பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள, ‘சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்' (வரலாற்று ஆவணம்) என்ற இந்த நூல், சாதி ஒழிப்புக்கான பெரியார் தொண்டர்களின் வீரமிக்க தியாகத்தை அடையாளப்படுத்தியுள்ளது. திருச்சி செல்வேந்திரனின் உணர்வுப்பூர்வமான நடையில், கா.கருமலையப்பன், இரா.மனோகரன், ந.பிரகாஷ் ஆகியோரின் கடும் உழைப்பில் வெளிவந்திருக்கிறது. தமிழர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது.
ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்; பக்கங்கள்: 352;
விலை ரூ.100/; தொடர்புக்கு: இரா. மனோகரன்,
68, காந்தி மண்டபம் வீதி,
பொள்ளாச்சி - 642 001. பேச: 94421 28792
எவ்வளவோ காலம் பேசி விட்டேன். உங்களுக்கு மான உணர்ச்சி வரவில்லை. இந்த சூத்திர பட்டத்தைப் பற்றி ‘உங்களுக்கு ரோஷமில்லை' இனிமேல் பொதுக்கூட்டங்களில் உங்களை அன்பான தோழர்களே, என்று அழைப்பதற்குப் பதில் ‘என் அன்பான தேவடியாள் மக்களே' என்று அழைக்கலாமா என்று பார்க்கிறேன்' என்று மிகவும் கோபமான ஒரு மனநிலையில் தந்தை பெரியார் நெல்லை நகர் பீடர் ரோடு கூட்டத்தில் அறிவித்தார்.
சூத்திர மக்கள் என்ற இழிவு சாத்திர ரீதியாய் தமிழர்கள் பேரில் சுமத்தப்பட்டிருப்பதும் அதற்கு மத உரிமைப் பாதுகாப்பு என்ற பெயரால் இந்திய அரசியல் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதும் அதை ஒழிக்க வேண்டும் என்பதும்தான் பெரியாருடைய பல்வேறு போராட்டங்களின் அடிநாதம். இது அவர் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் எடுத்த நிலையல்ல. அவருடைய இந்த நிலையால் தான் காங்கிரசை விட்டே வெளியேறினார்.
இந்த சூத்திர பட்டம் ஒழிப்புசாதி ஒழிப்பு இவற்றிற்காக தந்தை பெரியார் கண்ட களங்களில் மிகக் கடுமையானதும்சோதனைமிக்கதும் மிகப் பெரிய இழப்புகளுக்கு பெரியாரின் இயக்கத்தை ஆளாக்கியதும் எண்ணிப்பார்க்க முடியாத முதுகு குத்தல்களுக்குப் பலியாக்கியதும் அந்த மிகப் பெரிய சரிவிலிருந்து பெரியாரின் இயக்கம் எழுந்து மீண்டும் கால் நூற்றாண்டு காலம் நின்றதும் கண்ணையே குத்திய கைகளுக்கு பெரியாரும் அவருடைய தொண்டர்களும் தங்கக் கடகம் அணிவித்ததும் உலகின் வேறு எந்தத் தலைவரும் எந்த இயக்கமும் எந்த இயக்கத்தின் தொண்டர்களும் எண்ணிப் பார்க்க முடியாதது.
இந்த சாதி இழிவு ஒழிக்கப்பட இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகளின் 13(2), 25(1), 29(1), (2), 368கள் தான் தடையாய் உள்ளன. இவைகளை அடியோடு நீக்க வேண்டும். இல்லையேல், இந்தப் பிரிவுகள் எழுதிப்பட்ட தாள்கள் கொளுத்தப்பட வேண்டும் என்பது பெரியாரின் நெடுநாளைய எண்ணம்.
பெரியாரின் சட்ட எரிப்புப் போர்!
பெரியாரின் இந்தப் போர் சிறைச்சாலையில் தங்கள் சகோதரர்கள் சிந்திய ரத்தச் சேற்றில் பெரியார் காட்டிய இலட்சியத்தை நோக்கி நடந்து போய் தங்கள் காலடிச் சுவடுகளை சரித்திரத்தின் பக்கங்களாகிய மாவீரர்களின் ஈகத்தால் உருவானது.
இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுக்களில் அவர்களுடைய பெயர் தெரியாத காரணத்தால் (In the memory of unknown warriors) பெயர் தெரியாமல் மரித்துப் போன போர் வீரர்கள் என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல் இந்தப் பட்டியலில் நம் கண்களுக்கும், கவனத்திற்கும், கிடைக்காமல் விடுபட்டுப் போன வீரர்கள் திருச்சி, தஞ்சை, சேலம், பழைய கோவை மாவட்டங்களில் ஏராளமானோர் உண்டு.
