vaccine coronaபருவகாலம் மாறும்பொழுது வானிலையின் சராசரி வெப்பநிலை குறையும் பொழுது கொரோனாவினால் பரவும் நோய்த் தொற்றின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் மார்ச்சு மாதம் தொடங்கிய கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட சமூகப் பெருஞ்சுணக்கம், பொருளாதார முடக்கம், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், முரண்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் கொரோனா நோய்த்தொற்றின் வீச்சைக் கட்டுப்படுத்த முடியாமல் பொதுச் சுகாதர அமைப்பு திணறிக் கொண்டிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை நோயிலிருந்து மீட்பதற்கும் நோய்ப்பரவாமல் தடுப்பதற்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள மாடனா (Moderna) ஃபைசர், பையோஎண்டெக் (Pfizer/BioNTech) ஆகிய மருந்தாய்வு நிறுவனங்கள் தங்கள் ஆய்வுப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் இடைக்கால ஆராய்ச்சி முடிவுகளை மிக வேகமாக பரிமாறிக் கொள்கின்றன.

இந்தப் புதியவகை கொரோனா நோய்க்கிருமியை முறியடிப்பதற்கு இதுநாள் வரை கடைப்பிடித்த வந்த தடுப்பூசி தயாரிக்கும் முறையிலிருந்து வேறுபட்டு, புதியவகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி கண்டறியும் ஆய்வுப்பணி நிறைவடைந்து, தன்னார்வளர்களைக் கொண்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டு அறிக்கைகளும் வெளியாகி வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் இந்தப் புதிய தொழில்நுட்பத்த்திற்கு மெசஞ்சர் ஆர்.என்.ஏ (messenger RNA) என்று பெயர்.

அந்நிறுவனங்களின் முதல்நிலை பரிசோதனை ஆய்வு முடிவுகள் பொதுவெளியில் முழுமையாக வெளியிடப்படாவிட்டாலும், அவற்றின் சுருக்கமான ஆய்வு முடிவுகள் என்னைப்போன்ற தடுப்பூசி ஆய்வு நிபுணர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகாவிற்கும் டெங்குவிற்கும் (Zika, dengue) எதிராகத் தடுப்பூசிகளைக் கண்டறியும் மருத்துவக் குழுவோடு கடந்த ஆண்டுவரை நான் பணியாற்றியுள்ளேன். அந்தப் பணியை விட்டு, புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஏற்கனவே உள்ளாகியுள்ள இளையவர்கள் மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் ஆய்வு முடிவுகளை உலகந்தழுவிய அளவில் பெரும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

நம்பிக்கைத் தரும் முதல்நிலை பரிசோதனை முடிவுகள்:

புதியவகை கொரோனா தடுப்பு மருந்துகளைப் மருத்துவ முறைப்படி பரிசோதிக்கும் முதல்நிலை முன்னோட்ட ஆய்வுகளுக்காக, அமெரிக்காவில் மட்டும் 30,000 இளைஞர்கள் தன்னார்வத்த்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுள்ளனர்.

அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு உண்மையான மெசஞ்சர் ஆர்.என்.ஏ-1273 (mRNA-1273) தடுப்பூசியும் மற்றொரு குழுவினருக்கு மருந்துப்போலியும் செலுத்தப்பட்ட ஆய்வு செய்யப்பட்டதில், உண்மையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 95% நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்படவில்லை.

அதேநேரத்தில் மருந்துப்போலி (placebo - உண்மையான மருந்துக்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு வகையான மருந்தை பாவானையாகச் செலுத்துவது. இது, ஆய்வு செய்யும் மருத்துவர்களைத் தவிர அந்த நபருக்குக்கூட தெரியாது.) செலுத்தப்பட்ட குழுவினரில் 90 நபர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாடர்னா மருந்தாய்வு நிறுவனத்தின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. அதாவது, புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி 95% வேலை செய்கிறது, என்பது இதன் உட்பொருள்.

இந்தத் தடுப்பூசி செலுத்தபட்ட எந்தக் கொரோனா நோய்த் தொற்றாளரும் தீவிர நோய்த் தொற்றுதலுக்கு ஆளாகவில்லை. அதேசமயத்தில் மருந்துப்போலி செலுத்தப்பட்ட குழுவினரில் 11% பேருக்கு தீவிர கோரோனா பாதிப்பு இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதைப்போலவே, ஃபைசரும் பயோஎண்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள BNT162b2 என்ற தடுப்பூசி 90% சிறப்பாக வேலை செய்கிறது என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு சுமார் 43,538 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30% பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது?

