“தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயப் பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும்; தமிழிலேயே அனைத்துக் கலைகளையும் கற்பித்தல் வேண்டும்; தமிழ்நாட்டில் உள்ள அறிவுக் களஞ்சியங்களைப் பாதுகாத்தல் வேண்டும்; தமிழிலேயே அரசாங்க நிகழ்ச்சிகள் யாவும் நடத்தப் பெறல் வேண்டும்; தமிழர் திருமணங்கள் தமிழிலேயே நிகழ்தல் வேண்டும்; தமிழிலேயே கடவுளை வழிபடல் வேண்டும்; தமிழிலேயே சமயச் சடங்குகள் நடத்தல் வேண்டும்; தமிழுக்குழைத்து உயிர் துறந்த தமிழ்ப் பெரியோர்களின் நினைவுநாள் கடைப்பிடித்தல் வேண்டும்; தமிழர் வீடு தோறும் தமிழுக்குழைத்த பெரியார்களின் திருவுருவப் படங்கள் திகழ்தல் வேண்டும்” ஆகிய இக்கொள்கைப் பிடிப்போடு, தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றியவர் ! பல்கலைப் புலவர் - 'பைந்தமிழ்க் காசு' – எனக் காலமெல்லாம் போற்றப்பெறுபவர் கா.சு. பிள்ளையாவார்.

                Kasupillaiதிருநெல்வேலியில் காந்திமதிநாதபிள்ளைக்கும் - மீனாட்சியம்மைக்கும் 05.11.1888ல் மகனாகப் பிறந்தார். முதல் மூன்று வகுப்புகள் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தமது தந்தையாரிடம் ஆங்கிலம் கற்றார். 'சர்ச் மிஷன்' பள்ளியில் சேர்ந்தார். நான்காவது வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். அரசின் நடுத்தரத் தேர்வில் 1902 ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார். அதனால், கா.சு. பிள்ளைக்கு எந்த வகுப்பிலும் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. கட்டணத்தை, அரசே ஏற்றுக் கொண்டது. பின்னர், மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பல்கலைக் கழகத் தேர்விலும், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்விலும் மாநில அளவில் முதலிடம் பெற்றுப் பரிசு பெற்றார்.

                சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். அங்கும், முதன்மையாக வென்று, 'பவல்மூர்கெட்' என்ற ஆங்கிலப் பெரியார் அமைத்த தமிழாராய்ச்சி நிறுவனப் பரிசையும் பெற்றார். பின்பு ஆங்கில இலக்கியத்திலும், தமிழிலக்கியத்திலும் முதல் மதிப்பெண் பெற்று 'கலைப்பேரறிஞர்' ‘எம்.ஏ.' பட்டங்களைப் பெற்றார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்ட இளைஞர் பட்டமும், எம்.எல்.பட்டமும் பெற்றார். 'எம்.எல்'-பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் என்பதால், 'எம்.எல். பிள்ளை' என்று பலராலும் அழைக்கப்பட்டார்!

                பிரமு அம்மையாரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

                கல்கத்தா பல்கலைக் கழகம் 1920ஆம் ஆண்டு நடத்திய அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, 'குற்றவியலின் நெறிமுறைகள்' என்ற கட்டுரையை அளித்தார். இவரது கட்டுரைக்குப் பதினாறாயிரம் ரூபாய் 'பரிசு' தந்தனர். 'தாகூர் சட்ட விரிவுரையாளர்' என்ற விருதும் வழங்கிச் சிறப்பித்தனர். அப்பொழுது, சென்னைக்கு வருகை தந்த உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி இரவீந்திரநாத் தாகூர், கா.சு. பிள்ளையின் பெருமையுணர்ந்து அவரைச் சந்தித்தார்; அவருடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்! இது, பலரும் அறிந்திடாத அரிய செய்தி!

சென்னை சட்டக் கல்லூரியில் எட்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார் 'காசு'! பின்னர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரானார்.

தமிழுணர்வு, இலக்கிய உணர்வு, வரலாற்றுணர்வு, சமய உணர்வு முதலியவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் கா.சு. பிள்ளையின் எழுத்துக்கள் அமைந்தன. அவர் எழுதிய நூல்கள், ஆரம்பக் கல்வி முதல், பல்கலைக் கழகம் வரையிலான, பாடத்திட்டங்களிலும் சிறப்பான பாட நூல்களாக இடம் பெற்றன.

