பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? - 4

ம.பொ.சிதான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் தமிழன் குரல் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம் உண்மை தான், ம.பொ.சி அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சியை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சியே எழுதியுள்ளார்.

“பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருது நகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெறவிருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் திரு.வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில் பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். காலை சுமார் 7 மணிக்கு ரயில் கொடைக்கானல் ரோடில் நின்றபோது, நான் எதிர்பாராத வண்ணம் திடீரென்று திருமதி. மணியம்மையாருடன் பெரியார் எனது பெட்டிக்கு வந்தார்.

நான்கு இட்டலி, அதற்குத் தேவைப்படும் நெய், சர்க்கரை ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, அதை உண்ணுமாறு இனிய வார்த்தைகள் கூறி உபசரித்தார். அதுவரை நான் பெரியாரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. என்னைவிட வயதில் பெரியவரான அவர், தாமாகவே வலிய வந்து என்னை உபசரித்தது எனக்கு வியப்பைத் தந்தது. இருவரும் இரண்டு நிமிடம் உரையாடினோம். அவர், ‘ஐயா, ‘தமிழ் முரசுப் பத்திரிகையில் தாங்கள் எழுதி வருவதையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எங்களைப் போலவே எழுதுகிறீர்கள். அப்படியே பேசுகிறீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் ஐயாவுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடும். எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் இருக்கும். தாங்கள் தொடர்ந்து அப்படியே எழுதி வாருங்கள்” என்று கனிவான குரலில் பணிவன்போடு கூறினார் (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 421, 422) என்று ம.பொ.சியே எழுதியுள்ளார்.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்தாலும், திராவிட நாடு பிரிந்தாலும் பெரியார் அதை வரவேற்றார். பெரியார் விரும்பியது வடவர் ஆதிக்கத்திலிருந்து தென்னகம் முற்றிலுமாக விடுபட வேண்டும் என்பதே. அதனால் ம.பொ.சி கூறிய தமிழ்நாடு விடுதலையை அவர் எதிர்க்கவில்லை. மேலும் ம.பொ.சியின் தமிழ் முரசு இதழுக்கு சிறப்பான முறையில் மதிப்புரை எழுதி அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்று தமது குடி அரசுப் பத்திரிகையிலேயே எழுதினார்.

ma po si 299மதிப்புரை தமிழ் முரசு தோழர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ் முரசு’ என்ற திங்கள் வெளியீடு நமது பார்வைக்கு வந்தது. ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற கிராமணியாரின் கட்டுரையில், அவரின் நாட்டுப் பற்றும், இனப்பற்றும், சீர்திருத்தக் கொள்கையும் நன்கு விளங்குகின்றன.

கிராமணியார் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவரெனினும் தேசியத்தால் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் வந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார். மதம், கடவுள், புராணம் ஆகியவற்றால் தமிழர்களின் நிலை சீர் குலைந்துள்ளதைக் கண்டித்தும், வருங்காலத்தில் தமிழராட்சி தனித்தியங்க வேண்டுமென்று வற்புறுத்தியும் விளக்கமாக எழுதியுள்ளார். திரு.வி.க., மு.வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். ‘தமிழ் முரசு’ என்னும் மாத வெளியீட்டைப் பலரும் படித்துப் பயன் பெற வேண்டுமென்பது நமது விருப்பம்” கிடைக்குமிடம் தமிழ் முரசுப் பதிப்பகம், 233, லிங்கச் செட்டித் தெரு ஜி.டி. சென்னை -1, (குடியரசு13-7-46)

தமிழ் பேசுபவர்களை தமிழர் என்று பெரியார் கடுமையாக கண்டித்தார் என்று பெரியாருக்கு எதிராக அபாண்டமாக புளுகி வருகின்றனர் போலித் தமிழ்த் தேசிய வாதிகள். இவ்வளவு சிறப்பாக ‘தமிழ் முரசு’ இதழுக்கு குடி அரசு ஏட்டில் பெரியார் எழுதியிருந்தும் ம.பொ.சி அதைத் திருத்தி ஒரு பொய்யை எழுதியுள்ளார்.

“குடி அரசு” வார இதழிலே பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் “தமிழ் முரசு”ப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருந்தார். எனது அரசியல் கட்டுரைகளைப் பொதுவாக அவர் வரவேற்றார் என்றாலும், கதர் அணிந்து கொண்டு, ஆரியரது (அவரது கருத்துப்படி) செல்வாக்கிலுள்ள காங்கிரசிலும் இருந்து கொண்டு நான் புதிய தமிழகம் படைக்கக் கனவு காண்பதனைச் சிறிது நையாண்டியும் செய்திருந்தார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 378) ம.பொ.சி வரலாற்றை திரிப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் வல்லவர் என்று ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் அதனை குடி அரசு மதிப்புரை செய்தியிலும் உறுதிபடுத்தி விட்டார். ம.பொ.சி . குடி அரசு ஏட்டின் “தமிழ் முரசு” மதிப்புரையை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். அதில் என்ன நையாண்டி இருக்கிறது. என்ன நக்கல் இருக்கிறது. வேண்டுமென்றே பெரியாரின் மீது ஒரு பொய்யை அள்ளி வீசுவது ம.பொ.சியின் வாடிக்கையாகி விட்டது என்பதைத் தவிர அதில் உண்மைத் தன்மை இல்லை என்பதே வெளிப்படை.