உடலுக்குள் செலுத்தப்படும் தடுப்பூசியில் உள்ள பகுதிப் பொருட்கள், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நோய்பரப்பும் நச்சுக்கிருமியின் எந்தப்பாகம் நோயை ஏற்படுத்தக்கூடியது என்பதனை அறிவித்து, அதற்கு எதிராகச் செயல்படத் தூண்டும். பொதுவாக தடுப்பூசிகள் இவ்வாறு தான் வேலை செய்கின்றன.

வழக்கமான தடுப்பூசி மருந்துகளில் செயலிழந்த வைரசோ அல்லது அதன் புரதமோ ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் வேறுபட்ட வழியில் நச்சுயிருக்கு எதிராக வினையாற்றுகின்றன.

இந்தத் தடுப்பூசிகளில் வைரசின் புரோட்டின் இடம்பெற்றிருக்காது. மாறாக, நச்சுக்கிருமியின் புரத அமைப்பைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப தானாகவே அதற்கெதிரான அல்லது அதை அழிக்கக்கூடிய புரத அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இந்த மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் செயல்படும்.

நமது கையின் மேற்பகுதியில் இந்தத் தடுப்பூசியினை செலுத்திய பின், தடுப்பூசியில் உள்ள மரபுக்குறியீடானது, கையிலுள்ள தசைச் செல்களைப் பயன்படுத்தி, கிருமியை அழிக்கக்கூடிய நச்சுப் புரதத்தை தானே உருவாக்கி உடலுக்குள் நேரடியாகச் செலுத்திவிடும்.

அதாவது, கிருமியை அழிக்கும் மருந்துச் செலுத்துப்படுவதற்கு பதிலாக, மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்ட அந்த வேதி மருந்துப்பொருள், உடலுக்குள் சென்றபின், கிருமியின் புரத அமைப்பிற்கு ஏற்ப, எதிர் நச்சுப்புரதத்தை உருவாக்கி, கிருமியை அழிக்கும்.

இதே வழிமுறையைப் பயன்படுத்தித்தான் கொரோனா நச்சுக்கிருமியும் நமது உடலுக்குள் நோய் உண்டு பண்ணுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, கொரோனா நச்சுக்கிருமி எவ்வாறு வேலை செய்கிறதோ அதே வழியைப் பின்பற்றி அதனை அழிக்கக்கூடிய எதிர்ப்புரதத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருப்பது தான், தற்போதைய தடுப்பூசிகளை புதியவகை தடுப்பூசிகளாக மாற்றியுள்ளன.

உடலுக்குள் சென்ற வேதிப்பொருள் நச்சுப் புரதத்தை உருவாக்குவதில் ஒரு சிக்கலான இடமிருக்கின்றது. அந்தச் சிக்கலானப் பணியைச் செய்வதற்குத்தான் இந்த மெசஞ்சர் ஆர்.என்.ஏ மரபுக் குறியீடுகள் வேதிமருந்தில் இடம்பெறுகின்றன. இந்தத் தடுப்பூசிகள், உண்மையான கொரோனா நச்சுக்கிருமி எவ்வாறு வேலை செய்யுமோ அதே முறையில் வேலைசெய்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கக்கூடியவை.

இந்த வகையான தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்ட ஒருவர் எப்போது நோய்த்தொற்றுக்கு ஆளானாலும், உடலினுள்ளே இயங்கும் தடுப்பு மருந்து தொழில்நுட்பம், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி நச்சுக்கிருமியை அழிகக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த எதிர்ப்பொருளை தானே உருவாக்கி விடும்.

இந்த மெசஞ்சர் ஆர்.என்.ஏ மரபுக்குறியீடுகள் என்றாலும் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால், உடல் வழியாகவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படாது. அதாவது பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், அதனுடைய பலன் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் மரபு வழியாகக் கடத்தப்படாது.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ மரபணு கொண்ட தடுப்பு மருந்து உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், தசைநார்களைப் பயன்படுத்தி, நச்சுக்கிருமிக்கு எதிரான புரதத்தை உற்பத்திச் செய்யத் தொடங்கும். இந்தப்பணி, மருந்து செலுத்தப்பட்டதிலிருந்து தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளோ அல்லது 48 மணி நேரத்திற்குள்ளோ உச்சபச்ச நிலைந்து அடுத்த சில நாட்களில் முழுமையடைந்து விடும்.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ வகை தடுப்பூசிகள் படுவேகமாக ஆராயப்படுவது ஏன்..?

மரபார்ந்த முறையில் கண்டறியப்படும் தடுப்பூசிகள், விரிவான ஆராய்ச்சிக்குப்பின் வெளிவரக் கூடியவை என்றாலும், அதற்கு மிக நீண்ட கால அளவு தேவைப்படும். கோவிட்-19 போன்ற புதியவகை நோய்த்தொற்றுப் பரவல் உள்ள இக்காலக்கட்டத்தில் அவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொள்ள முடியாது. விரைவாகத் தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்தாக வேண்டும்.

