கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கலைஞருக்கு அண்ணா சாலையில் சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கலைஞர் சிலை அறிவிப்பிற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு.

கலைஞருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் பெரியார். மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில், புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நாட்டின் உயர் பதவி என்ற நிலைக்கு கலைஞர் உயர்ந்ததை தனது தொண்டுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகவே பெரியார் கருதினார். அதை வெளிப்படையாகவும் பேசினார்.

சமூக செல்வாக்கோ, குடும்ப செல்வாக்கோ ஏதுமற்ற ஒரு குடும்பத்தில் இருந்து வந்த கலைஞர் தனது ஆற்றலால், திறனால் தன்னை செதுக்கிக்கொண்டு உயர்ந்த நிலைக்கு எட்டியதைக் கண்டு பூரித்த பெரியார், அண்ணா உயிருடன் இருக்கும் போதே கலைஞருக்கு சிலை வைக்கவேண்டும் என்று 1968 மே 28, 29 தேதிகளில் விடுதலையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞருக்கு சிலையும் தயாராகி விட்டது. ஆனால் கலைஞர் அதை விரும்பவில்லை. “இதில் கலைஞர் தனது அபிப்பராயத்தை வெளியிட அவருக்கு உரிமையில்லை, இந்த சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு எப்படியும் நிறைவேற்றுவேன்” என்று பெரியார் எழுதினார். ஆனாலும் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் பெரியார் மரணம் வரை அது நிகழாமலே போய் விட்டது.

பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பையேற்ற அன்னை மணியம்மையார் பெரியார் கட்டளையை ஏற்று கலைஞர் சிலை நிறுவும் நடவடிக்கைகளை தொடங்கினார். 21.09.1975இல் அண்ணா சாலையில் மணியம்மையார் தலைமையில் கலைஞர் சிலை திறக்கப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிலையை திறந்து வைத்தார். ராஜா சர் முத்தைய்யா செட்டியார், பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணலி கந்தசாமி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். சீர்காழி கோவிந்தராஜன் தொடக்க நிகழ்வாக பாடல்களை பாடினார்.

அடிகளாரும், சீர்காழி கோவிந்தராஜரும் இறை நம்பிக்கையாளர்கள். நெற்றியில் திருநீறு அணிந்த கோலத்துடன் கருஞ்சட்டைக் கழகம் நடத்திய இந்த விழாவில் இன உணர்வோடு பங்கேற்றனர். அப்போது இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலம். ஆனால் தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்த்துக் கொண்டே திமுக ஆட்சியில் இருந்தது. சிலை திறப்பிற்கு நான்கு மாதங்கள் கழித்து தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது (1976 சனவரி 31).

1972ஆம் ஆண்டிலேயே திமுகவை விட்டு விலகிய எம்.ஜி.ஆர், கலைஞர் சிலையை அண்ணா சாலையில் நிறுவினால் போக்குவரத்திற்கு இடையூறு உண்டாக்கும் என்ற காரணத்தைக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். “போக்குவரத்திற்கு இடையூறாக சென்னை முழுவதும் கடவுள் சிலைகள் உள்ளிட்ட அனைத்து சிலைகளையும் அகற்றினால் கலைஞர் சிலையையும் நான் அகற்றுவதற்கு தயார்” என்று பதிலடி கொடுத்த மணியம்மையார், “பெரியாரின் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுகிறோம் எதிர்ப்பு காட்டுவது பெரியாரை அவமதிப்பதாகும்” என்று பதிலடி தந்தார்.

இதற்கிடையே சிலை திறப்பிற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. வழக்கைப் போட்டவர் அ.இ.அதிமுக வின் வழக்கறிஞராக இருந்த பி.எச். பாண்டியன். (பிறகு சட்டப் பேரவைத் தலைவரானவர்) வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முதல் நாள் இரவு முழுவதும் வேலை செய்து விடியற்காலைக்குள் அண்ணா சாலையில் கலைஞர் சிலையை திராவிடர் கழகத் தோழர்கள் நிறுவி விட்டனர் என்பது வரலாறு.

