தேசியக் கல்வி கொள்கை வரைவு அறிக்கை (2019) ஒன்றிய அரசின் அதிகாரக் குவியலை மேலும் குவிப்பதற்கான முயற்சியே என்பதை அதன் 484 பக்கங்களிலும் வெளிப்படையாகக் காண முடிகிறது. தற்போது உள்ள இந்தியக் கல்விச் சூழலையும் கல்வி அடிப்படைகளையும் சமூக நீதியையும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் மாநிலங்களின் உரிமைகளையும் அறவே புறந்தள்ளிய ஆவணமாக உள்ளது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்விக் குழுக்களில் பெரும்பாலும் கல்வியாளர்களே தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இடம் பெற்றிருந்தனர். கஸ்தூரி ரங்கன் ஒரு அறிவியலாளராக இருந்தாலும், முழுக்க முழுக்க உயர் சாதித் தன்மையை வெளிப்படுத்தும் கையாளாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளார்.
தொடக்க நிலை, இடைநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள் குறித்து இந்தியா முழுமைக்கும் ஓர் ஒப்பீடு செய்து ஒரே கல்விக் கொள்கையைத் திணிப்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்துவிடும். இந்தியாவினுடைய முதல் பிரதமர் சவகர்லால் நேரு இந்த அடிப்படையை உணர்ந்து, “வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா” என்று குறிப்பிட்டார். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் கல்வியாளர்களும் துறை வல்லுநர்களும் இடம் பெற்றிருந்தனர். சான்றாக, 1952இல் உருவாக்கப்பட்ட இடை நிலை பள்ளிக்கல்வி ஆய்வுக்குழுவின் தலைவராகச் சிறந்த கல்வி வல்லுநராகப் போற்றப்பட்ட ஏ.இலட்சு மணசாமி முதலியார் நியமிக்கப்பட்டார்.
இந்தக் கல்விக் குழு எல்லா நிலைகளிலும் அமைந்த பள்ளிகளை ஆய்ந்து உயர்கல்வித் துறையையும் தொடர்புபடுத்தி இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்குச் சிறந்ததொரு ஆக்கப் பூர்வமான அறிக்கையை அளித்தது. அவ்வறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்களின்படியே 1952இல் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மும்பை மாகாணத்திற்கு அடுத்த நிலையில் இடைநிலைப்பள்ளிகள் சென்னை மாகாணத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக அமைவது-1921இல் அமைந்த நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தில் பள்ளிக்கல்வி மாவட்டந்தோறும் ஊர்கள் தோறும் எடுத்துச் செல்லப்பட்டது.
இடஒதுக்கீடு கொள்கையைக் கடைப் பிடித்ததால் அனைத்துச் சாதியினரும் பள்ளிக்கல்வியைப் பெற்றனர். சான்றாக 2019ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி மராட்டிய மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் முதன்மைப்படுத்தி அதிக நிதி ஒதுக் கீட்டைச் செய்தனர். காமராசர் காலத்தில் பள்ளிக் கல்விப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்தது என்பதை மற்ற மாநிலத்தவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் பிற்படுத் தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இடம் பெற வேண்டும் என்று தொடர்ந்து போராடியது. கல்வியும் சமூக நீதியும் இணையாமல் கல்வி வளர்ச்சியை எல்லாச் சமுதாயத்தினரும் பெற முடியாது என்பதற்கு இந்தி பேசும் மாநிலங்களான உத்தரபிரதேசம் மத்தியப் பிரதேசம், பீகார், ஒரிசா, இராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங் கள் சான்றாக உள்ளன. இது போன்ற சமூக அடித்தளங் களை ஆய்வு செய்யாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை, வேலைவாய்ப்பு, கல்வியில் வழங்கியது போன்று இந்த அறிக்கையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக ஒரு சதி வலையைப் பின்னுகிறது என்பதை நாம் காண முடிகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொண்டுள்ள 22 தேசிய மொழிகளின் உரிமைகளை அவற்றின் பன்முகத் தன்மைகளை ஆய்வு செய்ய இவ்வறிக்கை தவறிவிட்டது. கல்விச் சீர்த்திருத்தம் என்ற சொல் பொரு ளற்றதாகிவிட்டது. ஒன்றிய அரசில் குவிந்து வருகின்ற அதிகாரங்களை மேலும் கல்வித் துறையில் புதுதில்லி யின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகவே இவ்வறிக்கை தனது கருத்துகளை வழங்கியுள்ளது. இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் பல ஆய்வுக் குழுக்கள் கல்விச் சீர்த்திருத்த்தின் உண்மையான கூறுகளை ஆய்ந்து நாட்டிற்குத் தேவையான கருத்துருக் களை ஏற்கெனவே சிறப்பாக வழங்கியுள்ளன.
