ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேடிய போதிலும், மூளை விஞ்ஞானிகளால் பெண்கள் மற்றும் ஆண்களின் மூளைகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை
விஞ்ஞானி சாமுவேல் ஜார்ஜ் மோர்டன் (Samuel George Morton) மனித மண்டை ஓடுகளை விதைகளாலும், ஈய குண்டுகளாலும், நிரப்பி ஆய்வு செய்த ஏறக்குறைய 19 ஆம் நூற்றாண்டிலிருந்து மனித மூளையில் பாலியல் வேறுபாடுகளை மக்கள் தேடியுள்ளனர். குஸ்டாவ் லே பான் (Gustave Le Bon) ஆண்களின் மூளை பொதுவாக பெண்களை விட பெரிதாக இருப்பதைக் கண்டறிந்தார்.
இது அலெக்சாண்டர் பெயின்ஸ் (Alexander Baines) மற்றும் ஜார்ஜ் ரோமானஸ் (George Romanes) ஆகியோரை, இந்த அளவு வேறுபாடு ஆண்களை புத்திசாலிகளாகச் சித்தரிக்கின்றது என்று வாதிடத் தூண்டியது. ஆனால் ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill), இந்த அளவுகோலின் படி பார்த்தால், யானைகள் மற்றும் திமிங்கலங்கள் மக்களை விட புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனவே ஆய்வுகளின் கவனம், மூளை பகுதிகளின் ஒப்பீட்டு அளவுகளுக்குத் திரும்பியது. ஃபிரெனாலஜிஸ்டுகள் (Phrenologists - மூளை அமைப்பின் ஏற்ற, இறக்கங்களுக்கும் மனித இயல்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்னும் கொள்கை - தற்போது நவீன அறிவியல் உலகில் இது போலி அறிவியலாக கருதப்படுகிறது - ஆ-ர்) கண்களுக்கு மேலே உள்ள பெருமூளை பகுதியானது,
ஃப்ரண்டல் லோப் (Frontal lobe) என்று அழைக்கப்படுகிறது; இது புத்திசாலித் தனத்திற்கு மிகவும் முக்கியமானது; ஆண்களிடம் ஒப்புமை அளவில் இது பெரியதாக உள்ளது.
அதே சமயம் ஃப்ரண்டல் லோப்பின் பின்னால் உள்ள பாரிட்டல் லோப் (Parietal lobe) பெண்களிடம் ஒப்புமை அளவில் பெரியது என்றனர். பின்னர், நரம்பியல் உடற்கூறியல் (Neuroanatomists) ஆய்வாளர்கள் இதற்கு மாறாக பேரியட்டல் லோப், நுண்ணறிவுக்கு மிகவும் முக்கியமானது என்றும் ஆண்களுக்கு அது பெரிய அளவில் இருப்பதாகவும் வாதிட்டனர்.
20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில், ஆராய்ச்சியாளர்கள் மூளையின் சிறிய உட்பிரிவுகளில் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோவான தனித்த பண்புகளைத் தேட முற்பட்டனர். ஒரு நடத்தை சார்ந்த நரம்பியலாளர் (behavioural neruobiologist) மற்றும் எழுத்தாளர் என்ற முறையில், இந்த தேடல் வழி தவறிச் செல்வதாக நான் கருதுகிறேன்; ஏனெனில் மனித மூளை பன் வகைத்தன்மை கொண்ட ஒரு மாறுபட்ட பொருளாகும்.
உடற்கூறியல் மூளை வேறுபாடுகள்
இனப்பெருக்க உடலியல் மற்றும் நடத்தையை ஒழுங்குபடுத்தும், ஒரு சிறிய கட்டமைப்பான ஹைபோதாலமஸில் மிகப்பெரிய மற்றும் மிகவும் நிலையான மூளையின் பாலின வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. ஆண் கொறித் துண்ணிகளிலும் (rodents) மற்றும் மனிதர்களிலும் குறைந்தது ஒரு ஹைபோதாலமிக் துணைப் பிரிவாவது பெரியதாக இருக்கிறது.
ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் குறிக்கோளானது, இனப் பெருக்க உடலியலிலன்றி, சிந்தனையில் பாலியல் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் மூளையின் காரணங்களை அடையாளம் காண்பது. எனவே அனைவரின் கவனமும் நுண்ணறிவிற்கு காரணமாக இருக்கும் மனித பெருமூளையை நோக்கி திரும்பியது.
பெருமூளைக்குள், இரண்டு பெருமூளை அரைக் கோளங்களுக்கிடையில் சமிக்ஞைகளைக் கொண்டு செல்லும் நரம்பு இழைகளின் அடர்த்தியான தொகுதியான கார்பஸ் கால்சோமை (corpus callosum) விட இனம் மற்றும் பாலின வேறுபாடு ஆராய்ச்சி இரண்டிலும் எந்தப் பகுதியும் அதிக கவனத்தைப் பெறவில்லை.
20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில், சில ஆராய்ச்சியாளர்கள் முழு கார்பஸ் கால்சோமும் பெண்களில் சராசரியாக ஒப்புமை அளவில் பெரியதாக இருக்கக் கண்டனர். மற்றவர்கள் அதில் சில பகுதிகள் மட்டுமே பெரியவை என்று கண்டறிந்தனர். இந்த வேறுபாடு பெரும்பாலோனோரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அறிவாற்றல் ரீதியாக பாலியல் வேறுபாடுகள் உள்ளன என்பதை பரிந்துரைத்தது.
ஆனால் சிறிய அளவிலான மூளைகளில், அதன் உரிமையாளரின் பாலினத்தைப் பொருத்தல்லாமல், ஒப்புமை அளவில் பெரிய கார்பஸ் கால்சோம் உள்ளது. மேலும் இந்த கட்டமைப்பின் அளவு வேறுபாடுகள் குறித்த ஆய்வுகள் முரணாக உள்ளன. பிற பெருமூளை அளவுகளும் இதே போல்தான் இருக்கின்றன. அதனால்தான் அறிவாற்றலில் பாலியல் வேறுபாடுகளை மூளை உடற்கூறியல் மூலம் விளக்க முயற்சிப்பது சிறிதும் வெற்றியடையவில்லை.
பெண் மற்றும் ஆணின் பண்புகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகின்றன
ஒரு மூளையின் பகுதி, சராசரியாக ஒரு பாலின வேறுபாட்டைக் காட்டும்போது கூட, பொதுவாக ஆண் மற்றும் பெண் பிரிவினங்களுக்கிடையே கணிசமான அளவு ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதாக உள்ளது. ஒரு பண்பின் அளவீடு ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகும் பகுதியில் இருந்தால், ஒருவரின் பாலினத்தை உறுதியுடன் கணிக்க முடியாது.
உதாரணமாக, உயரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் 5 அடி 7 அங்குலம், இது எனது பாலினத்தை உங்களுக்குச் சொல்கிறதா? மேலும் மூளையின் பகுதிகள் பொதுவாக, உயரம் சொல்வதைவிட மிகச் சிறிய சராசரி பாலின வேறுபாடுகளையே காட்டுகின்றன.
நரம்பியல் விஞ்ஞானி டாப்னா ஜோயல் (Daphna Joel) மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 1,400க்கும் மேற்பட்ட மூளைகளின் எம்.ஆர்.ஐ. (MRI) களை ஆய்வு செய்தனர். மிகப்பெரிய சராசரி பாலின வேறுபாடுகளுடைய 10 மனித மூளைப் பகுதிகளை அளவிட்டனர்.
ஒவ்வொரு நபரின் ஒவ்வொரு அளவையும் வகைப்பட்டியலின் பெண் பகுதியை நோக்கி, ஆண் பகுதியை நோக்கி அல்லது இடைநிலை நோக்கி இருக்கிறதா என்று அவர்கள் மதிப்பீடு செய்தனர். 3% முதல் 6% மக்கள் மட்டுமே அனைத்து கட்டமைப்புகளுக்கும் தொடர்ந்து “பெண்” அல்லது “ஆண்” என்று வகைப்படுத்த முடிந்ததை அவர்கள் கண்டறிந்தனர். மற்ற அனைத்தும் இரட்டைத் தன்மையதாகவே இருந்தன.
