அமெரிக்கா ப்ளோரிடா கேப் கெனபரல் (Cape Canaveral) கென்னடி ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 13, 2023 அன்று ஸ்பேஸ் எக்ஸ் கனரக ஏவுவாகனத்தின் உதவியுடன் நாசாவின் சைக்கி என்ற விண்கலன் தன் நீண்ட தூரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. அரிய வகை உலோகங்கள் ஏராளமாக உள்ளன என்று கருதப்படும் சைக்கி என்ற விண்கல்லை நோக்கியே இந்தப் பயணம். அபூர்வ உலோகங்களுடன் உள்ள சைக்கி விண்கல், முந்தைய கோளின் மிச்சம் மீதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மனிதனால் நேரடியாக செல்ல முடியாத சைக்கியை நோக்கிய இந்தப் பயணம், அது உருவாகக் காரணமாக இருந்த பாறைகள் நிறைந்த முந்தைய கோளைப் பற்றிய புதிய தகவல்களைத் தரும் என்று கருதப்படுகிறது. அரிய உலோகங்கள் செறிந்து காணப்படும் இந்த விண்கல்லை அடைய, சைக்கி விண்கலனிற்கு ஆறாண்டுகள் எடுக்கும். பெரும்பாலான விண்கற்கள் பாறைகள் நிறைந்ததாக அல்லது பனிக்கட்டிகள் நிறைந்ததாக உள்ளன. உலோகங்கள் அடர்ந்துள்ள ஒரு விண்கல்லிற்கு ஓர் ஆய்வுக்கலன் செல்வது இதுவே முதல்முறை.psyche missionஉருளைக்கிழங்கு வடிவ விண்கல்

இந்த விண்கல் முந்தைய ஒரு கோளின் அடிபட்ட மேற்பகுதியாக இருக்கலாம். 2023 அக்டோபர் 13 அன்று ஏவப்பட்ட சைக்கி என்ற இந்தக் கலனுக்கு அது தேடிச்செல்லும் விண்கல்லின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. சைக்கி விண்கலன் இந்தப் பெரிய உருளைக்கிழங்கு வடிவ சைக்கி விண்கல்லை 2029ல் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூரப் பாறைகள், பனிக்கட்டி மற்றும் வாயுக்கள் நிரம்பிய விண்ணுலகங்களுக்குப் பயணம் சென்ற பிறகு, நாசா இப்போது உலோகங்களால் ஆன ஒரு விண்கல்லை ஆராய முற்பட்டுள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள உலோகங்கள் அதிகமுள்ள ஒன்பது விண்கற்களில் சைக்கி விண்கல்லே பெரியது. பல மில்லியன் கணக்கான விண் பாறைகளுடன் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் பூமியில் இருந்து 3.2 முதல் 4.2 விண்வெளி அலகுகள் அல்லது 478.7 முதல் 628.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முதன்மை விண்கல் பட்டையில் சூரியனிடம் இருந்து 235 மில்லியன் முதல் 309 மில்லியன் மைல் வரையுள்ள தொலைவில் இந்த விண்கல் சுற்றி வருகிறது.

விண்கற்கலை அறிந்தால் பூமியை அறியலாம்

விண்கற்கள் சூரியக் குடும்பத்தின் மிச்சம் மீதிகள். கோள்கள் உருவானபோது சூரியக் குடும்பத்தில் ஏற்பட்ட அதிதீவிர மாற்றங்களால் இவை உருவானதாகக் கருதப்படுகிறது. மாசிசூசெட்ஸ் போல அளவுள்ள நகரங்கள், சிறு நகரங்கள் முதல் சிறிய நாடுகள் வரை பல்வேறு அளவுகளில் வடிவங்களில் இவை காணப்படுகின்றன. 20% விண்கற்கள் உலோகங்களால் ஆனது என்று நம்பப்படுகிறது. இவை பூமியின் உள்ளமைப்புடன் ஒத்துள்ளன.

புராதன அண்டவெளி காலத்தில் இருந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் உண்டான மிச்சம் மீதிகளே இவை என்று கருதப்படுகிறது.