ம.பொ.சியின் ‘தனித்தமிழ் நாடு’ சோலிச தமிழ் தேசக் குடியரசு’ என்ற கொள்கை எல்லாம் எவ்வளவு காலம் நீடித்தது என்பதுதான் கேள்வி.” ஒரு ஆறு மாதம் கூட நீடிக்க வில்லையே! 1-4-47 ‘தமிழ் முரசு’ ஏட்டில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழ் நாடு தனி நாடு; அதை உபமாகாணம் என்று சொல்வது தமிழரை ஏய்க்கச் செய்யும் சதி. தமிழன் இந்தியனாய் இருக்கத் தயார்; ஆனால், அவன் முதலில் தமிழன்; இரண்டாவதாகத்தான் இந்தியன்;” தமிழன் எப்படி தமிழனாகவும், இந்தியனாகவும் இருக்க முடியும் என்பது ம.பொ.சி அன்பர்களுக்கே வெளிச்சம்.

15-5-47 தமிழ் முரசு இதழில் “சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழரசு அமைய வேண்டும். வெறும் மாகாண சுயாட்சி மட்டும் போதாது. தமிழர் வாழ, தமிழ்மொழி வளர, தமிழ் நிலம் செழிக்கத் தமிழரசு வேண்டும் (பக்4) இவ்வளவு வீரமாக எழுதிய ம.பொ.சி அதே கட்டுரையில் தமிழ் முரசு 15.5.47 இல் ஒரு அந்தர் பல்டியும் அடிக்கிறார். “இந்திய தேசிய இனங்களின் கூட்டரசில் சுதந்திரத் தமிழகம் இணைய வேண்டுமென்பதே நமது விருப்பம்”. என்கிறார்.

15.12.47 தமிழ் முரசு இதழில் மிகப் பெரிய பல்டியை ம.பொ.சி அடித்தார். “தமிழ் நாடு ஒரு தனிநாடு, தமிழர் ஒரு தேசிய இனம்”. என்ற வரலாற்று உண்மைகளைக் கூட அரசியல் நிர்ணய மன்றத்தார் மறந்து விட்டனர். அதில் கலந்து கொண்ட தமிழகத்துப் பிரதிநிதிகள் கூட வற்புறுத்தவில்லை. தமிழினத்துக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி தமிழகப் பிரிவினையை வற்புறுத்துவதோடு, சுதந்திர சோசலிசத் தமிழ்க் குடியரசை அமைத்துக் கொள்ள தமிழினத்துக்கு உரிமை உண்டென்று பிரகடனம் செய்ய வேண்டும். இது காங்கிரசின் அடிப்படை கொள்கைக்கு முரண்பட்டதல்ல. காங்கிரஸ் வேண்டுவது ஏதேனும் ஒரு வகையில் அய்க்கிய இந்தியா. அதை நாம் ஏற்போம். அதே சமயத்தில் பிரஜா உரிமை, கைத் தொழில், வர்த்தகம், சுங்கம் இவை போன்ற தமிழ்நாட்டின் உயிர் நாடியான உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என மறுப்போம். இது தான் தேச பக்தி மார்க்கம்”.

ம.பொ.சியின் தமிழின துரோகத்தை அப்போதே தோலுரித்துக் காட்டினார் கி.ஆ.பெ. “ஈ.வெ.ராவையும் அவருடைய விடுதலையையும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கு நலம் தரும் கொள்கைகளைக் கூடத் தாக்க முன் வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இருந்துக் கொண்டு பிற கட்சியினரின் கொள்கைகளை வசை மொழிகளால் தாக்க முன் வந்து விட்டார். வடநாட்டார் தமிழ் நாட்டைச் சுரண்டவில்லை என்று பேசத் தொடங்கி விட்டார். ம.பொ.சியால் அவருக்கோ, தமிழ் நாட்டிற்கோ, எவ்வித பயனும் ஏற்படாது என்பதை நட்பு முறையில் அறிவித்துக் கொள்கிறோம்”. (தமிழர் நாடு 16-12-1950)

ம.பொ.சியின் மும்மொழிக் கொள்கை. பிரதேச மொழிகளும் சிறுபான்மையினரும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ம.பொ.சி எழுதுகிறார் பள்ளிகளில் மாகாண மொழி முதல் மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் உயர் நிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிறார். ஆங்கிலத்தின் தேவையை அக்கட்டுரையில் ம.பொ.சி அழுத்தமாகக் கூறியுள்ளார்.

“அடுத்தப்படியாக, உலகப் பொது மொழியாகவும், நாடுகளின் கூட்டுறவு மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் எல்லோருக்கும் இரண்டாம் மொழியாக இருக்கும். உலகத்தோடு ஒட்டி வாழ, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய விரும்பும் எந்த அறிவாளியும் இதற்கு மாற்றாக எண்ணவே முடியாது.” (தமிழ் முரசு 15-3-48)

ம.பொ.சி ஆங்கிலத்தைப் பற்றி இப்படி சொன்னால் அவர்களுக்கு இனிக்கிறது. பெரியார் ஆங்கிலத்தை படி என்று சொன்னால் அவர்களுக்கு கசக்கிறது. ம.பொ.சியின் ‘தமிழ்க் குடி அரசு’ ஒரே ஆண்டில் செத்துபோய் விட்டது. அய்க்கிய இந்தியாவை ஏற்போம். சில உரிமைகள் மட்டும் நமக்கு இருந்தால் போதும் என்று முடிவுக்கு அவருடைய தமிழரசுக் கழகம் 1948 லேயே முடிவு செய்து விட்டது. அப்படி இருக்க ம.பொ.சி தான் தனித் தமிழ்நாட்டை தூக்கிப் பிடித்தார், பெரியார் திராவிடம் பேசி அதை கெடுத்து விட்டார் என்ற குப்பனின் வாதத்தில் அர்த்தமில்லை.