“தமிழர் என்பார், தமிழைத் தாய்மொழியாக உடையவர்; தமிழ் நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய் மொழியெனக் கருதாதவர் தமிழராகார். தமிழ் நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய் மொழி போல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்ததெனக் கருதுபவரும் தமிழர்” என, எவர் தமிழர் என்பதை வரையறுத்துள்ளார் கா.சு. பிள்ளை.

திருச்சியில் 1937 ஆம் ஆண்டு 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் நடைபெற்ற, சென்னை மாகாண, மூன்றாவது தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டு, கா.சு. பிள்ளை ஆற்றிய உரை, தமிழக அரசியலில் நிலையான மொழிக் கொள்கையை வகுத்திடக் காரணமாக இருந்தது எனலாம். மொழிப் புரட்சியின் முழக்கமாக அதை வரலாறு பதிவு செய்துள்ளது. அவரது உரையில், “பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப்பற்று ஒன்றேயாகும்” என்று அறிவித்தார்.

தாய்த் தமிழின் ஆற்றல் மீது ஐயம் கொள்வோரின் அறியாமையை அகற்றும் முயற்சியில் கா.சு. பிள்ளை படைத்த நூல் தான் 'மொழிநூற் கொள்கையும், தமிழ் மொழியமைப்பும்' ஆகும்!

“காலப்போக்கில் தமிழைப் புதிய கலைக்கண் கொண்டு ஆராயவில்லையென்றால், உலகில் தமிழனுக்கு இடமே இல்லாமல் போய்விடும். இப்புதிய முறையில் ஆராய்ந்தால்தான், நமது பழைய இலக்கண ஆசிரியர்களுடைய பெருமையும், அறிவின் நுட்பமும் புலப்படும்” – என்னும் மொழியியல் சிந்தனையுடன் விளங்கினார் கா.சு. பிள்ளை.

“தமிழ், புதிய படைப்புச் சிந்தனைகளுக்கு வடிகாலாய் அமையவல்ல சொல்லமைப்பும் சொல்லாக்க வளமும் உடையது” என்பதை தமது ஆராய்ச்சியின் மூலம் நிறுவினார்.

தாய் மொழிக் கல்வியை வலியுறுத்திய கா.சு. பிள்ளை, “தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடத் தலைவர்கள் தமிழை வளர்க்க முயலாமல், பிறமொழிகளைப் போற்றுவது தாய்மொழிப்பற்றின்மையைக் குறிக்கும். தாய் மொழியே உயர்தரக் கல்விக்கும் கருவியாக இருக்க வேண்டும். பிறமொழிகளைக் கட்டாயமாக்குதல் தாய்மொழி வளர்ச்சி குன்றுவதற்கும், மாணவரின் அனாவசிய உழைப்பிற்கும் இடமாகும்” எனக் கருத்துரைத்துள்ளார்.

ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிக்கும், வடமொழிக்கும் இலக்கிய வரலாறு செம்மையாக அமைந்துள்ளது. எனவே, தமிழ் மொழிக்கும் இலக்கிய வரலாறு வேண்டும் என்பதை உணர்ந்து, அக்குறையினை நீக்கவே “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் பெருநூலை எழுதினார் கா.சு. பிள்ளை.

ஒரு மொழியின் இலக்கிய வரலாறானது அம்மொழியிலுள்ள செவ்விய நூல்களின் தோற்றத்தையும் தன்மையையும் காலமுறைக்கேற்ப வகுத்துக் காட்டி அம்மொழி பேசும் மக்களது கருத்துக்கள், இலக்கியங்களுள் எம்முறையில் அமைந்துள்ளனவென்றும், அவர்களது மணவாழ்க்கையின் வரலாற்றினை அவர்கள் இலக்கியங்கள் எவ்வாறு விளக்கிக் காட்டுகின்றன என்பதையும் தெளிவுற அறிவுறுத்தும் கருவி நூலாகும் என இலக்கிய வரலாற்றுக்கே இலக்கணம் கண்டுள்ளார்.

Kasupillai book'இலக்கிய வரலாறு' என்ற நூலில் சங்க காலம் முதல், இருபதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், 'தமிழ் மக்களின் நெஞ்சப் பாங்கும் இலக்கியப் போக்கும்' – என்ற அடிப்படையில் ஆராய்ந்துள்ளார். இவரது 'இலக்கிய வரலாறு', வரலாற்று நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்குகிறது.

'தமிழர் சமயம்' என்ற நூலில் “ தமிழர் சமயம் நிலை பெற வேண்டுமாயின் தமிழ்மொழி பேணப்பட வேண்டும்; தமிழ்மொழி நன்கு பேணப்படுவதற்கு அதனைத் தாய்மொழியாக உடைய தமிழர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழர்களின் பொருளாதார நிலை சிறப்படைய வேண்டும். அது சிறப்பதற்குத் தமிழருட் செல்வர்களாயிருப்பவர்களும், சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ப வாயில்களை வகுக்க வேண்டும்” என்ற கருத்தை சமுதாய நலனோடு விதைத்துள்ளார்.

                அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், தாயுமானவர், மாணிக்கவாசகர், குமரகுருபர், பட்டினத்தார், ஆண்டாள் ஆகியோரது வலராறுகளை தனித்தனி நூல்களாக எழுதியுள்ளார்.

                திருக்குறளுக்குப் பொழிப்புரை எழுதியளித்துள்ளார். 'பழந்தமிழர் நாகரிகம்', 'முருகன் பெருமை', 'தமிழர் சமயம்', 'மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்', 'மெய்கண்டாரும் சிவஞான போதமும்', 'திருவாசக உரை', 'வாழ்க்கை இன்பம்', 'மக்கள் வாழ்க்கைத் தத்துவம்', 'உலக நன்மையே ஒருவன் வாழ்வு', 'அறிவு விளக்க வாசகம்', 'மணிமாலைக்கோவை', 'சர்.பி.சி.ராய் வாழ்க்கை வரலாறு', 'உலகப் பெருமக்கள் வரலாறு' முதலிய நூல்களை தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

                'சிவப்பிரகாசம்', 'நீதிநெறி விளக்கம்', முதலிய நூல்களையும் 'புறநானூற்றுப் பாடல்கள்' சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து , தமிழ்ச் சிந்தனையை உலகறியச் செய்தார். 'சைவ சித்தாந்தத்தின் இயற்கைத் தத்துவம்', 'இந்து சமயங்களின் சுருக்க வரலாறு', 'தேவாரத்திலும், பழைய தெய்வப் பனுவல்களிலும் இயற்கை' முதலிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதியளித்துள்ளார்.

                'அந்நிய மொழியில் சட்டங்கள் இருக்குமானால், படிப்பறிவில்லாத பாமரர்களைப் போலவே, அரைகுறையாகப் படித்தவர்களும் எளிதாகக் குற்றங்கள் இழைக்கக்கூடும். அதற்கும் சட்டங்கள் பற்றிய அவர்களின் அறியாமையே காரணமாகி விடக்கூடும். ஆகவே தமிழரும் சாதாரண பொதுமக்களும் சட்ட அறிவைப் பெற்றுத் திகழத் தமிழில் சட்டம் அமைய வேண்டும்' என்பதை உணர்ந்தார் கா.சு. பிள்ளை; 'இந்தியத் தண்டனைத் தொகை', 'சென்னை மாகாண ஊர்மன்றச் சட்டம்', 'சென்னை முத்திரைத் தாள் திருத்தச்சட்டம்' முதலிய சட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தும் வழங்கியுள்ளார்.

                'செந்தமிழ்ச் செல்வி' இதழில் தமிழ் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு உள்ளார்.

                சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 25.12.1940ஆம் நாள் கா.சு. பிள்ளைக்கு, அவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி, 'பல்கலைப் புலவர்' என்னும் பட்டம் வழங்கிப் போற்றிச் சிறப்பித்தது.

                தம் விழி மூடும் வரை தமிழர் விழிப்படையவும், தமிழ்மொழி வளர்ச்சியடைவும் அயராது பாடுபட்ட கா.சு.பிள்ளை 30.04.1945ஆம் நாள் மறைந்தார். அவர் மறைவை ஒட்டி பேரறிஞர் அண்ணா, தம் 'திராவிட நாடு' இதழில் வெளியிட்டுள்ள புகழ் அஞ்சலியில்,

“பல்கலைப் புலவர் தோழர் கா. சுப்பிரமணியம் மறைவால் வருந்தாத தமிழ்மக்கள் ஒருவரும் இரார். அவர் சாதி வேற்றுமை பாராதவர். கலப்பு மணமே நாட்டு முன்னேற்றத்திற்கு நல்வழி. மறுமணம் செய்து கொள்வதில் தடை இருக்கக்கூடாது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்து முதலான அனைத்து வகையான உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். கோயில்களிலும், மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பெருந்தொகைப் பொருள்களையெல்லாம் முடியுமானால் கல்விக்கு பயன்படுத்த வேண்டும்” என்று கா.சு. பிள்ளை பலமுறைகளில் கூறியும், எழுதியும் வந்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

                தமிழரும் தமிழும் உள்ளவரை கா.சு. பிள்ளையின் தொண்டும், புகழும் நின்று நிலைத்திருக்கும்!

- பி.தயாளன்

Pin It