தஞ்சை மாநாட்டில் தந்தை பெரியார் என் கடமையை நான் செய்து விட்டேன். இனி உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் என்று கொடுத்த அறிவிப்பு எழுபதைத் தாண்டிய வயதில் உமர்முக்தாரின் போர் முழக்கத்தைக் கேட்டு பாலைவனத்து மக்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்ததைப் போல் இருந்தது. தஞ்சையில் பெரியாருக்கு எடைக்கு எடை நாணயம் கொடுப்பதைக் காண வந்த மக்களெல்லாம் அவருடைய போர் அறிவிப்பை நெஞ்சில் சுமந்தபடி ஊருக்குச் சென்றார்கள்.
போராட்டத்திற்கு முதல் நாளே தடுப்புக் காவல் தடைச் சட்டத்தின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். அதுபோலவே, கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தமிழ்நாடெங்கும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், போராட்ட நாளில் குறித்தபடியே போராட்டம் சென்னை தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெற்றது. குறிக்கப்பட்ட 26.11.1957ல் பத்தாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் சட்டப் பிரிவுகள் அச்சடிக்கப்பட்ட தாளைக் கொளுத்தினார்கள். அவர்களில் 2884 பேர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லி பாராளுமன்றத்தில் 4.12.1957ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறை ஆவணங்களின் படி 3000 பேர் கைதாகிச் சிறையில் இருந்தனர்.
நிறைமாதக் கர்ப்பிணிகள், எழுபது வயதைத் தாண்டிய முதியவர்கள், பதினெட்டு வயது கூட நிரம்பாத சிறுவர்கள் கைக்குழந்தையோடு தாய்மார்கள், இரண்டு கண்களும் தெரியாத திருவரங்கம் மகாமுனி போன்ற தொண்டர்கள், ஒரு கால் முடமாகி கட்டை ஊன்றி தத்திச் செல்லும் திருவரங்கத்து கொத்தனார் ஒருவர் அன்றாட ஜீவனத்திற்கே அல்லாடுகிற ஏழைத் தொண்டர்கள் இவர்களோடு பட்டுப் பீதாம்பரமும், ஜரிகை, உத்தரியமும், வைரமோதிரங்களும், மைனர் சங்கிலிகளுமாய் ஜொலிக்கும் தஞ்சை திருச்சிதென் ஆற்காடு மாவட்டத்து பல நூறு ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களான பெருநில உடமையாளர்கள், குட்டி ஜமீன்தார்களின் குபேர குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் பெரியாரின் ஆணை ஏற்று கைகோர்த்து ஒரே குடும்பமாய் கருஞ்சட்டை இராணுவம் நடந்தது. மூன்றாண்டுகால கடுங்காவல் தண்டனை என்ற அச்சுறுத்தும் சட்டம்இழவு வீட்டு வாசல்படியில் கிடக்கும் எச்சில் இலை போல் கிடந்தது.
இந்தத் தண்டனைக் காலத்தில் சிறையிலிருந்த திருவாரூர் முத்துக்கிருஷ்ணனின் மனைவி, அவருடைய கடை நிர்வாகத்தையும் விவசாயத்தையும் மேற்பார்வையிட்டு குடும்பத்தை நிர்வாகித்து வந்தார். திடீரென்று காலராவினால் அந்த அம்மையார் இறந்தார். இறந்த மனைவியை அடக்கம் செய்ய முத்துக்கிருஷ்ணன் பரோலில் வரவில்லை. அவருடைய குழந்தைகள் அப்போது மிகவும் சிறுவர்கள். அவருடைய மாமியார் அவருடைய பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார். ஒரு நாள் அவருடைய மாமியாரும் காலராவால் இறந்து விட்டார்.
தந்தை சிறையில், தாய் மறைந்து விட்டார். பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிட்டனர். கழகத் தோழர்கள் குடும்பத்தினர் அனைவரும் முத்துகிருஷ்ணன் சிறையிலிருந்து வரும் வரை பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கவனித்துக் கொண்டனர். பிறகு சிறை மீண்ட முத்துக் கிருஷ்ணன் பிள்ளைகளோடு திருவாரூர் தேரோடும் வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது மக்கள் வடித்த கண்ணீரால் கமலாயம் முத்துக்குளமே உப்பு நீராகியது.