இந்து பத்திரிக்கை நிரூபர் ம.பொ.சி சுதந்திர தமிழ்நாடு வேண்டும் என்று கோருகிறார் என்று எழுதி விட்டார். ம.பொ.சி அடுத்த நாளே இந்துவுக்கு எழுதிய கடிதத்தில் தான் எப்போதுமே சுதந்திர தமிழ்நாடு கேட்டதில்லை. இந்துவில் தவறான செய்தி வந்திருக்கிறது என்று மறுப்பு எழுதினார். உடனே குத்தூசி குருசாமி 4.2.53 விடுதலை ஏட்டில் பொய்! பொய்! பொய்!!! என்று விடுதலையில் தலையங்கம் எழுதினார். அதில் ‘தமிழ் முரசுப்’ பத்திரிக்கையில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ம.பொ.சியை எழுதியதை எல்லாம் எடுத்துக் காட்டினார். ம.பொ.சிக்கு விடுதலையின் மீது ஆத்திரம் பொங்கி எழுந்தது. காங்கிரசிலிருந்து ம.பொ.சியை வெளியே அனுப்ப இருந்த காலம் அது. ம.பொ.சி எழுதுகிறார்.

“இந்த நேரத்தில் திராவிடர் கழக நாளேடான ‘விடுதலை’ சும்மா இருக்கவில்லை. அதுவும் தனது பங்கைச் செய்ய முன் வந்தது. எனக்கு ஆதரவாக அல்ல. என்னை ஒழித்து கட்ட விரும்புபவர்களுக்கு உதவியாக.

அந்த நாளில், திராவிடர் கழகத்துக்கும் எனது தமிழரசுக் கழகத்திற்கும் மோதல் இருந்து வந்தது. ஆகையால் விடுதலைப் பத்திரிக்கைக்கு என்பால் நல்லெண்ணம் இருக்குமென்று நான் எதிர்பார்க்க இயலாது தானே! சுதந்திர திராவிடம் கோரி வந்த ‘விடுதலை’ யார் அதன் குறைந்தபட்ச உருவகமான சுயாட்சி தமிழகம் கோரிய எனக்கு தார்மீக ரிதியிலேனும் ஆதரவு காட்டியிருக்க வேண்டும். இது சாத்தியமில்லா விட்டாலும் என்னை அடியோடு அழித்து முடிக்கப் பாடுபட்ட காங்கிரஸ் காரர்களுக்குக் கை கொடுக்காமலேனும் இருந்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழரசு கழகத்தின் கொள்கை சுதந்திரத் தமிழகம் தான் என்று சாதித்து பிரிவினைக் கோரும் என்னை காங்கிரஸ் வைத்திருக்கக் கூடாதென்று உபதேசம் செய்தது. ‘விடுதலை’ ஆசிரியர் தமிழ் முரசின் பழைய இதழ்களிலே நான் எழுதியவற்றிலிருந்து சான்றுகள் காட்டி, காமராசர் குழுவினருக்கு தகவல் அளித்தார். சுருங்கச் சொன்னால், ‘விடுதலை’ என் முதுகில் குத்தியது. விடுதலையின் தலையங்கப் பகுதிகள் மிகுந்த உற்சாகத்துடன் காங்கிரஸ் ஏடுகளிலே எடுத்தாளப்பட்டன.” (ம.பொ.சி எனது போராட்டம் *பக் 700-701)

ம.பொ.சி முன்பு தான் எழுதியவற்றையே அவ்வாறு எழுதவில்லை என்று மறுத்து காங்கிரஸ் காரர்களிடம் மண்டியிட்டு கொண்டிருந்த காலம் அது. நேருவுக்கு தன்னை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டாமென்று பல கடிதங்களை ம.பொ.சி எழுதியுள்ளார். தமிழரசு கழகத்தின் சட்ட திட்ட விதிகளையும் மாற்றி இது ஒரு கலாச்சார கழகமே அரசியல் அமைப்பல்ல என்று கூறியும் நேருவிடம் மண்டியிட்டார்.குத்தூசி குருசாமி விடுதலை தலையங்கத்தின் ம.பொ.சியின் தமிழ் முரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தானே வெளியிட்டார். அவர் சொந்த கருத்து எதையும் அதில் எழுதவில்லையே. இது எப்படி ம.பொ.சியின் முதுகில் குத்தியது ஆகும். விடுதலையை மட்டுமன்று தினத்தந்தியையும் திட்டித் தீர்த்தார். ம.பொ.சி.

“பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக்கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்புகளில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வையில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது.

