periyar thamiz book“நீதிமன்றம் என்னைத் தண்டித்தாலும் வரலாறு என்னை விடுவிக்கும்” என்று பிடல் காஸ்ட்ரோ சொன்னதற்கு நேர் எதிராக வெகுமக்களால் விடுவிக்கப்பட்டு வரலாற்றால் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பவர் பெரு மதிப்புக்குரிய ம.பொ.சி அவர்கள்.

இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஆதாயம் தேடும் அற்பர்களுக்கு வெப்பன் சப்ளையர் யாரென்றால் அது ம‌.பொ‌.சி தான்.

வெற்று பிம்பத்தோடு, ஏராளமான கற்பிதங்களைக் கொண்ட ம.பொ‌.சி என்கிற பர்னிச்சரை கட்டுடைக்கிறது வாலாசா வல்லவன் எழுதியுள்ள ‘பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?’ என்ற புத்தகம்.

திருத்தணியைச் சேர்ந்த வழக்குரைஞர் பா.குப்பன் அவர்கள் எழுதிய 'தமிழினத்தின் இனப்பகை ஈ.வெ.ரா’ என்ற புத்தகத்திற்கு மறுப்பாக எழுதப்பட்ட இப்புத்தகம், வழக்குரைஞர் குப்பனின் கருத்து, குப்பைக்கு சமானம் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறது.

1953இல் நடைபெற்ற தமிழக எல்லைப் போராட்டத்தில் பெரியார் துரோகம் செய்துவிட்டார் என்ற குப்பனின் கருத்திற்கு விடை சொல்வதோடு எல்லைப் போராட்டத்தில் சூப்பர் ஹீரோ என்று சொல்லப்பட்ட மா.பொ.சி என்ன செய்து கிழித்தார் என்று ஆதாரத்துடன் விவரிக்கிறது.

ஏழு பாகமாக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தின் முதல் பாகம், வழக்குரைஞர் குப்பனின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு விடை சொல்கிறது. இரண்டாம் பாகம் குப்பன் நீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று போகிற போக்கில் பொய்யுரைத்து இருப்பதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்கு செய்த நலத்திட்டங்களை, செயல்திட்டங்களை விவரிக்கிறது. மீதி ஐந்து பாகங்கள் வடக்கு எல்லைப் போராட்டத்தில் திராவிடர் கழகம் என்ன செய்தது, மா.பொ.சி பங்களிப்பு என்ன என்பதை விவரிக்கின்றன.

அன்றைய பிரதமர் நேரு பாராளுமன்றத்தில் பேசும்போது எவ்வித தகராறும்  இல்லாத 12 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திரா அமையும் என்று அறிவித்தார். அந்த 12இல் சித்தூர் மாவட்டமும் ஒன்று.

சித்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையோர்  தமிழர்களாக இருந்ததால்  சித்தூர் மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் வடக்கு எல்லை போராட்டம்.

திருத்தணி கே.விநாயகம், இ.எஸ். சுப்பிரமணிய முதலியார், ஆசிரியர் மங்கலங்கிழார், ரங்கநாத முதலியார், திருமலைப்பிள்ளை, இ.எஸ்.தியாகராஜன், கோல்டன் நா.சுப்பிரமணியன் போன்றவர்கள் வடக்கு எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இந்தக் குழுவை ஒருங்கிணைத்ததிலோ அல்லது ஒன்று சேர்த்ததிலோ மா.பொ.சி க்கு எந்தப் பங்களிப்பும் இல்லை.

ஆனால் இந்த வடக்கு எல்லைப் போராட்டக்குழுவின்  தலைவராக மா.பொ.சி யை தேர்ந்தெடுத்தற்கு காரணம் அக்காலகட்டத்தில் எந்தவித மாநாடாக இருந்தாலும் பொதுக்கூட்டம், பொதுச் செயல்பாடுகளுக்கும்  ஒரு பிரபலமான நபரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. அவ்வகையில் காங்கிரசுக்கு மிக நெருக்கமாக இருந்த மா.பொ.சி நம் பிரச்சனைக்கு உதவக்கூடும் என்கிற அடிப்படையில் அவரைத் தலைவராக போராட்டக்குழு தேர்ந்தெடுத்தது.

