vaccination 400மருத்துவர் புகழேந்தி அவர்கள் ‘தடுப்பூசி...நடுக்கமூட்டும் உண்மைகள்!’ என்ற தலைப்பில், ஜூனியர் விகடனில் கொடுத்த நேர்காணலுக்கு டாக்டர் அருண்குமார் அவர்களின் மறுப்பு மற்றும் விளக்கப்பதிவு.

டாக்டர் புகழேந்தி: தட்டம்மைத் தடுப்பூசி விநியோகம் இந்தியா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் நிலையில், உண்மையில் இந்தத் தடுப்பூசிகள் நோயைத் தடுக்கின்றனவா..?இல்லை உண்டு பண்ணுகின்றனவா என்ற திடுக்கிடும் கேள்வி மக்களின் மனங்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

டாக்டர் அருண்குமார்: தட்டம்மைத் தடுப்பூசி நிறுத்தி வைக்கப்படவில்லை. வெறும் தட்டம்மை ஊசியாக 9 மாதங்களில் போடப்பட்டு வந்த தடுப்பூசி இப்போது ருபெல்லா நோயின் பாதுகாப்பையும் சேர்ந்து ‘தட்டம்மை ருபெல்லா’ தடுப்பூசியாக உருவெடுக்கிறது. இது 25 வருடங்களுக்கு மேலாக உங்கள் குழந்தை நல மருத்துவர் குழந்தைகளுக்குப் போட்டுக்கொண்டிருக்கும் தடுப்பூசி தான். ஏதோ புதிய ஆராய்ச்சித் தடுப்பூசி அல்ல. சந்தேகம் இருந்தால், உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டவணையில் Measles (தட்டம்மை) என்று 9 மாதங்களிலோ அல்லது MMR என்று 15 மாதங்களிலோ உங்கள் குழந்தைக்கு போடப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

டாக்டர் புகழேந்தி: மக்களின் சந்தேகம் 100 சதம் நியாயமானது. இன்றைய சூழலில் தடுப்பூசிகள் நோயைத் தடுக்கும் என்பதே மாயை. அதற்கு உலக அளவிலான உதாரணங்களே சாட்சி. மருந்து சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் தடுப்பூசிகள் பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்

டாக்டர் அருண்குமார்: தடுப்பூசிகள் நோயைத் தடுக்கவில்லை எனில் 2000 வருடங்களாக இயற்கையுடன் மனிதன் ஒன்றி இருந்த போது குறையாத தொற்று நோய்கள் எப்படி கடந்த 100 வருடங்களில் குறைந்தது?

டாக்டர் புகழேந்தி: தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் நிச்சயம் தவறாக இருக்கப் போவ தில்லை. ஆனால், இப்போது தவறான நோக்கத்துடன் முன்னிலைப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றுதான் இந்த பூமியில் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்ற எண்ணம் மக்கள் மனதில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தடுப்பூசிக்கான சந்தையை உலக அளவில் விஸ்தரித்துள்ளனர். சுகாதாரமான உணவு, வசிப்பிடம், தண்ணீர் போன்றவையும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும்தான் எந்த ஒரு நோயையும் தடுக்க முடியும். அதுதான் இயற்கையின் விதி. செயற்கையாக உருவாக்கப்படும் மருந்துகள் அதைச் செய்ய முடியாது.

டாக்டர் அருண்குமார்: நோய் தடுப்பில் 3 வகை உண்டு. Primary Prevention, Secondary Prevention, Tertiary Prevention இதில் Primary Prevention என்றால் நோய் வரும் முன்பு சில நடவடிக்கைகள் மூலம் நோய் வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது. நீர் அல்லது உணவுத்தொற்று மூலம் பரவும் நோய்களை வேண்டுமானால் சுத்தம் சுகாதாரம் மூலம் தடுக்கலாம். உதாரணம்: காலரா, டைபாய்டு, ஹெபாடிடிஸ் ய, ரோடா வைரஸ் போன்ற நோய்கள்.