“வடக்கெல்லை - தெற் கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களிக்கும் பேட்டிகளிலோ மத்திய அரசைக் குறைக் கூறி ஏதேனும் சொல்லி விட்டால் போதும்; அவை “நேருவுக்கு ம.பொ.சி எச்சரிக்கை” “இன்னும் 15 நாட்களில் போராட்டம்” பிரதமருக்கு ம.பொ.சி இறுதி நோட்டீஸ் என்றெல்லாம் தலைப்புகள் தந்து தினத்தந்தியில் பிரசுரிக்கப்படும்”. என்றெல்லாம் தினத்தந்தியின் மீது ம.பொ.சி வசைப்பாடுகிறார். வடக்கெல்லை தெற்கெல்லைப் போராட்டத்தில் இவர் முழு மனதுடன் செயல்பட்டிருந்தால் இந்த செய்திகளுக்காக மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். தினத்தந்தி எதையும் திருத்தி போடவில்லை. இவர் கூறியதை தானே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நேருவுக்கு அனுப்பி விட்டார்களாம். அனுப்பினால் நல்லது தானே. தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நேரு தெரிந்து கொள்ளட்டுமே. ம.பொ.சி தன்னை காங்கிரசை விட்டு நீக்கி விடக் கூடாது என்பதற்காக எல்லார் மீதும் வசைப்பாடினார் என்பது தானே உண்மை.

மேலும் தமிழ்நாடு பிரிவினைக்கு எதிராக பல கட்டுரைகளை ம.பொ.சி. தொடர்ந்து தனது செங்கோல் இதழில் எழுதி வந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

தமிழ்நாடு பிரிவினையைக் கண்டிக்கும் ம.பொ.சி.

“தமிழகத்தை இந்தியாவிலிருந்து துண்டாட விரும்புகின்றன ஒன்றிரண்டு கட்சிகள். அறிஞர் ஒருவர் சொல்கிறார், “எனது தாயகம் அக்பருக்கு அடிமைப்பட்டதில்லை, மௌரியருக்கு அடிமைப்பட்டதில்லை.....” என்று. ஆனால் அந்த அரசியல் அறிஞர் நாம் வாழ்வது அசோகர், மௌரியர் காலமல்ல, அணு ஹைட்ரஜன் குண்டு காலம் என்பதை மறந்து விடுகிறார்.

அக்பர் காலத்தில் இந்தியாவில் ஆயிரம் தனி நாடுகள் இருந்திருக்கலாம். இந்த அணுகுண்டு காலத்தில் வல்லரசுகளின் கெடு பிடிபோர் இந்தியாவின் வாயிற் கதவைத் தட்டுகின்ற நேரத்தில் நாடு துண்டாடப்படுவது நல்லதா?

தமிழகத்தின் மக்கள் தொகை 3 கோடிக்கு மேல் இல்லை. இந்த இலட்சணத்தில் தமிழகம் தனியாக பிரிந்தால், நமது இராணுவத்தில் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள்? அந்நிய நாடுகளிடமிருந்து பாதுகாப்புக்கு ஆயுதங்கள் பெறலாம் பண உதவியும் பெறலாம். இராணுவ வீரர்களையும் இரவல் வாங்குவதோ? வாங்கினால் அதன் பின் நாம் பெற்ற சுதந்திரம் நிலைக்குமா? (செங்கோல் 27.11.60)

பிரிவினைக் கோரிக்கையை அது அந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன் என்ற தலைப்பில் ம.பொ.சி எழுதுகிறார். “தமிழகத்தில் ஜீவநதி ஒன்று கூட இல்லை காவிரியாற்றின் தலைப்பு கன்னட நாட்டில் இருக்கிறது. தமிழகம் பிரிந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் விட கன்னட அரசு சம்மதிக்குமா?......

“தமிழகத்தின் நிலப்பரப்பு ஐம்பதாயிரம் சதுரமைல். மக்கள் தொகையோ மூன்று கோடிக்கும் அதிகம். இன்னும் ஒரு அய்ம்பதாண்டு கழிந்தால் தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடியாகலாம். அந்த நிலையில் பெருகி விட்ட மக்கள் தொகைக்கு குறுகிக்கிடக்கும் தமிழ் நிலம் போதுமா? வடவரை வெளியேற்றி, தமிழகத்தை தனி நாடாக்குவோமானால், அதையே காரணமாக காட்டி, வடக்கிலிலுள்ள தமிழர்களும் தமிழகத்திற்கு விரட்டப்படுவார்களே? இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களும் தாயகத்திற்கு விரட்டப்பட மாட்டார்களா?..... தமிழகத்தை இழப்பதால், எஞ்சிய பாரதத்திற்கு நஷ்டமில்லை. பாரத்திலிருந்து பிரிவதால் நஷ்டம் தமிழகத்திற்கே என்கிறார் ம.பொ.சி.” (செங்கோல் 28.10.62)