சான்றாக, பருவக்காய்ச்சலான இன்பூளூயசன்சா காய்ச்சலுக்கு மருந்து கண்டறிய வேண்டுமெனில் முதலில் அந்நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமியின் முழுமையான வடிவத்தைக் கண்டறிய வேண்டும். இதற்கு குறைந்தது ஆறு மாத காலம் தேவைப்படும். இந்தக் கால அளவு, தடுப்பூசி கண்டறியும் பணியை மேலும் கடினமாக்கி விடுகிறது.

நச்சுக்கிருமியை கண்டறிந்த பின் அதன் புரத வடிவத்தை தனியே பிரித்தெடுத்து அதனை உள்ளடக்கிய ஒரு புதிய கலப்பின வைரசை தோற்றுவிக்க வேண்டும். இதற்கு குறைந்தது மூன்ற வாரங்களாவது ஆகும்.

மேலும், இந்தக் கால எல்லைக்குள் பல மருத்துவ விபத்துக்கள் நேரலாம். பிறகு, தோற்றுவிக்கப்பட்ட கலப்பின வைரசை எடுத்து, பல நச்சுக்கிருமியின் கருமுட்டைகளில் செலுத்தி மேலும் பல கலப்பின வைரசு மாதிரிகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வைரசின் புரதத்தை உள்ளடக்கிய தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டும். இதற்குள் தடுப்பு மருந்தில் உள்ள வைரஸ் புரதம் பாதிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அவ்வாறு நிகழ்ந்தால் தூய்மையான தடுப்பு மருந்தைப் பெறுவதற்கு மேலும் பல நாட்கள் போராட வேண்டிவரும்.

ஆனால், மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் மூலம் தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையில், வழக்கமாக தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையிலுள்ள பல்வேறு இடைநிலைகளை தவிர்த்திடலாம். சான்றாக, புறச்சூழலால் பாதிக்கப்படாத வைரசுகளைத் தோற்றுவித்தல், மருத்துவ பயன்பாட்டிற்கு தேவைப்படும் தூய்மையோடு நச்சுப்புரதங்களைத் தோற்றுவிக்கும் பணிகள் இம்முறையில் தவிர்க்கப்படுகிறது.

ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நச்சுப்புரதங்களை உள்ளடக்கிய தடுப்பு மருந்துகளுக்கு பதிலாக, உடலுக்குள் சென்ற பின்பு, மனித உடலில் உள்ள செல்களைக் பயன்படுத்தியே கிருமிக்கு எதிரான நச்சுப் புரதங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன.

மேலும், மெசஞ்சர் ஆர்.என்.ஏ என்பது நச்சுப் புரதம் இல்லையாகையால், இது மிக எளிய மூலக்கூறு அமைப்பையும் கொண்டுள்ளது. வழக்கமான தடுப்பு மருந்துகள் உயிரியல் முறைப்படி (biological synthesis) தயாரிக்கபட்டன.

ஆனால், இது வேதியியல் முறைப்படி (chemical synthesis) தயாரிக்கப்படுகிறது. எனவே, வேதிப்பொருளின் வடிவமைப்பை தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும். மேலும், வேதிமுறை என்பதால், மிகக் குறைந்த காலத்தில் மிக அதிகளவில் தடுப்பு மருந்துகளை உற்பத்திச் செய்ய முடியும்.

இன்னும் சரியாகச் சொல்வதெனில் SARS-CoV-2 வைரசின் மரபணு கிடைத்த அடுத்த சில நாட்களுக்குள்ளேயே, அதற்குரிய மெசஞ்சர் ஆர்.என்.ஏ மரபுக்குறியீடு உருவாக்கப்பட்டு முன்னோட்டச் சோதனை தயாரிகிவிட்டது. இதில் மேலும் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய்த்தொற்றுக் கிருமிகளுக்கும் தகுந்தாற்போல் இதனை உடனடியாக மாற்றியமைத்து, புதிய தடுப்பு மருந்துகளை உடனே கண்டறிந்து விட முடியும். எனவே, இது எதிர்காலத்திலும் பயன்படக்கூடியது.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ-வில் உள்ள சிக்கல் என்ன..?

மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் புதிதல்ல. இதற்கு முன்பே, வேதிமுறைப்படி மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு விலங்குகளிடம் சோதித்துப் பார்க்கப்பட்டபோது, எதிர்பார்த்த நச்சுப்புரதத்தை அம்மருந்து தானாகவே தோற்றுவித்திருந்தது. ஆனால், அந்தச் செயல்முறை மிக மெதுவாக நடைப்பெற்றது. இதுதான் இம்முறையில் உள்ள குறைபாடு.

மேலும் அதில் அஞ்சத்தக்க வேறொரு அம்சமும் உள்ளது. இது, வேதிப்பொருள் என்பதால் எளிதில் சிதைந்து விடும். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலமே இந்த மருந்தை துண்டு துண்டாகச் சிதைத்து விடலாம். எனவே, நோய்க்கிருமிக்கு எதிரான, சரியான எதிர் நச்சுப்புரதம் தொற்றுவிக்கப்படாமல் போகலாம்.