காற்று மூலமும் மற்றவரின் மூச்சுக்காற்று அல்லது தும்மல் மூலமும் பரவும் நிமோனியா, பெரியம்மை, தட்டம்மை, ருபெல்லா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து தடுப்பூசி அல்லாமல் வேறு வழியில் பாதுகாப்பு பெறுவது எப்படி என்று நீங்கள் விளக்கி கூறினால் நன்றாக இருக்கும். (வேண்டுமானால் நாம் வேலைக்குப் போகாமல் குழந்தையைப் பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் கண்ணாடி அறையில் ஆயுள் முழுக்க பூட்டி வைத்தால் வேண்டுமானால் இவற்றை தடுப்பூசி இல்லாமல் தடுக்கலாம்)

டாக்டர் புகழேந்தி: இதுவரைக்கும் தடுப்பூசிகள் எந்த நாட்டிலும், எந்தக் காலகட்டதிலும் முற்றுமுதலாக எந்த ஒரு நோயையும் தடுத்ததில்லை. உலக அளவில் அதிகமாகப் போடப்படும் போலியோ, அம்மை, மஞ்சள் காமாலைத் தடுப்பூசிகளிலும் இதுதான் உண்மை நிலவரம்.

டாக்டர் அருண்குமார்: உங்களைப் போன்றவர்கள் ஏன் 50 வருடம் முன்பு போலியோவால் ஆயிரக் கணக்கானவர் பலியாகி கொண்டிருக்கும் போது இந்த அறிய கருத்துக்களை முன்வைக்கவில்லை? மாற்று வழியை முன்வைக்கவில்லை?

டாக்டர் புகழேந்தி: அம்மைநோய்க்கான தடுப்பூசியை 1796 ல் எட்வர்ட் ஜென்னர் என்பவர் கண்டறிந்தார். அந்த ஊசியைத் தன்னுடைய மகனுக்கும், இன்னொருவருக்கும் கொடுத்து, சோதித்துப் பார்த்தார். தன் மகனென்றும் பாராமல் அந்தக் கொள்ளை நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற தியாக உணர்வில் அதைச் செய்தார். அந்த மருந்து, மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மருந்தின் வீரியத்தால் சில வருடங்களில் அவர் மகன் உள்பட இருவருமே இறந்து போனார்கள். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு அம்மைத் தடுப்பூசி போடவில்லை.. ஆரம்பம் மட்டுமில்ல.. அதன்பிறகான வரலாறும் இப்படித்தான் உள்ளது.

டாக்டர் அருண்குமார்: நீங்களும் இப்போது மற்றவர்கள் போல் தவறான தகவல் தர ஆரம்பித்து விட்டீர்களே! எட்வர்ட் ஜென்னர் எட்டு வயது ஜேம்ஸ் பிலிப்ஸ்க்கு 14 மே 1796 அன்று பெரியம்மை தடுப்பூசி போட்டார். ஜேம்ஸ் பிலிப்ஸ் இறந்தது 25 ஏப்ரல் 1853. அதாவது அவரது 65 வயதில். ஜென்னர் மகன் 21 வயதில் டிபி நோயால் பலியானார். பார்க்க, https://en.wikipedia.org/wiki/Edward_Jenner மற்றும் https://en.wikipedia.org/ wiki/James_Phipps

டாக்டர் புகழேந்தி: 1989 ம் ஆண்டில் அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஊசி போட்ட பிறகு C.D.C ( Centre for Desease Control ) எனப்படும் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பு நடத்திய ஆய்வில் 98 சதம் குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது. இது, ஊசி போட்டதற்கு முன்பு இருந்த சதவிகிதத்தை விட மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இதே நிலைதான். அம்மைத் தடுப்பூசியால் அந்த நோய் வருவதைத் தடுக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அது மூட்டுவலி, வலிப்பு போன்ற வேறு சில நோய்களையும் தூண்டிவிடுகிறது என்ற தகவல் இன்னும் அதிர்ச்சியானது.