- ஹன்டர் குழு ஆணையம் (1882)
- பல்கலைக் கழக ஆணையம் (1902)
- கல்கத்தா பல்கலைக் கழக ஆணையம் (1917)
- ஹார்டக்குழு ஆணையம் (1929)
- இந்தியக் கல்விக் குழு (1923)
- சப்ரூ குழு (1934)
- ஆபாத் உட் அறிக்கை (1936-37)
- சார்ஜன்ட் திட்டம் (1944)
இந்திய விடுதலைக்குப் பின்பு டாக்டர் ஏ.எல். முதலியார் தலைமையில், பல கல்வி வல்லுநர்கள் அடங்கிய இடைநிலை கல்வி ஆணையம் (1952) சிறப்பான அறிக்கையை அளித்தது. கோத்தாரிக் குழு ஆணையம் (1964) தேசியக் கல்விக் கொள்கை (1986) அகிய அனைத்துக் கல்வி ஆய்வுக் குழுக்களிலும் சிறந்த கல்வியாளர்களும் கல்வி வல்லுநர்களும் பன்னாட்டுக் கல்வி அமைப்புகளில் பணியாற்றிய அறிஞர்களும் சிறந்த முறையில் கருத்துகளை அளித்துள்ளனர்.
குறிப்பாக 1952இல் அமைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வி ஆணையம் என்று கூறப்பட்டாலும் இதில் இடம்பெற்ற அறிஞர்கள் தொடக்கப் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி பல்கலைக்கழகக் கல்வி வரை உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஆய்ந்து சிறந்த முறையில் ஒரு கல்விக் கொள்கையை அளித்துள்ளனர். இந்தக் கல்விக் குழுவின் ஆய்வு அறிக்கையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பள்ளிக் கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பிட்டு அவற்றைக் களைவதற்கான செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
கல்வி பண்பாட்டோடு ஒட்டிய ஓர் அரிய கருவி என்ற கருத்து எல்லாக் கல்விக் குழுக்களிலும் முதன்மையாக வலியுறுத்தப்பட்டது. பன்முகத்தன்மையும் பன்முகப் பண்பாட்டுக் கூறுகளையும் மொழிக்கூறுகளையும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் அடிப்படையை உணராமல், இக்கல்விக் குழு ஒரு தலைபட்சமாகவும் உயர்சாதி மனப்பான்மையுடனும் செயல்பட்டுள்ளது என் பதை இவ்வறிக்கையின் பல பக்கங்களில் காண முடிகிறது.
குறிப்பாக 1966இல் வழங்கப்பட்ட கோத்தாரிக் குழு அறிக்கையில் இந்தியாவினுடைய பண்பாடு அதன் மதிப்போடு இணைந்த அறிவியல் சார்ந்த கல்வி முறை ஒன்றுதான் இந்தியாவினுடைய வளர்ச்சிக்கும் பாதுகாப் பிற்கும் நலத்திற்கும் அடிப்படையாகவும் கருவியாகவும் அமையும் என்ற கருத்தில் எவ்வித ஐயப்பாடோ தயக்கமோ கிடையாது. இந்தியக் கல்விமுறைக்குத் தீவிர மான மறுகட்டமைப்பும் கிட்டத்தட்ட ஒரு புரட்சியுமே தேவைப்படுகிறது (“There is, of course, one thing(“There is, of course, one thingabout which we feel no doubt or hesitation :education, science based and in coherence withIndian culture and values, can alone provide thefoundation – as also the instruments - for thenation’s progress, security and welfare. Indianeducation needs a drastic reconstruction, almost arevolution (Education and National Development,Report of the Education Commission (1964-66)headed by D.S.Kothari, 1970, p.ix) என்று குறிப்பிட்டது.