இந்த கல் துண்டுகளை ஆராய்வதன் மூலம் பூமியின் உள்ளமைப்பை அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நீண்டகாலக் கனவு

சைக்கி, மார்ச் 17 1852ல் இத்தாலிய விண்வெளியியலாளர் அனிபெய்ல்டா காஸ்பாரிஸ் (Annibale de Gasparis) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்மாவிற்கான கிரேக்க கடவுளின் பெயரான சைக்கி (Psyche) என்ற பெயரே இந்த விண்கல்லிற்கு வைக்கப்பட்டது. பதினாறாவதாக கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் இது சைக்கி16 என்றும் அழைக்கப்படுகிறது. உலோகங்களால் ஆன சைக்கிக்குச் செல்வது மனிதனின் நீண்டகாலக் கனவு என்று அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி லிண்டி எல்கின்ஸ்-டாண்ட்டன் (Lindy Elkins-Tanton) கூறுகிறார்.

சூரியக்குடும்பத்தில் உலோக மேலோடுடன்(core) உள்ள ஒரு கோளைப் பற்றி அறிய ஒரு வழி இந்த விண்கல்லுக்கான பயணம். ரேடார் மற்றும் பிற கருவிகளின் மூலம் சைக்கி ஒரு பெரிய விண்கல் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் குறுக்களவு 232 கிலோமீட்டர். நீளம் 280 கிலோமீட்டர். இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்கள் மற்றும் சிலிகேட் போன்ற பொருட்களால் இந்த விண்கல் நிரம்பி வழிகிறது என்று நம்பப்படுகிறது. முதன்மையாக சாம்பல் நிறத்துடன் மங்கலாக இருக்கும் இதன் தரை மேற்பரப்பு அண்டவெளி நிகழ்வுகளால் உருவான உலோகத்துகள்களால் மூடப்பட்டுள்ளது.

சைக்கியில் உலோகப் பள்ளங்கள், பிரம்மாண்ட உலோக முனைகள் மற்றும் உலோகங்கள் பதிக்கப்பட்டு அரிக்கப்பட்ட லார்வா, சல்பர் மூலம் ஏற்பட்ட பசுமை கலந்த மஞ்சள் நிறம் உடைய சாயம் பூசப்பட்ட பகுதிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கற்பனை செய்துள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருந்தால் சைக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஓர் அற்புதமாக இருக்கும். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படும் சூரியக் குடும்பத்தின் ஓர் அடிப்படைக் கட்டமைப்பாக இந்த விண்கல் கருதப்படுகிறது.psyche mission illustrationவிடை காண உதவும் விண்கல்

"பூமியில் உயிர் தோன்றிய விதம், பூமி எவ்வாறு உயிர்கள் வாழத் தகுதியான இடமாக மாறியது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண சைக்கி ஆய்வுக்கலன் அனுப்பும் தகவல்கள் உதவும்” என்று லிண்டி கூறுகிறார். பூமியின் இரும்பு மேலோடு பூமியில் காந்த மண்டலத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கவசம் போல செயல்பட்டு பூமியை வளிமண்டலத்தில் இருந்து பாதுகாக்கிறது. உயிர்கள் வாழ வழிவகுக்கிறது.

நாசாவின் சார்பில் அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் 1.82 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின்படி சைக்கி விண்கலன் விண்கல்லை நேரடியாக சென்றடையாமல் சுற்றிக் கொண்டு செல்லும். ஒரு வேன் அளவு உள்ள விண்கலன் ஒரு டென்னிஸ் மைதானத்தை உள்ளடக்கக்கூடிய அளவுள்ள இடத்தில் பெரிய சூரிய மின் பலகைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026ல் செவ்வாயைக் கடந்து செல்லும்போது கிடைக்கும் உந்துவிசை ஆற்றல் மூலம் சைக்கி தன் பயணத்தைத் தொடரும். மூன்றாண்டுகளுக்குப் பிறகு சைக்கி விண்கலன் விண்கல்லை அடையும். பிறகு 2031 வரை அதிகபட்ச தொலைவாக 440 மைல், குறைந்தபட்ச தொலைவாக 47 மைல் தூரத்தில் சுற்றிவரும்.

மதிப்புமிக்க உலோகங்களின் கருவூலமான சைக்கியை நோக்கிய இந்தப் பயணம் வெற்றிபெறும்போது மனிதனின் விண்வெளி வரலாற்றில் அது ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

**  **  **

மேற்கோள்கள்https://www.theguardian.com/science/2023/oct/13/nasa-psyche-launch-metal-asteroid?

&

https://www.mathrubhumi.com/science/news/nasa-launched-psyche-mission-1.8983477

&

https://www.nasa.gov/news-release/nasas-psyche-spacecraft-optical-comms-demo-en-route-to-asteroid/

&

https://www.livemint.com/science/nasa-launches-spacecraft-to-explore-metal-rich-asteroid-psyche-report-11697223643019.html

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It