டாக்டர் அருண்குமார்: அமெரிக்காவில் தட்டம்மை தடுப்பூசி லைசென்ஸ் கொடுக்கப்பட்ட ஆண்டு 1963. அதற்கு முன்னர் ஆண்டுக்கு ஐந்து இலட்சம் பேருக்கு தட்டம்மை நோயும் 500 பேர் உயிரிழப்பும் இருந்தது. தட்டம்மைத் தடுப்பூசி ஆரம்பித்த 5 வருடங்களில் 95 சதவீதம் நோயின் தாக்கம் குறைந்தது. இதனால் தான் தட்டமையை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையே ஏற்பட்டது. தடுப்பூசி ஆரம்பித்து 5 வருடங்களில் 95 சதவீதம் ஒரு நோய் வருவது குறைகிறது என்றால் அதற்கு காரணம் தடுப்பூசியா? பில்லி சூனியமா? கடவுள் அருளா?

1989 ல் மறுபடியும் தட்டம்மை சற்று, தலைதூக்கியது. பல இறப்புகளும் நடந்தன. ஆராய்ந்து பார்த்ததில் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவதில்லை என்று தெரியவந்தது. அந்த வருடங்களில் அமெரிக்காவில் 123 பேர் தட்டம்மை நோய்க்கு பலியாகினர். அதில் 90 சதவீதம் தடுப்பூசி போடாத வர்கள். மறுபடி 1997 இல் தட்டம்மைத் தடுப்பூசி 90 சதவீதம் மக்களுக்கு மேல் செலுத்தப்பட்டது. பிறகு வருடத்திற்கு வெறும் 50 நோயாளிகள் என்ற அளவிலேயே தட்டம்மை இருந்தது.

ரொம்ப நாள் கழித்து மறுபடி 2014 இல் 600 பேருக்கு மேல் தட்டம்மை தாக்கியது. அதற்குக் காரணம் யார் என்று படிக்கும் அன்பர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தை படிக்கவும். https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/meas.html

டாக்டர் புகழேந்தி: இங்கிலாந்தில் வருடம் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப் படுகின்றனர். இதில், 10 ஆயிரம் பேர் அம்மைத்தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதை நான் சொல்லவில்லை, ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ சொல்கிறது.

டாக்டர் அருண்குமார்: கட்டுக்கதை. இதற்கு ஆதாரங்கள் தரவும்.

டாக்டர் புகழேந்தி: உடலுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிரான புரதத்தைத் தூண்டி விடுவதற்காக, அதே கிருமியை அதன் நோய் தாக்கும் திறனைக் குறைத்து உடம்புக்குள் செலுத்துவது தான் அம்மைத்தடுப்பூசி. உடலுக்குள் செலுத்தப்படும் அந்தக் கிருமியை எல்லோருடைய உடலும் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளின் சிறுவர்கள் சத்து குறைப்பாட்டுடன்தான் இருக்கிறார்கள். அவர்களின் உடம்பு இந்தத் தடுப்பூசியின் கிருமிகளைத் தாங்கும் சக்தி படைத்ததாக இருப்பதில்லை. அத்தகைய சூழலில்தான் , தடுப்பூசி போடப்பட்ட நோக்கத்தின் எதிர்திசையில் அம்மை நோயும், வேறு நோய்களும் வருகின்றன.

டாக்டர் அருண்குமார்: நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பவர்களுக்குத் தான் இந்தத் தடுப்பூசியே தேவை. நீங்கள் கூறுவது எயிட்ஸ் அல்லது Primary Immuno Deficiency எனப்படும் நோய்களில். இந்த நோய்களில் நோய் எதிர்ப்புச் சக்தி என்று ஒன்றே உடலில் இருக்காது. அப்போது தான் live Vaccines ஒத்துகொள்ளாது.