‘தமிழகம் தனி நாடகப் பிரிந்தால் நமக்குத் தேவைப்படும் பண்டத்திற்கும், பணத்திற்கும் அயல் நாடுகளிள் உதவியை நாட வேண்டியிருக்கும். சகோதர நாடு என்ற நல்லெண்ணத்தாலோ, கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருணையாலோ எந்த ஒரு நாடும் நமக்கு உதவி செய்ய முன்வராது. அயல் நாட்டு அரசியலில் நாம் சொந்தக் கொள்கையின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து நடப்பதனால் மட்டுமே உதவி கிடைக்கும்... பாகிஸ்தான் கதியை தமிழ்நாடு அடைய வேண்டுமா?” செங்கோல் (15.12.57) 22.4.62 செங்கோல் இதழில் நாட்டை துண்டாடுவதால் யாருக்கு லாபம் என்ற கட்டுரையில் தமிழகத்தின் கதி என்ன? “சென்னை நகரின் குடி தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க, கிருஷ்ணா - கோதவரி ஆறுகளின் தண்ணீரில் ஒரு சிறு பகுதியைச் சென்னையின் பக்கம் திருப்பி விட முடியா தென்கின்றனர் ஆந்திரர்.

karunanithi & maposiதமிழகம் இந்தியாவோடு இணைந்திருக்கும் போதே நிலைமை இது வென்றால் பிரிந்து வாழுமானால், இப்போது கொடுக்கும் தண்ணீரைக் கூட நிறுத்தி விடுவார்கள் கன்னட, கேரள ஆட்சியினர். அந்நிலையில் நம் தமிழகத்தின் கதி என்ன?

குறைப்பது எப்படி: உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தானே அரிசி விலையைக் குறைக்க முடியும். தண்ணீர் பஞ்சத்திற்கு இரையாகித் தவிக்கும். தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென்றால் அரிசி விலையை எப்படி குறைக்க முடியும்?

கற்பனை செய்து பாருங்கள்: இது நிற்க, தனித் தமிழ் நாட்டில் அதன் சுய நிறைவுக் கேற்ப கனரகத்தொழிற் சாலைகளை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கேற்ப மின் விசைத் தேவையைப் பூர்த்தி செய்ய தண்ணீர் வசதியும் தேவைப் படுமல்லவா? கற்பனை செய்து பாருங்கள்.

முன்னேற முடியுமா?: உணவு உற்பத்திக்குத் தேவைப்படும் நீருக்கும், குடி தண்ணீருக்குமே திண்டாடும் தனித் தமிழ்நாடு, கனரகத் தொழில் துறையில் சிறிதேனும் முன்னேற முடியுமா?

உதவி கிடைக்குமா?: இந்தியாவோடு இணைந்திருக்கும் இந்நாளில் வட மாநிலங்களிலிருந்து கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருள்கள் ஓரளவு தமிழகத்திற்குக் கிடைக்கின்றன. ஆந்திர நாட்டிலிருந்து மிகுதியான அரிசி நமக்குக் கிடைக்கின்றது. தனித்து வாழும் தமிழ் நாட்டிற்கு இந்த உதவிகள் கிடைக்குமா? உரிமையோடு கேட்கத்தான் முடியுமா?

அயல்நாட்டு உதவி? “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடியவில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்......

என்ன இருக்கிறது?:

தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற மூலப் பொருள்கள் இப்போது என்ன இருக்கிறது? ஏதோ இங்கும் அங்குமாக ஒரு சில இடங்களில் மூலப் பொருள்கள் கிடைக்கலாமென்று யூகிக்கிப்படுகிறது. ஆனால், இப்போதுள்ள நிலையை வைத்துத் தானே நாம் பிரிவினையால் நன்மை தீமைகளை ஆராய முடியும்.

தனியாகப் பிரிந்தால்:

தமிழ்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை மூன்றுகோடி, இவர்களில் தற்காலிகமாக குடியேறி வாழும் வட நாட்டாரோ, பிற அயல் நாட்டாரோ மிக மிகச் சொற்பம். இந்த நிலையில் தமிழ்நாடு தனியாகப் பிரியுமானால், தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், பர்மா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரிக்கப்பட்ட தமிழகத்திற்கு விரட்டப்படுவது திண்ணம்......

தமிழகம் அழைத்துக் கொள்ள வேண்டிய மக்களின் எண்ணிக்கை அற்பமன்று; அரை கோடிக்கு மேலிருக்கும். ஒருக்கால், தமிழகத்திலிருந்தும் சிலர் வெளியேற்றப்படலாமென்றால், அத்தகைய ‘அன்னியர்’ எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆம் சில ஆயிரக் கணக்கானவர்களை வெளியேற்றி அரைக்கோடி தமிழர்களை இங்கு அழைத்துக் கொள்ள நேரும். அந்த நிலையில் தமிழகத்தில் அரிசிவிலை இன்னும் கூடுமா? குறையுமா?

என்ன அரசியல் ஞானமோ?:

உறுதியாகச் சொல்லுகிறேன், எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் பயங்கரமான உணவு பஞ்சம் ஏற்படுவது திண்ணம். ஒரு புறம் உணவு விலையைக் குறைப்பதாகச் சொல்லிக் கொண்டு, இன்னொரு புறம் உணவுப் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்யும் தனி நாடு கேட்பது என்ன அரசியல் ஞானமே!...