இப்போது எழுபத்தைந்து வயதாகும் திரு.து.மா.பெரியசாமி போன்றவர்களுக்கு மூன்று மாதம் தொடங்கி பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் யாரும் எதிர் வழக்காடவில்லை! ‘கொளுத்தப்பட்டது அரசியல் சட்ட நூலல்ல. அதன் பிரிவுகள் சில எழுதப்பட்ட ஒரு தாள் தான். இது தேசிய அவமாதிப்பாகாது' என்று வாதாடி இருந்தால் அனைவருமே தண்டனையின்றித் தப்பி இருப்பார்கள்.
இந்த மூன்று மாதம் தொடங்கி மூன்றாண்டுகள் வரை இருந்த தண்டனைக் காலத்தில் திராவிடர் கழகத் தோழர்களில் பலர் காட்டிய மனஉறுதியும் அஞ்சாமையும் தியாகமும் மகத்தானது. சிறையிலேயே கடுமையாய் நோய்வாய்ப்பட்டு, இனிப்பிழைக்க வாய்ப்பில்லை என்று தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே பழியிலிருந்து தப்பிக்கத் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டவர்கள் பதிமூன்று பேர் விடுதலையான ஒரே வாரத்திற்குள் இறந்தனர். அவர்களும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் தான் வருவார்கள். சாதி ஒழிப்புப் போருக்குத் திராவிடர் கழகம் கொடுத்த களப்பலி மொத்தம் பதினெட்டு பேர். இந்தச் சட்டம், மன்றத்தில் வந்த போதும் சரி மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட போதும் சரிஒருவர் பின் ஒருவராய் பதினெட்டுப்பேர் செத்த போதும் சரிபச்சைத் தமிழர் காமராஜர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. "அமைதியாய் இருந்து டெல்லிக்கு நல்ல பிள்ளையாகிவிட்டார் நம்மை பலி கொடுத்து' எனத் திராவிடர் கழகத்திலிருந்த தீவிர காமராஜ் பற்றாளர்கள் பலர் முனகினார்கள்.
திருச்சி வாளாடியைச் சேர்ந்தவன் சிறுவன் பெரியசாமி. அவனுடைய தாய்க்கு ஒரே மகன். பதினெட்டு வயது கூட நிறையாத (16 வயது) பெரியசாமி தீவிரமான கருங்சட்டைத் தொண்டன். பெரியாரின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்ளும் போர் வீரன். பெரியாரின் ஆணையை ஏற்று அவனும் சட்ட நகலை எரித்தான்.
ஒரு நாள் தட்டப்பாறை சிறையில் பார்வையிட வந்தார் தமிழக கவர்னர் விஷ்ணுராம் மோதி. எல்லோரையும் கேட்டதைப் போலவே பெரிய சாமியையும் கவர்னர் சாதி ஒழிப்புப் போருக்குத் திராவிடர் கழகம் கொடுத்த களப்பலி மொத்தம் பதினெட்டு பேர். இந்தச் சட்டம், மன்றத்தில் வந்த போதும் சரி மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட போதும் சரிஒருவர் பின் ஒருவராய் பதினெட்டுப் பேர் செத்த போதும் சரிபச்சைத் தமிழர் காமராஜர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. விசாரித்தார். பெரியாரின் தொண்டன், அவர் ஆணை கேட்டுப் போராடிச் சிறுவர் சிறைக்கு வந்த ஒரே அரசியல் கைதி என்ற முறையில் அவனிடம் பெருமதிப்புக்காட்டிய கவர்னர் மேதி, "உன்னை மன்னித்து விடுதலைச் செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல்லவா' என்றார்.
மொழி பெயர்ப்பாளர் மூலம் உரையாடல் நடைபெற்றது. சட்ட எரிப்பிற்கான காரணத்தைக் கவர்னரிடம் தெளிவாய் விளக்கிய பெரிய சாமி, "வெளியே அனுப்பினால், மீண்டும் கொளுத்துவேன்' என்றான்.