சத்துப் பற்றாக்குறையினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி முழுப்பாதுகாப்பு தராமல் போகலாம். ஆனால் அதுவும் இல்லை என்றால் அவர்கள் அந்த நோய்க்கிருமியை எதிர்கொள்ளும்போது அவர்கள் கதை காலி. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் புகழேந்தி: அதேபோல மத்திய மற்றும் தமிழக அரசுகளால் மஞ்சள் காமாலைத் தடுப்பூசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நோய் 100 பேரைத் தாக்குகிறது என்றால், அதில் 95 பேருக்கு நோய் தாக்கியிருப்பது உடனடியாகத் தெரிந்துவிடுகிறது. மீதி 5 பேருக்கு மட்டுமே தாமதமான அறிகுறிகள் தென்படுகிறது. அந்த 95 பேரிலும் 94 பேர், சராசரியான உணவுக் கட்டுப்பாடுகள் மூலமாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். மீதமுள்ள ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இறப்பு ஏற்படுகிறது.

டாக்டர் அருண்குமார்: ‘ஹெபாடிடிஸ் பி’ உணவுக் கட்டுபாட்டால் சரி ஆகிவிடுமா!!!

1 சதவீதம் இறப்பு என்பது வருடத்திற்கு ஆறு இலட்சத்து எண்பதாயிரம் இறப்புகள். இதைத் தடுக்க தடுப்பூசி போடுவது குற்றமா? http://www.who.int/mediacentre/factsheets/fs204/en/

‘ஹெபாடிடிஸ் பி’ பெரியவர்களைத் தாக்கும்போது நீங்கள் கூறுவது பொருந்தலாம். ஆனால், அதே கிருமி குழந்தைகளைத் தாக்கினால் 90 சதவீதம் குழந்தைகளுக்கு Chronic இன்பெக்ஷன் வருகிறது. ஈரல் பாதிப்பும், ஈரல் புற்றுநோயும் வருகிறது. இதனாலேயே பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.

டாக்டர் புகழேந்தி: அரசே, இது ஒரு ஆட்கொல்லி நோய் என்ற தோற்றம் உருவாகும் வகையில் கோடிக் கணக்கான ரூபாய் நிதியை வாரி இறைக்கிறது. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலைத் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற சட்டம் 1997-ல் நீக்கப்பட்டுவிட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மஞ்சள் காமாலை இருந்தால் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு அந்தத் தடுப்பூசி போடவேண்டும் என்பதாக அது மாற்றியமைக்கப்பட்டது. தேவைக்கதிக மான உற்பத்தி செய்திருந்த மருந்துகளை என்ன செய்வது எனத் தெரியாமல், அந்நாட்டு மருந்துக் கம்பெனிகள் திணறி நின்ற சமயத்தில்தான், பில்கேட்ஸின் கரிசனம் இந்தியாவின் மீது திரும்பியது. ஆந்திர மாநிலத்தின் 4.5 இலட்சம் குழந்தைகளுக்கு, பில்கேட்ஸ் தனது ஃபவுண்டேஷன் மூலமாக மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டார். அதற்கான மருந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

உண்மையில் மஞ்சள் காமாலைக்கு அமெரிக்காவை விட தரமான, விலை குறைந்த மருந்து இந்தியாவிலேயே கிடைக்கிறது. மஞ்சள் காமாலை பற்றி இந்த அளவு பூதாகாரப்படுத்தி, ஏன் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த வேண்டும்.? அம்மைத் தடுப்பூசி போலவே மஞ்சள் காமாலைத் தடுப்பூசியையும் எல்லோருடைய உடல்நிலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படித் தேவையில்லாமல் கொடுக்கப் படுவதால் வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 13 வகையான நோய்கள் வருகிறது என்கிறது 1997-ல் அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

முக்கியமாக குறைப்பிரசவத்தில் பிறக்கிற, சத்து மற்றும் எடைக் குறைவால் பாதிக்கப்பட்ட, ரத்த சோகை தாக்கிய, அதிக சளித்தொல்லை இருக்கிற குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலைத் தடுப்பூசி போடப்பட்டால்.. அது எதிரான விளைவுகளையே அதிகம் ஏற்ப்படுத்தும். ஆனால் நமது அரசோ, மஞ்சள் காமாலைத் தடுப்பூசியை ஏதோ காம்ப்ளான் கொடுப்பதுபோல எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக கருவுற்ற அனைத்துப் பெண்களுக்கும் இலவச மஞ்சள் காமாலை சோதனையைச் செய்யலாம். அதில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு மட்டுமே தடுப்பூசி போடலாம்.