மன்னிக்க முடியாத குற்றம்

.... நாட்டு மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு நாட்டைத் துண்டாட தேவை இல்லை.... நாட்டைத் துண்டாடக் கோரிக் கூச்சலிடுவது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பிரிவினைக் கோரிக்கை நாடு முழுவதையுமே அழிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள். (செங்கோல் 22-4-62)

தமிழ்நாடு தனி நாடாக ஆக்கக் கூடாது என்பதற்கு ம.பொ.சி கூறும் அறிவுரைகள் நியாயமானவைகளா, நாடு பிரிந்தால் அந்த நாட்டை சேர்ந்தவர்களை உலகில் உள்ள எல்லா நாட்டவரும் அடித்துத் துரத்தி விடுவார்களா? உலக வரலாற்றில் பல நாடுகள் பிரிந்துள்ளன. அந்த நாட்டவர்களை ம.பொ.சி கூறுவது போல் மற்ற நாட்டினர் அடித்துத் துரத்தினார்களா? நீங்கள் தான் தமிழ் நாடு தனிநாடு வாங்கி விட்டீர்களே உங்கள் நாட்டுக்கே ஓடி விடுங்கள் என்று துரத்தி விடுவார்களா? என்ற கேள்வியைத் தமிழ்த் தேசியம் பேசும் ம.பொ.சி அன்பர்களுக்கே விட்டு விடுகிறேன். தோழர் சுப வீர பாண்டியன் அவர்கள் (பெரியாரின் இடது சாரி தமிழ் தேசியம்) என்ற நூலை வெளியிட்டபோது அவர் ம.பொ.சியின் சிலக் கருத்துகளை கூறி அவரை வலது சாரி (மதவாத) தமிழ்த் தேசியர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பெ.மணியரசனும், இராசேந்திர சோழனும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி எகிறி குதித்தார்கள். இப்போதும் அப்படியே தான் உள்ளார்கள். இப்போது நான் கூறுகிறேன் ம.பொ.சி. தமிழ்த் தேசியத் தலைவரல்ல அவர் இந்திய தேசிய வாதிதான் என்பதற்கு அவருடைய எழுத்துகளிலிருந்தே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எடுத்துக் காட்ட முடியும்.

ம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி- இந்தியா என்பதே!

22.10.1962 செங்கோல் இதழில் தீபாவளி வாழ்த்து கூறிய ம.பொ.சி. “தீபாவளி திருநாள், பாரத மக்களின் மிகப்பெரும்பாலேருக்கு இன்ப மூட்டும் நன்னாள். முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் எல்லோரும் ‘ஓர் குலம்’ என்றெண்ணி உணர்ச்சி பூர்வமாக ஒன்றுபடும் நன்னாள்”.

“தீபாவளி போன்ற பண்டிகைகள் தோன்றியிராவிடில்; பாரத மக்களிடையே இன்றுள்ள, அற்ப ஒருமைப்பாடும் இருந்திருக்க முடியாது. ஆகவே இதனை ஒரு தேசியத் திருநாளாகவே கருத வேண்டும். வாழ்க பாரதம்” அதோடு விடவில்லை அவர், அக்பர் அரண்மனையில் தீபாவளி கொண்டப்பட்டதாம். இப்படி யெல்லாம் அவருடைய இந்துத்துவ ஆராய்ச்சி செல்கிறது.

21-11-62 இல் சென்னை வானொலில் பேசிய ம.பொ.சி, “தமிழ் பெரு மக்களே! நாம் தமிழராயினும் பிறந்த நாட்டால் நாம் எல்லோரும் இந்தியர். இந்தியா நம் தாய்த் திரு நாடு, நாம் அதன் புதல்வர்கள். இந்த உண்மையை மதிமாறி துறந்தால், அன்றே நாம் அழிந்தோம். வாழ்க நேரு வெல்க பாரதம்” (செங்கோல் 25.11.62)

8.11.62 செங்கோல் தலையங்கத்தில் நேரு வேண்டாம் என்றால் வேறு யார்? என்று தலையங்கம் எழுதினார் நேருவை விட்டால் நமக்கு வேறு தலைவர் யாரும் இல்லை என்பதை முழு பக்கம் எழுதி உள்ளார்.

15.5.55 செங்கோல் தலையங்கத்தில் “மொழி வேற்றுமை காரணமாக, இந்திய சமூகத்தினரிடையே பிளவு தோன்றக் கூடாது என்கிறார் நேரு, அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். “பிளவு தோன்றினால், பெற்ற விடுதலைக்கு கேடு நேரும்” என்றும் அதிலும் நமக்கு அய்யமில்லை அங்கிகரிக்கிறோம்.” இப்படி எழுதும் ம.பொ.சிக்கு தமிழரசு கழகம் எதற்கு காங்கிரசிலே இணைந்து விட்டிருக்கலாமே. இவருக்கு ஆசை இருந்தது காங்கிரசிலே தொடர்ந்து இருக்க வேண்டுமென்று. ஆனால் தமிழ்நாடு காங்கிரசு காரர்கள் இவரை வெளியே துரத்தி விட்டு சேர்க்க மறுத்து விட்டார்கள்.

இந்திய கலாச்சாரத்தை வற்புறுத்தும் ம.பொ.சி

‘உணர்ச்சி பூர்வமான தேசிய ஒருமைப்பாடு வளர வேண்டும் இந்திய கலாச்சாரம் என்பது பல்வேறு கலாச்சாரங்களின் கூட்டுப் பொருளாகும். ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம், அராபியர் கலாச்சாரம், ஆகியவற்றின் கலப்பே இந்திய கலாச்சாரம். பிற கலாச்சாரத்தினால், ஒரு கலாச்சாரம் அழிந்து விடுகிற தென்றால் அது கலாச்சாரமே அல்ல”....

