப் பாய்ச்சினார். அவருக்குப் பின்பு, சமூகவியல் சார்ந்த பார்வைகள் ஆய்வில் பெருமளவு தீவிரம் பெற்றன. இலக்கிய அழகியல் ஆய்வுகளும் சமூகவியல் ஆய்வு களும் ஒன்றோடொன்று இணையாத போக்கே பெருமளவு உள்ளது.  அந்தவகையில் தொல்காப்பியமும் கவிதையும் எனும் இந்த நூல் சமூகவியல் ஆய்வையும் இலக்கிய அழகியல் ஆய்வையும் ஒருங்கிணைத்து உலக/ இந்திய நிலைப்பட்டப் பார்வைப் புலத்தில் காண உறுதுணையாக அமையும் என்பது மிகையல்ல.

தொல்காப்பியமும் கவிதையும்

கார்த்திகேசு சிவத்தம்பி

வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை:ரூ.75.00

Pin It