கவர்னர் மேதி அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். பெரியசாமியைத் தட்டிக் கொடுத்த கவர்னர் "கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக' என அவருடைய நம்பிக்கைப்படிக் கூறிச் சென்றார். கவர்னர் சொன்னபடியே கடவுளின் ஆசீர்வாதம் வெகு விரைவிலேயே பெரியசாமிக்குக் கிடைத்தது. கடுமையான கோடைக்காலம் பழக்கமில்லாத புழு புழுத்த சோளக் கஞ்சிஇரண்டும் ஒப்புக் கொள்ளாமல் பெரியசாமிக்கு வயிற்று கடுப்பில் தொடங்கி சரியான மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் ரத்தமாய் பேதியாகிப் பெரியசாமி நினைவு தடுமாறலானான். சிறை அதிகாரிகள், "விடுதலை செய்கிறோம். வெளியே போகிறாயா?' என்று கேட்க, மௌனமாய்க் கையை அசைத்து மறுத்து விட்டான். சில மணி நேரம் தான், இறந்து போனான். அந்த இளம் போராளிக்கு திருச்சிலால்குடி சாலையில் இன்றும் ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது.
சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு மாண்ட அய்வரில் இரண்டு பேர் தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். மூவர் திருச்சி மாவட்டத்துக்காரர்கள். நாம் முன்னர் சொன்ன வாளாடி பெரியசாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், திருச்சி சின்னசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி, ஓய்வு பெற்ற ஆசிரியரான பட்டுக்கோட்டை இராமசாமி அடுத்தடுத்த நாட்களிலும் இறந்து போனார்கள்.
இறந்த அனைவரும் சிறைப்பட்ட ஓராண்டுக்குள் மறைந்து போனதும்உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் இடையாற்று மங்கலம் நாகமுத்து, இடையாற்று மங்கலம் தெய்வானையம்மாள், மாதிரிமங்கலம் ரெத்தினம், கோவில் தேவராயன் பேட்டை நடேசன், திருவையாறு மஜித், காரக்கோட்டை இராமய்யான், புதுமணக்குப்பம் கந்தசாமி, பொறையாறு தங்கவேலு, மணல்மேடு அப்பாத்துரை, கண்டராத்தித்தம் சிங்காரவேலு, திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன், தாராநல்லூர் மஜித், கீழவாளாடி பிச்சை ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்து போனது கவனிக்கத்தக்கது. அதுவும், அனைவருமே சிறை உணவு, சீதோஷ்ணம் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட நோய்களாலேயே மாண்டனர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.
பட்டுக்கோட்டை இராமசாமியும், மணல்மேடு வெள்ளைச்சாமியும் அடுத்தடுத்த நாட்களிலேயே மாண்டனர். இருவரும் உறவினர்களும், நண்பர்களும் உடையவர்கள். அனாதைகள் அல்ல.
இருவரும் சிறையில் மாண்ட செய்தி வெளியே கசிந்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அஞ்சிய பச்சைத் தமிழரின் அரசு பாவி பக்தவத்சலம் (போலீஸ் அமைச்சர்) வழிகாட்டுதல் படி பட்டுக் கோட்டை இராமசாமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறைக்குள்ளேயே புதைத்து விட்டது.
திருமதி.மணியம்மை துணிச்சலோடு பக்தவத்சலத்திடம் போய்ப் போராடினார். ‘உயிரோடு அனுப்பினோம் பிணத்தையாவது கொடுங்கள்' என்று வீறு கொண்டு நின்றார்.
புதைக்கப்பட்ட பட்டுக் கோட்டை இராமசாமியின் பிணத்தைத் தோண்டி எடுத்து பாதி அழுகிய நிலையில் கொடுத்தார்கள். எரிமலையாய்க் குமுறிய தொண்டர்களின் தோளில் இராமசாமி, வெள்ளைச் சாமி உடல்கள் பவனி வந்தன.
இறந்து போன வெள்ளைச் சாமி, இராமசாமியின் உடல்கள் சிறையிலிருந்து கருஞ்சட்டை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பின்அஞ்சலி செய்வதற்காக சில நிமிடங்கள் சிறையில் வைக்கப்பட்டன.
திருமணமாகாத கருஞ்சட்டைத் தொண்டர்கள் பலர் இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் நினைவாகத் தாங்கள் சாதி மறுத்த கலப்புத் திருமணங்களே செய்து கொள்வோம் என்று அந்த மாவீரர்கள் உடல்கள் முன்னால் உறுதி எடுத்துக் கொண்டார்கள். பலர் பல ஆண்டுகள் பின்னர், மறக்காமல் அப்படியே செய்யவும் செய்தார்கள். தந்தை பெரியாரே பலருக்குத் தானே பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்.
வெள்ளையர் ஆட்சிக் கால சிறைகளில் நடந்ததாய்ச் சொல்லப்படும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை விடக் கொடுமைகள் பல சட்ட எரிப்புப் போர் வீரர்களுக்கு நடந்தன.
(ந்ன்றி: விழிப்புணர்வு ஜூலை 2007)