ஆரியக் கலாச்சாரம், திராவிடக் கலாச்சாரம் உண்டு என்கிறார் ம.பொ.சி ஆனால் அவரது கடைசி சீடர் பா.குப்பன் திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் பொய் திட்டமிட்ட கட்டுக்கதை என்கிறார்.

mgr & maposi

நாம் தமிழினத்தவராக இருப்பினும் இந்திய சமுதாயத் தினராகவும் இருக்கிறோம். இந்த பிணைப்பு அல்லது இணப்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது ஆகும்” (8.7.62 அன்று தஞ்சை அரண்மனையில் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்திய கலாச்சார விழாவில் ம.பொ.சி பேசியது. (செங்கோல் 22.7.62) தேசிய ஒருமைப்பாடும் தமிழின உரிமையும் என்ற தலைப்பில் ம.பொ.சி 4.10.62 செங்கோல் இதழில் தலையங்கம் எழுதியுள்ளார்.

“இந்தியா ஒரே நாடு, இதனை, இந்தியாவின் இயற்கை அமைப்பே எடுத்துக் காட்டும் இந்தியாவின் எல்லைகள் வடக்கில் இமயமலை. தெற்கில் குமரிமுனை. கிழக்கில் வங்களாக் குடாக்கடல். மேற்கில் அரபிக்கடல். இந்த இயற்கை அமைப்பு இந்தியா ஒரே நாடாக இருப்பதற் கென்றே இறைவன் படைத்தாகும். அதனால் தான் சேதமில்லாத இந்துஸ்தானம் என்றார் பாரதி. இந்தியா ஒரே நாடு என்ற உணர்ச்சி குமரிமுதல் இமயம் வரை பரந்து விரிந்த பாரத மக்களிடையே தொன்று தொட்டே இருந்து வருகிறது.”

ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டு 1947 இல் வெளியேறிய போது 562 குறு நில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்தியா என்ற ஒரு நாடு வரலாற்றில் என்றுமே ஒரே நாடாக இருந்ததே இல்லை. ஆனால் ம.பொ.சி கூறுகிறார் தென்று தொட்டே இந்தியா ஒரு நாடாக இருந்தது என்று. இது எவ்வளவு பெரிய பொய்? வரலாற்று மோசடி என்பதை தமிழ்த் தேசியம் பேசுவோர் உணரவேண்டும்.

17.1.63 அன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ம.பொ.சி. “நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ வெட்கமோ படவில்லை. மாறாக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமல்லாமல், தேச பக்தியுடைய இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர் இந்தியா நம் தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது”. என்றார் (செங்கோல் 27-1-63)

இந்தியைப் பற்றி ம.பொ.சியின் கருத்து:

“தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் (தமிழரசு கழகத்தினர்) இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான் வேண்டும். குறைந்த பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெறவேண்டும்” (செங்கோல் 3-3-63)

ம.பொ.சி இந்து, இந்தி, இந்திய வெறியர் அவர் தமிழ்த் தேசியவாதியே அல்ல. தமிழ் பயிற்று மொழி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழிக்காக போராடினால் மட்டும் போதாது. தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அவர் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவே இருந்தார். தமிழின விடுதலைக்கு எதிராகவே இருந்தார். அவர் ஒரு இந்திய தேசிய வாதியே ஆவார்.

பெரியார் 1938 முதல் தமிழ்நாடு தமிழருக்கே என்று போராடி வந்தார். அவர் சிறையிலிருந்த போது நீதிகட்சியின் தலைவராகத் 1938 டிசம்பர் 31 நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நடைபெற்ற நீதிகட்சி செயற்குழுவில், நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எங்கே போவது என்று நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்களும் மலையாளிகளும் கேட்டார்கள், அதனால் தான் அந்தக் கோரிக்கை திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டது. திராவிட நாடு என்பது ஒரே நாடல்ல நான்கு நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு என்று அப்போதே விளக்கப்பட்டது. இன்றைக்கு தமிழ்த் தேசியர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் நீதிக்கட்சியை சேர்ந்தவர்களான கி.ஆ.பெ. விதவநாதம் அப்போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் மறுப்பு சொல்லவில்லை.24, 25-8-1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிகட்சி இரண்டு நாள் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினை தொடர்பான பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அந்த மாநாட்டில் “திராவிட நாடு பிரிக்கப்பட திட்டங்கள் வகுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி.ஆ.பெ. உறுப்பினராக இருந்தார்.