தற்போதுள்ள சூழலுக்கு மிகமிகத் தேவையான இந்திய ஒற்றுமையை வலிமைப்படுத்துகிற உயரிய சிந்தனையை 2019ஆம் ஆண்டு கல்வி அறிக்கை முற்றிலுமாகப் புறந்தள்ளியுள்ளது. இந்தியக் கல்வி வளர்ச்சியில் மாநிலங்களுடைய மொழிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக 1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகு பல மாநில மொழிகள் தேசிய மொழிகளாகப் படிப்படியாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டன.
இந்திய மாநிலங்களில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தி லிருந்தே தமிழ்நாடு இந்தி மொழித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. திராவிட இயக்கத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தை பெரியார் தலைமையில் 1938இல் வெடித்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் புரட்சியின் கனல், இன்றும் தமிழக மண்ணில் உள்ளது என்பதை இவ்வறிக்கை கவனத்தில் கொள்ளவே இல்லை. தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து 1965ஆம் ஆண்டு மாணவர்களால் ஒரு மொழிப் புரட்சியே உருவானது. காரணம் இந்தியை மட்டுமே நிர்வாக மொழியாக அறிவித்ததன் விளைவுதான் இப்புரட்சிக்குக் காரணம். இதற்குப் பின்னர் 1967இல் ஆட்சியமைத்த பேரறிஞர் அண்ணா தமிழகச் சட்டமன்றத்தில் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிகள்தான் அனைத்து அரசு அரசு உதவி பெறுகிற பள்ளிகளிலும் தொடரும் என்று அறிவித்தார். மூன்றாம் விருப்பப் பாடமாகக்கூட இந்தி இருக்கக்கூடாது என்று இந்தியை அகற்றினார். இதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்தக் கூறுகளை எல்லாம் முழுமை யாக 2019 கல்வி அறிக்கை புறந்தள்ளியுள்ளது.
மாநிலங்களே தங்கள் கல்விக்கொள்கையை வகுத்துக் கொள்ள ஏதுவாகத்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது, கல்வி மாநிலப் பட்டியலில் இணைக் கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்ட அவையிலும் காங்கிரசுக் கட்சியினருக்குள்ளேயே இந்தியை நிர்வாக மொழியாக ஏற்பதில் பெருத்த கருத்து வேறுபாடு இருந்தது. ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் இந்தி மொழித் திணிப்பு அரங்கேறியது என்று அண்ணல் அம்பேத்கார் சுட்டியுள்ளார். ஆனால் இந்தியாவில் கல்வித் துறையில் ஒன்றிய அரசு தேவையில்லாமல் தலையிடு வதைக் கோத்தாரிக் குழு கண்டித்தது. அதுமட்டுமல்ல.
கல்வி மாநிலப் பட்டியலிலேயே இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. கோத்தாரி அறிக்கையில் இந்தப் பிரச்சினையை மிகக் கவனத்தோடு நாங்கள் ஆய்வு செய்கிறோம். கல்வியைப் பிரித்து ஒரு பகுதியைப் பொதுப் பட்டியலிலும் மற்றொன்றை மாநிலப் பட்டியலிலும் சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. கல்வி எந்தச் சூழ்நிலையிலும் ஒட்டு மொத்தமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். எங்களுடன் பணி புரிந்த சில உறுப்பி னர்களுடைய (2 உறுப்பினர்கள்) கருத்தை நாங்கள் ஒப்புக்கொள்ள வில்லை.
இந்தியா போன்ற பரந்த நாட்டில் கல்வி அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதைப் போன்று மாநிலப் பட்டியலில் இருப்பது சிறந்த ஒன்றாகும். ஏனென்றால் கட்டாயத்திற்கு உள்ளாக்காமல் ஒரு தூண்டும் சக்தியாக மத்தியத் தலைமை இருப்பதற்கு வாய்ப்பளிக்கிறது. பொதுப் பட்டியலில் கல்வியை இணைப்பதனால் விரும்பத்தகாத அதிகாரக் குவியலும் சில நேரங்களில் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காத தன்மையும் ஏற்பட்டு, சுதந்திரமாகவும் தேவைக்கேற்ப விட்டுக்கொடுக்கும் நெகிழ்வுத் தன்மை யும் இல்லாமல் போய்விடும். தற்போதுள்ள அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் மத்திய மாநில அரசுகள் கூட்டாகக் கல்வித் துறையில் இணைந்து பணியாற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிக அளவில் இருப்பதாலும் அதனை முழு அளவில் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்.
