மலேரியாவிற்கான உலகின் முதல் தடுப்பூசி இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கானா இதை உலகில் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. ஆர்21/மேட்ரிக்ஸ் எம் (R21/Matrix M) எனப்படும் இத்தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையான 75% நம்பகத் தன்மையைப் பெற்றுள்ளது. நாட்டில் அதிக சிசு மரணத்தை ஏற்படுத்தும் மலேரியாவைத் தடுக்க 5 முதல் 36 மாத வயதுடைய குழந்தைகளிடம் இதைப் பயன்படுத்த கானாவின் மருந்துப்பொருட்கள் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர் நம்பகத்தன்மை மற்றும் மலேரியாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு தடுப்பூசி அவசரமாகத் தேவைப்படும் நாடுகளுக்கு போதுமான அளவு வழங்கக்கூடிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி இது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நஃப்பீல்டு (Nuffield) மருத்துவப் பிரிவின் ஜென்னர் (Jenner) ஆய்வுக்கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ஏட்ரியன் ஹில் (Prof Adrian Hill) கூறுகிறார்.மலேரியாவிற்கு எதிரான மனிதனின் போராட்டம்
என்றாலும் இது மலேரியாவிற்கு எதிரான மனித குலத்தின் சிக்கலான போராட்டத்திற்கு முழுத் தீர்வாக அமையாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொசுக்களால் ஏற்படும் இந்நோயால் 2021ல் 619,000 பேர் மரணமடைந்தனர். இவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளே என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கானாவில் இந்நோய் கொள்ளை நோயாக உள்ளது. மலேரியாவால் இங்கு 5.3 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 12,500 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
பன்னாட்டு நிதி
இத்தடுப்பூசியை இன்னும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. அதன் பின்னரே மருந்தைத் தயாரிக்க உதவும் பன்னாட்டு நிதி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மூன்று கட்டப் பரிசோதனைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஆரம்பகட்ட சோதனை 77% நம்பகத் தன்மையை அளித்தது. இதே அளவு நம்பகத்தன்மை ஓராண்டு ஆனபிறகு ஊக்கத் தடுப்பூசி (booster dosage) கொடுத்த பிறகும் இருந்தது. ஆர்.டி.எஸ்,எஸ் (RTS,S) என்ற மற்றொரு தடுப்பூசி மருந்து உலக சுகாதார நிறுவனத்தால் 2021ல் பரவலாகப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
உலகத் தடுப்பூசி தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பூனா நகரில் உள்ள செரம் (Serum) கழகம் மலேரியாவிற்கு எதிரான இந்த மருந்தை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டிற்கு 200 மில்லியன் குப்பிகள் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்த மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் அடார் பூனேவாலா (Adar Poonawalla) கூறியுள்ளார்.
தோல்விகள்
இப்போது பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை நோய் பரப்பும் கொசுக்கள் பெற்றதால், மலேரியா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் சமீப ஆண்டுகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது. ஆப்பிரிக்காவின் நகரப்பகுதிகளில் சமீபகாலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் மிகுந்த பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.
முழுமையான தீர்வு
கானா உரிமம் கொடுத்துள்ளது மகிழ்ச்சியான செய்தியே என்றாலும் அதனால் மட்டும் இம்மருந்தை உற்பத்தி செய்ய உடனே நிதியுதவி கிடைக்கும் என்று கூற முடியாது. உலக சுகாதார நிறுவனத்தின் தரப்பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான நிபந்தனைகளை இது நிறைவேற்ற வேண்டும். இந்த மருந்தின் விலை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. தடுப்பூசிகளைப் பெருமளவில் கொள்முதல் செய்யும் உலகக் கூட்டமைப்பு (GAVI) இதை ஏற்க வேண்டும் என்று உலகளாவிய வளர்ச்சி மையத்தின் உலக சுகாதாரக் கொள்கை வகுப்புப் பிரிவின் இயக்குனர் ஹாவ்யெர் கஸ்மேன் (Javier Guzman) கூறியுள்ளார்.
பயன்பாட்டில் இப்போது இருக்கும் கொசு வலைகள், கொசுவிரட்டி மருந்துகளைத் தெளித்தல் போன்றவை இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. என்றாலும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு மலேரியா என்ற கொடிய கொள்ளை நோயில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு மைல்கல் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்