பெரியார் தனக்குப் பிறகு மணியம்மையாரின் எதிர்கால பாதுகாப்பு கருதி அவருக்கு தெரியாமலேயே சில சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். அதில் ஒன்று ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம். அந்த இடத்தை பெரியார் நினைவு இல்லமாக்க அரசு விரும்பியது. மணியம்மையாரிடம் அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலைஞர் பெரியாரின் 96ஆவது பிறந்தநாள் விழா மேடையில் கோரிக்கை வைத்தார். மணியம்மையார் அதே மேடையிலே அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இடத்தை ஒப்படைப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியை அடைவதாகத் தெரிவித்தார். அண்ணா சாலையில் திமுக சார்பில் பெரியார் சிலை திறப்பு விழா நடந்த போது (17.09.1974) மணியம்மையார் வீட்டுக்கான ஆவணங்களை கலைஞரிடம் விழா மேடையில் கையளித்தார்.

அவசர நிலை காலத்தில் கலைஞரின் துணைவி யார் இராஜாத்தி அம்மா அவர்களை வருமான வரித் துறையினர் சோதனை என்ற பெயரில் அவமதித்ததைக் கண்டு பொங்கி எழுந்த மணியம்மையார், பெரியார் திடலின் வாயிலில் கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்காக காத்திருந்த ஏழு மாடிக் கட்டிடத்தை திறக்க இராஜாத்தி அம்மா அவர்களை அழைக்க முடிவு செய்தார். அந்த நெருக்கடி காலத்திலும் இப்படிப்பட்ட ஒரு முடிவை அவர் எடுக்க முன் வந்தபோது அதிகார வர்க்கம் அவரை மிரட்டியது. ஆளுநருக்கு ஆலோசகராக இருந்த வேத குலத்தைச் சார்ந்த அதிகாரிகள் இதற்கு மறைமுகமான மிரட்டல்களை விடுத்தனர். அப்படி இராஜாத்தி அம்மாளை அழைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு நாகம்மையார் இல்லத்தில் வளர்ந்த கைவிடப்பட்ட குழந்தைகளை வைத்து அந்த ஏழு மாடிக் கட்டிடத்தை மணியம்மையார் திறந்து வைத்தார்.

இராஜாத்தி அம்மாள் அவர்களையும் அப்போது சிறு குழந்தையாக இருந்த அவரது மகள் கனிமொழியையும் பெரியார் திடலுக்கு அழைத்து ஒரு நாள் முழுவதும் தன்னுடன் தங்க வைத்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி உற்சாகமூட்டி உணவு வழங்கி உபசரித்து வழியனுப்பி வைத்தார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு மிசா என்னும் ஆள் தூக்கி சட்டத்தில் நாடு முழுதும் திமுக, திக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி சென்னை வந்திருந்த போது அப்போது திமுகவில் இருந்த, க. இராசாராம் அவர்களின் முயற்சியால் பிரம்மானந்த ரெட்டியை சந்தித்து அன்னை மணியம்மையார் பேசினார். “அரசியல் தொடர்பே இல்லாத சமுதாய இயக்கமான பெரியார் இயக்கத் தோழர்களை ஏன் கைது செய்தீர்கள்” என்று நேருக்கு நேராக உள்துறை அமைச்சரிடம் மணியம்மையார் கேட்டார். அதற்கு “திமுக.வை நீங்கள் ஆதரிக்கிறீர்கள், அதுதான் கைதுக்கு காரணம் இனி திமுக.வை ஆதரிக்க மாட்டோம் என்று எழுதி கொடுங்கள் உடனே விடுதலை செய்கிறோம்” என்று பிரம்மானந்தரெட்டி கூறிய போது அடுத்த நிமிடமே அங்கிருந்து பதிலே கூறாமல் வெளியேறினார் மணியம்மையார்.