பெற்றோர் வழியிலான ஹார்மோன்கள்
மூளையில் பாலின வேறுபாடுகள் நடந்தால், அவை எதனால் ஏற்படுகின்றன? ஒரு கர்ப்பமடைந்த கொறித் துண்ணியில் (Rodent) டெஸ்டோஸ்டிரோன் (Testosterone - பொதுவாக கரு விந்து சுரப்பிகளில் சுரப்பது) செலுத்தப்படுப் போது, அதன் பெண் சந்ததியினருக்கு அவை வளரும்போது ஆண் பாலியல் நடத்தைகள் உருவாகக் காரணமாகிறது என்பதை 1959 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு முதலில் நிரூபித்தது.
பெற்றோர் ரீதியான டெஸ்டோஸ்டிரோன் மூளையை நிரந்தரமாக "ஒழுங்கமைக்கிறது" என்று ஆய்வாளர்கள் ஊகித்தனர். மனிதரல்லாத உயிரினங்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்ட உண்மையாக இருந்த போதிலும், இவை மிகவும் சரியானது என பல பிற்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தின.
ஆராய்ச்சியாளர்கள் மனித பெற்றோர் ரீதியான ஹார்மோன் அளவை தார்மீக ரீதியில் மாற்ற முடியாதென்பதால், அவர்கள் “தற்செயலான சோதனைகளை” சார்ந்திருக்கின்றனர்; இதில் பெற்றோர் ரீதியான ஹார்மோன் அளவுகள் அல்லது அவற்றுக்கான எதிர்வினைகள், அதாவது பால் கலப்பு ஏற்பட்ட மனிதர்கள் போன்று, அசாதாரணமானவை.
ஆனால் ஹார்மோன் மற்றும் சுற்றுச் சூழல் விளைவுகள் இந்த ஆய்வுகளில் பின்னிப் பிணைந்துள்ளன. மேலும் மூளையின் பாலின வேறுபாடுகளை கண்டறிவது உறுதியற்றவை; எனவே மனிதர்களிடம் இதைக் கண்டறிவதில் அறிவியலாளர்களுக்கு இன்னும் தெளிவான முடிவிற்கு வர இயலாமல் போகின்றன.
மரபணுக்கள் சில மூளை பாலின வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன
மகப்பேறுக்கு முற்பட்ட ஹார்மோன்கள் மனிதர்களல்லாத உயிரினங்களில், பெரும்பாலான மூளை பாலின வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் இதற்கான காரணமாக மரபணுவே நேரடியாக உள்ளது.
இந்த உண்மை ஒரு ஜீப்ரா ஃபிஞ்சினால் (zebra finch - மத்திய ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு பறவை ஆ-ர்) அதன் ஒரு விசித்திரமான ஒழுங்கின்மையால் வியத்தகு முறையில் காட்டப்பட்டது. அது அதன் வலது பக்கத்தில் ஆண் தன்மையுடனும், இடது புறத்தில் பெண்தன்மையுடனும் இருந்தது.
அதன் வலது மற்றும் இடது பகுதிகள் ஒரே வகையான ஹார்மோன் சூழ்நிலையை கொண்டிருப்பினும், பறவையின் பாடல் குரலுக்கு தொடர்பான மூளை அமைப்பு வலதுபுறத்தில் மட்டுமே (வழக்கமான ஆண்களைப் போல) பெரிதான அளவில் இருந்தது. இதனால், அதன் மூளையின் சமச்சீரற்ற தன்மை ஹார்மோன்களால் அல்ல, மாறாக நேரடியாக மரபணுக்களால் ஏற்பட்டது என அறியப்பட்டது. அதற்குப் பின்னர், மரபணுக்களின் நேரடியான விளைவுகளாக மூளை பாலின வேறுபாடுகள் ஏற்படுவதை எலிகளிலும் கண்டறியப்பட்டன.
கற்றல் மூளையை மாற்றுகிறது
மனித மூளையின் பாலின வேறுபாடுகள் இயல்பானவை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இந்த அனுமானம் ஒரு தவறான வழிகாட்டுதலே.