ஆனால், இந்தக் குறைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வாக்கிலேயே அடையாளம் காணப்பட்டு, மெசஞ்சர் ஆர்.என்.ஏ அமைப்பு, எளிதில் சிதைந்து போகாமல், மிகச் சிறிய மூலக்கூறுகளைக் கொண்ட தடுப்பு மருந்துகளை உருவாக்குவது எப்படி என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவிட்-19-க்கு எதிரான இந்தத் தடுப்பு மருந்துதான், மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து கழகத்தால் (FDA) அங்கீகரிக்கப்படும் முதல் மருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுக்கும் மேலான உழைப்பின் பயனாய், தற்பொழுது இந்தத் தொழில்நுட்பம் மருத்துவ மதிப்பீட்டிற்குத் தயாராக உள்ளது. மதிப்பீட்டில், இம்மருந்து நாம் எதிர்பாராத நோயெதிர்ப்புத் தன்மையை கொண்டிருக்கிறதா, இது நன்மை பயக்குமா? அல்லது தீமை உண்டாக்குமா என்று ஆராய்வார்கள்.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ மருந்துகளை அதிகுளிரில் வைக்க வேண்டும். ஏன்?

மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பு மருந்துகளை தயாரிப்பதில் தொடர்ந்து நிலவி வரும் சவால் என்னவென்றால் அதன் நிலையற்றத்தன்மை (instability) தான். அதாவது, இயல்பாகவே இது நிலைப்புத் தன்மையற்றது. இந்த மருந்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் வெப்பநிலை உறைநிலை வெப்பநிலைக்கு (freezing temperature) மேலே சென்றால், இந்த மருந்துப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் சிதைந்து போய்விடும்.

மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில், அந்த மருந்திலுள்ள மூலக்கூறுகள் எளிதில் சிதையா வண்ணம் அதன் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. அதோடு மட்டுமல்லாது, இந்தப் புதிய வகை தடுப்பு மருந்துகளை பேணுவதற்கு, இதற்கு முன்புள்ள தடுப்பு மருந்துகளுக்கு இல்லாத அளவிற்கு அதிகுளிர்ச்சியான கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. இது, மருந்தை பொது மக்களிடம் எடுத்துச் செல்வதில் பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தலாம்.

குளிரூட்டும் கட்டமைப்புகள் எவ்வாறு அமைய வேண்டும்..?

ஃபைசரும் பயோஎண்டெக் (Pfizer-BioNTech) இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தை மைனஸ் 94 திகிரி பாரன்ஹீட் (minus 94 degrees Fahrenheit) வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். உறை வெப்பநிலைக்கு (freezing) சற்று அதிகமான வெப்பநிலையில் வைக்கப்பட்டாலும் அடுத்த ஐந்து நாட்களுக்குள் மருந்துகள் வீணாகிவிடும்.

ஆனால், மாடனா (moderna) தயாரித்துள்ள மருந்தின் முன்னதற்கு நேரெதிரானப் பண்புகளை கொண்டிருக்கிறது. அதாவது, மாடனாவின் மருந்தைப் பொதுவாக தடுப்பூசிகளைப் பேணும் வெப்பநிலையிலேயே அல்லது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியிலேயே வைத்துப் பாதுகாக்கலாம். ஓரிடத்திலிருந்து இன்னொரு கொண்டு செல்ல ஆறு மாதம் காலம் ஆனாலும் எளிதில் கெட்டுப்போகாது, என்று அந்த நிறுவனம் உறுதி கூறுகின்றது.

மேலும் 36 முதல் 46 திகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலேயே வீணாகமல் பாதுகாப்பாக இருக்கும் என்றும், 6 மாத காலம் வரைக்கும் குளிர்ப்பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கலாம் என்றும் மாடனா நிறுவனம் தனது தடுப்பு மருந்துக்கு காப்புறுதி வழங்குகிறது.

தொலைதூரத்திற்கு எடுத்துச் செல்லும் சிக்கலை கலைய, ஃபைசர் நிறுவனமும் உலர் பனிக்கட்டியைக் கொண்ட பயணப் பெட்டகங்களை உருவாக்கும் என்பதில் வியப்பு ஒன்றுமில்லை எனலாம்.

கட்டுரையாளர்: சஞ்சய் மிசுரா, அறிவியல் ஆய்வாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளார், வாண்டபில்ட் (Vanderbilt University ) பல்கலைக்கழகம், அமெரிக்கா. 

மூலம்: https://science.thewire.in/health/pfizer-moderna-vaccines-cold-refrigeration/

- ப.பிரபாகரன்

Pin It