இதே காலகட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மேற்கு எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த போது அதற்கு இன்றைய நிதி அமைச்சரின் தாத்தாவான பி.டி.ராஜனை தலைவராக அன்றைய திமுக பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா தேர்வு செய்தார்.

வடக்கு எல்லை போராட்டக் குழுவிற்குத் தலைவராக இருந்தது மா.பொ.சி தான். ஆனால் எல்லைப் பிரச்சினைகளுக்காகப் போராடியது முழுக்க போராட்டக் குழுவினர்கள். மா.பொ.சி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தார் என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது .

1953ஆம் ஆண்டு ஏப்ரலில் வடக்கு எல்லைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என்று தொடர்ந்து நடத்தப்பட்டன. கே.விநாயகம் தலைமையில் பல்வேறு  மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. நடந்த எந்த போராட்டத்திலும் மா.பொ.சி கலந்து கொள்ளவில்லை.

மா.பொ.சி.யின் போராட்ட தியாகத்தை 'தமிழக வடக்கு எல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்’ என்ற கோல்டன் நா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து இந்த ஆசிரியர் விவரிக்கிறார்:

‘மா.பொ.சி போராட்டத்தை பார்வையிட காரில் திருத்தணிகை வந்தார். தணிகையில் அரைமணிநேரம் தங்கியிருந்து விட்டு உடனே புத்தூர் சென்று அங்கு நடைபெற்ற மறியலைப் பார்வையிட்டார். வெயில் கடுமையாக இருந்தது. அத்தோடு அனல் காற்றும் வீசியதால், சித்தூர் செல்லும் முயற்சியைக் கைவிட்டு பிற்பகலில் சென்னை திரும்பினார் என்று பதிவுசெய்துள்ளார்.

1953 ஜுன் 20ஆம் தேதி அன்று மா.பொ.சி.க்கு தெரிவிக்காமலே எல்லைப் போராட்டக் குழுவினர், ஆயிரம் தொண்டர்கள், திருத்தணியில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து, தண்டவாளத்தில் அமர்ந்து விட்டனர்.

அதோடு முன்னெச்சரிக்கையாக தந்திக் கம்பிகளை அறுத்து விட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மா.பொ.சி இரயில் மறியல் செய்த தொண்டர்களைப் பார்த்து கடுமையான குரலில், “இன்னும் வேற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்கும் நிலையிலே தான் வடக்கு எல்லைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது.

இப்போராட்டம் தீவிரம் அடையாமல் மட்டுப்படுத்தகூடிய செயலையும், அதே  நேரத்தில் காங்கிரஸ் கட்சி மீதான தனது விசுவாசத்தை வெளிக்காட்டவும் அவர் பாடுபட்டுள்ளார்.

போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றபோது தேர்தல் வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் எல்லை போராட்டக் கமிட்டி சார்பாக வேட்பாளராக போட்டியிட்ட திரு.கணபதியும், சீனிவாச முதலியாரும் தோல்வியுற்றார்கள். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று 06.03.1955 தேதி  செங்கோல் இதழில் மா.பொ.சி பதிவு செய்துள்ளார் என்பதில் இருந்து அவர் யாருக்கானவர், எதற்காக அவர் போராடினார் என்பதை  இந்தப் புத்தகம் விரிவாக பதிவு செய்துள்ளது.

ஏராளமான தரவுகளைச் சேகரித்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள வாலாசா வல்லவன் அவர்களுடைய  உழைப்பைப் புத்தகம் முழுக்க பார்க்க முடிகிறது.

நன்றி

ஊரும் உணர்வும்

Highlights

1

இதே காலகட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மேற்கு எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த போது அதற்கு இன்றைய நிதி அமைச்சரின் தாத்தாவான பி.டி.ராஜனை தலைவராக அன்றைய திமுக பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா தேர்வு செய்தார்.

2

1953ஆம் ஆண்டு ஏப்ரலில் வடக்கு எல்லைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என்று தொடர்ந்து நடத்தப்பட்டன. கே.விநாயகம் தலைமையில் பல்வேறு  மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. நடந்த எந்த போராட்டத்திலும் மா.பொ.சி கலந்து கொள்ளவில்லை.

- வெங்காயம் ஆசிரியர் குழு

Pin It