விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து உருகி வரும் நட்சத்திரங்களைக் கண்டதும் "வெள்ளி தண்ணி தாகம் எடுத்து உருகி வருது, தூ...தூ….தூ…" என மூன்று முறை நிலத்தில் துப்புவார்கள். மூன்று முறை துப்புவது மூடப் பழக்கமாக இருக்கலாம், ஆனால் நட்சத்திரம்/விண்கற்கள் உருகி வந்தது உண்மை. இதுதான் 'Unidentified Flying Object' என்கிறார்கள்.
நமது ஊர்ப் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றுவதற்காக பேய் வருகிறது பூச்சாண்டி வருகிறது என்று எப்படி சொல்கிறார்களோ, அதே போல்தான் மேற்கத்திய நாட்டு உலகத்தில் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் ஏலியன்ஸ்கள் நம்மை அவர்கள் கிரகத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்கள் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவார்கள்.
யுஎஃப்ஒ காணப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும். முதன் முதலில் யுஎஃப்ஒ தோன்றிய சம்பவத்தைக் காண நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குத் தான் செல்ல வேண்டும். ஆம், இயேசு கிறிஸ்து ஜெருசலேம், பெத்லகேமில் பிறந்ததாக அறியப்பட்டு, வானியலைக் கணிப்பவர்கள் அவரைக் கண்டு வழிபட்டுச் செல்ல ஜெருசலேம் நகருக்கு வருகிறார்கள். ஜெருசலேம் பகுதியை உள்ளடக்கிய யூதேயா பிரதேசத்தின் ராஜா ஹேரால்டை சந்தித்து தாங்கள் வந்ததின் நோக்கத்தை தெரிவிக்கிறார்கள்.
"கிழக்கில் நட்சத்திரம் ஒன்று உதித்ததை நாங்கள் பார்த்தோம். இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் பிறந்திருக்கிறார். யூதர்களின் ராஜா எங்கே? நாங்கள் அவரை வணங்க வேண்டும்" என்கிறார்கள். (பைபிளின் தமிழ் பதிப்பில் 'சாஸ்திரிகள்' என்றும், ஆங்கிலத்தில் 'Wise men' என்றும் கூறப்படுகிறது. வேல்பாரியில் வரும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழரைப் போன்ற நபர்கள்) இந்த செய்தியைக் கேட்டு பயந்து போய் நடுங்கி இருப்பான் ஹேரால்ட். தனியாக அந்த அறிஞர்களை அழைத்து "அந்த நட்சத்திரம் தோன்றிய காலத்தை கணித்துச் சொல்லுங்கள். நீங்கள் போய் முதலில் அந்த குழந்தையைப் பாருங்கள் பின்னர் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்பான்.
வானிலை அறிஞர்கள் அதைக் கேட்டு கிளம்பியதும் அந்த நட்சத்திரம் அவர்களுக்கு காட்சி அளிக்கும். அவர்கள் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள். பெத்லகேம் நகரத்தில் வந்ததும் அந்த நட்சத்திரம் நின்று விடும். அந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவைக் காண்பார்கள் அந்த வானிலை அறிஞர்கள். பின்னர் அந்த நட்சத்திரம் பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. ஒருவேளை அது மறைந்திருக்கும். இதுதான் முதல் யுஎஃப்ஒ சம்பவம்.
பின்நாட்களில் இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நட்சத்திரம் நமது சூரிய கிரகத்திலுள்ள Venus மற்றும் Saturn என்ற இரண்டு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்ததாக இருக்கலாம் என்று கூறினார்கள். அது எந்த நட்சத்திரம்? அது எப்படி நகர்ந்து சென்றது? எப்படி தானாக மறைந்தது? என்று யாருக்கும் தெரியாது. அறிவியலாளர்கள் இது ஒரு தற்செயலான சம்பவம் என்கிறார்கள். இந்த நட்சத்திரம் தோன்றி மறைந்தது தான் முதல் யுஎஃப்ஒ சம்பவமாக இருக்கலாம்.
நவீன யுஎஃப்ஒ-களைப் பற்றியதான காலம் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் ஐடோகோ மாகாணத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தர் மற்றும் விமானி Kenneth Arnold. இவர் ஜுன் மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய விமானத்தில் (இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம்) Washington’s Mount Rainier அருகில் பறக்கும் போது தன்னுடைய விமானத்தின் அருகில் மூன்று பறக்கும் தட்டுகள் (flying disc or saucer) 'V' வடிவில் தன் விமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக 1700 mph வேகத்தில் பறந்து சென்றதாகத் தெரிவித்தார். இந்த யுஎஃப்ஒ கதை உடனே அந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் சோதனைப் பயிற்சிக்காக அந்தப் பகுதியில் பறந்திருக்கலாம் என்றே அவர் நம்பினார். ஆனால், அப்படி ஏதும் பயிற்சிகள் அந்தப் பகுதியில் நடைபெற வில்லை என்று விமானப் படை அறிவித்தது. பின்னர் விமானப் படை அமைப்பு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து 'operation sign' என்ற பெயரில் இதிலிருக்கும் உண்மைகளை ஆராயத் தொடங்கினர். 1948ல் Kenneth Arnold பார்த்ததாக கூறப்படும் யுஎஃப்ஒ-களில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டது. கடைசி வரையில் தான் கண்டது நிஜம் என்றே தன்னுடைய நிலைப்பாட்டில் நின்றார் Kenneth Arnold.