மனிதர்கள் குழந்தைப் பருவத்தில் விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். மேலும் கற்றலைத் தொடர்கிறார்கள். ஆனால் பெரியவர்களாகும் போது அது மெதுவாகத்தான் நடக்கிறது. விவரங்கள் அல்லது உரையாடல்களை நினைவில் கொள்வதிலிருந்து, இசை அல்லது தடகள திறன்களை மேம்படுத்துவது வரை, கற்றலானது சினாப்சஸ் (synapses) எனப்படும் நரம்பு செல்களுக்கு இடையிலான தொடர்புகளை மாற்றுகிறது.
இந்த மாற்றங்கள் ஏராளமானவையாக நடக்கின்றன. மற்றும் அடிக்கடியும் மாறுகின்றன. ஆனால் இந்த மாற்றத்தின் அளவு பொதுவாக மிகவும் நுண்ணியவை - மனித முடியின் அகலத்தின் நூறில் ஒரு பங்கிற்கும் குறைவானது.
எவ்வாறாயினும், ஒரு அசாதாரண தொழிலைப் பற்றிய ஆய்வுகள், கற்றுக் கொள்வது என்பது வயதடைந்தவர்களின் மூளையை வியத்தகு முறையில் மாற்றக் கூடும் என்று காட்டுகின்றன. லண்டன் டாக்ஸி ஓட்டுநர்களின் “அறிவு” - அவர்களது நகரத்தின் சிக்கலான வழிகள், சாலைகள் மற்றும் அடையாளங்களை மனப்பாடம் செய்ய வேண்டுவதாக இருக்கிறது.
இந்த கற்றல் ஒரு ஓட்டுனரின் ஹிப்போகாம்பஸை (hippo campus - ஒவ்வொரு பெருமூளைப் புறணியின் - cerebral cortex - டெம்பொரல் லோபில் ஆழமாக பதிக்கப்பட்ட ஒரு மூளை அமைப்பு ஆகும்) அமைப்பு ரீதியாக மாற்றியமைத்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது வழிகாட்டுவதற்கான முக்கியமான மூளைப் பகுதி. லண்டன் டாக்ஸி ஓட்டுநர்களின் பின்புற ஹிப்போகாம்பஸ், ஓட்டுனர் அல்லாதவர்களைவிட சில மில்லி மீட்டர்கள் அளவு பெரியதாக - அதாவது சினாப்சஸின் (synapses) அளவை விட 1,000 மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
எனவே எந்தவொரு மனித மூளையின் பாலின வேறுபாடுகளும் இயல்பானவை என்று கருதுவது யதார்த்தமானதல்ல. அவை கற்றலின் விளைவாகவும் இருக்கலாம். மக்கள் அடிப்படையில் பாலின கலாச்சாரத்தில் வாழ்கின்றனர். இதில் பெற்றோர், கல்வி, எதிர்பார்ப்புகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவை பாலினத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. பிறப்பு முதல் முதிர் வயது வரை, இது தவிர்க்க முடியாமல் மூளையை மாற்றுகிறது.
இறுதியாக சொல்ல வேண்டுமென்றால், மூளை கட்டமைப்புகளில் எந்தவொரு பாலின வேறுபாடுகளும், மரபணுக்கள், ஹார்மோன்கள் மற்றும் கற்றல் ஆகியவற்றின் சிக்கலான மற்றும் ஊடாடும் கலவையின் காரணமாக மட்டுமே இருக்கமுடியும்.
அரி பெர்கோவிட்ஸ் உயிரியல் தலைமை பேராசிரியர்; இயக்குனர், செல்லுலார் & நடத்தை நரம்பியல் பட்டதாரி திட்டம், ஓக்லஹோமா பல்கலைக்கழகம்
தமிழில்: இரா.ஆறுமுகம்
(கட்டுரை லிங்க்: https://theconversation.com/brain-scientists-havent-been-able-to-find-major-differences-between-womens-and-mens-brains-despite-over-a-century-of-searching-143516)
- இரா.ஆறுமுகம்