“We have examined this problem very“We have examined this problem verycarefully. We are not in favour of fragmentingeducation and putting one part in the concurrentand the other in the State List, education should,under any circumstances, be treated as a whole.We also do not agree with our colleagues and areof the view that in a vast country like ours, theposition given to education in the Constitution isprobably the best because it provides for a Centralleadership of a stimulating but non-coercivecharacter. The inclusion of education in theconcurrent list may lead to undesirablecentralization and greater rigidity in a situationwhere the greatest need is for elasticity andfreedom to experiment. We are convinced thatthere is a plenty of scope, within the presentconstitutional arrangement to evolve a workableCentre-State partnership in education and that thishas not yet been exploited to the full” (pp.829-830).
50 ஆண்டுகளுக்கு முன்பே கோத்தாரி ஆணையம் நினைத்ததைப் போன்றே வாய்ப்பும் பார்த்து, நெருக்கடி காலத்தில், இந்தியாவை உண்மையாக ஆண்டு கொண்டிருக்கும் உயர் சாதியினர் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் சென்றனர்.
1981ஆம் ஆண்டு பிரதமர் திருமதி.இந்திரா காந்தி சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்களிடம் இருந்தும் பொது மக்களிட மிருந்தும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது இன்றைய சட்டக்கதிர் ஆசிரியரான வழக்கறிஞர் சம்பத், திருமதி.இந்திரா காந்தியிடம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஒரு புகார் மனுவினை அளித்தார். அப்போது பிரதமர் இந்திரா காந்தி கல்வி தொடர்பான மனுவை என்னிடம் ஏன் அளிக்கிறீர்கள்.
இது மாநிலப் பட்டியலில்தானே உள்ளது என்று பதிலளித்தார். உடனடியாக வழக்கறிஞர் சம்பத் நெருக்கடி காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட்டது என்று கூறியவுடன் அம்மனுவைப் பெற்றுக் கொண்டார். இவ்வுரையாடல் அன்றைய காவல் நுண்ணறிவுப் பிரிவு தலைவர் மோகன்தாஸால் ஒலிப்பதிவு நாடாவில் பதிவேற்றப்பட்டது. இரவு 2 மணி அளவில் சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்திருந்த என் இல்லத்திற்குப் புல னாய்வுத் துறை உயர் அதிகாரிகள் வந்து, அம்மனுவை நீங்கள்தான் எழுதினீர்களா என்று கேட்டார்கள். ஆம் என்று சொன்னவுடன் இந்திரா காந்தி பேசிய பேச்சு உட்பட பல விவரங்களை என்னிடம் கூறி முதல்வரின் பார் வைக்கு எடுத்துச் செல்லத்தான் கேட்கிறோம் என்றனர். மறுநாள் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அம்மனுவின் படியினைப் பெற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர்.
இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது. திருமதி. இந்திராகாந்திக்குத் தெரியாமலேயே நெருக்கடி காலத்தில் - ஜனநாயக உரிமைகளைப் பறித்த அரசமைப்புச் சட்டத்திருத்தங்களோடு கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றும் திருத்தத்தையும் இந்த உயர் சாதி அதிகாரிகள் இணைத்துவிட்டனர் என்பது உண்மையாயிற்று. இக்கூற்றினை கே.எஸ்.சலம் என்கிற ஆய்வாளர், திவிஜா அல்லது உயர் சாதிப் பிரிவினர் தங்கள் மேலாதிக்கத்தை மேற்கூறிய துறைகளில் நிலைநிறுத்துவதற்கு நீதித்துறையையும் பயன்படுத்தி வருகின்றனர்-----அவர்கள் தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை தில்லியில் உருவாக்கிக் கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றுப் பல கோடி ரூபாய்கள் மதிப்புடைய பணி ஒப்பந்தங்களைப் பெறுகின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது எனச் சொல்லப்படுகிறது. அதனால் தாராள மயமாக்கல் என்ற பெயரில் அதே உயர் சாதிக் குழுக்கள் உருவாகும் வாய்ப்புகளைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். (The Judiciary seems to have(The Judiciary seems to havestrengthened the spirit of the dominant coalitionwith regard to reservation…. Upper castes or dvijacollective can wield positions of cabinet berths andcan get contract worth crores of rupees. Some claimthat there seems to be no difference in theeconomic policies of the United Progressive Allianceand the National Democractic Alliance. Therefore,in the name of liberlisation the same caste groupsare making use of the opportunities created – Castebased Reservation and Human Development inIndia, K.S.Chalam, 2007, p.26) என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்காண்டுகளாக பிரதமர் மோடி உட்பட பல பாஜக முன்னணித் தலைவர்கள் நெருக்கடி நிலையைக் கண்டித்து நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாளில் கண்டனம் தெரிவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நெருக்கடி காலத்தில் மாற்றப்பட்ட சட்டங்களைத் திருத்தி, மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நெருக்கடி நிலைக்கு முன்பிருந்தவாறே திருத்தங்களை மேற்கொண்டவர்கள கல்வியை மட்டும் பொதுப்பட்டியலிலேயே தக்க வைத்திருப்பதேன்? மற்ற சட்டத்திருத்த்ததை மேற்கொண்டவர்கள் இதனை ஏன் மேற்கொள்ளவில்லை?