பெரியார் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு சிலைகள் திறக்கப்பட்டன என்பது வரலாறு. அதில் பெரியாரும் பங்கேற்றார். கோயிலுக்குச் சென்ற ஒரு பக்தர் சாமி சிலையைப் பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகளுக்கு மாற்றாக சமுதாய புரட்சிக்கும், சிந்தனை மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட தலைவர்களின் சிலையை திறக்க வேண்டும். இந்த சிலைகள் வழியாக மக்களிடம் அவரது பகுத்தறிவு சிந்தனைகள் சமுதாய புரட்சிக் கருத்துக்கள் போய் சேர வேண்டும் என்று பெரியார் கூறினார்.

1970 ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் சிலையை (20.09.1970) சமூகவியல் அறிஞரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவருமான எஸ். சந்திர சேகர் திறந்து வைத்தார். பிரபல கோவை தொழில் அதிபர் ஜி.டி.நாயுடு தலைமை தாங்கினார். அதில் பெரியார் பங்கேற்று பேசினார். அடுத்த அய்ந்து நாட்களில் 25ஆம் தேதி திண்டுக்கல்லில் பெரியார் சிலையை குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் திறந்து வைத்தார். அப்போது தெருவுக்கு தெரு ஒரு பகுத்தறிவாளர் சிலை நிறுவப்பட வேண்டும் என்று கலைஞர் பேசினார்.

1971ஆம் ஆண்டு க.இராசாராம் அவர்கள் முயற்சி யோடு திராவிடர் கழக தோழர்கள் பெரியாருக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் (04.11.1971). கலைஞர் பெரியாரைக் கைப்பிடித்து வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைத்தார். சில நிமிடங்கள் கூட பெரியார் அதில் அமரவில்லை எழுந்து கொண்டு கலைஞரின் கையைப் பிடித்து வெள்ளி சிம்மாசனத்தில் பெரியார் அமர வைத்தபோது கூட்டம் உணர்ச்சிவயமானது. கலைஞரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.

“வெள்ளி சிம்மாசனமாக இருந்தாலும் பெரியாரைக் கட்டுப்படுத்தி உட்கார வைக்க முடியாது. அவர் கட்டுக்குள் கொண்டு வரப்பட முடியாத சுதந்திர மனிதர்” என்று கூறிய கலைஞர், “பெரியார் கொள்கைகளை இலட்சி யங்களை நாம் எந்த அளவிற்கு கடைபிடிக்கிறோம் என்பதில் தான் அவரின் வாழ்வின் நீட்டிப்பு இருக்கிறது" என்று கூறினார். சமுதாயத்திற்கு உழைக்கிற சிந்தனையாளர்கள், புரட்சியாளர்களுடைய சிலைகள் வழிபாட்டிற்கு உரியவை அல்ல. எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடிய சிலைகள் வரலாறுகளை பேசும் சிலைகள் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஏதோ ஒரு வன்முறையாளன் கலைஞர் சிலையை உடைத்தான். அப்போது கூட கலைஞர், “ஒரு தம்பி சிலையில் என் நெஞ்சை தான் கடப்பாரையால் தகர்த்தான்” என்று பெருமையோடு அதைக் குறிப்பிட்டார்.

திரிபுரா வில் புரட்சியாளர் லெனின் சிலையை மத வெறியர்கள் உடைத்தனர். அப்போது பெரியார் சிலைகளும் அதேபோல் உடைக்க வேண்டும் என்று எச்.ராஜா முகநூலில் பதிவிட - நாடே கொந்தளித்தது; பா.ஜ.க.வினரே எதிர்த்தார்கள்; பிறகு தனது ‘அட்மின்’ அப்படிப் போட்டதாக பின்வாங்கிக் கொண்டார்.

ஆனால் சிலை உடைப்புகளால் வரலாற்றாளர்கள் வரலாற்றில் இருந்து ஒரு போதும் அகற்றிவிட முடியாது. வரலாறு இப்போது தமிழ்நாட்டில் திரும்புகிறது.

நெஞ்சில் ஒருவன் கடப்பாரையால் கலைஞர் சிலையை தாக்கினான். இப்போது நெஞ்சு நிமிர்த்தி கலைஞர் சிலை தமிழின உணர்வோடு எழும்பப் போகிறது.

- விடுதலை இராசேந்திரன்