டாக்டர் அருண்குமார்: 1 .அமெரிக்காவில் 46 மாகாணங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஹெபாடிடிஸ் பி தடுப்பூசி போடுவது கட்டாயம். நீங்கள் கூறுவது தவறான தகவல். http://vaccines.procon.org/view.resource.php

2. மேற்கூறிய எந்தப் பக்க விளைவுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை.

i. World Health Organization. Expanded programme on immunization. Lack of evidence that hepatitis B vaccine causes multiple sclerosis. Weekly Epidemiological Record 72:149-152, 1997.

ii. National Multiple Sclerosis Society. Hepatitis B vaccine and multiple sclerosis. Press Release, Aug 21, 1998, reissued Jan 22, 1999.

iii. Shaw FE and others. Postmarketing surveillance for neurologic adverse events reported after hepatitis B vaccination. American Journal of Epidemiology 127:337-352, 1988

iv. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15247605

v. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16310295

3. ‘ஹெபாடிடிஸ் பி’ தகாத உடலுறவு கொள்ளும் பெரியவர்களையும், போதை மருந்து ஊசி மூலம் செலுத்துபவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் மட்டுமே தாக்கும் என்பது தவறு. தடுப்பூசிக்கு முன் வருடத்திற்கு 10,000 குழந்தைகளுக்கு மேல் தாக்கிவந்தது. மேலும், பெரியவராகும் போது எப்போது வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் உள்ளதால் குழந்தையிலேயே கொடுப்பதே சிறந்தது என்று எண்ணியே பிறந்தவுடன் கொடுக்கப்பட்டு வருகிறது.

West DJ, Margolis HS. Prevention of hepatitis B virus infection in the United States: A pediatric perspective. Pediatric Infectious Disease Journal 11:866-874, 1992.

இதனாலேயே ‘ஹெபாடிடிஸ் பி’ அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.

டாக்டர் புகழேந்தி: போலியோ தடுப்பு மருந்துக்கும் இதே போன்ற அதிர்ச்சி வரலாறு இருக்கிறது. இதில் ஊசி, சொட்டு மருந்து என இரு வகை உள்ளது. ஊசியில் உயிரற்ற கிருமிகள் இருக்கும். சொட்டு மருந்தில் உயிரோடு உள்ள கிருமிகள் இருக்கும். உயிரற்ற கிருமிகளைக் கொண்ட ஊசியால் பெரும்பாலும் பிரச்னை வருவதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இது தான் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் நம் ஊரில் அரசு முழுக்க முழுக்க சொட்டு மருந்தை மட்டுமே வழங்குகிறது. இது ஆபத்தானது. சம்பந்தப்பட்ட உடம்பு அந்த மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது போலியோவை ஏற்படுத்தும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க். “அமெரிக்காவில் 1961 க்குப் பிறகு ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் போலியோ சொட்டு மருந்துதான் காரணம்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் வாக்குமூலம் அளித்திருப்பதே இதற்கு சாட்சி.

டாக்டர் அருண்குமார்: நீங்கள் பேசுவது பொதுமக்கள் பேசுவது போல் உள்ளது. போலியோ சொட்டு மருந்து என்பது live attenuated வைரஸ் உள்ள தடுப்பு மருந்து. அதாவது படிப்படியாக பலம் இழக்க வைக்கப்பட்ட வைரஸ் கொண்ட தடுப்பூசி. இதே வகை தான் MMR, BCG முதலியன. இதனால் நோய் எல்லாம் வருவதில்லை. இந்திய அரசாங்கம் ஏன் போலியோ ஊசியை விட்டு சொட்டு மருந்தைத் தேர்ந்தெடுத்தது என்று அறிய ‘Park social and Preventive Medicine’ மருத்துவ புத்தகத்தை படித்தால் தெரிந்து விடும்.