இதே ஆண்டில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் (Roswell, New Mexico) என்ற கிராமத்திலிருந்து 75 மைல்கள் தொலைவிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த பாலைவனப் பகுதியில், ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் வழக்கத்திற்கு மாறான உடைந்து போன பொருட்களையும், அதனுடன் வித்தியாசமான மனித உருவங்கள் போன்ற பொம்மைகளையும் தற்செயலாகப் பார்க்கிறார். உடனடியாக தகவல் அருகில் உள்ள விமானப் படை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை காலநிலை கண்டறியப் பயன்படுத்திய பலூன் ஒன்று வெடித்துச் சிதறியது எனக் கூறி அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இது ஏலியன்ஸ் பயன்படுத்திய ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியில் தரையிறங்கிய போது வெடித்துச் (crash-landing) சிதறியது என்ற செவி வழிக் கதை அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. அடுத்த நாள் உள்ளூர் செய்தித்தாள் "RAAF Capture Flying saucer in Roswell region," என்று முதல் பக்க செய்தியாக இதனை வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கூட்டியது. மக்கள் இன்றளவும் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்கள் நமது பூமியில் உள்ள பொருட்கள் இல்லை எனவும், அவைகளெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
1950 காலகட்டங்களில் அமெரிக்க இராணுவம் சோதனை முயற்சியாக அதிகப்படியான 'dummy troops' பொம்மை வீரர்களை உருவாக்கி வானத்திலிருந்து கீழே விழும் சோதனைகள் செய்து கொண்டிருந்தார்கள். வானத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பைலட் கீழே விழுந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற சோதனை தான் நியூ மெக்சிகோ பகுதிகளில் நடைபெற்றது. அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என மக்களால் நம்பப்பட்டது. இன்றளவும் மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து 'ஏலியன்ஸ் இங்குதான் தரையிறங்கி இருக்கிறார்களா' என்று வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள். மேலும் இது ராணுவத்தால் பாதுகாக்கப்படும் classified செய்யப்பட்ட பகுதியாகும்.
1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா விமானப் படை நிர்வாகம் 231 பக்க அறிக்கையில், ஏலியன்ஸ் வந்து இறங்கியதற்கான சான்று ஏதுமில்லை, case closed என அறிவித்து விட்டார்கள். இந்தப் பகுதி இப்போது ஒரு யுஎஃப்ஒ சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
கடவுள், யுஎஃப்ஒ, ஏலியன்ஸ் இவைகளைப் பற்றி அமெரிக்க அறிவியலாளர் Carl sagen, Science Friday என்ற வானொலி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக எடுத்துரைத்தார். "1947 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ ராஸ்வெல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலியன்ஸ் வகையான பொம்மைகளை மக்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்ததாகவே நம்பினார்கள். ஆனால், இராணுவம் அந்தப் பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்து இது ஒரு வகை பலூன் தான் என்றும், நாங்கள் அதனுள் வைத்தது சோதனைப் பொம்மைகள் தான் என்றும் கூறியது."
"யுஎஃப்ஒ என்பது கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் பறக்கிறது, அவ்வளவு தான்" என்றார் அவர்.
கடவுளைப் பற்றி அவர் கூறும்போது "கடவுள் தான் உலகைப் படைத்தார் என்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. அதனால், நான் அறிவியலை நம்புகிறேன்" என்றார்.
'Science' என்ற லத்தீன் சொல்லுக்கு அறிவு என்று பொருள் என்று கடைசியில் முடித்தார். (பேட்டி ஒலி வடிவில்; https://www.sciencefriday.com/stories/_sf_s=Ufo)
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏலியன்ஸ் பற்றிய வேடிக்கையான கதை ஒன்று பிரபலமாகியது. 'Area 51' என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நவேடா என்ற மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனப் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது. இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
The Archangel-12 என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள் வேகத்தில் பறந்து ஆகாயத்தில் இருந்து பூமியின் படங்களை எடுத்து அனுப்பியது. இந்த விமானங்கள் வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம். கடந்த ஆண்டு ஒரு Facebook event group மூலம் 'Storm Area 51' எனப் பெயர் சூட்டி இந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் ஏலியன்களை உள்ளே வைத்து சோதனைகள் நடைபெறுகிறது; இதனைப் பார்ப்பதற்காக ஒன்னரை மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் கையொப்பமிட்டு இருந்தார்கள். 'இந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம், இது அமெரிக்க அரசின் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்' என்றது அமெரிக்க விமானப் படை.
ஏலியன்ஸ் மற்றும் UFO (unidentified flying object) இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உலகளவில் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் ஐம்பது விழுக்காட்டினர் இவைகள் உண்மை தான் என்றே நம்புகிறார்கள்.
வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்திற்கும் காப்பீடு இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால், ஏலியன்ஸ் யுஎஃப்ஒ-களால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை 'alien abduction insurance' என்று அழைக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது. ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக நீங்கள் இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
'Storm Area 51' - இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் புதிதாக காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.
UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப் பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் Falcon Heavy test flight ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவினார். அதில் அவர் பயன்படுத்திய Tesla's roadster வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள். அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் 'Made in Earth by humans' என்று எழுதி இருந்தது. ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் 'இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது' என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது.
கடந்த 2019ல் அமெரிக்காவில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ-கள் காணப்பட்டதாக மக்களிடம் இருந்து தகவல் வந்ததாகக் கூறுகிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதுவே அமெரிக்க மக்கள் எந்தளவுக்கு இதன் மீது ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒன்று, இதனால் ஹாலிவுட்காரர்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.
சரி, ஒருவேளை யுஎஃப்ஒ மற்றும் ஏலியன்கள் உண்மையாகவே இருப்பதாக இருந்தால், அதனை ufologist போன்றோர்கள் ஆராய்ச்சி செய்து அறிவிப்பார்கள். அதுவரை... ஏலியன்ஸ் நேரில் வரட்டும், அவைகளை நாமும் பார்ப்போம், அப்போது நம்புவோம்.
(தரவுகள்: https://www.livescience.com/20645-ufo-sightings.html)
- பாண்டி