இன்றைக்கு அண்ணல் தங்கோவின் பெயரன் அருள் செல்வனால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசிய வாதிகள் மிகப் பெரியத் தமிழ்த் தேசிய வாதியாக உயர்த்திப் பிடிக்கப்படும் அண்ணல் தங்கோ. அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“வரவிருக்கின்ற சென்சஸ் கணக்கெடுப்பின் போது திராவிட மக்கள் தங்களை “திராவிடர்கள்” என்று பதிவு செய்ய வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் “திராவிட சமயம்” என்று சொல்ல வேண்டுமே தவிர இந்து சமயம் என்று சொல்லக் கூடாது”. என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணல் தங்கோ வழி மொழிந்தவர் வாணியம்பாடி விசுவநாதம் ஆவர் (ஆதாரம்: குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)

அன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்? 1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க.செயற் குழுவை திருச்சியில் கூட்டிய கூட்டத்தில் இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விடுதலை ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும் வரை ஏன் 1975 ‘எமர்ஜியன்சி’ காலம் வரை இந்த முழக்கம் விடுதலையில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை பெரியார் முழு மனதுடன் எழுப்பவில்லை; அண்ணாதுரையின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை எதிர்ப்பதற்காக வென்றே தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்தார்” என்று கூறுகிறார் (பா.குப்பன் பக் 41)

குப்பன் ஒரு குதர்க்காவாதி. 34 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் இருந்த பா.குப்பன் இப்படி ஒரு அபத்தமான கருத்தை எழுதுவது பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். உண்மையில் குப்பனின் இன்றையத் தலைவர் ம.பொ.சி தான் ஏட்டிக்கு போட்டியாக திராவிடர் கழகத்துக்கு எதிராக தமிழரசு கழகம் என்று நடத்தி ஒரே ஆண்டில் நாட்டு பிரிவினை கோரிக்கையை கை விட்டார். குப்பன் கூற்றுப்படி பெரியார் அண்ணாவுக்கு போட்டியாக தமிழ்நாடு தனிநாடு கோரிக்கையை வைத்திருந்தால் அண்ணா 1963 இல் திராவிட நாடு கோரிக்கையை கை விட்டவுடனேயே பெரியாரும் கைவிட்டு இருக்க வேண்டுமல்லவா? இல்லையே பெரியார் மறையும் வரை அக்கோரிக்கை அவர் கைவிடல்லையே.

பெரியாரிடம் நாட்டு பிரிவினைக்கான எந்தத் திட்டமும் இல்லையென்கிறார் பா. குப்பன். தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தது எதற்காக தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகத் தானே! அதைக் கூட உங்கள் ம.பொ.சி எதிர்த்தாரே. பெரிய மக்கள் திரளிடையே இந்த எண்ணத்தை உருவாக்கியவர் பெரியார்.

பெரியாரிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று கூறும் குப்பனிடம், தென்மொழியிலும் தமிழர் எழுச்சி இதழிலும் பெரியாரைக் கண்டபடி திட்டி விட்டு கடைசியாக முடிக்கும் போது ஒரு வரி தமிழ்த் தேசியம் அமைப்போம் வாருங்கள் என்று எழுதிவிட்டால் போதுமா?

1938 முதல் 1973 இல் பெரியார் மறையும் வரை இந்திய தேசியத்தின் ஆக்கிரமிப்பை, அடக்கு முறையை, இந்திய அரசியல் கட்டமைப்பை எதிர்த்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரை நீங்கள் திட்டுவதால் அவருடைய புகழ் ஒன்றும் மங்கிக் போய்விடாது. பெரியார் இன்றும் நிலைத்து நிற்கின்றார் என்றால் அவருடைய கருத்து வலிமை, நேர்மையான அரசியல் ஆகியவற்றால் தான், ம.பொ.சி மாதிரி போலியாக தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு இந்திய தேசியத்துக்கு ஆதரவாக பக்க மேளம் வாசிக்கவில்லை.

பெரியாரை இவ்வளவு கேள்வி கேட்கும் பா.குப்பன் ம.பொ.சி காங்கிரசில் இருந்து கொண்டே தமிழ்நாடு கேட்டாரே அது நடைமுறை சாத்தியமா? கண்ணியமாக காங்கிரசை விட்டு அவராகவே வெளிவந்து தனி அமைப்பு அல்லவா வைத்திருக்க வேண்டும். பெரியார் திராவிட நாடு திராவிடன் என்று எல்லாம் கூறி திசை மாற்றி விட்டார் என்று அங்கலாய்க்கும் ம.பொ.சி பக்தர்களோ, ம.பொ.சி மூச்சுக்கு முன்னூறுதரம் இந்து, இந்தி, இந்தியா என்று எழுதிக் கொண்டிருந்தாரே அவரை ஒரு கேள்வி நீங்கள் கேட்டதுன்டோ?

பெரியார் திராவிட நாடு கேட்டதோ, சுதந்திர தமிழ்நாடு கேட்டதோ, வடநாட்டான், பார்ப்பான் போன்ற அன்னியன் சுரண்டலற்ற, இந்துமதச் சாக்கடையான வருணாசிரம, சாதிபேத மற்ற மக்களாக உழைப்பாளி மக்களின்ஆட்சியை நிறுவவும் ஆணுக்கு அடிமைப்பட்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிக்கும் விதமாக அனைத்து விதமான அடிமைத் தளைகளிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதற்காகவே விடுதலை கேட்டார். வெறும் கோடு போட்டது போல் இதுவரை உன் எல்லை இதுவரைஎன் எல்லை என்று வரைப்படம் போட்ட நாடு அல்ல. இன்றைக்கு தமிழ் மக்களிடையே விடுதலை உணர்ச்சி வளர்ந்து வருகிற தென்றால். அது பெரியார் இயக்கத்தின் நீட்சியே ஆகும். திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியே தமிழ்த் தேசியமாகும்.

- வாலாசா வல்லவன்

Pin It