போலியோ சொட்டு மருந்து Herd Immunity கொடுக்கும். போலியோ ஊசி அதைக் கொடுக்காது. இதுதான் காரணம். மேலும், போலியோ சொட்டு மருந்தில் உள்ள வைரசால் போலியோ நோய் ஏற்படாது. அதன் வீரியம் குறைவு. அப்படிப் பார்த்தால், சொட்டு மருந்து எடுக்கும் கால் வாசி பேருக்காவது போலியோ ஏற்பட வேண்டும் அல்லவா? அப்படி நடப்பதில்லை. ஏன்? சிந்தியுங்கள் மக்களே. Vaccine Derived போலியோ வைரஸ் - இதைத் தான் நீங்கள் குறிப்பிட வருகிறீர்கள்.

இது என்னவென்றால், Wild வகை எனப்படும் வீரியம் மிக்க இயற்கை போலியோ வைரஸ் குறைந்த பிறகு, சில சமயம் VDPV எனப்படும் Mutated வைரஸ் அரிதாக போலியோ நோய் பரப்பும். இதையும் முற்றிலும் ஒழிக்கவே சென்ற ஆண்டு முதல் படிப்படியாக இந்திய அரசு போலியோ சொட்டு மருந்தில் இருந்து போலியோத் தடுப்பூசிக்கு மாறி வருகிறது.

2018 ல் முற்றிலும் போலியோ ஊசி மட்டுமே போடப்படும். இத்தனை கவனமாக அரசு செயல் பட்டு வருகிறது. சரியாகப் புரியாமல், சகட்டு மேனிக்கு அபாண்ட பழி போடுவது அபத்தமாக உள்ளது. (இவ்வளவு அறிவியல் விளக்கம் குடுக்க கூட பயமாக இருக்கிறது. சில வாசகங்களை தப்பாக புரிந்து கொண்டு சிலர் பட்டிமன்றம் போல் ஒற்றை வரியை வைத்து கொண்டு வாக்குவாதம் நடத்துவார்கள்.)

டாக்டர் புகழேந்தி: 1995 ம் வருடம் அமெரிக்க அழகிப்பட்டம் வென்றவர் Heather Whitestone. சில ஆண்டுகளில் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு மருத்துவர்களால் சொல்லப்பட்ட காரணம் DPT எனப்படும் முத்தடுப்பூசி.

டாக்டர் அருண்குமார்: சுத்தப் பொய். அவர் காது கேளாமைக்குக் காரணம் ஒன்றரை வயதில் அவருக்கு ஏற்பட்ட Hemophilus Influenza எனப்படும் கொடிய பாக்டீரியா தாக்கம். இதை அவரே பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார். இதை உங்கள் தடுப்பூசி எதிர்ப்புக் கும்பல் தான் சகட்டு மேனிக்குத் திரித்து நெட்டில் உலாவ விடுகிறது. இதை நீங்களும் நம்பி விவாதங்களில் முன்வைக்கிறீர்கள்.

http://premierespeakers.com/christian/heather_whitestone/bio

http://www.nytimes.com/…/going-home-with-heather-whitestone…

உண்மையில் அவருக்கு இப்போது உள்ளது போல் 1970 இல் ழiை தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவரின் கேட்கும் திறனை காப்பாற்றி இருக்கலாம்.

டாக்டர் புகழேந்தி: உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி , அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த கறுப்பின மற்றும் இலத்தின் அமெரிக்கக் குழந்தைகள் 1500 பேருக்கு 1989 க் கும், 91 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அம்மை நோய்த்தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே ஊசி, இதே காலகட்டத்தில் பல ஆப்பிரிக்க நாட்டுக் குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கே தெரியாமல் நடத்தப்பட்டது. அதுவரைக்கும் அம்மைத் தாக்குதலையே கண்டிராத அவர்கள், அந்த ஊசியின் விளைவால் பலவிதமான உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள். பலர் இறந்தும் போனார்கள். பலத்த எதிர்ப்புக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்தை சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டது.