2019இல் மோடி தலைமையில் அமைந்த அமைச் சரவையில் உயர் சாதியினரே அதிக அளவில் உள்ளனர் என்பதைச் செய்தி ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. சான்றாகத் தமிழகத்தில் மருத்துவக்கல்வி சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினர் 30 விழுக்காடும் மிகப் பின்தங்கியோர்க்கு 20 விழுக்காடும் தாழ்த்தப்பட்டோர்க்கு 18 விழுக்காடும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் வழங்கப்பட்டு வந்தது. 300 மதிப்பெண்கள் என்ற தகுதியின் அடிப்படையில் பார்த்தாலும்கூட, 288 289 மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ மாணவியர் இடம் பெற்றனர்.
மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்களில் 285, 286 மதிப்பெண்கள் பெற்றவர்கள்தான் இடம் பெற்றனர். தாழ்த்தப்பட்டோர் மாணவர்கள் 300 தகுதி மதிப்பெண்களுக்கு 270 பெற்று மருத்துவக்கல்வியில் சேர்ந்தனர். பழங்குடியினர் 240 மதிப்பெண்கள் பெற்று இடம் பிடித்தனர். சிறந்த மருத்துவக் கல்வி தமிழ்நாட்டில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. இதன் காரணமாகத்தான் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் 1980 முதல் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதல் மூன்று இடங்களிலேயே தொடர்ந்து உள்ளது. கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
மனித வளம் நிதியியல் பொருளாதாரத்தின் முதுகெலும் பாகக் கருதப்படுகிறது. சமூகத் துறைகளில் கல்வி, பொதுச் சுகாதாரம் போன்ற துறைகளில் பொதுச் செலவின் வழியாகத்தான் நாட்டின் மனிதவளத்தைப் பெருக்க முடியும் என்பதைப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 0.5 விழுக்காட்டைத்தான் கல்விக்குச் செலவிடுகிறது. மாநிலங்கள்தான் கல்விச் செலவினை முழு அளவில் ஏற்றுக்கொண்டு வருகின்றன. இந்த ஒரு கருத்தைத்தான் 2019 அறிக்கையில் கல்விக்கு ஒன்றிய அரசு கொடுகின்ற தொகை மிக குறைவு என்றும் 75 விழுக்காடு செலவினை மாநில அரசுகளே மேற்கொள் கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்தாண்டுகளில் ஒதுக்கிய நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 0.5 விழுக்காட்டு நிதியில் ஒன்றிய அரசு மேலாண்மை செய்கின்ற கல்வி நிலையங்களுக்கே 99 விழக்காடு சென்று விடுகிறது என்று பல கல்வி வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.
2019 கல்விக் கொள்கை அறிக்கை இந்த உண்மையையும் மறைத்து மறைத்துச் சொல்லியிருக்கிறது. ஓட்டு மொத்த நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 6 விழுக்காடு பரிந் துரையை 1966ஆம் ஆண்டே கோத்தாரி ஆணையத் தால் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவினுடைய பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்கும் மாநிலங்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்கும் மாநில மொழிகளை வளர்ப்பதற்காகவும் குறைந்தது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 10 விழுக்காடு செலவிட்டால்தான் இவ்வறிக்கையில் மேலோட்டமாகச் சொல்லப்பட்ட பரிந்துரைகளில் சிலவற்றை யாவது நிறைவேற்ற முடியும். எனவே இந்த அடிப்படைக் கூறுகளை எல்லாம் ஆய்வு செய்யாமல் உயர்சாதி ஆதிக்கத்தைக் கல்வியில் நிலை நிறுத்த உதவும் இந்த அறிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.