டாக்டர் அருண்குமார்: இது ஒரு தவறான உதாரணம். விதிமுறைகளை மீறி, தவறாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், ஒரு Experimental மருந்தைப் பயன்படுத்தி, சில பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்காக அனைத்து Standard தடுப்பூசிகளையும் குறை கூறுவது முட்டாள்தனம்.

டாக்டர் புகழேந்தி: போலியோ சொட்டு மருந்தானது, குறிப்பிட்ட ஒரு வைரஸை குரங்கின் சிறுநீரகத்தில் வைத்து வளர்த்து எடுத்து, பின்னர் நோய்த் தடுப்பு மருந்தாக உருவாக்கப்படுகிறது. குரங்குகள் உரிய சோதனைகளுக்கு பிறகு தான் தேர்தெடுக்கப்படுகின்றன என்றாலும்., 1950 களில், இந்த மருந்துத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட குரங்குளை சிமியன் வைரஸ் 40 ( SV 40 ) என்ற வைரஸ் கிருமி பாதித்திருந்தது. இந்த வைரஸ், பல வருடங்கள் கழித்து மூளை, ஈரல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இதனால் இந்த மருந்து செலுத்தப் பட்டவர்கள் பெரியவர்களான போது அவர்களில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

டாக்டர் அருண்குமார்: இது துரதிர்ஷ்டவசமானது. இது ஒரு விபத்து. நடந்தது 1950 ல். இது திருத்திக் கொள்ளப்பட்டு, நல்ல சொட்டு மருந்து வந்து, வருடத்திற்கு 60,000 பேருக்கு அமெரிக்காவில் போலியோ என்ற நிலை மாறி, போலியோ தடுப்பு மருந்து ஆரம்பித்த 6 வருடங்களில் வெறும் 61 பாதிப்புகள் வருடத்திற்கு என்று தலைகீழாக மாறியது - தடுக்கப்பட்டது தடுப்பூசியால் தான்.

https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/polio.html சிறு சிறு விபத்துக்களுக்காக தடுப்பூசி எல்லாம் வேண்டாம் என்பது தவறு. அறிவியலைப் பின்னோக்கி ஓட செய்யும் நடவடிக்கை.

இப்படித் தான் மனிதன் தோன்றியதில் இருந்து நூறு வருடங்களுக்கு முன்னால் வரை இருந்தான். இயற்கையோடு ஒன்றி. ஆனால் அவனது சராசரி ஆயுள் காலம் அப்போது வெறும் 23 வயது!!! கடந்த நூறு வருடங்களில் நவீன மருத்துவம், தடுப்பூசி, ஆண்டிபயாடிக் போன்றவை வந்த பிறகு தான் மனிதனின் சராசரி ஆயுள் காலம் கூடியது. இப்போது 67 ஆக இருக்கிறது. முன்பே சொன்னது போல சுகாதாரம் முக்கியம் தான். ஆனால் நீர் அல்லது உணவுத் தொற்று மூலம் பரவும் நோய்களை வேண்டுமானால் சுத்தம் சுகாதாரம் மூலம் தடுக்கலாம்.

தடுப்பூசி போடாமல் விட்டு, சமீபத்தில் கேராளாவில் வந்தது போன்று டிப்தீரியா போன்ற கொடிய நோய்கள் மீண்டும் தலைதூக்கி உங்கள் பிஞ்சுக் குழந்தைகளைத் தாக்கினால், இந்த வாட்சாப் மக்களும் போராட்ட வீரர்களும் வந்து உங்களுக்குத் துணை நிற்கப் போவதில்லை. நீங்கள் தான் உங்களை நொந்து கொள்ள வேண்டும். 

Pin It